ஓ போடு ! – அசல் முகங்கள்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

ஞாநி


இதற்கு முன்பு எந்தத் தேர்தலிலும் அம்பலமாகாத அளவுக்கு இந்தத் தேர்தலில் பிரதானக் கட்சிகளின் அசல் முகங்கள் அம்பலமாகியுள்ளன.

ஏன் பி.ஜே.பி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகியது என்பதற்கு தி.மு.கவின் விருதுநகர் மாநாட்டிலும் சரியான விடை கிடைக்கவில்லை. கலைஞர் கருணாநிதியும் வைகோவும் இப்போதும் வாஜ்பாயியைப் புகழ்வதை ந்ிறுத்தவில்லை.

பி.ஜே.பியின் மதவெறிக் கொள்கைகளுக்கு உடன்பட விரும்பாமல்தான் விலகியதாக பொதுவாக இருவரும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அயோத்தி பிரச்சினையில் பி.ஜே.பி கருத்தை தான் ஆதரிக்கவில்லை என்று இப்போது முழங்குகிறார் கலைஞர் கருணாநிதி. கடந்த நான்காண்டுகளில் பல முறை பி.ஜே.பி, விஸ்வ ஹிந்து பரீஷத் அயோத்தி நிலத்தை சட்டத்தை வளைத்து அபகரிக்க முயற்சித்த போதும், அங்கே போய் பூஜைகள் நடத்திய போதும், கோவிலுக்கான தூணை டெல்லி அரசின் அதிகாரியிடம் அதிகாரப்பூர்வமாக அளிக்கும் தந்திர வேலையை செய்தபோதும், ஆட்சியில் உடனிருந்த தி.மு.க எதிர்ப்பு காட்டியதில்லை.

காந்தியைக் கொன்ற கூட்டத்தின் தலைவர் சாவர்க்கர் படத்தை நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி அரசு திறந்து வைத்ததாக வைகோ விருதுநகர் கூட்டத்தில் குமுறியிருக்கிறார். அதை அப்போதே ஏன் எதிர்க்கவில்லை ? அமைச்சரவையில் இருந்த ம.தி.மு.க மந்திரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?

வாஜ்பாயி வேறு அத்வானி வேறு ; இப்போது ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்திருப்பது அத்வானி என்று பி.ஜே. பி பாணியில் கலைஞர் கருணாநிதி வியாக்யானங்கள் வழங்கத் தொடங்கிவிட்டார். நாளைக்கு தேவைப்பட்டால் மறுபடியும் வாஜ்பாயியுடன் கூட்டு சேர்வதற்கான முன் ஜாமீன் இது.

விருதுநகர் மாநாட்டில் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுகிற மாதிரி அவர் தந்த ஒரு புது விளக்கம் கெப்பல்ஸ்களையே வெட்கப்பட வைத்துவிடும். ( கெப்பல்ஸ் ஹிட்லரின் பிரசார அமைச்சர்)

இடதுசாரிகளும் காங்கிரசும் ஜெயலலிதாவை நம்பி மோசம் போனார்கள். நாங்கள் பி.ஜே.பியை நம்பி மோசம் போனோம். இருவரும் தவறு செய்து விட்டோம். இப்போது திருந்தி ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்று ஒரே போடாக போட்டு விட்டார்.

இரு தரப்பும் கடந்த காலத்தில் தவறு செய்தார்கள் என்பது உண்மையின் ஒரு பகுதி. முழு உண்மையல்ல. இருவரின் தவறும் ஒரே மாதிரி சமமானதல்ல.

ஜெயலலிதாவை கடந்த தேர்தலில் ஆதரித்த இடதுசாரிகள் அதற்குப் பின் மூன்று ஆண்டுகளாக அந்த அரசின் அராஜகங்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பி.ஜே.பியுடன் கூட்டு சேர்ந்த கலைஞரும் தி.மு.கவும் இரண்டு மாதங்கள் முன்னால் பிரியும் வரை நான்கு ஆண்டுகளாக செய்து வந்தது என்ன ? பி.ஜே.பி அரசின் அத்தனை அராஜகங்களுக்கும் உடந்தையாக ஆட்சியில் இருந்து வந்தது தி.மு.க.

பி.ஜே.பியின் பொடாவை தி.மு.கவும் ம.தி.முகவும் பா.ம.கவும் ஆதரித்தது போல ஜெயலலிதாவின் எந்த அராஜகத்தையும் இடது சாரிகளும் காங்கிரசும் ஆதரித்து, பதிலுக்கு ஆட்சி சுகங்களைப் பங்கு போட்டுக் கொள்ளவில்லை.

