எழுத்தோ எழுத்து

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

பாரதிராமன்


கே.சந்திரகலாதரன் ஒரு மூத்த எழுத்தாளர். என்னுடைய நெருங்கிய நண்பர்.உங்களுக்கெல்லாம் அவரை நன்றாகத் தொிந்திருக்கும். அவருக்கும் உங்களையெல்லாம் தொியும். உங்களுடைய நாடிகளையெல்லாம் பிடித்துப் பார்த்துதானே அவர் கதைகள் எழுதுகிறார்!

தன்னுடைய முந்தைய ஜன்மங்கள் ஒன்றில் அவர் விக்கிரமாதித்த மகாராஜாவின் சிம்மாசனத்தில் ஒரு பதுமையாக இருந்திருக்கவேண்டும். மனுஷன் இன்றும் அவ்வளவு கதைகளை எடுத்து வீசுகிறார். நேற்றைய, இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் சொந்தக் கதைகளையெல்லாம்கூட அவர் அறிவார்.இவற்றையெல்லாம் எங்கிருந்து எப்படித்தான் சேகாித்தாரோ என்று எனக்கு ஆச்சாியம் உண்டாவது உண்டு. சில சமயங்களில் எழுத்தாளர்களுக்கே உாிய கற்பனையும் அதில் கலந்திருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்படுவதுண்டு இருந்தாலும் அவர் கூறும் சுவையான செய்திகளும் அவற்றைச் சொல்லும் பாங்கும் நம்பும்படியாகவே இருக்கும்.பொழுது போகாத நேரங்களில் அவர் வாயைக் கிண்டிவிட்டால் போதும்,நேரம் போவதே தொியாமல் கதைகள் வந்துகொண்டேயிருக்கும்.

ஒருநாள் அப்படித்தான், நான் அவாிடம் ‘ ஏன் ஸ்வாமி! (நான் அவரைாஸ்வாமிா என்றுதான் விளிப்பது வழக்கம்.) எல்லா எழுத்தாளர்களுமே ஒரு கட்டத்தில் தம் ஊர்ப் பெருமைகளைத் தம்பட்டம் அடித்து எழுத முற்படுகிறார்களே, அது தேவைதானா, தவிர்க்க முடியாதா ? ‘ என்று கேட்டேன்.

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனி சிறந்ததுவே ‘ —இதுவடமொழிக் கூற்று ஒன்றின் அழகான மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் யார் தொியுமா ? ‘- கேட்டுவிட்டு சிறிது நிறுத்தினார் நண்பர். ‘ வேறு யார் ? பாரதியார்தான்! ‘ என்று பதிலையும் அவரே கூறிவிட்டுத் தொடர்ந்தார்.

‘ஐயா! (அவர் என்னை அப்படித்தான் விளிப்பார்) ஒருவன் தான் பிறந்த மண்ணினால்தானே பெருமை அடைகிறான் ? அந்த மண்ணின் வாசனைதானே அவன் மூச்சாக ஒடுகிறது ? அதை எப்படிய்யா ஒருவன் மறக்க முடியும் ? எழுத்தாளனாக இருப்பதால் ‘ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ‘ என்ற கோட்பாடில் தனது எழுத்து மூலம் தான் பிறந்த மண்ணுக்கு நன்றி தொிவிக்க வாய்ப்பு இருப்பதை அவன் பயன்படுத்திக்கொள்கிறான். இதில் தவறென்ன இருக்கமுடியும் ? தற்பெருமை, தம்பட்டம் என்றெல்லாம் நீர் ஏன் நினைக்கவேண்டும் ?

‘இன்னொன்றும் கூறுகிறேன், கேளும். தமிழ் நாட்டிலிருக்கும் எல்லாக் கிராமங்களையும் உமக்குத் தொியுமா ? எத்தனையெத்தனை வேறுபாடுகள் ஒவ்வொரு கிராமத்திற்கிடையேயும், அங்கு வாழ்கின்ற மக்களுக்கிடையேயும் ? இதையெல்லாம் யார் உமக்கு எடுத்துச் சொல்வது ? பூகோள பாடத்தில் ஒவ்வொரு கிராமத்தையுமா உமக்கு விவாித்துக் காட்டுகிறார்கள், நீர் தனித் தனியே அடையாளம் கண்டுகொள்ளும்படி ? இந்த எழுத்தாளர்களல்லவோ அந்தச் சேவையைச் செய்கிறார்கள்!அது பாராட்டப் படவேண்டியதுதானே ? ‘- எழுத்தாள நண்பாின் பார்வை நேராக என் கண்களைச் சந்தித்தது.

‘ ஸ்வாமி! நீங்கள் ஓர் எழுத்தாளராக இருப்பதால் என்னால் உங்கள் வாதத்தைப் புாிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் தேவையோ, இல்லையோ கதைகளினிடையே தம் ஊர்ப் பெருமைகளை எழுத்தாளர்கள் நுழைத்துவிடுவது சிறிது கசப்பாகத்தான் இருக்கிறது. ‘ என்றேன் நான்.

‘ ஐயா! நீர் ஓர் எழுத்தாளர் அல்ல.இருந்தாலும் வீட்டில் பழகும்போது ாஎங்கள் ஊாில் இதுதான் வழக்கம். என் அம்மா இப்படித்தான் செய்வாள், எங்கள் ஊாில் இல்லாததாா என்றெல்லாம் பிறந்தகத்துப் பெருமையைக் கூறிக்கொண்டு நீரோ, உம் மனைவியோ பீற்றிக்கொள்வதில்லையா ? அது மாதிாிதான் இதுவும். உங்கள் பேச்செல்லாம் காற்றோடு போய்விடுகிறது, எழுத்தாளன் அதையே ஏட்டில்பதித்துவிடுகிறான், அவ்வளவே! ‘ என்றார் நண்பர்.

‘ அப்படி என்னதான் பீற்றிக்கொள்ள இருக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் ? ‘-அவர் வாயை மேலும் சிறிது கிண்டிவிட்டேன் நான். அவ்வளவுதான், கிராமாயணம் ஒன்றையே பிரசங்கித்துவிட்டார் சந்திரகலாதரன். எல்லாமே அவர் பார்த்தவை, படித்தவை, கேட்டவை என்ற அனுபவங்களாக இருக்கும் என்ற நம்பிக்கையுடனும் சிங்காதனப் பதுமைகளிடம் கதை கேட்ட போஜராஜனின் ஆர்வத்துடனும் செவி மடுக்கத் தயாரானேன் நான்.

