ஒளியினை இரத்தல் பற்றி….

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

சாரங்கா தயாநந்தன்


சிறுநூலில் ஆடுகிறது பொம்மை.
அதன் நடப்புக்களை
ஆளுதல் அதன் வசமில்லை.
கைநூல் தளரும் தருணத்திலான
விடுபடுதலுக்கான உணர்வுகளை
விழுங்கியுள்ளது பொம்மை.
அதைப் பார்க்கிற விழிகளில்
கோர்க்கிற நீர்த்துளிகளின் அப்பால்
தெரிகின்றன ,
உனது பிரியங்களின் படி வரையப்படுகிறதும்
எனது நேசிப்புகளுக்கு அப்பாலானதுமான
எமது வாழ்வின் கோடுகள்.
அதியற்புதமான ஒரு காலையில்
ஒளியுறிஞ்சிய
வசந்தகாலத்துச் சூரியன் தான் நீ.
ஏற்கிறேன்.
நிலவாக ஒளியிரத்தலில்
மனசு கூசுகிறது எனக்கு.
தினமும் என் மனதில் சுற்றி வருகிறது
வனப்புடைக் கனவுகளுடைய
சின்னஞ்சிறு மின்மினிப்பூச்சி ஒன்று.
வருங்காலங்கள் மீது
இறந்தகாலங்களால் எற்றப்பட்டிருந்த
பொன்னொளி மங்கி மெலிகிறது.
வாழ்வின் போக்கில்
வசப்படாத இன்பங்களை நிலைநிறுத்தி
கலைக்கப்படுகின்றன.
இருவரதும் மனக்குளங்கள்.
உய்க்கவொண்ணா மகிழ்வு
ஒரு தெருவோரத்து இலையாய்
விழுந்து கிடக்கிறது
தீண்டுவாரற்று.
எனினும் தொங்கியாடுகிறது வாழ்வு
மூன்று முடிச்சுக்களில்.

nanthasaranga@gmail.com

Series Navigation

author

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்

Similar Posts