This entry is in the series 20020203_Issue

சேவியர்.


‘அதை நினைத்துச் சொல்லவில்லை… ‘
என்கிறாய்…
ஆனால் இதைச் சொல்லும்போது கூட
அதையே தான் நினைக்கிறாய்.

எதற்காகச் சொல்கிறாயோ
‘அதற்காக இல்லை ‘
என்றே
அமைதியாய் ஆரம்பிக்கிறாய்.

‘நான் எப்போதுமே… ‘
என்று இழுத்துப் பிடித்து
நான் எப்படி இருக்கவேண்டுமென்பதை
எனக்குள் அழுத்துகிறாய்.

உனக்கு எதெல்லாம் முக்கியமோ
அதெல்லாம்
முக்கியமில்லை என்ற முன்னுரையோடு
முன்வைக்கிறாய்…

அறிவுரை என்று ஆரம்பித்து
சில
கட்டளைகளை விட்டுச் செல்கிறாய்.

நான் அப்படியில்லை
என்று சொல்லும் பக்கங்களில்
உன்
சுய சரிதையையே சொல்கிறாய்.

கண்ணாடியில் தோன்றும்
கடித பிரதிபலிப்பாய்
தலை கீழாய்ப் படிப்பதே
என்
தலையெழுத்தாகிப் போய்விட்டது.

Series Navigation