குஜராத் முஸ்லீம்கள் படுகொலைக்காக வாஜ்பாய் அரசைக் கண்டித்து மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது தி.மு.க யார் பக்கம் இருந்தது ? மோடியை அப்போது ஜெயலலிதாவும் ஆதரித்தார். தி.மு.கவும் ஆதரித்தது.

சென்ற தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்த நல்லகண்ணுவும் வரதராஜனும் தங்கள் மருமகனையோ மச்சானையோ பேரனையோ ஜெவின் அமைச்சரவையில் அமைச்சராக்கி அழகு பார்க்கவில்லை.

ஆனால் இப்போது கூட கலைஞர் கருணாநிதி, அரசியலில் எந்தப் பங்களிப்பும் செய்யாத தன் பேரன் தயாநிதி மாறனை தனக்கும் சோனியா காந்திக்கும் நடுவே மொழிபெயர்ப்பாளராக வைத்துக் கொண்டு டி.வி ஒளிபரப்புகளிலும் புகைப்படங்களிலும் அவர் தவறாமல் இடம் பெறுகிற மாதிரி குடும்பத்தின் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் இறங்கிவிட்டார்.

தமிழகத்தில் ஊட்டி புகைப்பட ஆலை உடபட எந்தப் பொதுத்துறை ஆலையையும் தனியார்மயமாக்கக்கூடாது என்பது விருதுநகர் மாநாட்டில் தி.மு.க போட்டுள்ள தீர்மானங்களில் ஒன்று. இரண்டு மாதங்கள் முன்னால் வரை இந்த தனியார்மயத்தை பி.ஜேபி ஆட்சியில் உற்சாகமாக பின்பற்றி அமைச்சரவைக் கூட்டங்களில் எல்லாவற்றுக்கும் ஆமாம் போட்டு வந்தவர்கள் தி.மு.க அமைச்சர்கள்தான்.

இந்தியா ஒளிர்கிறது என்ற தலைப்பில் பி.ஜே.பி அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பத்திரிகை, டி.வி என்று எல்லா மீடியாக்களிலும் விளம்பரம் செய்து வருவது தேர்தல் சமயத்தில் முறைகேடானது என்பது இன்னொரு தி.மு.க மாநாட்டுத் தீர்மானம்.

சுமார் 250 கோடி ரூபாய்க்கும் மேல் அரசுப் பணம் இந்த விளம்பரங்களில் பி.ஜே.பி ஆட்சியால் வீணடிக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதைச் சொல்லும் தகுதி தி.மு.கவுக்கு இல்லை.

ஏனென்றால் சுமார் 35 கோடி ரூபாய்க்கு இதே இந்தியா ஒளிர்கிறது விளம்பரங்களை பி.ஜே.பி அரசு நவம்பர் மாதத்தில் வட இந்திய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்காக செய்தபோது தி.மு.க அமைச்சர்கள் பி.ஜே.பி ஆட்சியில் பங்கு வகித்துக் கொண்டு வாய் மூடிக் கிடந்தவர்கள்தான்.

வெட்கங்கெட்டதனத்துக்கு அரசியல் எதிரிகள் யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

அதிகாரத்தைக் கொண்டு மிரட்டலாம் அல்லது பணத்தை சலுகைகளை வீசினால் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற ஒற்றைக் கொள்கை மட்டுமே உடைய ஜெயலலிதா அரசின் கருத்தில் இது சலுகைகளை வீசும் சீசன். மின்சாரக்கட்டணம், நில வரி, வேட்டி சேலை, கிடா வெட்டு என்று சலுகைகள் தொடர்கின்றன.

இது கிடா சீசன். அடுத்தது பொடா சீிசன் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பேராசைக்காரனடா பார்ப்பான். ஆனால் பெரிய துரை எனில் உடல் வேர்ப்பான். பொய்மைப் பார்ப்பார் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார் என்ற பாரதி வரிகளைப் போல பாரதிய ஜனதா ஏது செய்தும் ஆட்சி பிடிக்கப் பார்க்கும். அமெரிக்க துரை என்றால், அம்மா என்றால் மட்டும் அதற்கு உடல் வேர்க்கும்.

அ.தி.மு.க அமைசர்களின் கண்டுபிடிப்பான – நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழாமலே இடுப்பிலிருந்து உடலை வளைக்கும் புதிய சாஷ்டாங்க நமஸ்காரத்தை வெங்கய்ய நாயுடுவும் வாஜ்பாயியும் கற்றுக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி.

