கடிதம் செப்டம்பர் 23,2004 – புதிய பார்வையில் வந்த சாரு நிவேதிதா கடிதத்திற்குப் பதில்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


திரு சாருநிவேதிதா அவர்களுக்கு வணக்கம்.

புதியபார்வை இதழின் புதிய இதழை எடுத்தவுடன் படிக்கத்தூண்டிய பகுதி தங்களுடைய கடிதம்.

படித்து நெகிழ்ந்த பகுதி சுபவீ எழுதியது.

படித்ததும் எழுத வைத்தப்பகுதி சுராவினுடையது.

ஒருவகையில் தங்கள் கடிதம் அவசியமானதே.

ஒரு சலிப்பு, தெவிட்டல்,ஒரு வெறுப்பு நிகழும் சூழ்நிலையாகவே இலக்கிய உலகம் இயங்கிவருகிறது.

மீண்டும் ஒரு கவனத்தை ஈர்க்க எடுத்த முயற்சியாக நான் கருதவில்லை.

ஆனால் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பதையும் கருணாநிதி இலக்கியவாதி என்பதையும் முடிச்சுப்போடுவது மூடநம்பிக்கையையும்

பகுத்தறிவையும் முடிச்சிப்போடுவதாகும்.

திரு கருணாநிதி முதலில் சிந்தனையாளர், அரசியல்வாதி,பின்பு எழுத்தாளர்.

அரசியலை எழுதியவர் பின்பு அரசியலாக இலக்கியத்தை எழுதியவர்.அதற்குப்பின் இலக்கியத்தை அரசியலாக எழுதியவர்.

இவை இல்லாமலும் எழுதியவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால்,

அவரிடம் அடிப்படை இலக்கியக்கூறுகள் நிரம்ப உண்டு.

அவர்,வெறும் இலக்கியவாதியாகவே வாழ்ந்திருக்கமுடியும். அத்துறையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

அவர்சார்ந்த அரசியலையொட்டியே எழுதினார் என்பதுதான் உண்மை.

அதில் இலக்கிய நெடியைக்காட்டிலும் அரசியல் நெடி அதிகமாக இருக்கலாம். அவர் முன்னுரிமைக்கொடுப்பது அல்லது அவரை முன்னிழுத்துச்செல்வது அரசியல்.

அவர் முழுமுதல் அரசியல்வாதி.

ஆனால் அவருக்குள்ளும் இலக்கியவாதியுண்டு.

சரி, எதையும் சாராத இலக்கியவாதி முழுவீச்சுடனும் புதிய உத்தியுடனும் ஒரு தூய இலக்கிய படைப்பை உருவாக்குறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் விளைவாக கிடைப்பது அல்லது அமைவது என்ன ?

அவரின் படைப்பு சிறந்த இலக்கியப் படைப்பாக அங்கீகரிக்கப்படலாம்.அவருக்கு நோபல் பரிசுபோன்று பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படலாம். முதன்மையான இலக்கியவாதியாகக்கருதப்படலாம். அவரையொட்டி இலக்கிய வாரிசுகள் உருவாகலாம்.

அவரைப் பெருமைப்படுத்தலாம், கூட்டங்கள் நடத்தலாம்.

உலக இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் படித்த முழுஇலக்கியவாதி, தமிழில் படைக்கும் இலக்கியவாதி இன்னும் நோபல்பரிசுவாங்கவில்லையே ஏன் ?

தமிழில் அது இல்லை என்று பிற நோபல் பரிசுப்படைப்பாளிகளைத் தூக்கிச்சுமப்பவர்கள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் ?

கற்றதையும் பெற்றதையும் எழுதித்தீர்த்து அனைத்து பரிசுகளையும் வென்று தீரவேண்டாமா ?

என்கவலை நோபல் பரிசன்று என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படி மீனின் சுவாசமாய் இயங்கிக்கொண்டிருப்பவர்களின் சாதனை என்பது அமைதியானது;மெதுவானது;தரமானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால்,

மொழி,

இனம்,

மேம்பாடு,

முன்னேற்றம், உரிமை எனப் பல தளங்களில் இயங்கிக்கொண்ட்டிருப்போரின் வேகம் ,

முனைப்பு;

முயற்சி;

முன்னெடுத்துச்செல்லுதல் போன்றவற்றில் சற்று அதிகமாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால் இது இலக்கியம் சார்ந்தது.