***

2

பச்சை மண் பரந்தாமனின் கிராமக்கதை:

பரந்தாமன் பிறந்ததிலிருந்தே அந்தக் கிராமத்துக்குப் பேருந்து வசதி ஏற்பட்டுவிட்டது.பேருந்தைவிட்டு இறங்கியதுமே குளிர் காற்று வீசத் துவங்கும். சாலையின் இரு மருங்கிலும் அடர்த்தியான ஆல மரங்கள். நிறைய விழுதுகள். சில பூமியில் ஊன்றியும் சில தொங்கியவண்ணமும். மரங்களின் கிளைகளினூடே பச்சை இலைகளும் சிவப்புக் கனிகளும் குலுங்க மறைந்து கொஞ்சும் கிளிகளின் இருப்பு அவைகளின் குரலால் மட்டுமே தொியவரும். செம்மண் புழுதி படிந்த நீளமான சாலை ஊர்க் கண்மாயிடம் உங்களை அழைத்துச் செல்லும். கண்மாயில் வடியும் நீர்ப் பெருக்கைக் காலைச் சூாியன் பொன்நிறத்தில் மஞ்சளாக்கிக் காட்டும்.அதே சூாியன் அதே நீர்ப் பெருக்கை உச்சி நேரத்தில் தகதகக்கும் வெள்ளி ஏடாக மாற்றிக்காட்டும். கண்மாயைத் தாண்டி நடந்தால் மரங்களின் அணிவகுப்பு முடிவுற்று நீல நிற வானமே கூரையாகி கூடவே வரும். இப்போது உங்களுக்கு இருபுறமும் பச்சை மரகத வயல்கள். சில கழனிகளில் பழுப்பு மஞ்சளில் தலை கவிழ்ந்த நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும். சில இடங்களில் அப்போதுதான் அறுவடை முடிந்து கறுப்புக் களிமண் பூமி வெடித்துக் கிடக்கும். கதிர் அடித்துக் குவிந்திருக்கும் நெல் அம்பாரங்கள் ஒருபுறமும் யானை அளவில் வைக்கோல் போர்கள் இன்னொரு புறமும் கட்டியம் கூறும்.

பச்சை மண் பரந்தாமனின் கதைகளில் தென்படும் வண்ணமயமான கதா பாத்திரங்களின் பின் புலம் இதுதான்.[ இந்த வண்ண மயமான கிராமத்தில் பின்னாளில் எப்போதாவது வர்ணத் தொழிற்சாலை நிறுவப்பட்டதா என்று கேட்க நினைத்தேன். ஆனால் அடுத்த கிராமத்தைப் பற்றித் தொிந்துகொள்ளும் ஆவலினால் கேளாமல் விட்டேன்.]

********************

ஓசையூர் ஒலியப்பனின் கிராமக்கதை:

ஊரை நெருங்கும் முன்னரே காதுகளில் பஞ்சை அடைத்துக் கொள்ளவேண்டும். பேருந்திலேயே பஞ்சை இலவசமாக வினியோகிக்கிறார்கள். பயணச்சீட்டின் விலையில் பஞ்சின் விலையும் அடக்கம். அந்தக் கிராமத்து நீர்வீழ்ச்சி ாஹோா (ாஹா அச்சு இல்லாவிட்டால் ாஓா) வென்று சதா சர்வ காலமும் கொட்டிக்கொண்டேயிருக்கும். இது எவ்வளவு காலமாக தொடர்ந்து இப்படியே கொட்டிக்கொண்டிருக்கிறதென்று யாருக்குமே தொியாதாம். ாஹோா(ஓ) என்று கொட்டிக்கொண்டிருப்பதால் ாஹோா(ஓ)மர் காலத்திலிருந்து இருக்கலாம் என்று பிாிட்டிஷ் தஸ்தாவேஜ ‘கள் கூறுகின்றனவாம். ஆனால் ஹோ(ஓ)ம காலம் அதாவது வேத காலத்திலிருந்தே இருக்கவேண்டும் என்பதே சாியாம். அதை வைத்துத்தான் ஒலியப்பனின் கதா பாத்திரங்கள் பலவும் புராண காலப் பாத்திரங்களாக அமைந்துள்ளன என்று வாசகர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம். கொஞ்சமாவது இதை மாற்ற வேண்டுமென்று அவரது வாசகர்கள் எவ்வளவுதான் பொிய சங்காய் எடுத்து ஊதினாலும் அவரது காதுகளில் விழுவதில்லையாம். பாவம்! அதற்காக ாஹோா(ஓ) வென்று விழும் நீர் வீழ்ச்சியை ஏன் குறை கூறவேண்டும் ?

*********************

பண்ணைக்குடி பாலராயனின் கிராமக்கதை:

பாலராயனின் பண்ணைக்குடி கிராமம் தான் அந்த மாவட்டத்திலேயே விவசாயத்தில் முதலிடம் வகிக்கின்ற கிராமமாகும். மண்ணில் புழுதி ஓட்டி உழவு ஆரம்பிப்பதிலிருந்து விதைப்பது,நாற்றுப் பிடுங்கி நடுவது, களை எடுப்பது, உரமிடுவது, பூச்சி மருந்து அடிப்பது, அறுவடை செய்வது- அதில் தகராறு, அறுவடையைப் பங்கிடுவது- அதில் தகராறு, தானியத்தை நகரத்தில் விற்றுப் பணமாக்குவது, வந்த பணத்தில் விதைக்கான கடனை அடைப்பது, வேட்டி சேலை எடுப்பது- அதில் தகராறு, குடும்பத்தோடு பொங்கல் கொண்டாடுவது என்று 70 எம்.எம். காட்சிகளாக பாலராயனின் கதைகளில் வர்ணிக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியே அவரது கிராமத்தின் கீர்த்தி. பலவிதமான பயிர்களின் விவசாயப் பெயர்களும், உரங்களின் கலப்பு விகிதங்களும், பூச்சி மருந்துகளின் பெயர், அளவு விகிதங்களும் கச்சிதமாக விவாிக்கப்பட்டிருப்பதற்கு அவரது மைத்துனர் நகர விவசாய அலுவலகத்தில் பணியாளராக இருந்தது ஒரு தற்செயலான காரணமே. கிராமப் பள்ளியில் தன்னுடன் படித்த மாணவன் முருகன் பூச்சி மருந்தொன்றைக் குடித்துவிட்டுச் செத்தது தற்செயலா, தற்கொலையா அல்லது கொலையா என்று கிராமமே ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்ததைப் பார்த்த பாலராயன் விவசாயம் பற்றி முற்றுமாக அறிந்து கொள்ள முயன்று வந்ததே முக்கியமான காரணமாக இருந்திருக்கவேண்டும்.

***********************

பேயொளி வேதாளனின் கிராமக்கதை:

பெயருக்கேற்ப பேயொளி கிராமத்தில் பிசாசுகள் அதிகம்; அதிகமாக மோகினிப் பிசாசுகள். ஒரு இளவட்டமும் இவைகளிடமிருந்து தப்பிக்க முடியாது. இளம் பொழுதுச் சூாியனின் கதிர்கள் எப்படி நேரம் செல்லச் செல்ல வெப்பம் ஏறி நடுப் பகலில் தாங்கமுடியாத சூட்டை உண்டாக்கிவிடுகின்றனவோ அதே மாதிாி இளவட்டங்களிடத்தில் காதல் சேட்டைகள் மிருதுவாகத் தொடங்கி, படிப்படியாக சூடேறி நாளடைவில் பைத்தியமாக முற்றி ஊர்க் கோடியிலுள்ள ஒற்றைப் புளிய மரத்தில் தலை முடியைப் பதிந்து ஆணி அடித்து இறங்கும்வரை யாரும் தப்பிக்கமுடியாது. வேதாளன் வாலிப வயதிலேயே நகரத்துக்குப் பிழைக்க வந்து விட்டதால் தன் கிராமத்துப் பேய்களிடமிருந்து தப்பிவிட்டார் என்றாலும் பிழைப்புக்குப் பேய்க் கதைகளை நம்பியே அவர் இருப்பதுதான் உமக்குத் தொியுமே!