புதுக் கோட்டை தொகுதி உங்களுக்குக் கிடையாது ; புதுக்கோட்டை வாக்காளர்களைத் தனக்கு சாதகமாகக் குளிப்பாட்டி வைத்திருக்கும் திருநாவுக்கரசர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடக்கூடாது என்ற அ.தி.மு.கவின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு கூட்டணி அமைத்திருக்கும் மானமிகு பி.ஜே.பிதான் இந்தியாவின் சுய கெளரவத்தைக் காப்பாற்றும் கட்சி என்று நம்மை நம்பச் சொல்லுகிறது.

‘அம்மா ‘வின் அருளாசிக்காக திருநாவுக்கரசரை தேர்தல் பலி கொடுத்தாலும், எப்படியும் அவரை ராஜ்ய சபா எம்.பியாக ஆக்கி ஆறுதல்படுத்துவதாக பி.ஜே.பி வட்டாரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எதிர் முகாம் வரை எங்கும் திருநாவுக்கரசருக்கு அனுதாப அலை வீசுகிறது.

நேர்மையும் சத்தியமும் ஒளிரும் பி.ஜே.பியின் மணி மகுடத்தில் கட்சிக்காக தியாகம் செய்த வைரமாக ஜொலிக்கும் இவர் உண்மையில் யார் ?

எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பின் அமைந்த ஜானகி அரசில் திருநாவுக்கரசு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஆட்சி கவிழ்வதற்கு முன் கடைசி வாரத்தில் பல தனியார்களுக்கு நிலச் சட்ட விதிகளிலிருந்து விலக்கு அளித்து ஒரே நாளில் 73 அரசாணைகள் பிறப்பித்தவர். அப்போது இதில் பெரும் பணம் லஞ்சமாக விளையாடியிருக்கிறது என்று கூப்பாடு போட்டது தி.மு.க.

இந்த அரசாணைகளை எதிர்த்து நுகர்வோர் அமைப்பு தொடுத்த வழக்கில் தீர்ப்பு உச்ச நீதி மன்றத்தில் 12 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 2000த்தில் வந்தது. வழக்கில் வைக்கப்பட்ட 62 அரசாணைகளும் சட்ட விரோதமானவை, செல்லாது என்பது நீதி மன்றத் தீர்ப்பு. தி.மு.க உட்பட யாருமே இந்தத் தீர்ப்பைக் கண்டு கொள்ளவே இல்லை.

உச்ச நீதி மன்றம் முறை கேடானது என்று சொன்ன ஒன்றைச் செய்தவர் இன்று பி.ஜே.பி அமைச்சர். அவர் ‘அம்மா ‘வின் உக்கிரப் பாரவைக்கு உட்பட்டதற்கு ஆறுதல் சொல்பவர் ‘ரைட் மேன் இன் தி ராங் பார்ட்டி. ‘

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அதன் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்று தி.மு.கவும் ம.தி.மு.கவும் அறிவித்திருக்கின்றன. இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன ?

பி.ஜே.பியுடன் கூட்டணி இருக்கும்போது அமைச்சராவோம்; காங்கிரசுடன் இருக்கும்போது அமைச்சராக மாட்டோம் என்று சொல்வதற்கு ஏதாவது சித்தாந்தக் காரணம் உண்டா ? சொல்லப்படுகிறதா ? கிடையாது.

தி.மு.க, அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக மூன்றாவது அணியைத் தமிழகத்தில் ஏற்படுத்துவதே தன் லட்சியம் என்று முழங்கிக் கொண்டிருந்தவர் ‘அறிவுஜீவி அரசியல்வாதி ‘ ப.சிதம்பரம். அவர் கட்சியின் ஒரே எம் எல் ஏவும் நீதிமன்றத்தால் காந்தியடிகளின் நூல்களைப் படிக்கும்படி தண்டனை விதிக்கப்பட்டவருமான ரங்க நாதனை கலைஞர் கருணாநிதி தன் மந்தைக்கு ஓட்டிக் கொண்டு போய் விட்டதைப் பற்றி அறிக்கை வெளியிடக் கூட, ஆளைக் காணோம். வெளி நாட்டுப் பல்கலைக்கழகத்தில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

தலித் கட்சிகளின் நிலைமை சொல்லத்தரமன்று. ஏதாவது ஒரு அனைத்திந்தியக் கட்சி உறவு வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டிலேயே இல்லாத ஒரு கட்சியைத் தேடிப் பிடித்து அதன் அம்பு சின்னத்தில் இவர்கள் போட்டியிடும் நிலை. அன்போடு அமபை வாங்கித் தந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் டெல்லியில் பி.ஜே.பி அமைச்சரவையில் இருந்து கொண்டே தமிழகத்தில் பி.ஜே.பிக்கு எதிராக தலித் அமைப்புகளுக்கு சார்பாகப் பிரசாரம் செய்வார் என்று விசித்திரமான செய்திகள் வருகின்றன.