அந்தவகையில் திசைமாறியதால் திரு கருணாநிதியின் எழுத்தில் இலக்கிய வாசனையின் அளவு வேறுபடலாமேயொழிய, அவர் இலக்கியவாதியில்லை என்பது முற்றும் ஒவ்வாதக்கருத்து. உதவாக்கருத்தும்கூட.

திரு கருணாநிதியின் சாதனை அவர் சென்ற வழியில் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டி வாதிடுவது (தலையங்கத்தில்

குறிப்பிட்டதுப்போல)இன்னும் பயனுடையதாக இருக்கும் என்பது என் கருத்து. காரணம் பயன்பாடுடைய விளைவுகள் நிகழ வாய்ப்பிருப்பதால்.

முழு இலக்கியவாதியாய் இல்லாதவரிடம் எதிர்பார்ப்பது;எடைபோடுவது தவறு.

அரசியல் சிறுபான்மை இலக்கியச் சிறுபான்மைக்கு பொருந்தாது.

மூன்று விழுக்காடு இலக்கியவாதிகள் படைப்புகளால் நிறகவேண்டுமே ஒழிய தூற்றுதலால் அல்ல.ஏனெனில் பெரும்பான்மை இலக்கியவாதிகள்

மூன்று விழுக்காட்டுக்காரர்களை அவமதிப்பதில்லை.மாறாக கவனித்தும் கற்றும் வருகிறார்கள்.

நீங்கள் மூன்று விழுக்காட்டினரா ?அல்லது 97விழுக்காட்டினரா ? என்பதை முடிவெடுத்ததற்குப்பிறகு பொறாமைப்படுவது;பொச்சரிப்புக்கொள்வது

கூடாது. ஆனால்,

மூன்று விழுக்காட்டுக்காரர்கள் முந்திரிக்கொட்டையாய் முந்திக்கொள்வதால் அவர்களுடைய படைப்பாற்றலைக்காட்டிலும் பழிக்கும் ஆற்றல் மேலோங்கியிருப்பதால்தான் அவர்களுடைய அங்கீகாரம் தேவையில்லை என்பது கவிஞர் அப்துல் ரகுமானின் கருத்து.

பாவம் மு.வ.

தமிழையும் புனைவையும் ஒருங்கே நிகழ்த்தியதில் இலக்கியவெற்றி நீங்கள் நினைப்பதுபோலில்லாமல் இருக்கலாம்.தமிழுக்கும்

சமூகத்திற்கும் அது தொண்டாகக்கருதப்படவேண்டியவை.

அகிலன்,கோ.வி.மணிசேகரன்,ஜெகசிற்பியன், வே.கபிலன் இவர்களை இப்படியே விட்டுவிடுகிறேன்.

அண்ணாவின் இறப்பையும் பாரதியின் இறப்பையும் ஒப்பிடக்கூடாது.

வருந்தவேண்டிய ஒன்றை கொச்சைப்படுத்தக்கூடாது. இப்படி எண்ணிக்கைக்காக ஒப்பிட எடுத்துக்கொண்ட உதாரணம் சிந்தனைத்திசையை மடைமாற்றி விடுகிறது.ஒரு குறும்பும் வேதனையும் மறைந்து கிடக்கிறது. இப்படித்தான் மூன்று விழுக்காட்டுக்காரர்கள் உணர்வற்ற சடங்களாக

பாவனை பன்னுகிறார்கள். ஜனநாயகம் எண்ணிக்கையால் ஆனது.இலக்கியம் எண்ணிக்கையால் ஆனதன்று.எண்ணிக்கையால்தான் அரசியல் பன்னமுடியும்.இந்துத்துவாவை பெரும்பான்மையால்தான் எதிர்க்கமுடியும்.

சிறுபான்மையினர் மூச்சுவிடலாம்,முண்டாதட்டமுடியாது.ஒரு பெரும்பான்மையைத்தேட வெறும் இலக்கியம் பயனளிக்காது.விழிப்புணர்வும் ஒன்றுதிரட்டலும்,ஒன்று சேர்தலும் அவசர அவசியம். அதற்கு நேரடியான அழைப்பும், முழக்கமும், அரசியல் எழுத்தும்,முன்னெடுத்துச்செல்லுதலும் மிக முக்கியம்.

இதை வெறும் இலக்கியவாதியால் எதுவும் செய்யமுடியாது.