**********************

மலைப்பட்டி மனோவின் கிராமக்கதை:

மலைப்பட்டிக்குப் போக சாிவில் இறங்கவேண்டும்.ஆம், இந்த கிராமம் மலையொன்றின் அடிவாரப் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது. மக்கள் எல்லோருமே மந்த கதியான வாழ்க்கை நடத்துபவர்கள். சூாியனே தாமதமாகத்தான் உதிக்கிறான்,மலையைத் தாண்டி வரவேண்டுமே! மலையிலிருந்து சிறிய சிறிய அருவிகள் பல சல சல வென்று விழுந்து கிராமத்துத் தெருக்களிலேயே பாய்கின்றன. மனோவின் பல கதைகளில் ஐந்தாறு பக்கங்களை ஆக்கிரமிக்கும் அளவுக்கு இருக்கி ன்றன இவ்வருவிகளின் சல சலப்பும் ஈரமும். இது முடிந்து அடுத்த பக்கத்தில்தான் அருவிகள் ஓடி ஓய்ந்து குளத்தை நோக்கி வடியும். இனி குளம் , குளக்கரை சார்ந்த காட்சிகளை விவாிக்கலாம். ஆனால் இதே மாதிாி குளக்காட்சிகள் எழுத்தாளர் சரவணேசனின் கிராமத்திலும் உள்ளன. அந்த கிராமத்தைப் பற்றிய கதையில் நாம் அவற்றைக் காணலாம். மனோவின் எழுத்தில் சரவணேசனின் எழுத்துச் சாயல் இருக்கிறதென்றும், இல்லை, இல்லை,சரவணேசனின் எழுத்தில்தான் மனோவின் எழுத்துச் சாயல் புலப்படுகிறதென்றும் இவ்விருவருடைய வாசகர்களும் குற்றம் சாட்டுவதற்கும் இவ்விரண்டு குளங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைத்துவிடக் கூடாது. ஒரே மாதிாி குளங்கள் இரண்டு ஊர்களில் இருப்பதுபோல ஒரே மாதிாி கதைகளை இரண்டு எழுத்தாளர்களின் பேனாக்கள் எழுத நேரக்கூடாதா என்ன ?

***********************

சாமிவரம் சரவணேசனின் கிராமக் கதை:

சாமிவரம் கிராமத்தின் ஈசானிய மூலையில் வெளவால்கள் வசிக்கும் புராதனக் கோயில் ஒன்று உண்டு. கருப்பாகக் கண்ணுக்குத் தொிவது சுவரா மூலவரா என்று தொிந்துகொள்ள முடியாத புகை வெளிச்சத்தில் மூலஸ்தானம். ஆனாலும் சாமி சக்தி வாய்ந்தவர். சரவணேசன் இவருக்கு நேர்ந்துகொண்டுதான் ஒவ்வொரு பாீட்சையாகத் தேர்வு பெற்றார்.அவரது முதல் கதை பிரசுரமானதுகூட இந்த சாமியின் வரம்தான். கோவிலுக்கு வெளியில் ஒரு பொிய குளம். நாம் மலைப்பட்டி கிராமத்தில் பார்க்காமல் விட்ட குளம் மாதிாியே. குளத்தைச் சுற்றிய மேட்டுப் பகுதிகளில் அடர்த்தியாக பொிய பொிய நாகலிங்க மரங்கள். மர நிழல்களின் கருமையில் கரையே இருண்டு கிடக்கும். எனவே பகலிலேயே குளக்கரையில் விளக்கு வைத்துக்கொண்டு படிக்க நோிடுமாம் சில சமயங்களில் சரவணேசனுக்கு. சில வருடங்களுக்கு முன்பு குளத்தின் இரண்டு பக்கச் சுவர்களும் படிகளும் மட்டும்தான் இடிந்து கிடந்ததாம். இப்போதோ நான்கு பக்கமும் இடிந்து மண்ணெல்லாம் சாிந்து குளமே தூர்ந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டதாம். யாருடைய கையாலாகாத்தனத்தையாவது தன் கதைகளில் எழுத நேர்ந்தால் தன்னுடைய கிராமத்துக் குளத்தைச் சீர் செய்ய வராத மக்களை நினைத்துக்கொள்வாராம் சரவணேசன்.

***********************

செட்டிப்பாளையம் பாக்யனாதனின் கிராமக்கதை:

சினிமாப் படப்பிடிப்புக்குப் பெயர்போன கிராமம் செட்டிப்பாளையம்.இந்தக் கிராமத்தின் பாிசல் துறை தலை காட்டாத தமிழ்ப் படமே இல்லை எனலாம். தற்போது கேரளா, ஆந்திரா, கர்னாடகாவிலிருந்தெல்லாம் வர ஆரம்பித்துவிட்டார்கள். இங்குள்ள பூம்புனல்களும், சோலைகளும்,தோப்புகளும் எத்தனையோ நடிக நடிகைகளை கட்டுண்டு, ஓடியாடி, கட்டிப்பிடித்து, உருண்டு, குதித்து, விழுந்து, புரண்டு இன்னும் காதல் பரவசங்களைக்காட்ட என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அல்லது முடியுமோ அவ்வளவையும் செய்யவைத்து சினிமாவை உய்யவைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறன.நாளடைவில் ஊர் மக்களுக்கு படப்பிடிப்புகளைப் பார்ப்பதும் படக்குழுவினருக்கு உதவிகள் செய்வதுமே தொழிலாகப்போய் விவசாயமே மறந்து போய்விட்டது. சினிமாவில் மக்களுக்கு இருந்த ஈடுபாடைக் கண்டு வியந்த ஒரு தயாாிப்பாளர் தன் பட செட்டுக்காகக் கட்டிய வீடுகளையும் பள்ளிக்கூட கட்டிடத்தையும் அந்த ஊர் மக்களுக்கே அர்ப்பணித்துவிட்டார். மேலும் பாக்யனாதனுக்கு ஒன்றுவிட்ட அத்தைமகள் செல்லாயியை படப்பிடிப்பின்போது கவனித்த ஒரு டைரக்டர் அவளைத் தன்னுடைய அடுத்த படத்தின் கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்து தன்னுடனேயே கூட்டிச் சென்றுவிட்டதாகவும் ஒரு கிசு கிசு உலவுகிறது. பாக்யனாதனே இதை கிளப்பி விட்டிருக்கலாம் என்றும் ஒரு கிசு கிசு.

