திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஓட்டம்

This entry is in the series 20090402_Issue

கவிதா நோர்வே


நொடிகள்
துப்பாக்கி ரவைகளைப்போல்
என்னுள் பாய்ந்து
என் முதுகின் பின் மாய்கிறது

சில நொடிகளையாவது
பிடித்துவிடும் ஆர்வத்தில்
முன்நோக்கி நகர்கிறேன்

நிமிடங்களாய்
நாட்களாய்.. வருடங்களாய்
அத்தனை நொடிகளும்
என்னை உரசியபடி
என் பின்னால் மரணிக்கின்றன

என்னுடன் சேர்ந்து
பலரும் ஒடிக்கொண்டிருக்கின்றனர்
என் முன்னே ஓடியவர்கள்
யாரும் திரும்பவில்லை

வழிநெடுக பல சினேகிதர்கள்
தொலைந்து போயினர்
சிலர் அறிமுகமாயினர்

ஓடும் அவசரத்தில்
தடுக்கி விழும் பொருட்களை
அள்ள முடிந்ததை அள்ளி கொண்டு
நானும் ஓடுகிறேன்

சிலர் கைகளில் பூக்களும் புன்னகையும்
சிலர் கைகளில் துப்பாக்கி
பலர் வெடித்துச்சிதறுண்டு போயினர்
எனக்கு முன்னே ஓடிய சிலர்
மரணித்தும் போயினர்

ஓடுகையினூடு சிலரால் தென்றலையும்
சூர்யோதயத்தையும் தரிசிக்க முடிகிறது
குருதி தெறித்து,
மனித மாமிசம் முகத்தில் அறையும்
காற்றை முகர்ந்த படி
சில சமூகம் கதறியோடுகிறது

வாய்பிளந்து
அலற முயற்சிக்கிறேன்
எனக்கு மட்டுமாய் கேட்ட
சத்தம்…
யாருக்குமே கேட்காமல்
போன சில சப்தங்களோடு
அடங்கிவிடுகிறது…

தூக்கத்திலிருந்து நான்
துள்ளி எழுந்தாலும்

இது கனவல்ல.

Series Navigation

About கவிதா நோர்வே

கவிதா நோர்வே

View all 31 articles →

ஓட்டம்!

This entry is in the series 20040812_Issue

ஈழநாதன்


வினாடியேனும் வீணாக்காமல்
நிமிட நேரம் நிற்காமல்
இருபத்தி நான்கு மணிநேரம்
இயங்குவதே குறிக்கோளாய்!

ஓடும் கடிகாரத்தின் வேகத்துடன்
ஆடும் ஊசலின் ஆரவாரத்துடன்
இழந்தவற்றைப் பிடிக்குமாப்போல்
இருப்பவற்றை இழக்குமாப்போல்!

நாட்கள் பழையனவாய்
மாதங்கள் கழிந்து
வருடங்கள் உதிர்ந்தாலும்
யாருக்காகவும் நில்லாமல்!

உழைப்பதும் புரியாமல்
ஊதியமும் கேட்காமல்
களைப்பென்று அறியாமல்
கணமேனும் தாமதிக்காது!

ஓடிக்கொண்டிருக்கும்
காலச்சக்கரம்!!

ஈழநாதன்
eelanathan@hotmail.com

Series Navigation

About ஈழநாதன்

ஈழநாதன்

View all 12 articles →

ஓட்டம்

This entry is in the series 20021007_Issue

சித்தார்த் வெங்கட்


ஓடுவதை பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா ?

ஓடுவது தெய்வீகமானது,
மனதை லேசாக்குவது,
என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு.

எனக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை.

என் வரையில்,
ஓடுதல் அச்சம் சார்ந்தது.
கோழைதனத்தின் வெளிப்பாடு.

எதற்கெல்லாமோ பயந்து ஓடி இருக்கிறேன்.

நாய், இருட்டு,
கூட்டம், பெண்கள்,
பணம், புகழ்
என உடலும் மனதுமாய் ஓடியது ஏராளம்.

இத்தனை கால ஓட்டத்திற்கு பிறகு
இப்போது தான் புரிகிறது,

ஓட்டமே கோழைதனம் அல்ல,
அது ஓடும் திசையை பொருத்தது

என்று.

**
siddhu_venkat@yahoo.com

Series Navigation

About சித்தார்த் வெங்கட்

சித்தார்த் வெங்கட்

View all 5 articles →