கசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

ப்ரகாஷ்ராயன்


எனக்கு படிக்கும் பழக்கம் ஏற்படுமுன் வெளிவந்த புத்தகங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனிப்ரேமை. உதாரணமாக நான் வழக்கமாக புத்தகங்கள் இரவல் பெறும் வாடகை நூல் நிலையத்தில், எனக்குப் பிடித்த ஒரு புத்தகம், அச்சிடப்பட்ட ஒரு வடிவமாகவும், முன் எப்போதோ தொடராக வெளிவந்து, பக்கங்கள் கிழிக்கப்பட்டு, தொகுக்கப்பட்ட ஒரு வடிவமாகவும் , இரு வடிவங்களிலும் இருந்தால் நான் பின்னதைத் தான் தேர்ந்தெடுப்பேன். பழைய சமாசாரங்கள் அனைத்தும் சிறப்பானவை என்ற ஒரு பிற்போக்குத்தனமான எண்ணம் என் மனதில் எப்படியோ ஊறி விட்டிருந்ததுதான் காரணம். ஆனால் என்னுடைய இந்த கிறுக்குத் தனமான ஆசையை நான் நட்பு பாராட்டும், பாராட்ட விரும்பும் பெண்களிடம் கடைபிடிப்பது இல்லை பலரைப் போலவே எனக்கும் இருபதின் மிகாதவர்கள் தான் விருப்பம். பழையதின் மீதான மோகம் புத்தகங்கள் விஷயத்திலும் வெகுவாக கடைபிடிக்கிறேன். அப்படியாகப் பட்ட ஒரு தேடுதலில் தான் எழுபதுகளில் தோன்றி மறைந்த கசடதபறவும் எனக்குக் கிடைத்தது.

இதை வாசித்து முடித்தபின் தோன்றிய ஒரு எண்ணம், கசடதபற என்பது ஒரு இலக்கிய ஏடு மட்டுமன்று. அது ஒரு சிறு இயக்கமாக இருந்திருக்க வேண்டும். அதற்கு அலுவலகம், ஊழியர்கள் போன்றோர் கிடையாது. திருவல்லிக்கேணியில். ஞானக்கூத்தன் இருந்த சரஸ்வதி கான நிலையத்தில் கீழே நடன சங்கீத வகுப்புகள் நடக்க, மேல் மாடியில் இலக்கிய சர்ச்சைகளோடும் உருவாகி வந்து கொண்டிருந்தது என்கிறார் தொகுப்பாசிரியர் தன் முன்னுரையில் . கசடதபற நா.கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆசிரியராகக் கொண்டு, 1970இல் துவங்கி, மூன்று ஆண்டுகள் வெளிவந்திருக்கிறது.

இந்த இதழ் தொகுப்பு, வெளிவந்த அனைத்து கசடதபற இதழ்களையும் ரெப்ரசண்ட் செய்யும் அளவுக்கு இருக்கிறதா என்று ஒன்று தொகுப்பாளர் சா.கந்தசாமி சொல்லவேண்டும் அல்லது அனைத்து இதழ்களையும் வாசித்த யாராவது சொல்லவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஒரு நேர்காணல்,( ஜீன் பால் சார்த்த்ரே) , அக்கம் பக்கம் என்ற ஆசிரியரின் காலம் போன்றவை தொகுக்கப் பட்டிருந்தும், ஒன்றுக்கொன்று ஒட்டாமல், அதாவது homogenity தெரியாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இதழ்தொகுப்புக்கு இது ஒரு இலக்கணமாக இருக்கக்கூடும்,. இன்றைக்கு பிரபலமாயிருக்கும், கல்யாண்ஜி, கலாப்ரிய, ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், பசுவய்யா ( நடு நிசி நாய்கள் என்ற ஒரு பிரலமான கவிதை) , நகுலன், சுஜாதா , இ,பா, நீல பத்மனாபன், பாலகுமாரன், அம்பை சார்வாகன் கே.எம்.ஆதிமூலம் போன்றவர்களின் ஆரம்பகால படைப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

‘ வாசன் மகனுக்கென்றால் மட்டும்

அச்சுப் பொறிகள் அடிக்குமோ ?

