ஒத்திகைகள்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

மதுரபாரதி


இங்கே பயின்றதுதான்
அங்கே மேடையேறுகிறதா ?
மேடையேறியவை பயின்றபின்தானா ?

ஒவ்வொருவராய் வந்து அவரவர் பாத்திரம்
செய்து வெளியேறினார்.
வசனமில்லாத சிலபாத்திரங்கள்
நெடுநேரம் நின்றன.
இன்னும் சிலர்
எத்தனையோ
ஒத்திகைக்குப் பிறகும்
மேடையில் என்ன நடக்கிறதென்றே
புரியாமல் நின்றனர்.

பின்னால் ஒருவர்
விட்டுப்போன வசனங்களை
சொல்லிக்கொடுக்க.
ஆனாலும்
மறந்தவை மறந்தவை தான்.

வேஷம் கலைந்தபின்
விட்டுப்போனதெல்லாம்
ஒவ்வென்றாய் நினைவுக்கு வந்து
என்ன பயன்.

ஒரு வாய்ப்புத்தான்.

திரை இறங்கியபின்
நடித்தல் நடவாது.

ஆனாலும்
மேடையே வாழ்க்கைபோல
எத்தனை ஒத்திகைகள்!

Series Navigation

மதுரபாரதி

மதுரபாரதி