******************

இலவங்குடி இளங்கீரனின் கிராமக்கதை:

இளங்கீரன் இடுப்பில் கோவணம் தாித்து பாலத்தின் மேலிருந்து கீழே நொப்பும் நுரையுமாகப் பிரவகித்துச் செல்லும் ஆற்றில் தொபுக்கடாரென்று குதித்துவந்த காலத்திற்கே சென்று இலவங்குடியை நாம் தாிசிக்கலாம். ஒரு சமயம் இளங்கீரனோடு கூடக் குதித்த கோபாலனுக்கு ஆற்றில் புதைந்திருந்த பொிய பாறை ஒன்று பட்டு மண்டை உடைந்து இரத்தம் பெருகி ஆறே சிவப்பாகிப்போனது. கோபாலனுக்கு யார் இரத்த தானம் செய்து காப்பாற்றினார்கள், தனக்கு இரத்த தானம் செய்தவர்களையே கோபாலன் பின்னாளில் எப்படி பகைத்துக்கொண்டான், இளங்கீரன் எப்படித் தலையிட்டு சமரசம் பேசி இருவரையும் ஒன்றுசேரவைத்து எதிராளியின் மகளையே கோபாலனின் மகனுக்குக் கிராமக் கோயில் மண்டபத்தில் கல்யாணம் செய்துவைத்தார் என்ற நட்பின் பாிமாணங்கள் ஊர்ப் பெருமையைப் பறை சாற்றும். கம்பரும் சடையப்பவள்ளலும் மாதம் ஒருமுறை இலவங்குடி கோவிலுக்கு வந்து போனதுதான் அவர்களின் ஃபெவிகால் நட்புக்குக் காரணமாக இருந்தது என்றும் ஊர்ப் பொியவர்கள் கூறுவதுண்டு. தேர்தல் சமயங்களில் நட்புக்குச் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் முடிவுக்குப் பின்னான பங்கீடு விஷயங்களில் நட்பு மீண்டும் கூடிவிடுவது இவ்வூாின் மற்றொரு சிறப்பு. இலவங்குடி ஆற்றைப் பிடித்துக்கொண்டு பின்னோக்கியே சென்றால் எழுத்தாளர் மழவகுமாாின் மண்ணுமலை கிராமம் வரும்.

*************************

மண்ணுமலை மழவகுமாாின் கிராமக்கதை:

இந்தக் கிராமம் மலைமேல் இருக்கிறது.போகும்போது கையோடு ஒரு போர்வை எடுத்துச் செல்வது நல்லது. மலைமேல் எப்போதும் சில்லென்று காற்று வீசிக்கொண்டிருக்கும்.ஒற்றையடிப்பாதையில் கவனமாக ஏறிச் செல்லவேண்டும். சிறிது தவறினாலும் கிடுகிடு பள்ளத்தில் விழுந்து உயிாிழக்க நோிடும்.ஒருபக்கம் ஆழமான பள்ளத்தாக்கு என்றால் மற்றொரு பக்கத்தில் ஆங்காங்கே இருண்ட குகைகள்.மழவகுமாருக்கு அவருடைய பதினோராவது வயதில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று என்றும் மறக்க முடியாததாகும். மலைப் பாதை வழியாக சென்றுகொண்டிருந்தபோது வழி தவறி வேறொரு கிளைப் பாதையில் சென்று ஒரு குகைப் பக்கம் சிக்கிகொண்டார். வெளியே வர வழி தொியாமல் பலமாகக் கத்திப் பார்த்தார். நேரம்தான் சென்றது. இருண்டு விட்டது. சோர்ந்துபோய் குகை வாயிலில் படுத்தபோது திடாரென்று ாஹல்லா குல்லா ஹோய் ஹோய்ா என்று கூச்சலுடன் கைகளில் தீப்பந்தங்கள் ஏந்திக்கொண்டு ஒரு காட்டுவாசிக் கும்பல் அவரை நோக்கி வந்தது. நடுங்கிகொண்டிருந்த சிறுவனை அக்கூட்டத் தலைவன் வெளியே கூட்டிவந்து உடம்பைத் தேய்த்துச் சூடேற்றி ஒருவித நாற்றம் பிடித்த களி உருண்டையை உண்ணக்கொடுத்து வீடுவரை கொண்டுபோய் விடவும் ஏற்பாடு செய்தான். அன்று கற்ற பாடம்தான் மழவகுமாருக்கு; எப்போதும் ஒரே வழிதான், ஒரே நோக்குதான். மறந்தும் கிளை வழிகளில் தடம் பதிக்கத் துணியமாட்டார். அவருடைய கதைகளும் அப்படித்தான். நேராக, ஒருவிதச் சிக்கலும் புதிரும் இன்றி, வாய்க்கால்களில் பாயும் நீரைப்போல வெட்டிவிட்ட பாதையிலேயே செல்லும்.

***

காட்டுக்குப்பம் காளத்திராசனின் கிராமக்கதை:

காட்டுக்குப்பம் கிராமத்து ஐயனார் சிலை மிகப் பிரபலமானது. பிரும்மாண்டமான உருவம். எடுப்பான வண்ணப்பூச்சு.கூாிய ஆயுதங்கள் ஏந்திய பயங்கரம் எவரையும் நடுங்க வைக்கும். காளத்திராசன் பிறந்தது ஐயனார் சிலை உள்ள தெரு மூலை வீட்டில்தான்.அவர் கோலி விளையாடியதும் சடுகுடு ாதம்ா பிடித்ததும் அந்த சிலைக்கு முன்னாலுள்ள திடலில்தான். மாடசாமியும் மருக்கொழுந்தும் சந்தித்து தங்களுக்குள் தீராக் காதலை வளர்த்துக் கொண்டது ஐயனார் திடலுக்குச் சற்றுப் பின்னால் தள்ளியிருந்த மாந்தோப்பில். அவர்கள் அங்கே தனித்திருக்கும்போது யாராவது வருகிறார்களா என்று கவனித்து அவர்களை உஷார்ப்படுத்துவது ஒரு காலத்தில் காளத்திராசனின் வேலையாக இருந்தது. அதற்குக் கூலியாக மாடசாமி அவருக்கு மாங்காய்கள் பறித்துத் தருவது வழக்கம். அந்தத் தோப்பு மாங்காய்களுக்கு ஒரு தனி ருசி இப்போது பிரபல ஊறுகாய் நிறுவனம் ஒன்று தோப்பைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வேலி போட்டுக் காவல் வைத்திருக்கிறது. காளத்திராசன் காவல் இருக்கும் போது மாடசாமி அவருக்குச் சிலம்பம் பழக்கி இருந்தான், பின்னால் தனக்கு உதவியாக இருக்குமென்று. அப்படியேதான் ஆயிற்று. மருக்கொழுந்து விஷயத்தில் மாடசாமியோடு மோத மன்னார்சாமி முளைத்தான். மன்னார்சாமிக்குப் பண பலமும் ஆள் பலமும் மிகுதி.இருந்தாலும் காளத்திராசனுடன் சேர்ந்து மன்னார்சாமியை சிலம்பம் சுற்றி மெளனப்படுத்திவிடலாம் என்று அதற்கு ஒரு நாளையும் குறித்து வைத்தான் மாடசாமி. அதற்கு முந்தைய நாள் இரவில் மருக்கொழுந்து மாடசாமியுடன் ஏதோ ரகசியம்பேச, இரவோடிரவாக ஐயனாரை வேண்டிக்கொண்டு ஊரை விட்டே ஓடிப் போனார்கள் இருவரும். காளத்திராசன் சிலம்பம் மீது மண் விழுந்தது. சிலம்பத்தை ஏறக் கட்டிவிட்டு சிற்றிதழ்களுக்கு எழுதத் துவங்கினார் காளத்திராசன். காட்டுக்குப்பம் ஐயனார் தன்னை வேண்டிக்கொண்டு ஊரை விட்டுப் போனவர்களை ஒன்றும் செய்வதில்லையாம்!