முத்துச்சாமி போன்றவர்கள் சொன்னால்

மாட்டேனென்று மறுக்குமோ ‘

என்று கோபமாக ஆரம்பிக்கிறார் ஞானக்கூத்தன் ‘ தமிழை எங்கே நிறுத்தலாம் ‘ என்ற கவிதையில்.

இது தான் புத்தகத்தில் இருக்கும் முதல் கவிதை . அந்த ஆவேசம் ஞானக்கூத்தன் கவிதையுடன் நின்று விடுவதில்லை. மேலும் பல படைப்புகளிலும் தொடர்கிறது. அக்கம் பக்கம் என்கிற தொடர் கட்டுரைகளில் வெட்ட வெளிச்சம் ஆகிறது.

அக்கம் பக்கம் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருந்திருக்கவேண்டும் அல்லது, சுவாரசியமான சிலவவற்றை மட்டும் எடுத்து தொகுப்பில் போட்டிருக்க வேண்டும். பல ஆங்கில இதழ்களில் தென்படக்கூடிய ஒரு வடிவம் இது. வரையறுக்கப் பட்ட பக்கங்களில், எழுதுபவருக்கு மிகவும் விருப்பமானவற்றை திணிக்க இது மிகவும் ஏதுவானது இது. அப்போதைய நிகழ்ச்சிகள், அவற்றின் மீதான விமர்சனங்கள், பிடித்த படைப்புகளின் சிலாகிப்புகள் என்று கலந்து கட்டி இருக்கும் இது, பின்னால் , இதே மாதிரி வந்த பல random thinking கட்டுரைகளுக்கு முன்னோடியாக இருந்திருக்க கூடும். அப்போதைய இலக்கிய உலகின் பிரதானிகளானவர்களின் சர்ச்சைகள், அவர்களின் சார்பு நிலைகள், போன்றவை இக்கட்டுரைகளில் காணக்கிடைப்பதும் ஒரு கூடுதல் சுவாரசியம்.

விமர்சகர் வெ.சுவாமிநாதன், ஜெயகாந்தன் மேல் ஏதோ ஒரு காரணத்துக்காக கோபப்பட்டு இதழ் எண் பதிமூன்றில் ஐந்து பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதிருக்கிறார். ஜெயகாந்தன்., சுவாமிநாதன் மீது வேறு ஏதோ பத்திரிகையில் நடத்திய தாக்குதலுக்கு. சுவாமினாதன் தந்த பதில் அது. ( இது தொகுப்பில் இடம்பெறவில்லை) . இம்மாதிரியான தனி நபர் தாக்குதல்களையெல்லாம் கசடதபறவில் நடத்தக் கூடாது. பக்கங்கள் வீணாகிறது .வேண்டுமானால் கோர்ட்டில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் கச்சேரியை என்று, இதில் நேரடியாக சம்மந்தப் படாத அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதிய்ருக்கிறார். இது ஏழு பக்கங்களுக்கு. இதன் லாஜிக் எனக்குப் புரியவே இல்லை.

கதைகளும், அதை எழுதியவர்களின் சிறந்த படைப்பாக இரூக்கும் என்று தோன்ற வில்லை. ஒரு வேளை 1970, 71 இல் அப்படியாக இருந்திருக்குமோ ? தெரியவில்லை. ஆசிரியரின் அக்கம் பக்கம் என்கிற வாத்யாரின் கடைசிப்பக்கம் ஸ்டைலில் இருக்கும் கட்டுரை அப்போது கொஞ்சம் பிரபலமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதை மையமாக வைத்து சில கடிதங்கள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

தற்காலத் தமிழ் இலக்கியம் என்னும் தலைப்பில் சிதம்பரசுப்ரமணியம், ந.பிச்சமூர்த்தி, எச்.சங்கரன். சா.கந்தசாமி ஆகியோர் திரு.சிட்டி தலைமயில் வாசித்த கட்டுரைகளின் ஒரு தொகுப்பு, நோபல் பரிசும் மார்சிச பரிசும் ( ஞானக்கூத்தன்), ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்( இ.பா) , சுப்ரமண்ய ராஜூவின் எழுதிய கவிஞர் மீராவின் கவிதைத் தொகுப்பு விமரிசனம். ( கனவுகள் கற்பனைகள்) நீல பத்மனாமனின் என் எழுத்து, இதை விமரிசித்து வெ.சுவாமினாதன் எழுதிய பதில் கட்டுரை என்று நீள்கிறது தொகுப்பு.

