வே.சபாநாயகம்
கடிதம் – 48
திருப்பத்தூர்.வ.ஆ.
14 – 2- 65
பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களது நீண்ட கடிதம் கிடைத்தது. நெடுநாட்களுக்கப்புறம் உங்கள் கையெழுத்தை ஒரு நாலு பக்கத்துக்குமேல் பார்க்க நேர்ந்தது வெகுவாக சந்தோஷ மளித்தது. அதற்கு நன்றி கூறுகிறேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகுஅதற்கு இப்போது தாமதமாகப் பதிலளிப்பதற்காக மன்னிக்கவும் கோருகிறேன்.
தங்களது கடிதம் வந்த இரண்டொரு நாட்களிலேயே நான் சென்னை செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டு விட்டது.
ஆனால் சென்னையிலிருந்து வந்தபிறகு பல வேலைகள் குறுக்கிட்டு விட்டன. சற்று ஓய்வுடன் வந்த பொங்கல் விடுமுறையையும் வெள்ளக்குட்டையிலிருந்து கழிக்க வேண்டி வந்தது. அடுத்து பல நிகழ்ச்சிகள். தமிழ்நாட்டின் பிரஜாவுரிமையை ரத்து செய்துவிட்டு பிற மாநிலங்களுக்குக் குடி போய்விடலாமா என்கிற அளவுக்கு சுயஜாதியின்மீது வெறுப்பைக் கிளப்புகிற தமிழக அரசியலின் அசிங்கங்கள்….அக்கிர மங்கள்….. ஆபாசங்கள்….. இத்யாதி.
– இவைகளைக் கண்டு சும்மாயிருக்க முடியவில்லை. ‘விவேகாநந்தா சங்கம்’ என்று ஒன்றைத் துவக்கினோம். மாணவர்கள் என்கிற மிருகங்களின் மந்தை மீது உள்ளூரில் ஒரு அறிக்கைத் தாக்குதல்…….. இடையில் போலீஸ் விசாரிப்பு…… அது
முன்னிட்ட பரபரப்பு……. பள்ளியில் நிறைய பாடங்கள் பாக்கி…… P.U.C க்கான படிப்பு……. ஜெயகாந்தனின் படத்துக்குச் சில ஏற்பாடுகள்…… பஞ்சாயத்துத் தேர்தல்கள்…..
இக்காரணங்களால் கவிதை உணர்வோடு தங்களுக்கு எழுதப்பட வேண்டிய பதில் தாமதமாகித் தவறிப் போயிற்று. எனவே தாங்கள் மன்னிக்கலாம்.
இப்பொழுது இந்தப் பதிலில், தங்களது கடிதத்திற்குப் பதிலளிப்பதா, இத்தனை நாளைய இடைவெளியில் நிகழ்ந்த விஷயங்களை எடுத்துரைப்பதா, அல்லது புதிதாய் மாறுதல் கண்டு வளர்ச்சியடைந்துள்ள அரசியல், சமூக, தத்துவ அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதா என்று குழம்பி, எல்லாவற்றையும் எழுதுவது என்று தெளிந்து எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
எனது பெங்களூர்ப் பிரயாணத்தைப் பற்றி விசாரித்திருந்தீர்கள். அது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பிரயாணம். ராகவன் என்று எழுதியிருந்தேனே, அவர் ஒரு BSc மாணவர். பிராமண வகுப்பு. ஆனால், அசல் ஐயர் தானில்லை நாம்தான் என்பதை ஆமோதிப்பவர். The most progressive type amoung students. பெங்களூருக்கு அழைத்துச் சென்றவர் அவர்தான்.
பெங்களூரில் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. பார்த்ததும், அறிமுகமானதும், அனுபவித்ததும், ஆனந்தித்ததும் வேறு உலகம்.
‘போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்
பொலியுங் கள்வெறி துய்த்தல் மற்றோர்பால்’
– என பாரதியின் வரி ஒன்று உண்டு. துயர நினைவுகள் ஒழிக்கப்பட வேண்டும். உணர்ச்சிகளுக்கு எப்பொழுதுமே ஒரு ‘லிப்ட்’ இருக்க வேண்டும். அதாவது உணர்வுகளின் உச்ச சிகரத்திலேயே நாம் இடையறாது உலவ வேண்டும். அதே சமயத்தில், இவை அற்பமாகிவிடாமல் ஞானபோதம் என்கிற நடுலட்சியம். இவைகளைப் பாரதி வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு ஒரே வழிதான்.
உங்கள் கடிதம் வந்த இரண்டொரு நாட்களில் சென்னைக்கு நானும் தண்டபாணியும் ராகவனும் சென்றோம். ‘உன்னைப்போல ஒருவன்’ படம் பார்த்தோம். பின்னணி இசை அமைக்க வேண்டி, சங்கீத டைரக்டர் வீணை சிட்டிபாபுவுக்கும், ஈ.வி.கே சம்பத்துக்கும், பிற நண்பர்களுக்கும், எங்களுக்கும் சென்ஸார்போர்டு படங் களைப் பார்க்கிற ‘ப்ரிவியூ பாரடைஸ்’ என்கிற தியேட்டரில் படம் போட்டுக் காண்பிக்கப் பட்டது. பிறகு தண்டபாணியும் ராகவனும் மதுரை சென்றுவிட்டார்கள்.
நான் சென்னையிலேயே இருந்து, ஜெயகாந்தன் சொல்லச் சொல்ல அவரது ‘விழுதுகள்’ இரண்டிரவுகள் எழுதிக் கொடுத்துவிட்டு, பிறகு திருப்பத்தூர் வந்தேன்.
