கடிதங்கள் ஏப்ரல் 1, 2004

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

பித்தன், சூர்யா, வேதசகாயக்குமார்திரு.விஸ்வாமித்திராவுக்கு,

பெரியாரை நீங்களும் சமூக சீர்திருத்தவாதியாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் சீர்திருத்தவாதிதான். ஏதோ நாந்தான் அவருக்கு சீர்திருத்தவாதி பட்டம் அளிப்பதுபோல பேசுகிறீர்கள். கட்டபொம்மன், காந்தி, நேரு, படேல் இவர்களெல்லாம் சுதந்திரப் போராட்டவீரர்கள். ராஜாராம் மோகன்ராய், அன்னிபெசண்ட் அம்மையார், பெரியார் இவர்களெல்லாம் சமூக சீர்திருத்தவாதிகள் என்று நான் பள்ளிக்கூட வரலாற்றில் படித்ததைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். (வரலாறே ஐரோப்பிய இனவாதம் என்று, ஆர்.எஸ்.எஸ் ரக கதையை அடுத்து எடுத்துவிடாதீர்கள்!). எனவே அவரை சீர்திருத்தவாதியாக உலகமும் வரலாறும் ஏற்றுக்கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. ‘பெரியார், வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் கோவிலுக்குள் விட நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு ‘வைக்கம் வீரர் ‘ என அழைக்கப்பட்டார். ‘ இது ஏதோ தி.க.வின் புத்தகத்திலிருந்து நான் எடுத்துவிடவில்லை. இதுவும் கூட வரலாற்றில் படித்ததுதான். எனவே நீங்கள் ஒத்துக்கொள்ளாததாலோ அல்லது ஒரு 3 சதவிகித மக்கள் ஒத்துக்கொள்ளாததாலோ அவர் சமூக சீர்திருத்தவாதியில்லை என்று ஆகிவிடப்போவதில்லை.

நீங்கள் யாரை வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். யார் தடுத்தது. அதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அப்படி ஒப்பிடுவதானாலேயே அவர்கள் அப்படி ஆகிவிடப் போவதில்லை என்பதுதான் என் வாதம். உங்கள் முதல் கடிதத்தில் என்னைக்கூட, பெரியாரின் கருத்துக்களிலுள்ள நியாத்தை சொன்னதற்காகவே, தீவிரவாதி என்றீர்கள். அதற்காக நான் தீவிரவாதியாகிவிடப் போகிறேனா என்ன ?! பெரியாரின் சீடன், தி.க.காரன் என்று எப்படிவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், நான் ஒன்றும் அப்படி ஆகிவிடப்பொவதில்லை. (போன கடிதத்திலேயே குறிப்பிட்ட்டிருந்தேன்). உங்கள் ஒப்பீடு தவறு என்று எனக்குத் தோன்றினால், தவறு என்று தயங்காமல் நான் சொல்லுவேன். அதற்கான உரிமை எனக்கும் இருக்கிறதல்லவா ? பெண்ணுரிமை என்பது எத்தனை வயதில் திருமணம் செய்துகொள்கிறோம் என்பதில் இல்லை. திருமணத்திற்குப் பிறகும் (முன்பும்) அவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதிலிருக்கிறது. எனினும் நீங்கள் இதை (பெரியாருக்காக சொல்கிறேன் என்று நினைத்துக்கொண்டு)ஒத்துக்கொள்ள போவதில்லை!

