கண்டனத்துக்குரிய சில…

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

லதா ராமகிருஷ்ணன்


“அமைப்பு ரீதியாக பிரபாகரன் காட்டிய இறுக்கம் வரலாற்று ரீதியாக தமிழ்ச்சமூகம் பற்றின அவரது புரிதலில் இருந்தே பிறக்கிறது. அவரைப் பொறுத்தவரை கூட்டு மனப் பான்மையற்ற, நான் எனும் தன்முனைப்பு கொண்ட, பொது நன்மைக்காய் தியாகம் செய்யும் பண்பாட்டுக் குணாம் சமற்ற, எளிதில் துரோகம் செய்யும் பலவீனம் கொண்ட தமிழ்ச்சமூகத்தை துப்பாக்கி முனையிலும், கடுமை காட்டியுமே கட்டுக்குள் வைத்திருக்க முடியுமென அவர் நம்பினார்”

மற்றபடி தன்னில் அவர் மென்மையானவர். அதற்கும் மேலாய் ரசனையானவர்” என்றனர். இது நூறு சதம் உண்மை.

ஜூலை 25, 2009 தேதியிட்ட நக்கீரன் இதழில் மேற்கண்ட விதத்தில் அழுத்தமான எழுத்துருவில் சென்னையில் தமிழ் மையம் என்ற அமைப்பை நடத்தி வருபவரும், சென்னை சங்கமம் வருடாந்தர நிகழ்வின் முக்கியப் பொறுப்பாளருமான அருட்தந்தை ஜெகத் கஸ்பார் என்பவர் ஈழம் தொடர்பாய் அவர் வாராவாரம் எழுதி வரும் தொடரில் ஆரம்பப் பத்தியில் குறிப்பிட்டுள்ளார். ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதை விட பன்மடங்கு அதிகமாகக் காயப்படுத்தும் வார்த்தைகள். இதை விட அதிகமாக தமிழ் மக்களை அவமானப்படுத்த முடியுமா என்ன?

· சில நாட்களுக்கு முன்பு பீஹாரில் பொது வீதியில் ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் ஏழெட்டு ஆண்கள் மானபங்கப்படுத்துவதை ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகள் திரும்பத் திரும்பக் காண்பித்தன. நல்லவேளையாக, வழக்கம்போல் அரை நிமிடத்தில் நடந்துமுடிந்த ஒன்றைத் திரும்பத் திரும்ப நாள் முழுக்கக் காட்டி நடந்த அக்கிரம நிகழ்வை தனக்கு அதிகப் பார்வையாளர்களை உறுதி செய்யும் வழியாகப் பயன்படுத்திக் கொள்வதைப் போல் அல்லாமல், அந்தப் பெண்ணை புகைமூட்டத்தில் காண்பித்து அவளை ஆடையை அவிழ்த்தும், அங்கங்கே தொட்டும், கைகளைக் கயிற்றால் கட்டியும் ஒரு வண்டியில் அவளை அமர வைத்து இருபுறமும் அவளை நெருக்கியடித்து அமர்ந்தும் சிரித்தபடியிருந்தது ஒரு அயோக்கிய கும்பல். சுற்றிலும் ஏராளமான ஆண்கள். இளைஞர்கள் பலரின் முகங்களில் கண்ட சிரிப்பும், ஏளனமும், சுவாரசியமும் அதிர்ச்சியாக இருந்தது. காவல்துறையினர் அந்த இடத்தில் இருந்தும் எதையும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிகழ்வைக் காட்டிய தொலைக்காட்சி அலைவரிசைகளும் அந்த அக்கிரமம் குறித்து அகல்விரிவாக எதையும் பேசவில்லை. தேசியப் பெண்கள் குழுமம் பெண்ணை மானபங்கப்படுத்திய கயவர்களோடு, அதை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் தகுந்த விதத்தில் சட்டம் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்தக் கயவர்களின் முகங்கள் தொலைக்காட்சியில் தெளிவாகவே கண்டன. அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை.

· ஆபாசம் என்பதை காட்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவுமே நமது தணிக்கைத்துறைகள் அணுகுகின்றன. கருத்துரீதியாக பெண் குறித்த எத்தனை எதிர்மறையான விஷயங்களை நமது சின்ன பெரிய திரைகள் தொடர்ந்து தைரியமாக வண்ணமயமாக அரங்கேற்றி, வலியுறுத்தி வருகின்றன. அது குறித்து தணிக்கைத்துறையினருக்கு அக்கறையில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. இதற்கான எதிர்ப்பின் முதல்படியாய், இசையமைப்பாளர், திரைப்படத்தின் பெயர் ஆகியவற்றோடு திரைப்படப் பாடலாசிரியர்களின் பெயர்களும் கட்டாயமாக வெளியிடப்பட வேண்டும் என்று கோரப்பட வேண்டும். மட்டமான பாடல்களை, பெண்களை மதிப்பழிக்கும் பாடல்களை எழுதுபவர்கள் யாரென்று இனங்காட்டப்பட வேண்டியது அவசியம். கருத்துரீதியான இத்தகைய வன்முறைகளுக்கும் தணிக்கை கட்டாயம் வேண்டும். எல்லாப் பேருந்துகளிலும் மக்கள்வெள்ளம் அலைமோதிக் கொண்டிருக்க வேறு வழியில்லாமல் ஒன்பது ரூபாய்க்கு பதில் இருபத்திமூன்று ரூபாய் கொடுத்து குளிர்சாதன வசதி கொண்ட அரசுப் பேருந்தில் பயணமானால் அதிகப் பணம் கொடுத்துப் பயணமாவதற்கு தண்டனையே போல் இத்தகைய வக்கிரப் பாடல்கள் விடாமல் ஒலிபரப்பபட்டுக் கொண்டிருக்கிறது.