பொங்கல் விகடனில் ‘விழுதுகள்’ படித்தீர்களா? அற்புதமான நாவல். அதில் வருகிற ஓங்கூர் சாமியார் ஜெயகாந்தனுக்கு உண்மையிலேயே பழக்கம். பிரம்மாதமான காரெக்டர்.
வையவனும், தண்டபாணியும் நலமே. ஆறுமுகமும் சௌக்கியம். பாட்டரிக்கு அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், மனசின் கவிதைத் தன்மையும் உருக்கபாவமும் சற்றுக் குறைகிற போதெல்லாம் அதன் ஊருக்குச் சென்று நிறைவு செய்துகொள்ள முடிகிறது.
தங்கள் கவிதைகளில் ‘சிறைவிடு’ என்கிறதும், ‘கடல்தாண்ட முயல்கிற மனிதா’ என்கிறதும் நன்றாயிருந்தன. முன்னதைவிடப் பின்னது எடுத்த வேகத்துடன் கடைசி வரை வந்திருந்தது.
‘அஞ்சனக் கீற்றுக் கரையினுள்…….’
என்கிற மாதிரி வருகிற நயமும் லாகவமும்,
‘என்றன் உலகம் பரந்தது – புவி
ஏழு கடல்களும் என்னதே’
என்றும் தொடர்ந்து ‘என்றன் சிறை விடு’ என்று முடிவது நன்றாயிருந்தது. வடிவத்தை விட விஷயம் நன்று.
‘வேதாந்தப் பாட்டு’ பல இடங்களில் நல்ல பாவத்துடன் வந்திருக்கிறது.
கடைசியில்,
‘புகழ்ஞாலக்கரை வந்து சேரும் – உனைப்
புவிமாந்தர் மரியாதை சூழும்
இகழ்ஞாலக் கடல்தாண்டி சென்றோய் – உனக்(கு)
இருகரங் கூப்பினேன் ஐயா!’
என்று முடிகிற ‘ஸ்டான்ஸா’ கவிதையின் மொத்த மனோபாவத்துக்கும் சிகரம்.
ருஷ்ய புரட்சியைப் பற்றிய கவிதை வளமான சொற்கோவைகளோடு வந்திருந்தபோதும் அது பழைய விஷயம் (அதுவும் பாரதி பாடியது) என்பதால், எடுப்பாகத் தோன்றவில்லை. நாம் அவைகளைப் பாட வேண்டிய அவசியமில்லை.
‘கண்கவரும் ஆலைகள்நற் றொழில் வளங்கள்
கட்டிடங்கள் சாலைகள்நீள் இருப்புப் பாதை
பண்ணை விளையுள்களென இவ்வாறெல்லாம்……….’
இங்கே கவிதை நடை வெகு லகுவாக, இன்பகரமாக இருக்கிறது.
‘மண்ணகத்துத் தீமைகளின் தலைமைப் பீடம்’
சரியான போடு!
இவைகளோடு நீங்கள் எழுதிய அத்தனை கவிதைகளையும் நான் படித்து
விட்டேன் என்று எழுதி இருக்கிறீர்கள். ஒன்றிரண்டு தவறியிருக்கலாம். அல்லது,
இவைகளுக்கப்புறம் புதிதாக எழுதி இருக்கலாம். அவைகளை அனுப்பி வையுங்கள்.
‘கடல்தாண்ட முயல்கின்ற மனிதா’வை கலைமகளுக்கு அனுப்புங்கள்.
‘அன்பெனும் பாய்மரம் விரித்தால் – மக்கள்
ஆதரவெனுங் காற்று வீசும்’
‘பொருளாசைக் கடல்மலை மோதும் – வீண்
பொறாமைச் சுறாமீன்கள் தாக்கும்’
என்பன போன்ற நல்ல உருவகங்களோடு அது சிறப்பாய் வந்திருக்கிறது.
இனி ஓய்ந்திருக்க மாட்டீர்கள்; ஓயவும் முடியாது எனக் கருதுகிறேன். நிறைய எழுதுங்கள். மற்ற எல்லோரையும் விட கவிஞன் பாக்கியசாலி. அவன் தொழில் மிக உயர்ந்தது. தனது ஆத்மாவை உணர்ச்சிகளின் உயிர்த் துடிப்போடு சிறுகச் சிறுக
பிற ஹிருதயங்களுக்கு அனுப்பி, இறுதியில் பரம்பொருளைப் போல், அங்கிங்கெனாத படி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி, எல்லா உயிர்களிலும் அவனேயாகிறான்.
தங்கள்
பி.ச.குப்புசாமி.
(சென்ற வாரம் கடித இலக்கியம் 49 தவறுதலாய்ப் பிரசுரம் கண்டது. அடுத்த வாரத்துடன் கடித இலக்கியத் தொடர் முற்றுப் பெறும். )
- மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)
- ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்
- காரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி
- உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு
- இலை போட்டாச்சு ! -20 அடை – இரண்டாம் வகை
- தண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்
- நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை
- கடிதம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10
- சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
- தூர்மண(¡) குச்சு
- கடித இலக்கியம் – 48
- சிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு
- பெண் எழுத்து
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4
- இலை போட்டாச்சு ! – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை
- வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3
- காதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் !
- தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3
- கவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்
- நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி
- என் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்
- அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…
- மடியில் நெருப்பு – 29
- நீர்வலை – (15)
- மறை வாள் வீச்சு