***

இரத்தக்காடு இராக்கைய்யனின் கிராமக்கதை:

இரத்தக்காடு கேரள எல்லையை ஒட்டியுள்ள கிராமம். கிராம மக்களின் உடலில் ஓடும் இரத்தமெல்லாம் புரட்சி இரத்தம். இராக்கைய்யன் சிறுவனாக இருந்த காலத்தில் அங்கிருந்த பண்ணையார் ஒருவர் செய்யாத அக்கிரமங்கள் இல்லை. வீரமண்ணில் பிறந்தும் பண்ணையாரைத் தட்டிக்கேட்க அவ்வூர்ப் பொியவர்கள் யாருக்கும் திராணி இல்லை. இராக்கைய்யனின் பட்டாளம்தான் இதையெல்லாம் எதிர்க்கப் புறப்பட்டது. பண்ணையார் பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கும்போது அவர் வீட்டுத் தொழுவத்து மாடுகளை அவிழ்த்துவிட்டு அவரது வயல்களிலேயே மேய விடுவார்கள். அவர் வயல் பக்கம் போகும்போது வீட்டுச் சுவர்களில் சாணம் அடிப்பார்கள், புரட்சி வசனங்கள் எழுதுவார்கள்.இராக்கைய்யன்தான் இதற்கெல்லாம் தலைமை.பண்ணையார் தம் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருந்ததால் இராக்கைய்யன் குழுவினர் அவருடன் நேராக மோத மாட்டார்கள்; மறைந்து தாக்கிவிட்டுப் போகும் கொாில்லாப் போர்தான் அத்தகைய போர் ஒன்றின்போதுதான் கிருஷ்ணகிாி பக்கமாக ஓடிப்போன இராக்கைய்யனுக்கு நக்சலைட் நாகரத்னா அறிமுகமானான்.அந்த அறிமுகத்துக்குச் சில நாட்கள் கழித்து இரத்தக்காடு பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. சில நாட்களில் தேவாரம் தீவிரமாகச் செயல்பட்டு அந்த வட்டாரத்திலிருந்த நக்சலைட்டுகளைப் பூண்டோடு ஒழித்துக் கட்டியது யாவரும் அறிந்த ஒன்று. அந்த கிராமம் இப்போது நிம்மதியுடன் மிக அமைதியாக இருக்கிறது. இருந்தாலும் அவ்வப்போது தம்மிலிருந்து பல வீரர்களை ராணுவத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த ஊர் மண்ணில் விளைந்த சோற்றைத்தான் லெனினுக்கு அவருடைய தாயார் சிறு வயதில் ஊட்டி விட்டதாக பழைய கம்யூனிஸ்டு ஏடுகளில் ஒரு குறிப்பு வெளிவந்திருப்பதாகக் கூறிச் சில சிவப்புச் சட்டைக்காரர்கள் பெருமிதமடைவார்கள். இராக்கைய்யனின் கதைகளில் சிவப்பு மிகுந்து காணப்படுவதற்கும் இதுவே முக்கிய காரணமாக இருப்பதில் வியப்பில்லை.

***

எறும்பூரானின் கிராமக்கதை:

எறும்பூரான் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் அதற்குள்ளாகவே தன் கிராமத்தைப் பற்றி எழுத வாய்ப்பு கிடைததது அந்த கிராமத்தின் அதிர்ஷ்டமே.எறும்பூரான் ஆஸ்பத்திாியில்தான் பிறந்தார் என்றாலும் பிறந்தபோது ஆஸ்பத்திாி வாடையே இல்லை, ஒரே சாராய நெடிதான். ஊாின் ஜ ‘வனமே கள்ளச் சாராயச் சந்தை வருமானத்தில்தான்.வாசனை வருகிற இடங்களிலெல்லாம் காய்ச்சுகிறார்கள் என்று போனால் போலீஸ் ஏமாறத்தான் வேண்டும். அங்கு உடைந்த சட்டிப் பானைகள்தான் கிடைக்கும். கழிப்பறைகள், ஆட்டுத் தொட்டி, மதகடிகள், சுடுகாடு என்று சில இடங்கள் எதற்காக இருக்கிறன என்று போலீஸ ‘க்கு இன்னும் தொியவராதது யாவருக்கும் சந்தோஷமே. சில சமயங்களில் கையும் களவுமாக பிடிபட்டாலும் தப்பித்துவர மாமூல் மார்க்கங்கள் உண்டு. வியாபாரம் படு ஜோராய் நடப்பதால் ஊரே சுபிட்சமாக இருக்கிறது. டி.வி, வி.சி.ஆர், ஃபிாிட்ஜ் போன்ற நவீன வசதிகள் இல்லாத வீடு இல்லை.பலர் மோட்டார் சைகிளும் ஸ்கூட்டரும் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவற்றைக் கடத்தலுக்குப் பயன் படுத்துவதில்லை.சைகிள் ட்யூப்கள்தான் பெரும்பாலும். எந்தக் கட்சியினர் உண்டி ஏந்திவந்தாலும் தாராளமாக நன்கொடைகள் உண்டு.நாளைக்கு ஆட்சி மாறினாலும் பாலிசி மாறக்கூடாது என்பதில் கவனமுடைய மக்கள்.எறும்பூரானுக்குத் தன் ஊாின் கள்ளச் சாராய வாழ்க்கை பிடிக்காமற்போனது. ஊரைத் திருத்த முயன்றார். சில முன்னணி நடிகைகளையும் சமூக உணர்ச்சிகொண்ட பெண்மணிகளையும் அழைத்துவந்து பேசச் செய்தார். பலன் ஏற்படவில்லை. இப்போது தன் எழுத்துகளின் மூலம் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார். எந்தக் கதையானாலும் ஒரு வித நெடி அடிக்கும். கேட்டால் முள்ளை முள்ளால்தானே எடுக்கவேண்டும் என்பார். அவர் முயற்சிகளை நாம் ஏன் குறை சொல்ல வேண்டும் ?

***

3

சந்திரகலாதரன் தொடர்ந்து பிரசங்கித்தார்.

‘இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களின் கிராமங்களைப்பற்றிய கதைகளைச் சொல்லலாம்; சுவாரஸ்யமாக இருக்கும். அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் கிராமங்களுக்குக் கிராமம் சில சிறப்பம்சங்களோடு பல பொது அம்சங்களூம் உண்டு.அவைகளையும் எழுத்தாளர்கள் அனைவரும் தம் சொந்த ஊாின் அம்சங்களாகவே நினைத்து கதைகளில் சேர்த்துவிடுவது உண்டு.இந்த வகையில்தான் தெருக்கூத்து, கிராமப் பஞ்சாயத்தில் விசாாிக்கப்படும் நிலத்தகராறு, கற்பழிப்பு, கள்ளக்காதல், கடத்தல், சாதிப்பூசல், கோவில் விழாக்களை நடத்துவது- நிறுத்துவது சம்பந்தமான பிரச்சினைகள், தேர்தல் முஸ்தீபுகள், சில பல திருட்டுகள், கொலை, தற்கொலைகள், பிள்ளை பிடிப்பவன் – மந்திரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், புரளிகளைப் பரப்புதல், பயாஸ்கோப், பல விசேஷங்களுக்கு மைக் செட், மின் விளக்கு அலங்கார ஏற்பாடுகள், கல்யாணம், கார்த்திகைகளுக்கு கட்சித் தலைவர்களை அழைப்பது, இழவுச் சடங்குகளிலும் கட்சி கட்டிப் பேசுவது இத்தியாதி விஷயங்களைப் பற்றி அவரவர்களின் ஈடுபாட்டளவிலும் பாதிப்பளவிலும் வர்ணனைகள் கதைகளில் எதிரொலிக்கின்றன. இந்த சுபாவம் எழுத்தாளர்களுக்கு மட்டும்தானா ? முன்பே நான் சொன்ன மாதிாி இது எல்லா மனிதாின் சுபாவம்கூட.எல்லோருக்கும் இந்த ஸ்மரணைதான். காந்திஜா ‘கூட போர்பந்தரைக் கொண்டாடவில்லையா ?சுயசாிதம் எழுதிய எழுத்தாளரல்லாத தலைவர்களெல்லாம் தம் பிறந்த ஊரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளவில்லையா ? இன்னும் எழுத்தாளர் மட்டுமே அல்லாத என் நண்பர் ஊர்க் கதையைக் கூறுகிறேன் கேளும்!

கறிமாத்தூர் கிராமத்தின் கதை:

நான் குறிப்பிட்ட நண்பர் ஒரு பத்திாிகையும் நடத்துகிறார். சமீப காலமாக அவர் பத்திாிகையின் வியாபகம் சற்றே குறையலானது. ஆனால் பாரும், சமயத்தில் அவருடைய கிராமம்தான் அவருக்குக் கை கொடுத்தது. திடாரென்று அவர் தன் கிராமமான கறிமாத்தூருக்குப் படையெடுத்தார். திரும்பி வரும்போது இரண்டு லாாிகளில் கறிவேப்பிலைக் கொத்துக்களைக் கொண்டுவந்தார். நான் கூட நினைத்தேன், மனிதர் கிராமத்து விளைச்சலை விற்று பத்திாிகை நஷ்டத்தை ஈடு செய்யப் போகிறாராக்கும் என்று. அதை அவாிடம் கேட்டும் விட்டேன். நாங்கள் இருவரும் மிகவும் அன்னியோன்யம் என்பதால், ‘எங்க கறிமாத்தூர் கறிவேப்பிலையின் மகத்துவம் தொியுமாடா உனக்கு ? எங்க ஊரு கறிவேப்பிலையை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் காலத்துக்கும் கண்ணாடி போட வேண்டாம்டா!ா என்று கூறிக்கொண்டே விரைந்து விட்டார் அவர்.

அப்போதும் அவர் என்ன செய்ய நினைக்கின்றார் என்று எனக்குப் புாியவில்லை.இரண்டு லாாிக் கறிவேப்பிலையையும் துவையல் அரைத்து கண் ஆஸ்பத்திாிகளுக்குத் தானம் செய்து ா கண் கொடுத்த கண்ணாளன்ா என்ற பட்டம் பெற முயற்சிக்கிறார் என்றே நினைத்தேன், அவருடைய அந்த வாரச் சஞ்சிகையைப் பார்க்கும்வரை.

அந்த இதழில் ஒரு விசேஷ அறிவிப்பு செய்திருந்தார் நண்பர். கறிமாத்தூர் கறிவேப்பிலையின் மகிமைகளை விளக்கிவிட்டு அடுத்த வார இதழுடன் இரண்டு கொத்து கறிவேப்பிலை இலவச இணைப்பு என்று அறிவித்திருந்தார். அடுத்த இதழ் பிய்த்துக் கொண்டு போயிற்று. அதற்கடுத்த இதழில் கறிமாத்தூர் கறிவேப்பிலை இதழ் ஒன்றின் போட்டோவைப் பிரசுாித்து அதிலுள்ள நரம்புகளின் எண்ணிக்கையைச் சாியாகச் சொல்பவர்களுக்கு குலுக்கலில் பாிசுகள், பிரபல சினிமா நடிகை குலுக்கி எடுப்பார் என்று அறிவித்தார். வியாபாரம் பயங்கரமாக சூடு பிடித்துவிட்டது. பிறகு வாிசையாக , இலவம்பாடி கத்தாிக்காய், ஆத்தூர் வெண்டைக்காய், ஊட்டி பீன்ஸ்,பெங்களூர் தக்காளி, பெல்லாாி வெங்காயம், வேலூர் எலுமிச்சை, நிலக்கோட்டை கொத்தவரங்காய் என்று இலவச இணைப்புகள் தொடர்ந்தன. ஏ.பி.சி. சர்டிஃபிகேட்டில் எண்ணிக்கைகள் உயர்ந்தன.

ஆனால் பாவம், கொஞ்ச நாட்களில் வளைகுடாப் போர், பட்ஜட்டின் விளைவாக விவசாயப் பொருட்களின் விலையேற்றம் என்று சங்கடங்கள் வந்ததால் மறுபடி வீழ்ச்சி ஆரம்பித்தது. பிறந்த மண்ணைத் துறந்து வேறு மண் வாசனைகளை நாடிப்போனதே சாிவுக்குக் காரணம் என்று நினைத்து நண்பர் மறுபடியும் கறிமாத்தூர் போய்வர ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கினார்.

***

4

கிராமயணப் பிரசங்கம் இந்த அளவில் முடிவடைந்ததாகத் தொிந்தது. என் எழுத்தாள நண்பர் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு எழ ஆரம்பித்தார். ‘ இன்னொரு கப் காப்பி வருகிறது ஸ்வாமி, கொஞ்சம் இருங்கள். அப்படியே என்னுடைய இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டுப் போங்கள்! ‘ என்று கூறி அவர் கையைப் பிடித்து அமர வைத்தேன்.

‘பிறந்த மண்ணைப் பற்றி எழுதுவது எல்லோருக்கும் நியாயந்தான் என்று காரணங்களோடு சொல்லிவிட்டேனே, இன்னும் என்னய்யா உமக்குச் சந்தேகம் ? கேட்டுத் தொலையும்,சீக்கிரம், எனக்கு வேலையிருக்கிறது ‘ என்று அவசரப்படுத்தினார் நண்பர்.

‘சந்தேகமென்று ஒன்றுமில்லை ஸ்வாமி! ஒரு விண்ணப்பம்தான். மற்ற பல எழுத்தாளர்களின் கிராமக்கதைகளைச் சொன்னீர்கள். ஆனால் உங்களுடைய சொந்த ஊரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே! இன்னும் எழுதவில்லையா அல்லது விதி விலக்காக எழுதும் எண்ணமே இல்லையா ? ‘ என்று கேட்டேன் நான்.

கலகலவென்று சிாித்துவிட்டுக் கூறினார் நண்பர்:

‘எவனுக்கய்யா அந்த எண்ணம் தோன்றாமலிருக்கும் ? ஆரம்ப நாட்களில் இப்போதே வேண்டாமே என்று தவிர்த்துவந்தேன். இப்போதோ வளர்ந்துவிட்டேன். இப்போது எழுதினால் மதிப்பு குறைவாகப் போகும். இருந்தாலும் என் சுய சாிதையில் எழுதலாமென்றிருக்கிறேன். அது விரைவில் முடியாமற்போனால், என் மகன் இப்போது எழுதத் தொடங்கியிருக்கிறான் என்பதுதான் உமக்கு தொியுமே,அவன் மூலம் அந்த அாிப்பைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். ‘

பகீரென்றது எனக்கு. எழுத்துத் துறையிலும் வாாிசுகளின் ஆட்சிக்கு வழி வகுத்தாகிவிட்டதா ? கேட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய ஊாின் பிரதாபத்தைத் தொிந்துகொள்ளவேண்டுமே, அதனால் கேளாமல் விட்டேன்.

‘ அதுவரைக்கும் உங்கள் நண்பனைக் காத்திருக்க வைக்காதீர்கள் ஸ்வாமி! சுருக்கமாகவாவது எனக்கு இப்போதே சொல்லிவிடுங்கள் ‘ என்றேன் கெஞ்சலாக.

கே. சந்திரகலாதரன் ாகோ யின் புராணத்தைப் பெருமிதத்துடன் கூறத் துவங்கினார். அவரது கண்கள் பாதி மூடிய நிலையில் இருந்தன.

***

5

‘என்னுடைய கிராமம் ஒரு பொிய ஏாியின் அடிவாரத்தில் இருந்தது. இருந்ததுவா ? ஆம்; என் தாத்தா காலத்தில் இருந்தது, இப்போது இல்லை, இல்லவே இல்லை. உமக்குப் புதிராக இருக்கலாம். என் தாத்தா நான் சிறுவனாக இருந்தபோது எனக்குச் சொன்னதைச் சொல்கிறேன், கேளும்! நவரசங்களும் ததும்பும் உன்னதச் சித்திரமய்யா அது!

‘ஒரு தீபாவளித் திருநாள். மழை, மழை, தொடர் மழை. காற்று புயலாகச் சாடுகிறது. மரங்கள் பேயாட்டம் போடுகின்றன.பிரளய காலம் போல பகலே இரவாகி விடுகிறது.( ரசம்- பயம்)

ஏாி நிறைந்து நீர் வழிய ஆரம்பிக்கிறது.சிறிய கிராமம். சோி ஏாிக்குப் பக்கத்தில். சோியெல்லாம் வெள்ளம். சோி மக்கள் அவ்வளவுபேரும் முண்டியடித்துக்கொண்டு ஆடு மாடுகளை இழுத்துக்கொண்டு ஊரை நோக்கி ஓடிவருகிறார்கள். என் தாத்தா கையில் லாந்தர் விளக்குடன் நிலைமையை ஒரு நோட்டம் விடுகிறார். இன்னும் சற்று நேரத்தில் ஊருக்குள்ளும் வெள்ளம் புகுந்துவிடும். எல்லோரையும் முதலில் பத்திரமாக அருகிலிருக்கும் மாாியம்மன் கோவிலுக்குள் ஒதுங்கச் செய்யவேண்டும். புயல் ஓய்ந்ததும் மேட்டைத் தாண்டி அடுத்த கிராமத்துக்குப் போய்விடலாம்.(சாதுர்யம்)

‘வெள்ளம் இன்னும் வடிந்தபாடில்லை. மழையும் நின்றபாடில்லை. வீதியின் நடுவே பூமி நெடுக்காக பிளந்துவிட்டது.பொிய பள்ளம். யாரும் இங்கிருந்து அங்கோ, அங்கிருந்து இங்கோ தாண்டிச் செல்ல முடியாத அளவுக்குப் பிளவு. எங்கள் வீட்டுப் பக்கமாக ஓடி வந்த சில சோி மக்களை தாத்தா வீட்டுக் கூடத்தில் அடைக்கிறார்.( சாதிகள் இல்லையடி பாப்பா!)

‘பள்ளத்திற்கு அந்தப் பக்கமாக வெள்ளையனும் கறுப்பாயியும், இந்தப் பக்கமாக கறுப்பய்யனும் வெள்ளாயியும் ஒருவரையொருவர் கட்டித் தாங்கிப் பிடித்துக்கொண்டு மாாியம்மன் கோவிலை நோக்கி நனைந்தபடியே ஓடுகிறார்கள். மீண்டும் இந்தப் பெயர்களை நினைவு படுத்திக்கொள்ளும்! ஆம், ஜோடி மாறிவிட்டிருக்கிறது இல்லையா ? ஆபத்துக்குப் பாவமில்லைதானே!( ஹாஸ்யம்)

‘இவர்கள் ஓடியதும் பின்னாடியே வெள்ளத்தில் செத்துப்போன பெருச்சாளிகள், எலிகள்,இனம் தொியாத உடல்கள் ஆகியவை, குப்பை கூளங்கள் முறிந்து விழுந்த மரக் கிளைகளுடன்கூட வேகமாக மிதந்து வருகின்றன.(அருவருப்பு)

‘கூடவே குழந்தைகளுக்காக பெற்றோர் பலர் அண்டை நகரத்திலிருந்து வாங்கி வந்த பட்டாசுகளும் புதுத் துணிமணிகளும் சுழன்றடித்துக்கொண்டு மிதந்து ஓடுகின்றன.(துயரம்)

‘ஊர் மக்கள் இன்னும் மெதுவாகவே இயங்குகிறார்கள். அவர்களுக்கு நிலைமையின் கடுமை புாியவில்லை. ஏாி உடைந்துவிட்டால் ாகும்பலோடு கோவிந்தாாதான். என் தாத்தா உச்ச ஸ்தாயியில் கத்துகிறார்- டேய், மடையன்களா! முதல்லே உசுர காப்பாத்திக்க ஓடுங்கடா. சொத்துபோனா போகட்டும்டா. போங்கடா, ஓடுங்க, ஓடுங்க!-(ரெளத்ரம்)

‘தாத்தாவின் அறைகூவலுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் போட்டது போட்டபடியே இருக்க கோவிலை நோக்கி ஓடுகிறார்கள். தாத்தாவும் கோவிலை அடைந்துவிடுகிறார். மாாியம்மன் கோவிலில் முன் தினம் ஏற்றி வைக்கப்பட்டிருந்த திாி விளக்குகள் இன்னும் எாிந்து கொண்டிருக்கின்றன. தாத்தா கூடியிருந்தவர்களின் தலைகளை எண்ணுகிறார் குடும்பம் குடும்பமாக. அப்பாடா! மனிதர்கள் எல்லோரும் தப்பித்துவிட்டார்கள். அனைவரும் அம்மனுக்கு நன்றி கூறி ா அம்மா, தாயே, மகமாயீா என்று பாடித் துதிக்கிறார்கள்.(பக்தி)

‘மழை சற்று உள் வாங்குகிறது. இனி என்ன செய்வது ? எங்கே போவது ?மக்கள் ஒன்றும் புாியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். (மருட்சி)

‘மறுபடியும் தாத்தாதான் வழி காட்டுகிறார். ஏாி உடையும் அபாயம் இருப்பதால் உடனே எல்லோரும் ஊரை அடுத்து மேட்டுப் பகுதியிலிருந்த கோவிலூர் கைலாசநாதர் ஆலயத்துக்குப் போய்விட வேண்டும் என்று தீர்மானித்துா குழு குழுவாகப் பிாிந்து வாிசையாகப் போங்கடா! கடைசிக் குழுவோடு மிச்ச மீதி சாமான்களோட நான் வரேன்!ா என்கிறார் என் தாத்தா.(வீரம், பொறுப்புணர்ச்சி)

‘அவர் சொன்னபடியே எல்லோரும் கோவிலூர் கைலாசநாதாின் பொிய ஆலயத்தை அடைவதற்கும் எங்கள் ஊர் ஏாி பயங்கர சத்தத்துடன் உடைவதற்கும் சாியாக இருந்தது.(வியப்பும், நிம்மதியும்)

‘மழை முழுதுமாக நின்றுவிட்டது.என் தாத்தாவுக்கு கோவிலூாிலும் ஒரு கட்டிடம் சொந்தமாக இருந்தது. தானியக்கிடங்காகப் பயன் பட்டு வந்தது அது. ஜனங்களையெல்லாம் கைலாசநாதர் கோவிலில் இருத்திவிட்டு நாலைந்து பொிய ஆட்களைமட்டும் உடனழைத்துக்கொண்டு கிடங்கை அடைகிறார் என் தாத்தா. பூட்டை உடைத்துத் திறந்து உள்ளே சேமித்து வைத்திருந்த அாிசி மூட்டைகளைப் பிாித்து ஊர்மக்கள் அனைவருக்கும் சோறு வடிக்க ஏற்பாடு செய்கிறார்.(கருணை)

‘ஊரே சாப்பிட்டுவிட்டு வயிறு குளிர என் தாத்தாவை வாழ்த்திப் பாராட்டுகிறது.(நன்றியுணர்ச்சி, பெருமிதம்)

‘மறுநாள் காலை என் கிராமம் மண் மேடிட்டுப் புதைந்து கிடப்பதைப் பார்க்கும் என் தாத்தா எல்லோரும் இனி மேட்டுப் பகுதியிலிருந்த கோவிலூாிலேயே வசிப்பதற்கு அனுமதித்து ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொண்டு கலெக்டருக்கு மனு ஒன்று சமர்ப்பிக்கிறார்.(மக்கள் சேவையே மகேசன் சேவை)

‘கிராமத்தை நோில் வந்து பார்க்கும் கலெக்டர் துரையும் என் தாத்தாவின் சிபாாிசுகளுக்கு ஒப்புதல் அளிக்கிறார்.ஒரு கிராமம் இன்னொரு கிராமத்துடன் சங்கமிக்கிறது. எனக்கென்று இரண்டு கிராமங்களாகிப் போனது.

‘நான் இப்போது கூறியவற்றில் சில ரசங்கள் விட்டுப் போயிருக்கலாம். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எந்த ரசம் விடுபட்டுப் போயிருக்கிறதோ அந்த ரசம் தொனிக்கும்படியாக நீரே ஒரு கற்பனை நிகழ்ச்சியைச் சேர்த்துக்கொள்ளும்! அது மாதிாி நிகழ்ச்சி கட்டாயம் நடந்தே இருக்கும். என் தாத்தா மறந்திருப்பார். ஒருவேளை அவர் சொல்லி நான் மறந்திருந்தாலும் இருக்கலாம்!

‘மண் மேடிட்டுப் புதைந்துபோன என் கிராமத்தைப் பற்றி ஏன் இவ்வளவு கிதாப்பு என்கிறீரா ஐயா ? உண்மையாகவே இல்லாவிட்டாலும் இன்னும் இருக்கிறது என் கிராமம் என் பெயாின் முன் ஒட்டியபடியே. அதுதான் என் பெயாின் தலை எழுத்தாக. கே ஃபார் கழகம்பூண்டி. உமக்கு உடன்பாடு இல்லையென்றால் கே ஃபார் கோவிலூர் என்று வைத்துக்கொள்ளுமேன்!

‘எனக்கும் என் கிராமம் நற்றவ வானினும் நனி சிறந்ததுதான்யா! இல்லாமலேயே இருப்பதும், இருந்தும் இல்லாமலிருப்பதும் என் தாத்தா எனக்குச் சொல்லித் தந்த தத்துவங்கள்! என் கிராமங்களும் எனக்கு அதைத்தான் இன்றும் சொல்லுகின்றன. என் வாாிசுகளுக்கான செய்தியும் அதேதான்யா1 ‘

கண்களைப் பாதி மூடிய பரவச நிலையில் சொல்லிவந்த என் நண்பர் கதையை முடித்துக்கொண்டு கண்களை முழுவதுமாகத் திறந்த போது அவரது கண்கள் பனித்திருந்தன.அவர் முன்னாலிருந்த காஃபி ஆறிப் போயிருந்தது.

சிம்மாசனத்தின் கடைசிப் பதுமையிடம் கதை கேட்ட போஜராஜனின் நிலையில் நான் இருந்தேன். போஜராஜனுக்கு சிம்மாசனம் கிட்டி விட்ட மாதிாியும் விலகிப் போன மாதிாியும் இருந்ததுபோல எனக்கும் எழுத்தாளர்களைப் பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியாமலிருந்தது. இருப்பினும் கடைசி கேள்வியாக, ‘ பிறந்த மண்ணைப் பற்றி எழுதுபவர்கள் எல்லாம் நல்ல எழுத்தாளர்களாகிவிட முடியும் போல் தோன்றுகிறதே ஸ்வாமி, உங்கள் விருத்தாந்தங்களையெல்லாம் கேட்ட பிறகு! ‘ என்று நண்பரைப் பார்த்துக் கேட்டேன்.

‘ நன்றாய்த்தான் சொன்னீர் போம்! எழுத்தாளர்களால் தங்கள் ஊரைப் பற்றிச் சிறப்பாக எழுத முடியும் என்பதால் தங்கள் ஊரைப் பற்றி எழுதுகிறவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடுவார்களா என்ன ? ‘ என்று பதில் கேள்வி தொடுத்தார் கே. சந்திரகலாதரன், கிண்டல் தொனிக்க.

எனக்கும் சந்தேகமாகத்தான் பட்டது இப்போது.

***

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.