என் கட்டுரைகளை ஒழுங்காகப் படிக்காமல் புலம்பாதீர்கள் என்பதுதான் என் முந்தைய கடிதத்தின் வேண்டுகோள். திரு. அரவிந்தன் நீலகண்டனுக்கு எழுதியதைத்தான் ‘[ ] ‘ அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது அதில் உள்ளவைகள் உங்களுக்கு எழுதப்பட்டவையாக நினைத்துக்கொண்டு, ‘யார் அப்படி சொன்னது, நான் சொன்னேனா ? ‘ என்று சிறுபிள்ளைத்தனமாக புலம்பினால் என்ன செய்ய ? பெரியாரின் கருத்துக்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று நான் எப்போதும் சொல்லவில்லையே. அப்படி நீங்களாகவே நினைத்துக்கொண்டால் நான் என்ன செய்ய ? பெரியாரின் வன்முறையைத் தூண்டும் பேச்சுத் தவறுதான் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதை ‘மேம்போக்காக சொன்னது ‘ என்று நீங்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும். என் வார்த்தைகளுக்குத்தான் நான் பொறுப்பேற்க முடியும். நீங்களாக நினைத்துக்கொள்வதற்கல்ல. தவறு என்று சொன்னால் தவறுதான். அதோடு நின்றுவிடாமல் அதன் காரணத்தையும் ஆராயசொல்லியிருக்கிறேன். நீங்கள் அந்தப் பக்கமே போக மறுக்கிறீர்கள். ஒரு தீவிரவாதி கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. திடாரென ஏற்பட்ட கோபத்தால் சிந்திக்காமல் செய்கின்ற கொலைக்கு 6 அல்லது 7 வருட சிறைதண்டனைதான் கிடைக்கிறது. ஒரு காவல் துறை அதிகாரி தற்காப்புக்காகக் கொலை செய்தால் அவருக்கு தண்டனையே கூட கிடையாது. தவறுகளுக்குப் பின் இருக்கும் காரணங்களுக்கு ஏற்பத்தான் நீதிபதிகள் தண்டனையே வழங்குகிறார்கள். நீங்கள் பெரியாரின் கருத்து தவறு என்பதோடு நின்றுவிடுகிறீர்கள். அதற்கான காரணம் பக்கமே போகமறுக்கிறீர்கள். உங்களிடம் எப்படி நீதி கிடைக்கும் ?

திரித்து எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். ‘தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் மனித நேயம் பெரியாரிடம் இருந்தது ‘ என்றுதான் நான் குறிப்பிட்டுள்ளேன். ‘ஒரு இனத்தை அடிக்கச் சொல்வதுதான் மனித நேயமா ‘ என்று மிக அழகாக திரித்து எழுதுகிறீர்கள். பெரியாரின் வன்முறைப் பேச்சுக்கு நான் ஆதரவளிப்பதாக தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அப்படி தொடர்ந்து சொல்வதினால் அப்படி ஆகி விடப்போவதில்லை. வன்முறைப்பேச்சு தவறுதான் என்று சொல்லிவிட்டேன். (நீங்கள் மேம்போக்கு என்றுவேண்டுமானலும் நினைத்துக்கொள்ளுங்கள்) அதோடு நின்றுவிடாமல், மேலே குறிப்பிட்டதுபோல அதற்கான காரணத்தை ஆராய்ந்திருக்கிறேன். காரணத்தில் நியாயம் இருக்கிறது. (நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும்). அந்த நியாயத்திற்குதான் நான் ஆதரவளிக்கிறேன். காரணம் பக்கமே நீங்கள் செல்லாததால் உங்களுக்குகென் கருத்துப் புரிந்துவிடப் போவதில்லை. ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பெரியார் எடுத்த புரட்சிகரமான நடவடிக்கைகள்தான் என்ன ? ‘ என்று நீங்கள் கேட்பதிலேயே யார் அறியாமையில் இருக்கிறார்கள், யார் கிணற்றுத்தவளை என்பது விளங்கிவிடுகிறது. அவர்களுக்காகப் போராடாமல்தான் ‘வைக்கம் வீரர் ‘ என்று அழைக்கப்பட்டாராக்கும் ?! கொஞ்சமாவது வரலாறு தெரிந்திருந்தால் கிணற்றுத் தவளை ஆராய்ச்சியெல்லாம் தேவை பட்டிருக்காது.

இப்போது திண்ணியத்தில் நடந்ததற்கு பெரியார் என்ன செய்யமுடியும். எப்படிப் பட்ட புரட்சியாக இருந்தாலும் ஒரே நாளில் நடந்துவிடாது. யாராவது ஒருவர் (அல்லது சிலர்) ஆரம்பிக்கவேண்டும் அது வளரவேண்டும். மக்களிடம் பரவவேண்டும்.

