ஒருபக்கச்சிறுகதை – நட்பு

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சிங்கை சிவா


‘ரவி! என்னை ஒரு முறையாவது வந்து பாருடா! ‘  என்ற ராகுலின் குரல் என் காதில் விழுந்தது. நான் எழுந்து சன்னல் பக்கம் சென்றேன். என் உயிர் நண்பன் வாசலில் நின்றுகொண்டிருந்தான். நான் சட்டென்று என் முகத்தை மறைத்துக்கொண்டேன். துரோகி! என் உயிர் நண்பன் என்ற போலியான வேடத்தை அணிந்து கொண்டவன். அவன் செய்த தவறை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன்.

நான் உயர்நிலைப் பள்ளியில் நண்பர்கள் இல்லாமல் தவித்தபோது நான் கண்டுபிடித்த கண்கண்டதெய்வம்தான் ராகுல். நாங்கள் நகமும் சதையும் போல இணைப்பிரியா நண்பர்களாக விளங்கினோம். எதைச் செய்தாலும் ஒன்றாகவே செய்து, பள்ளிப்போட்டிகளில் கலந்துகொண்டு கூட்டாகவே வெற்றிக்கனியைச் சுவைப்போம். எனக்கு சின்ன வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டிப்பழக வேண்டும் என்பது ஆசை. ஆனால் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் என் ஆசையை மூட்டை கட்டி வைத்திருந்தேன். இதை அறிந்த என் உயிர் நண்பன் ரவி எனக்கு தைரியம் ஊட்டி அவனின் அப்பா அவனுக்கு ஆசையாக வாங்கி தந்த வெளிநாட்டுச் சைக்கிளைக் கொண்டு, என்னை சைக்கிள் ஓட்டுவதற்குப் பழக்கிவிட்டான். அவனின் உயிர் போன்ற அந்தச் சைக்கிளை, நான் பலமுறை கீழே போட்டு உடைத்தும் இருக்கின்றேன். ஆனால் ராகுல் என்னிடம் கோபம் கொள்வதில்லை. எங்கள் நட்பு மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. அந்தச்சம்பவம் என் கண்முன் நிழலாடியது.

எங்களை பிரிக்க வந்த அந்த அரக்கன் சிகரெட்தான். நண்பர்களிடையே ஒரு அந்தஸ்திற்காக நான் புகைபிடிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த அந்த பழக்கம் நாளடைவில் ஒரு பெரிய பிரச்சனையாக ஆகிவிட்டது. ராகுலுக்கு சுத்தமாக இது பிடிக்கவில்லை. என்னைத் திருத்த முயன்று போராடித் தோல்வியடைந்தான். ஆனால் அவன் செய்த அந்தச் செயலைதான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பள்ளி முதல்வரிடம் சென்று புகார் செய்துவிட்டான். நானும் கையும் களவுமாகப் பிடிபட்டேன். அனைத்து மாணவர்களின் முன் எனக்குத் தண்டணை வழங்கப்பட்டது. என்ன தண்டணை தெரியுமா ? பலருக்கும் முன்பு எனக்குப் பிரம்படி. அவமானத்தால் என் முகத்தில் ஈயாடவில்லை. எல்லாம் அந்த துரோகி ராகுலால்தான்!

அதிலிருந்து அவனிடம் நான் முகங்கொடுத்துப் பேசுவதில்லை. இப்போது எந்த முகத்துடன் என்னிடம் பேச வந்திருக்கான் துரோகி.

சட்டென்று நினைவுக்கு வந்தது. அவர்கள் குடும்பம் நிரந்தரமாகவே ஆஸ்திரேலியா நாட்டில் குடியேறயிருப்பதாக ஒருமுறை என்னிடம் கூறியிருக்கின்றான். ஒருவேளை அவன்….

  ‘ரவி! நாங்கள் குடும்பத்தோட சிட்னிக்குப் போறோம்டா, என்னை ஒரு தடவையாவது பாரேன்டா! இனி நாங்கள் இங்கு வரவே மாட்டோம்டா ‘ என்று உடைந்த குரலில் சோகத்துடன் பேசினான் ராகுல். அவன் கண்களில் கண்ணீர். அந்தச் சம்பவம் என் மனதில் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறாவில்லை. மனதில் எழுந்த எரிச்சலால் இறுகிய முகத்துடன்  ‘பட் ‘ ‘ என்று சன்னல் கதவை மூடினேன்.

எதிர்வீட்டில் ராகுல் குடும்பம் கிளம்பிச்செல்லும் காரின் ஓசை எனக்குக் கேட்டது. என் கைகள் என்னையும் அறியாமல் சன்னலைத் திறந்தது. கார் சென்றுவிட்டதற்கான அடையளமாகச் சாலையில் மண்புழுதி தெரிந்தது. சட்டென்று என் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன். அங்கு என் நண்பணின் கடைசி அன்பளிப்பாக அவன் உயிர் போன்று பாதுகாத்து வைத்திருந்த அந்த வெளிநாட்டுச் சைக்கிள் நின்றது. சைக்கிளைப்பிடித்துக் கொண்டு வாய்விட்டுக் கதறி அழுதேன்.

**

சிங்கை சிவா, அண்டர்சன் தொடக்கக் கல்லூரி.

vijnirmala@yahoo.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>