· ஆபாசக் காட்சிகள் என்பதாய் எழும் எதிர்ப்பும், தணிக்கையும் கூட வன்முறைக் காட்சிகள் குறித்து எழுவதில்லை. இன்று திரைப்படங்களிலும் சரி, தொலைக்காட்சி அலைவரிசைகளின் ‘சிந்துபாத் ஓர் அதி சின்னப் பயல் என்று சொல்வதாய் முடிவில்லாமல் நீண்டுகொண்டே பொகும் சின்னத்திரை சீரியல்(கில்லர்) நாடகங்களிலும் சரி, முதுகு சொரிந்து கொள்வதற்கு ஸ்கேலை எடுப்பதுபோல் சட்டைக்குள்ளிருந்து பட்டாக்கத்தியை எடுக்கிறார்கள். குண்டாந்தடியால் எதிரியை குறைந்த பட்சம் நூறு அடியாவது அடித்தால் தான் வில்லனுக்கும் அழகு; கதாநாயகனுக்கும் அழகு என்பது எழுதப்படாத விதியாக சின்ன, பெரிய திரைகளில் கோலோச்சிக் கொண்டிருக் கிறது. இந்தக் காட்சிகளை தினமும் சின்னத் திரையில் பார்த்துப் பழகும் கண்கள் இதை வாழ்வின் இயல்பாகப் புரிந்துகொண்டு விடும் அபாயமுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரோஜாக் கூட்டம் என்ற, விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் நாடகமொன்றில் இரண்டு பெண்கள் மீது திராவகம் வீச முற்படும் ஒரு இளைஞனை இருவர் தடுத்து அடிக்கிறார்கள். எப்படி? சுற்றிலும் நூறு பேருக்கும் அதிகமாய் மக்கள் நின்றவாறிருக்க ஒரு ஐந்து நிமிடங்கள்(அல்லது பதினைந்து நிமிடங்கள் இருக்குமோ?) குண்டாந்தடியால் அடித்துத் துவைக்கிறார்கள். நாடகத்தின் நேரத்தைக் கடத்தும் உத்தியாக இது கையாளப்பட்டிருக்கலாம். ஆனால், இதைப் பார்ப்பவர்கள் குற்றவாளியை தாமே தண்டிப்பதே பேராண்மை என்ற முடிவுக்கு வந்துவிட முடியும். தவிர, இத்தகைய கொடூரமான காட்சிகளை நீளநீளமாய், விலாவாரியாரியாய் காட்டுவதில் ஆர்வமாயிருப்பவர்களின் உளவியலை நினைத்தால் உண்மையிலேயே பயமாயிருக்கிறது.

· நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல், ‘சிந்துபாத் ஓர் அதி சின்னப் பயல்’ என்று சுட்டிக்காட்டுவதாய் நீஈஈஈண்ண்டு கொண்டே போகும் ‘கோலங்கள்’ என்ற சின்னத்திரை நாடகத்தில் இன்று ஒரு வசனம். எப்பொழுதும் பல்லை நறநறத்துக் கொண்டு ஆங்காரமாய் கூவியவாறே இருக்கும் ஆதி என்ற பாத்திரத்தை அவனுடைய மனைவி பின்வரும் பொருளில் ஏசுகிறாள். ‘பணமே எல்லாம்’ என்று வாழும் நீ ஒரு விபச்சாரி போன்றவன்”. மேலோட்டமாய் பார்த்தால் இது அந்தப் பாத்திரத்திற்கு ஒரு சரியான சாட்டையடி போல் தோன்றும். ஆனால், விபச்சாரத்தொழிலில் வறுமை காரணமாக ஈடுபடுபவர்கள், கட்டாயமாக ஈடுபடுத்தப்படுபவர்கள், அதற்காகக் கடத்தப்பட்டு, பலவகையிலும் சித்திரவதைப் படுத்தப்படும் இளம்பெண்கள் எத்தனையெத்தனை பேர் என்பதை எண்ணிப் பார்க்கும்போது திமிரெடுத்து அலையும் ஆதி என்ற கதாபாத்திரத்தை அந்தப் பெண்களோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பது அபத்தமாகவும், அநியாயமாகவும் புரிபடுகிறது.

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்