எல்லா கட்சிகளின் நடவடிக்கைகளுக்குப் பின்னாலும் இருக்கும் அரசியல் கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். தேர்தல் முடிவுக்குப் பின் யாரும் யாரோடு வேண்டுமானாலும் போய் விடுவோம். அதற்கு வசதியாக இப்போதும் என்ன வேண்டுமானாலும் செய்வோம்.

அதாவது இதற்கு என்ன அர்த்தம் ? நாம் எந்தக் கூட்டணிக்கு ஓட்டு போட்டாலும் அதற்கு அர்த்தமோ மரியாதையோ கிடையாது என்பதுதான்.

இந்தச் சூழ்நிலையில் ஓட்டு போடாமல் இருந்து விட முடியுமா ?

நிச்சயம் முடியாது. இரண்டு காரணங்கள். நாம் ஓட்டு போடாமல் இருந்தாலும், பதிவாகிற ஓட்டுகளிலிருந்து யாரோ ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார். இரண்டாவது காரணம் நம்முடைய ஓட்டை வேறு யாரோ போட்டு விடுகிற ஆபத்து நிச்ச்யம் உண்டு.

எனவே நிச்சயம் ஓட்டு போட்டுதான் ஆகவேண்டும்.

யாருக்குப் போடுவது ?

டெல்லியைப் பொறுத்த மட்டில் மறுபடியும் பி.ஜே.பி ஆட்சி என்பது இந்திய சமூகத்துக்கு, மத நல்லிணக்கத்துக்கு மிகப் பெரும் ஆபத்து என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. (அதற்கான காரணங்கள் பலரும் அறிந்தவையே. இன்னொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் விவரிக்கலாம். )

பி.ஜே.பி ஆட்சி அமையாமல் தடுத்து நிறுத்த என்ன செய்வது ?

காங்கிரஸ் அணியை நாம் ஆதரித்தாக வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கை, ஊழல் மரபு இவற்றோடெல்லாம் மாறுபட்ட கருத்து இருந்தாலும், அது நிச்சயம் இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைத்து , அன்றாட சமூக வாழ்க்கையிலும், தனி மனித மனங்களிலும் மத துவேஷத்தை மெல்ல மெல்ல விஷமாக ஏற்றுகிற பி.ஜே.பி போன்றது அல்ல என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

பி.ஜே.பிக்கு எதிராக காங்கிரஸ் பற்றி இப்படி ஒரு கருத்து எனக்கிருப்பது போலவே, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டு சேர்ந்திருக்கிற தி.மு.கவைப் பற்றியும், அ.தி.மு.கவை விட நிச்சயம் தி.மு.க பல மடங்கு மேலானது என்ற கருத்தே எனக்கு 1972 முதல் சுமார் 28 ஆண்டுகளாக இருந்து வந்தது – பி.ஜே.பியுடன் கூட்டு சேர்ந்து அதன் அராஜகங்களுக்கு அது உடந்தையாகும் வரை.

எனவே இன்றைய சூழலில் கருத்தியல் ரீதியாக பி.ஜே.பி, அ.தி.முக மக்களின் எதிரிகள் என்றும் தி.மு.க, ம.தி.மு.க துரோகிகள் என்றும்தான் என்னால் கருத முடிகிறது. (இடதுசாரிகளும் தலித் கட்சிகளும் எப்பிடி இருந்தவங்க இப்பிடி ஆயிட்டாங்களே என்று வருத்தம் ஏற்படுத்தும் பரிதாபத்துக்குரிய நண்பர்கள்.)

தொலை நோக்கில் மாற்று சக்திகளாக இடது சாரிகளும் தலித் அமைப்புகளும் சிறுபான்மை ஜனநாயக சக்திகளும் உருவாக முடியும் என்றாலும் அவர்கள் இன்றைய தேர்தல் அமைப்பு முறையில் ஓரிரு சீட்டுகளுக்காக அங்கப் பிரதட்சணம் செய்து கொண்டிருக்கும் வரை, அடுத்த கட்டம் நோக்கிக் கூட நகரும் வாய்ப்பு இல்லை. தேர்தல் முறை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறினாலன்றி அவர்களுக்கு நான் அளிக்கும் ஓட்டுக்கு ஒரு மதிப்பும் கிட்டாது.

இந்த சூழ்நிலையில் என்ன செய்வது ?

தேர்தல் மூறையை மாற்றாதவரையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வர இயலாது. எனவே தேர்தல் முறை மாற்றப்படவேண்டும் என்பதற்காகவே போராட வேண்டும்.