பின்புதான் அது வெடிக்கமுடியும். பெரியார் தீண்டாமை ஒழிப்பை ஆரம்பித்து வைத்திருக்கிறார், மேலும் தமிழகத்தில் நன்றாக பரப்பியிருக்கிறார். இனிமேல் அதை நடத்தி செல்வது நம் கையில் தான் இருக்கிறது. குறைந்தபட்சம் 5 தடவையாவது நான் வன்முறைக்கு ஆதரவளிக்கிறேன் என்று சொல்லி புலம்பியிருக்கிறீர்கள். அஹிம்சைதான் என் கருத்து என்று பலமுறை தெளிவாக்கியிருக்கிறேன். அது புரியாமல் நீங்களாக எதாவது நினைத்துக்கொண்டு, வன்முறைக்கு ஆதரவளிக்கிறேன் என்று புலம்பினால் எப்படி ? அஹிம்சையை போதித்த காந்தியே தற்காப்புக்காக பெண்கள் நகம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதைப் படித்துவிட்டு, இது என்ன முரண்பாடுகளின் மொத்த உருவமாகவல்லவா இருக்கிறது காந்தியின் பிதற்றல் என்பீர்களோ ?! அப்படித்தான் இருக்கிறது என்னைப்பற்றிய உங்களின் (மட்டகர) சாடல். காந்தியின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைத் தான் இங்கு காணவேண்டும். வெறும் வார்த்தைகளைப் படித்துவிட்டு, கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல், அடிப்படைக் காரணாத்தையேப் பார்க்காமல் உளறிக்கொண்டேயிருக்கிறீர்கள். (இதையே தான் அப்போது பெரியாரின் கருத்துக்களுக்கும் சொன்னேன். வெறும் வார்த்தையை மட்டும் பார்க்காமல், காரணாத்தையும் பாருங்கள் என்று). பெரியாரின் கருத்துக்களையோ, யார் கருத்துக்களாக இருந்தாலும், வெறும் வார்த்தையில் இருப்பது சிறு சதவிகிதம் தான். அதற்கான அடிப்படை என்ன, காரணம் என்ன என்றுப் பார்க்கவேண்டும்.

‘இந்த பகுத்தறிவுக் கருத்துக்களை சமுதாய சீர்திருத்தம் என்று சொல்வதைப் போல வயிற்றைக் குமட்டும் விஷயம் வேறெதுவும் இருக்கமுடியாது ‘ என்று நீங்கள் சொல்வது எதிர்பார்க்கக் கூடியதுதான். இத்தனைக் காலமாய் அதிகம் படிப்பறிவில்லாத, வெகுளியான மக்களை ஏமாற்றி, நீ கீழ் சாதி என்ற கீழ்த்தரமான கருத்தைப் பரப்பி, அவர்கள் உழுது கொடுக்கும் உணவையே வெட்கமில்லாமல் உண்டு, தொந்தி வளர்த்து திரியும் கூட்டத்திற்கு, ‘அனைவரும் சமம், நீயும் வந்து வேலை பார் ‘ என்று சொன்னால் குமட்டத்தான் செய்யும். ‘ என்றுதான் நான் எழுதியிருக்கிறேன். இது அப்படி தொந்திவளர்த்து திரியும் அனைவருக்குமான சாட்டையடிதான். தவறு யார் செய்தாலும் தவறுதான். யார் தவறு செய்தாலும் தவறு என்றுதான் சொல்லுவேன். பயமொன்றுமில்லை. இதில் வெட்கப்படுவதற்கும் ஒன்றுமில்லை. நான் சொல்லியிருந்தது உண்மைகள். உண்மையை சொல்வதற்கு எதற்கு வெட்கப்பட வேண்டுமெனத் தெரியவில்லை!அனைவரையும் தட்டிக் கேட்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறேன். இதையே வேண்டுகோளாக பொது ஆர்வலர்களூக்கும் வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் படித்துவிட்டு, நான் ஒரு இனத்தை மட்டும் சாடுகிறேன் என்று நீங்கள் கூறுவது என்னை மட்டப்படுத்த (ஒரு இனத்திற்கு விரோதியாக்க) நீங்கள் செய்யும் முயற்சியாகவே தெரிகிறது. நான் எந்த இனத்திற்கும் விரோதியல்ல. சாதிவெறிக் கருத்துக்களுக்குத்தான். எந்த இன மக்கள் அம்மாதிரியானக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் எதிர்க்கவே செய்வேன். என் கட்டுரையை முழுமையாக படித்தீர்களா என்றே சந்தேகமாக இருக்கிறது! நீங்கள் விஷ மரத்தின் கிளைகளையும், இலைகளையும் மட்டுமே கவனித்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் ஆணிவேரையும் (உம்-மைக் கவனிக்க) கவனிக்கச் சொல்கிறேன். அதைப் புரிந்து கொள்ள நீங்கள் முயற்சிக்காதது வியப்பே. எத்தனைக்காலத்துக்கு பார்ப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். எத்தனைக் காலம் ஆனாலும், விஷ மரம் அழியும்வரைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். ஆணிவேர் தமிழகத்திலிருந்து போய்விட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது! கண்ணை மூடிக்கொண்டு எதுவும் தெரியாமல் இருக்கவேண்டியதுதான்.

அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. உலகத்திற்கே தெரியும். இபோது ஏதோ நான் கண்டுபிடித்து சொல்வதாக நீங்கள் நினைப்பது வேடிக்கையான அறியாமை. மீண்டும் பூனை கண்ணை மூடிக்கொண்டது. அவ்வளவுதான். சுதந்திர இந்தியாவின் சிறு வரலாற்றைப் பார்த்தாலே பிரதமர்கள் அனைவரும் மேல்சாதிக்காரர்கள் என்பது தெரிந்துவிடும். நான் சொன்னது உண்மை. அதை ‘பாமரத்தனமான பேச்சு ‘ என்று விலக்கினால் விலக்கிக்கொள்ளுங்கள். உண்மை மாறிவிடப்போவதில்லை. பாமரத்தனத்தில்தான் உண்மையும், நியாயமும் இருக்கும்.

‘என்னைப் பற்றி என்ன தெரியும் ? ‘ என்று கேட்கிறீர்கள். ஒன்றும் தெரியவேண்டிய அவசியமில்லை. என் மோதல்கள் உங்கள் கருத்துக்களோடுதான். தனிநபர் துதிபாடலிலோ, அவதூறிலோ எனக்கு நம்பிக்கையில்லை. ‘பித்தம் தலைக்கேற வேண்டியதில்லை. தீவிரவாதி, வன்முறைவாதி, முட்டாள்தனம், அயோக்கியத்தனம்… ‘ இதெல்லாம் நீங்கள் உங்கள் முதல் கடிதத்தில் வாரியிறைத்த சேறுகள்! ஆனால் அதற்காக நீங்கள் சொன்ன காரணங்கள் தான் தவறு; இந்த இந்த காரணங்களுக்காக அவைகள் உங்களுக்கே பொருந்துகின்றன என்றே நான் எழுதியிருந்தேன். நான் வெறும் கண்ணாடியாக இருந்து பிரதிபலித்தேன். (அதுவும் கூட நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் புரிந்துகொள்ளவில்லை) அவ்வளவுதான். அதில் நீங்கள் கண்டது உங்கள் (மன) சேற்றைத்தான். கண்ணாடிக்கூண்டுக்குள் இருந்து கல்லெறிவதற்குமுன் யோசித்திருக்கவேண்டும். ‘யார் என்னிடம் எப்படி நெருங்குகிறார்களோ அவர்களிடமும் நான் அப்படியே நெருங்குகிறேன் ‘ – பகவத்கீதை. இப்போது இரண்டாவது கடிதத்திலும் சேற்றை வாரி இறைத்துவிட்டு (பட்டியல் நீளம்) ஒன்றும் தெரியாததுபோல, வேண்டுமானால் சேற்றை வாரி இறைத்துக்கொள்ளுங்கள் என்று அழுவது உங்களுக்கு எவ்வளவு மனமுதிர்ச்சி எனக் காட்டுகிறது!! மீண்டும் கண்ணாடியாக நான் மாறினால் அதற்கும் ஒரு பாட்டம் அழுது தீர்ப்பீர்கள். (உங்கள் அளவுக்கு நான் கீழிறங்கமுடியாது, உங்களுக்குப் புரியவைப்பதற்காகவும்கூட!). வேண்டுமானால் நான் ஒன்று செய்யலாம். இனி உங்கள் கட்டுரைக்கோ, கடிதத்திற்கோ எதிர்வினை எழுதாமல் இருக்கலாம். உங்கள் அழுகை அப்படியாவது குறையட்டும். அவ்வளவுதான் என்னால் முடியும். (சேற்றையெல்லாம் நீங்கள் இறைத்துவிட்டு நான் தரம் தாழ்ந்துவிட்டதாகப் புலம்புவது வேடிக்கை.)

அதிமுக கூட்டத்தில் ஆதரித்துப் பேசிவிட்டு, வெளியேவந்து ‘திமுகவை ஆதரிக்கவில்லை என்று நீங்களாக நீனைத்தால் என்ன செய்வது. என்னைப்பற்றி உங்களுக்கு என்னதெரியும் ? ‘ என்று கேட்பதுபோல இருக்கிறது உங்கள் வாதம்.

உங்கள் முதல் கடிதத்திலேயே, இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது. இரண்டு பக்கமும் கேட்கவேண்டும் என்று எழுதியிருந்தால் இந்தக் கடிதங்களுக்கு வேலையிருந்திருக்காது. நீங்கள் ஒரு சாராரை மட்டும் திட்டிவிட்டு, அதை நான் சுட்டிக்காட்டியபின், ‘நான் பொதுவில்தான் இருக்கிறேன். (ஒன்றும் சொல்லாததால் அப்படி நினைத்துக்கொண்டால் என் தவறா என பாசாங்குவது) இரண்டுமே தவறுதான் ‘ என்று சொன்னால் எந்தவிதத்தில் சேர்ப்பது ?

பொதுவில் இருப்பவர்கள், அதுவும் ஒரு சமூக பிரச்சனையைப் பற்றி பேசும்போது இரண்டு பக்கங்களிலுமுள்ள குறைகளைப் பேசவேண்டும். அப்போதுதான் அவர் நடுநிலையிலிருக்கிறார் என்று அர்த்தம். ஒரு பக்க பார்வையில் பேசிவிட்டு, இப்போதுவந்து அடுத்தவர்களை காமாலைக்கண் என்று சொல்வது வேடிக்கையானது. பெரியார் ஒரு இனத்தை திருத்த தான் நினைத்தார். அழிக்க அல்ல. அவர் கையாண்ட முறைகளில் தவறு இருக்கிறது என்பதில் எனக்கும் உடன்பாடே. ஆனால் அழிக்க நினைத்தார் என்பது உங்கள் சொந்தக் கற்பனை. உலக வரலாற்றிலேயே எனக்கு தெரிந்து ஒரு இனத்தை பூண்டோடு அழித்தது என்பது, நந்தர்கள் என்ற வம்சத்தையே, பூண்டோடு ஒழித்ததாகத்தான் இருக்கமுடியும். அதற்கு காரணம் யார் என்று நான் சொல்லத் தேவையில்லை.

அது வரலாறு. அப்படிப்பட்ட மனிதத்தன்மையே இல்லாத செயல்களை ஒரு சிலரால் தான் செய்யமுடியும்!

உங்கள் கடிதத்தில் ‘சமூக நீதிக்காகப் போராடுவதற்கு பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமில்லை ‘ என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இலக்குதான் முக்கியம், பாதையல்ல. இதுகூட மதம் போன்றதுதான். கடவுளை அடைவது (முக்தி அடைவது) என்பதுதான் எல்லா மதத்தின் நோக்கமும். பாதைகள்தான் வேறுவேறானவை. நோக்கம் தெளிவாக இருந்தால் அடுத்த மதத்தைப் பற்றி குறை சொல்லவேண்டியதில்லை. (நோக்கம் தெளிவில்லாதவர்கள் தான் அடுத்த மதத்தப் பற்றி தவறாகப் பேசுவார்கள்). உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நீங்கள் அடுத்தவர்களின் பாதையைப் பற்றித் தவறாக சொல்லியிருக்கமாட்டார்கள்!

யோசிப்பது இரண்டு பேருக்குமே நல்லது. யோசிப்போம்.

– பித்தன்.

****

திரு. சூரியா அவர்களுக்கு,

விமர்சனம் என்பதற்கான தமிழ் வார்த்தைதான் திறனாய்வு என்று நீங்கள் சொல்வது எனக்குத்தெரியாது என்றே வைத்துக்கொள்ளுங்கள். வெறும் வார்த்தையில் என்ன இருக்கிறது ? வார்த்தையைப் பார்க்காமல் கருத்தைப் பாருங்கள்.

சாதாரண வாசகரின் விமர்சனத்துக்கும், முறையான திறனாய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை ஜெயமோகன் எப்படி கையாள்கிறார் என்பதுதான் பிரச்சனையே. சாதாரண வாசகரின் விமர்சனத்தை, தகுதியில்லை என்று ஒதுக்குவது என்ன விதத்தில் என்பது தான் அடிப்படைக் கேள்வியே.