‘நாவல் எழுதுவதிலாகட்டும், சிறுகதையாகட்டும், கவிதையாகட்டும் ,லீவ் லெட்டராகட்டும், எதைத் தொட்டாலும் நீர் மன்னன்யா என்று சொல்லவேண்டும் என்று சொன்னால் ஒழிய இந்தத் தலைமுறை எழுத்தாளர்களுக்குத் த்ருப்தியே ஏற்படுவதில்லை. இப்படிப்பட்ட புகழுரைகளை அவர்கள் பாட்டி சொல்லலாம். நாம் சொல்ல முடியுமோ ? ‘ என்று முடிக்கிறார் வெங்கட் சுவாமிநாதன். இதற்கு நீல.பத்மநாபன் என்ன பதில் எழுயிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே சுவாரசியமாயிருக்கிறது.

எஸ். கிருஷ்ணனின் அசோகமித்திரன் எழுதிய இன்னும் சில நாட்களின் விமரிசனம் போன்றவை ஒரு கலக்டர்ஸ் ஐட்டம் என்றே சொல்லலாம்.

இதழ் தொகுப்பு என்றால் கல்யாணசாப்பாடு போல எல்லா ஐட்டமும் இருக்கவேண்டும் என்ற விதிகள்படி வந்திருக்கும் இந்நூல், விதிவிலக்காக வெறும் கட்டுரைகளும் நேர்காணல்களையும் உள்ளடக்கி வந்திருந்தால் இன்னமும் இசைவாக இருந்திருக்கும். புத்தகம் போடுமுன் என்னை திரு. சா.கந்தசாமி அவர்கள் என்னை கன்சல்ட் செய்யவில்லை என்பதால் அது முடியாமல் போய்விட்டது 🙂

கசடதபற வை துவக்கிய நோக்கமே அதன் ஆசிரியர் மூலமாக கீழ்க்கண்ட பாராவில் தெரியவருகிறது.

‘ சொந்த அல்லது வேற்றரசாங்கத்தின் பணம் ஏதும் கொல்லைப் புறமாக இவர்களுக்கு ( எங்களுக்கு) வந்திருக்க வில்லை. அல்லது பை கொழுத்துப் போன ஒருவருடைய இறுதிக்காலத்தியதே போன்ற ஆவலை நிறைவேற்றவோ, கேவலம் சுய விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்வதற்காகவோ கசடதபற வந்திருக்கவில்லை. மாறாக சிந்திக்கறவனுக்கு இன்றைய உலகம் விடம் அறைகூவல்களை ஏற்றுக் கொள்ள வந்திருக்கின்றது. அமூகத்தின் கூட்டுப் பொறுப்பான கலாசாரத்தின் ஆழ அகலங்களை, ரகசிய அம்பலங்களை இலக்கியத்தில் காட்ட கசடதபற வந்திருக்கின்றது ‘

இப்படியாக சூளுரை செய்து விட்டு துவங்கிய கசடதபற மூன்றாண்டுகளிலேயே மடிந்து போனதற்கு காரணம் பொருளாதாரமாகவும் இருக்கலாம் அல்லது, அதை நடத்தியவர்களுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்து விட்டிருக்கலாம்.

இதில் இழப்பு யாருக்கு அதிகம் என்று சொல்ல ஆறாவது அறிவு கூட தேவையில்லை.

***

icarus1972us@hotmail.com

Series Navigation

ப்ரகாஷ்ராயன்

ப்ரகாஷ்ராயன்