அதை இந்த தேர்தலில் ஓட்டு போடுவதன் மூலமும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

எப்படி ? அதுதான் 49 ஓ பிரிவு.

வாக்காளர்களிடம் விழிப்பு ஏற்படுத்துவதற்காக உந்துநர் அறக்கட்டளை நடத்திவரும் குடி மக்கள் முரசு இதழின் ஆசிரியர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அ.கி.வேங்கடசுப்பிரமணியன் , எந்த வேட்பாளரையும் பிடிக்காவிட்டால் அதையும் வாக்குச்சாவடியில் பதிவு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

49 0 – Elector not deciding to vote : If an elector, after his electoral number has been duly entered in the register of voters Form – 17 A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49 L decided not to record his vote , a remark to tis effect,shall be made against the said entry in Form 17 A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark. ( The conduct of Election rules 1961)

49 ஓ – வாககளிப்பதில்லை என வாக்காளர் முடிவு செய்வது – ஒரு வாக்காளர் படிவம் 17 A யில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவரது வாக்காளர் எண் முறையாகப் பதிவு செய்யப்பட்டு ஆரும் தமது கையெழுத்தையோ பெரு விரல் ரேகையையோ விதி 49 L 1 படி வைத்த பிறகு, வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால், அந்த முடிவுக்கு ஏற்ப படிவம் 17 A யில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஒரு குறிப்பைச் செய்து வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையையும் அந்தக் குறிப்புக்கு எதிரே பெற வேண்டும். ( தேர்தல் நடைமுறை விதிகள் 1961)

வாக்குப்பதிவு முடிந்தபிறகு இவ்வாறு எத்த்னை பேர் வாக்களிக்க மறுத்து பதிவு செய்தார்கள் என்ற எண்ணிக்கை விவரத்தையும் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

1999ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 4.75 கோடி வாக்காளர்களில் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கவில்லை. சென்ற தேர்தலில் வட சென்னை எம்.பி தொகுதியில், மொத்தம் சுமார் 70 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. இதன் விளைவு என்ன ? ஒரு தொகுதியின் மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவிகித வாக்கு பெற்றாலே ஒருவர் எம்.பியாகிவிட முடியும். அவர் உண்மையில் மக்கள் பிரதிநிதியாவாரா ?

சென்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் பெசண்ட் நகர், கலாக்ஷேத்ரா காலனி, திருவான்மியூர் போன்ற மெத்தப் படித்தவர்கள் உள்ள டிவிஷன்களில் 75 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை.

இவர்களில் பாதி பேர் வந்து 49 ஓவைப் பயன்படுத்தினால், பல தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளரை விட அதிக ஓட்டாக அதுவே இருக்கும்.

இந்த நிலைமையை பல தொகுதிகளில் வாக்காளர்களாகிய நம்மால் ஏற்படுத்த முடியும். அது அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தும். அப்போது அதைத் தீர்க்க தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தே தீர வேண்டியிருக்கும்.

விகிதாசாரப் பிரதிநித்துவ முறை ஏற்பட்டால் எந்தக் கட்சியும் தன்னுடைய அசல் பலத்துக்கு மீறிய சீட்டுகளைப் பெற முடியாது. உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த முறைதான் இருக்கிறது.

எனவே இந்தத் தேர்தலில் என்னுடைய வேட்பாளர் 49 ஓ தான்.

அவரை ஜெயிக்க வைப்பதன் மூலம் பி.ஜே.பியை தடுத்து விட முடியுமா ? முடியலாம். முடியாமல் போகலாம்.

ஆனால் பி.ஜே.பி போல, பா.ம.க. போன்ற கட்சிகள் எல்லாம் தங்கள் அசல் பலத்துக்கு பொருதமில்லாத வகையில் ஆட்சியை அதிகாரத்தைப் பிடிக்க உதவி செய்யும் தேர்தல் முறையை மாற்றும் நிரந்தர தீர்வுக்கு இது வழி வகுக்கும்.

இந்த தேர்தலைப் பற்றி மட்டுமே யோசிப்பவன் சாதாரண அரசியல்வாதி. அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிப்பவனே மெய்யான மக்கள் தலைவன் என்பார்கள்.

இந்தத் தேர்தலைப் பற்றி மட்டுமே யோசிக்காமல் அடுத்த தலைமுறையிலேனும் மாற்றம் வரவேண்டும் என்று யோசிப்பது வாக்காளர்களின் கடமை.

VOTE FOR 49 0 !

ஓ போடு.

தீம்தரிகிட பிப்ரவரி 2004

dheemtharikida @hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி