ஒரு கலாச்சார ஒடுக்குமுறை

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

ஜெயமோகன்


சென்ற சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு சில கடுமையான நடத்தை விதிகளை விதித்துள்ளது. இவ்விதிகளில் பல ஏற்கனவே உள்ளவையே. உண்மையில் அவை சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய உணர்வை ஒடுக்க வெள்ளைய அரசால் உருவாக்கப்பட்டவை. சுதந்திர இந்தியாவில் அவற்றை நடைமுறையில் ரத்து செய்துவைத்திருந்தார்கள். ‘எதற்கும் இருக்கட்டுமே ‘ என்று அவற்றைடில்லாமல் செய்யவில்லை என்பது நம் ஆட்சியாளர்களின் புத்திசாலித்தனம். அவற்றில் முக்கியமானது அரசு ஊழியர்கள் அரசு வேலை தவிர பிற அனைத்திலும் ஈடுபடுவதை முழுமையாக தடுக்கும் சட்டம். இதன் படி ஒரு பொழுதுபோக்கு கூட தடைசெய்யப்பட்டதே. ஒருவர் நிறைய நாய்களை வளர்த்தால் கூட ‘நாய் வணிகம் ‘ செய்கிறார் என்று தடைசெய்ய முடியும். அவரை தண்டிக்கவும் முடியும்.

நடைமுறையில் மத்திய அரசும் சரி மாநில அரசுகளும் சரி தங்கள் உழியர்கள் கலை , கலாச்சார , சமூகசேவை அறிவியலாய்வுகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தே வந்துள்ளன. மத்திய அரசைப் பொறுத்த்வரை ஊழியர்கள் இவற்றில் ஈடுபடலாம் என்ற நடைமுறை உத்தரவே உள்ளது. உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இலக்கியத்திலும் கலைகளிலும் ஈடுபட்டும் வருகிறார்கள். இந்த உரிமையை சமீபத்திய தமிழக அரசு உத்தரவு முற்றாக தடை செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவது, கலை இலக்கியங்களில் செயல்படுவது, நூல்களை வெளியிடுவது அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன. புனைபெயரில் எழுதுவதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம்.

மிக சாதாரணமாக பலருக்கு படும் இச்சட்டத்தின் விளைவுகள் மிக மோசமானவை. தமிழகத்தில் கலை கலாச்சார செயல்பாடுகள் வழியாக எவருமே உயிர்வாழும் தேவை அளவுக்குக் கூட சம்பாதிக்க முடியாது. ஆகவே அனைவருமே அன்றாட வாழ்க்கைக்கு வேறு ஏதாவது தொழிலைச் செய்துதான் ஆகவேண்டியுள்ளது . தமிழ்நாட்டு கலை இலக்கிய தளங்களில் செயல்படுபவர்களில் அரசு ஊழியர்களே அதிகம். குறிப்பாக ஆசிரியர்கள். காரணம் அவர்களுக்கு இருக்கும் இயல்பான சமூக ஆர்வம், மற்றும் ஓய்வு. இச்சட்டம் மூலம் தமிழ்நாட்டில் இயங்கும் கலாச்சாரவாதிகளில் பாதிபேர் தடுக்கப்படுகிறார்கள்.

இதற்கு சொல்லப்படும் காரணங்கள் சொத்தையானவை. அரசு ஊழியர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதை, சாதிச்சங்கங்களில் செயல்படுவதை தடுக்க ஏற்கனவே சட்டம் உள்ளது. ஒழுக்க மீறலை அல்லது தேசவிரோத செயலை போதித்தால் தண்டிக்கவும் கடுமையான சட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் கடுமையாக செயலாக்கவும் படுகின்றன. அரசு ஊழியர்களில் கலாச்சார செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களே சற்றேனும் சமூக பிரக்ஞையும் பொதுமக்கள் நலனில் ஆர்வமும் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. அவர்களுடைய பணிநேரத்தை முறைப்படுத்த அரசு ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அப்படியானால் இச்சட்டத்தில் நோக்கம் என்ன ?

இதன் மூலம் உயரதிகாரிகள் பாதிக்கப்படுவார்களா என்பது ஐயம்தான். அவர்கள் முறைப்படி அனுமதிவாங்க முடியும். அதற்கு சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. பாதிக்கப்படுவது நேமத்தான்பட்டி பள்ளியில் வாத்தியாராக இருந்துகொண்டு இலக்கிய ஆர்வத்தால் பெண்ணாட்டி தாலியை விற்று புத்தகம் போடும் கடைநிலை எழுத்தாளன்தான். அவனை ஒடுக்குவதே இந்த உத்தரவின் நோக்கம்.னவனை யார் எதற்காக அஞ்சுகிறார்கள் ? அவனிடம் ஒரு தார்மீகம் உள்ளது. அது யாரையோ தொந்தரவு செய்கிறது. கடந்த 5 வருடங்களில் அவனைப்போல பலநூறுபேர் கிளம்பிவந்திருக்கிறார்கள். இன்றைய தமிழ்நாட்டின் முக்கியமான நிகழ்வே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளில் இருந்து உருவாகிவரும் இந்த எழுத்தாளர்கள்தான்.

தமிழகத்தில் சென்றவருடம் மட்டும் 12000 நூல்கள் வந்துள்ளன. இவ்வருடம் 15000. இவற்றில் 10000 நூல்கள் அந்த ஆசிரியர்களின் சொந்தபணத்தால் , பிரசுரகர்த்தர்கள் இருக்கலாம், வெளியிடப்படுபவை. ராயல்டி என்பது இன்று தமிழில் நானறிந்து 20 எழுத்தாளர்களுக்கு கூட கிடைப்பது இல்லை. ஆகவே இன்றைய வளர்ச்சி என்பது வெறும் ஆர்வத்தால் மட்டுமே நிகழ்வது. மிக எளிதாக இதை ஒடுக்கி விடலாம். இதன் பின் வணிகம் இல்லை. வலுவான சமூகப் பிரக்ஞையும் உருவாகவில்லை. இந்த நூல்களில் 80 சத நூல்கள் வெறும் முதிரா முயற்சிகள் என்பது உண்மையே. ஆனாலும் ஒரு சமூகத்தில் இப்படி ஒரு எழுச்சி நிகழ்வது உண்மையான மாற்றத்தின் அடையாளம். 70களில் கன்னட மொழியில் இது நிகழ்ந்தது, அடுத்த வருடங்களில் கன்னட இலக்கியம் முதிர்ச்சியும், வலிமையும் அடைந்தது. அதற்கு அந்நாளைய முதல்வர் தேவராஜ் அர்ஸ் காரணம். அச்சிடப்படும் அனைத்து நூல்களையும் 800 பிரதி நூலகத்துக்கு வாங்க அவர் உத்தரவிட்டார். ஏராளமான நூல்கள் வந்தன, பெரும்பகுதி குப்பைகள். ஆனால் மெல்ல மெல்ல வசிப்பு வளர்ந்தது. இன்றும் அர்ஸ் அங்கே நினைவுகூரப்படுகிறார்.

அதற்கும் கொடுப்பினைவேண்டும். தன் பண்பாடு மீது ஆர்வம் கொண்ட . நல்ல நோக்கம் கொண்ட ஆட்சியாளன் வரலாற்றில் அதிகமும் கிடைப்பது இல்லை. தமிழர்கள் துரதிருஷ்ட சாலிகள். என் பார்வையில் அவினாசிலிங்கம் செட்டியார் , அரங்கநாயகம் போன்ற சில கல்வியமைச்சர்கள் தங்கள் தனிப்பட்ட திறனால் தமிழுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளனர். மற்றபடி பொதுவாக எதிர்மறையான சூழலே இங்குள்ளது . இதோ நமது புரட்சி அரசு முளைக்க ஆரம்பிக்கும் செடியின் வேருக்கு வெந்நீர் ஊற்றமுற்படுகிறது

தமிழ் பண்பாட்டில் சற்றேனும் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் இதை சிந்தித்து பார்க்கவேண்டும். இலக்கியவாதிகளில் உள்ள அரசூழியர்களான சிலருக்கு அமைப்போ பலமோ இல்லை. அவர்கள் போராடமுடியாது. தமிழ் எழுத்தாளர்கள் சிற்றிதழ் சார்ந்து

எழுதுபவர்கள். அவர்கள் தங்கள் குரலை மக்களிடம் கொண்டு செல்ல ஊடகமே இல்லை .[ அவர்கள் சண்டைகளை எடுத்துச்செல்ல மட்டுமே ஊடகங்கள் உள்ளன. ]இந்த உத்தரவை தனியாரும் நிறைவேற்ற ஆரம்பித்தால் தமிழகத்தில் கலாச்சார செயல்பாடுகள் முற்றாக அற்றுப்போய்விடும். இது தான் நாம் எதிர்பார்ப்பதா ?

இனி தமிழ்நாட்டுக்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குண்டர்களும் தொண்டர்களும் போதுமா ? அவர்கள்தான் குடிமக்களா ? இன்றைய தமிழகத்தில் அவசரச்சட்டம் மூலம் தடைசெய்யப்பட்டு ஒழித்துக்கட்ட வேண்டியவர்கள் இலக்கியவாதிகள் தனா ? எல்லா வாசகர்களும் ஏதேனும் விதத்தில் தங்கள் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும். இதில் குறுகிய அரசியலை கலக்காமல் பண்பாட்டு அடக்குமுறையாக மட்டுமே இதைக் காண நாம் முயலவேண்டும். சில துண்டுபிரசுரங்கள் மூலம் கண்டனத்தை மக்களிடம் கொண்டுசெல்ல நண்பர்கள் முயல்கிறார்கள். அதன் பிறகு மேலும் பெரிதாக இதை கொண்டு செல்லவேண்டியுள்ளது. ஆங்கிலம் பிற இந்திய மொழிகள் அனைத்திலும் இந்த நேரடியான ஒடுக்குமுறையை எடுத்துச்சொல்லவேண்டியுள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்

————————

Series Navigation