ஜெயமோகனின் கடிதத்தில், மனுஷ்யபுத்திரனைப் பிடிப்பதற்கும், வைரமுத்துவை ஒதுக்குவதற்குமான காரணமாக அவர் கூறுவது அவர்கள் நடையைப் பார்த்து அல்ல. (உங்களுக்கு புரியவில்லை. அவர்கள் தனிநபர் துதி பாடுபவர்கள் என்பதால்தான் பிடிக்காது என்பதாகத்தான் அதற்கு அர்த்தம் கொள்ள முடியும் – அந்த கடிதப்போக்குப்படி). மேலும் என் கடிதத்தில் ‘அவர்களின் திறனையோ, அவர்கள் படைப்பின் தகுதியையோப் பார்க்காமல், அவர்கள் இன்ன குழுவில் இருப்பவர்கள் என்பதால் தான் பிடிக்கும், பிடிக்காது ‘ என்று சொல்வது எப்படி இலக்கியமாகும் என்றுதான் கேட்டு இருக்கிறேன். ‘அவர்கள் படைப்பின் தகுதி ‘ என்று நான் சொல்வதிலிருந்தே தெரியவில்லையா நான் அவர்கள் படைப்பைத்தான் முக்கியமாகக் கருதவேண்டும் என்று சொல்வது ?

ஜெயமோகனைத்தான் சோதிப்பிரகாசம் நக்கல் செய்கிறார் என்றால், மற்றொருக் கடிதத்தில் முகம் தெரியாத நபரை

எதற்காக அழைக்கிறார் ? அதற்கும் நீங்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்!!

அடுத்தவர்களைப் புத்தகம் படிக்க சொல்வதற்கு முன்னால் நீங்கள் கட்டுரைகளையும், கடிதங்களையுமாவது ஒழுங்காகப் படித்து புரிந்துகொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.

[பி.கு: புத்தகம் படிக்குமாறு நீங்கள் சொன்னது நல்ல அறிவுரையே. நன்றி]

வணக்கத்துடன்.

பித்தன்.


ரவி சீனிவாஸின் உற்சாகம் எதிர்பார்த்ததுதான். இப்படித்தானே ஏதாவது செய்யவேண்டும் அவர். ஆனால் ஒரு சராசரி வாசகன் வேறுமாதிரித்தான் யோசிப்பான். ரவி சீனிவாஸ் சொல்வதுபோல ஜெயமோகன் ஒரு கீழ்த்தர மோசடிப்பேர்வழியாகவேகூட இருக்கலாம் என்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் அவருக்கு சுயமாக தமிழில் சொற்றொடர்களை எழுதத்தெரியும் என்றவது ரவி ஒத்துக் கொள்வார் என எண்ணுகிறேன். [ இல்லாவிட்டால் அவர் எழுதும் எல்லா வரிகளுமே காப்பி என்கிறாரா என்றும் தெரியவில்லை] அடிப்படையான தகவல்கள் கொண்ட சாதாரணமான ஒருசில ஒருபக்கக் குறிப்புகளை அவரால் எழுதவீ எழுதவைக்கவோ முடியாது, காப்பிதான டிக்கவேண்டும் என்றுபெவருமே சொல்லமாட்டார்கள். அதுவும் மநோரோமா இயர்புக் போல ஒரு பிரபல இதழில் வந்த கட்டுரையிலிருந்து ஈயடிச்சான் காப்பி செய்யவோ, அல்லது பிறர் செய்யும்போது அனுமதிக்கவோ அவர் வடிகட்டிய முட்டாளாகத்தான் இருக்கவேண்டும் . எந்த கலைக்களஞ்சியத்திலும் உள்ள தகவல்கள்தான் அவை. அவற்றை இக்கட்டுரையிலிருந்து எடுத்துக் கொண்டால்கூட சுருக்கியும் சொற்களை மாற்றியும் போடவேண்டும் என்றாவது ஒருவருக்குத் தெரிந்திருக்கும் . சாதாரணமமாக கண்ணில் படாத அபூர்வமான ஏதாவது நூலில் இருந்து எடுக்கவாவது தோன்றியிருக்கும். அப்படியே வரிக்குவரி பிரதிசெய்திருப்பது முழுக்கமுழுக்க அமெச்சூர் முயற்சியையே காட்டுகிறது . அது சரவணனைபோல அவ்வயதுக்கு உரியவர்கள் செய்வது. இக்கட்டுரைகளை விட மிகவும் தரமான கட்டுரைகளை சுந்தர ராமசாமி பற்றியெல்லாம் அருண்மொழிநங்கை இவ்விதழில் எழுதியிருக்கிறார். நடை மட்டுமே அமெச்சூர்த்தனமாக இருக்கும். கருத்துக்கல் தனித்தன்மையும் துணிச்சலும் கொண்டவை. இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடக்கும்போது எந்த தர்க்கத்தையும் பொருட்படுத்தாமல் சிலர் இபபடி வைய ஆரம்பிப்பது தமிழில் உள்ள வெறுப்பு எப்படிப்பட்டது என்பதற்கு ஆதாரம் . வெறும் பொறாமையின் காரணமாக சில அமெச்சூர் எழுத்தாளர்கள் திட்டவட்டமாக சில சாதனைகளைச்செய்த எழுத்தாளரை இப்படி எந்தவித விமரிசனநோக்கமும் இல்லாமல் வசைபாடிவிட்டு சமநிலையுடன் அவரது எழுத்துக்களைப் படிப்பவர்களை ரசிகர்கள் என்று இந்தக் கும்பலே சொல்கிறது. ஒரு சிறந்த எழுத்தை மனம் திறந்து ரசிக்கவும் சில்லறைச் சிறுமைகள் இல்லாமல் கருத்துக் கூறவும்கூட ஒரு அடிப்படைத் தகுதி வேண்டும்.

சூர்யா

suurayaa@rediffmail.com


ஆசிரியருக்கு

சொல்புதிது இதழில் வந்த கட்டுரைகள் குறித்த விவாதம் சார்ந்து சில சொல்ல விழைகிறேன்.

வாழ்வியல் களஞ்சியத்தில் இருந்து அடிப்படைத்தகவல்களை சேர்த்து இருகுறிப்புகள் எழுதும்படி சரவணனிடம் கோரப்பட்டது. அக்கட்டுரைகள் அவர் எழுதிய கட்டுரைகள் ஆசிரியர் குழு என்ற பொதுப்பேரால் அளிக்கப்படுவத்ற்குப்பதிலாக ஆசிரியர் குழுவினரின் பேரால் வெளியாயின. இது தவறு. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கலாம். ஆனால் ஆசிரியரால் செய்யப்பட்ட தவறை ஆசிரியர் மறுக்கும் சங்கடம் ரொம்ப பெரிது. சொல்புதிது இதழில் அப்படி நிகழ்ந்த பல குளறுபடிகள் அப்படியேதான் விடப்பட்டன. அதற்கு காரணம் இதுவே அந்த சிறு தவ்றுக்குப் ப்ன்னால் பெரிய தவ்று ஒன்றை சரவணன் செய்திருப்பது இப்போது தெரியவரும்போது கதை சிக்கலாகிவிட்டது. அந்த்ஹ முதல் தவரி ஜெயமோகன் செய்திருக்கக் கூடாது. அதற்கு அவர் மன்னிப்பு கோரியதும் சரி. அப்படிப்பட்ட சமரசங்கள் இல்லாமல் பலரை ஒருங்கிணைத்து எவரும் இதழ் நடத்தமுடியது என்பதும் உண்மை. இதழ் நடத்தும்போது ஏற்படும் உளவியல் நெருக்கடிகள் கோபதாபங்கள் எண்ணற்றவை. தமிழில் இன்றுவரை சிற்றிதழ் நடத்திய எக்குழுவும் கோபித்துக் கொண்டு பிரியாமல் இருந்தது இல்லை. ஒரே விதிவிலக்கு சொல் புதிதுதான். ஆனால் இதை ஒரு சாக்காகவைத்துக் கொண்டு ஜெயமோகனின் நேர்மையையும் படைப்புக்கள் முழுமையையும் இழிவுபடுத்த முயலின் ரவி சீனிவாச் போன்றவர்களின் உற்சாகம் கண்டனத்துக்கு உரியதாகும். படிக்காத நூலைவைத்து அதன் ஆசிரியரை அவமதிக்கத்துணிந்த ரவிசீவாசிடம் மேலும் எதிர்பார்ப்பதும் தப்பு. ஒன்று சொல்கிறேன் எவரானாலும் செய்தவை என்ன , சாதித்தவை என்ன என்ற அடிப்படையிலேயே மதிக்கப்படுவார்கள் . இம்மாதிரி வம்புகளில் அடையும் வெற்றி தோல்விகளின் அடிபப்டையிலல்ல

எம் வேதசகாயகுமார்

emveethaa@rediffmail.com


Series Navigation

பித்தன், சூர்யா, வேதசகாயக்குமார்

பித்தன், சூர்யா, வேதசகாயக்குமார்