‘தமிழ் இலக்கியவாதிகள் சமகால அரசியல் நிகழ்வுகளை தமது எழுத்தில் காத்திரமாக பதிவு செய்வதோ, அதை எதிர்கொள்வதோ இல்லை என்பது உண்மை. இந்த அவல நிலைக்குக்காரணம், அந்த எழுத்தாளர்கள் அல்ல. தமிழ்ச்சூழல்தான் காரணம் ‘ இது தங்கள் கருத்து.

பெரூ நாட்டின் லோசாவின் எழுத்தை முன்வைத்தீர்கள்.

சரியானச் சான்று.

அவன் சூழலை எழுதினானா ? சூழலிடம் அனுமதி வாங்கிக்கொண்டு எழுதினானா ?

எல்லாம் கிடைத்துவிட்டால் தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவார்கள் என்பது தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்துவது இல்லையா ?

‘லோசாவி ‘ன் எழுத்தில் வரலாறு வருகிறதென்றால் யார் காரனம் ? வீரன் லோசா அல்லவா ?

கலைஞர் கருணாநிதியிடம்…

எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதைச்சுட்டுங்கள் . அது அனைவருக்கும் பயனளிக்கும்.

‘கவிஞர்துதி ‘ விரும்புவதை தவிர்க்கச்சொல்லுங்கள் வழிகாட்டுதலாக இருக்கும்.

இன்னும் கலைஞர் என்ன செய்யலாம் என்பதை நினைவுப்படுத்துங்கள் இனிமேலாவது செய்யட்டும்.

கவிஞர்களே வாய்ப்புக்கிடைக்கிறபோது வழுக்கிவிழாதீர்கள் என்று சொல்லுங்கள்,பாடமாக இருக்கட்டும்.

இலக்கியவாதிகளே வாய்மை பேசுங்கள் என்று சொல்லுங்கள் சொரணைவரட்டும்.

கவிக்கோ அப்துல் ரகுமான், கவிதையில் அரசியல்வாதிகளை விட்டுவைக்கவில்லை என்பதை நினைவுப்படுத்துகிறேன். அரசியல் வாதிகளை விமர்சனம்

செய்யும்போது தயவு தாட்சண்யம் காட்டியதில்லை.

மூன்றுவிழுக்காட்டினர் ஆரோக்கியமாக மூச்சுவிடாதவரை கலைஞரைக் கவிக்கோ விடமாட்டார்.அது ஒரு சமூகக்கடமையாகக் கருதக்கூடும்.

மூன்று விழுக்காட்டினர் படைப்புகளால் கவர்ந்து புகழை அடையவேண்டுமே ஒழிய பிறரைக் குறைசொல்லி புகழடைய எண்ணக்கூடாது.

மூன்று விழுக்காட்டிரின் பணி எழுத்தோடு சரி. சமூகத்தின் அவசர அவசியத்திற்கு அவர்கள் பயன் படுவதில்லை.

தங்கள் எழுத்திலும் ஒரு சமூகக்கடமை இருப்பதை உணர்கிறேன்.

உணர்ந்து நான் எழுதிய சில வரிகள்…

சுய வேள்வி

‘ விலகு விலகு

நீ

என்னுடன் இருப்பதால்

என் உயரம்

குறைந்துவிட்டது

என் உருவம்

சிறுத்துவிட்டது

கொஞ்சமும்

முதுகெலும்பு கவனமின்றி

நெளிதலால்

என்ன நிகழப்போகிறது ?

இறப்பதற்குள்

என்ன நிகழ்ந்துவிடும் ?

வயிறு புடைத்தலின்றி…

படுத்து எழும்புதலின்றி…

ஒரு பயணத்தில்

புற்கள் பூண்டுகள் அழிந்தாலும்

புதுத்தடம் கிடைக்கட்டுமே

விலகு

விலகு

என் உருவம்

சிறுத்துவிட்டது

பிறர் பார்வைக்குப்

பள்ளத்தில் கிடக்கின்றேன்

எறும்பாய்

தூசியாய்…

விலகு

விலகு

என்

உயரத்தை உயர்த்தவேண்டும் ‘

இக்கவிதையைத்தந்த உங்களுக்கும், சுந்தரராமசாமிக்கும்

எம் நன்றி

பிச்சினிக்காடு இளங்கோ

சிங்கப்பூர்

Series Navigation