கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

வே.சபாநாயகம்.


(பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

‘சிங் இஸ் கிங்’ என்கிற கட்டுரை சீக்கியர்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியாத
பல செய்திகளைச் சொல்கின்றது. 1984ல் இந்திராகாந்தி படுகொலையை முன்னிட்டு
அப்பாவி சீக்கியர் பலர் கொல்லப்பட்டதையும் அதன் பரிதாபத்தையும் நேரில் பார்த்த
நீங்கள் உருக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். இப்போது கேட்டாலும் மனதை நடுங்கச்
செய்யும் கொடுமை அது. அது தொடர்பாக சீக்கியர்களின் பழக்கங்கள், வாழ்க்கைமுறை
அவர்களது தனித்தன்மை, பெருமை பற்றி எல்லாம் குறிப்பிட்டு சர்தார்ஜி, சிங் பற்றி
யெல்லாம் நம்மிடையே புழங்கும் அசட்டு நையாண்டிக் கதைகளைக் களையவும்
அவர்களைப்பற்றி உயர்ந்த எண்ணம் ஏற்படவும் செய்திருக்கிறீர்கள்.

‘எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள்
அல்லர்’. அதேபோல ‘எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான். ஆனால் எல்லா சிங்குகளும்
சர்தார்ஜிகள் அல்லர்’ என்ற உண்மைகள் எம்மில் பலர் அறியாயதுதான். இவ்வுண்மைகள்
பற்றி உதாரணங்களுடன் விளக்கியிருப்பதுடன் பஞ்சாபிகளின் கடின உழைப்பைப்
பற்றியும், புத்திசாலித்தனம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்களது கடின
உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் தான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில்
இந்தியா முன்னணியில் இருக்கிறது என்கிற செய்தி பாராட்டுக்குரியதும் பஞ்சாபிகள்
பற்றிய நம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதும் ஆகும். இன்னொரு சுவாரஸ்யமான
தகவலையும் சொல்லியுள்ளீர்கள். ‘இந்தியமொழிகளிலேயேபஞ்சாபியைப்போல் ஒரு
வாக்கியத்துக்கு இரு அர்த்தங்கள் உள்ள வேறு மொழியே இல்லை’ என்பதை
உதாரணங்களுடன் ரசமாகச் சொல்லியுள்ளீர்கள். அதிகார வர்க்கத்தின் காலில் விழும்
கலாச்சாரம் அவர்களுக்குத் தெரியாது என்பது தமிழர்கள் தலை குனிய வேண்டிய செய்தி.
சீக்கியர்கள் வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள், நன்கு பழகி விட்டால்
நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்பவையும் அவர்களைப் பற்றிய
நமது மரியாதையைக் கூட்டுகிறது.

கடைசிக் கட்டுரையான ‘பூர்ணம் விசுவநாதன் நினைவுகள்’ ஒரு ஆரோக்கியமான
நினைவஞ்சலி. 50களில் அவர் அகில இந்திய வானொலியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராக
இருந்ததும், அவரது குரலைக்கேட்க தினமும் தமிழர்கள் ஆவலோடு காத்திருந்ததும்
என்னைப்போன்ற வயதில் மூத்தவர்கள் அறிந்ததுதான் என்றாலும் இந்தியா சுதந்திரம்
பெற்ற செய்தியை முதலில் தமிழில் உலகுக்குச் சொன்னவர் அவர்தான் என்பது எம்மில்
பலரும் அறியாதது. அவரது சகோதரர்கள் பூர்ணம் சோமசுந்தரம், ‘முள்ளும் மலரும்’
திரைப்படக் கதாசிரியர் உமாசந்திரன், தங்கை பூர்ணம் லட்சுமி அனைவருமெ எழுத்தளார்கள்
என்பதும் இளைய தலைமுறையினர் பலர் அறியாதது. பூர்ணம் விசுவநாதன் சிறந்த நாடக
ஆசிரியராக மட்டுமின்றி அற்புதமான குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்ததும், சுஜாதாவின்
நாடகங்கள் அவரது நடிப்பால் பிரபலமானதும் பலரும் அறிந்ததுதான். ஆனால் அவருடனான
உங்கள் வானொலி நாடக அனுபவங்கள் உங்களது ரசமான பதிவுகளின் மூலமே அறிய முடிகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் தங்கிப் படித்த, 1991ல் சமாதானத்துக்கான நோபல்
பரிசினைப்பெற்ற பர்மியப் போராளி ஆங் ஸான் ஸு கி அம்மையாரை நீங்கள் பூர்ணத்துடன்
சந்தித்ததும், அப்போது அவருக்கு இந்தியாவில் தங்க அனுமதி கிடைப்பதில் பிரச்சினை
இருந்ததை அறிந்து உங்கள் நண்பரின் உதவியால் மேலும் இரண்டு ஆண்டுகள் தங்க அனுமதி
ஒரு நொடியில் பெற்றுத் தந்தமைக்காக அவர் உங்களுக்கு நன்றி சொன்னதுமமான உங்கள்
சாதனையும் பிரமிப்பைத்தருகிறது. பிரமிப்புக்குக் காரணம் 60 ஆண்டுகளுக்கு முன்னர்
வெறும் பள்ளி இறுதி வகுப்புத் தகுதியுடன், சிறுவனாகத் தனியே தில்லி சென்ற பாலக்காட்டுத்
தமிழன் படிப்படியாக எல்லாவிதத்திலும் தன்னைத் தகுதியாக்கிக்கொண்டு தில்லியில் எவருக்கும்
எதையும் சாதித்துக் கொடுப்பவராக உயர்ந்ததும், உலகம் முழுழும் சுற்றி வந்ததும், உலகத்
தலைவர் பலரது அறிமுகமும் அன்பும் பெற்றதும் மட்டுமல்ல – இத்தனை சாதனைக்கும்
அதிர்ஷ்ட தேவதையின் பூரண அருள் இப்படி யாருக்கு வாய்க்கும் என்பதும்தான்.

தமிழ் நாட்டிற்கு வெளியே – 50 ஆண்டுகளுக்கு மேலாய் தில்லியில் இருந்த
உங்களது அலுப்புத் தராத எழுத்துத் திறனும் அரிதான அனுபவங்களும் தமிழகம்
திரும்பிய பிறகே நாங்கள் அறிய உதவிய ‘உயிர்மை’ ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கு
நன்றி சொல்லத்தான் வேண்டும்.

இத்தொகுப்பில் உள்ள உங்களது கட்டுரைகளைப் போலவே உங்களைப்பற்றி பிரபல
எழுத்தாளர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் என்று 25க்கும் மேற்பட்டவர்கள்
எழுதியுள்ள பாராட்டுரைகளும் உங்களைப்பற்றி மேலும் பல ரசமான செய்திகளைச்
சொல்கின்றன. அவையும் படித்து ரசிக்கத்தக்கவையே.

– நிறைவுற்றது.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்