எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

ராமசந்திரன் உஷா


கிரீச் என்ற சத்தம் கேட்டு, காலை காபியுடன், ஜெயா டீவியில் பக்தியுடன் பெருமாளை தரிசித்துக் கொண்டிருந்த எழுத்தாளினி ஏகாம்பரியின் கணவர், என்னவோ ஏதோ என்று விழுந்தடித்துக் கொண்டு உள்ளே ஓடினார்.

“குட் நியூஸ்.. ஐயோ! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலையே” என்று எழுத்தாளினி சொன்னதும், “என்ன ஏதாவது பரிசு கிடச்சிருக்கா? எவ்வளவு?” என்று ஆவலுடன் கேட்டார்.

“நா நட்சத்திரம் ஆயிட்டேங்க. ஐயோ! எவ்வளவு நாளா ஏங்கிக்கிட்டு இருந்தேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி பிலாக் ஆரம்பிச்ச மூணே மாசத்துல, நானும் நட்சத்திரம் ஆயிடுவேன்னு என்ன என்ன போடணும்னு எங்கோ டைப் செஞ்சி வெச்சிருந்தேனே? பைல் பேரூ நினைவில்லையே?” அந்தம்மாள் சொல்வதை அறைகுறையாய் புரிந்துக் கொண்டு, “நட்சத்திரமா? ஸ்டாரா? என்ன சினிமாலையா சான்ஸ் கிடச்சிருக்கு?” குரலில் தென்பட்ட பயம், எழுத்தாளியின் மண்டையில் ஏறவில்லை.

” உங்களுக்கு எல்லாம் ஆதில இருந்து சொன்னாத்தான் விளங்கும். நான் ஸ்டாருங்க, ஒரு வாரத்துக்கு. தினமும் பதிவு
போடணும். இப்ப எல்லாம் தமிழ் வலைப்பதிவுகள் பத்தி ஆனந்தவிகடனில் கூட எடுத்துப் போடுராங்க. பிரிபரேஷனுக்கு இன்னும் ரெண்டே வாரம், இருக்கு, அடுத்த மாசம் முதல் வாரம் முழுக்க எனக்கு ஒதுக்கியிருக்காங்க”

அவ்வளவுதானே என்றுச் சொல்லாமல், முகபாவனையில் காட்டிவிட்டு, அறையை விட்டு வெளியே காலை வைக்கும்பொழுது,
“நீங்க பிள்ளைகளை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பிடுங்க. கெய்சர் போட்டுட்டேன். கொஞ்சம் யூனிபார்ம் மட்டும் அயர்ன் செஞ்சிடுங்க.
கார்ன்பிளேக்ஸ் அலமாரில இருக்கு” என்று மடமடவென்று உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, “ஹாங்… சொல்ல மறந்துவிட்டேனே,
இன்னைக்கு அரை நாள் ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடுங்க. உங்க ஹெல்ப் எனக்கு தேவை” என்றாள் ஏகாம்பரி.

பழைய பைல்களை தேடினால் ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதற்குள் கணவர், “பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயாச்சு.
எனக்கு இன்னைக்கு பத்துமணிக்கு மீட்டிங் இருக்கு” என்று ஆரம்பிக்க, “உங்க ஆபிஸ் டேபிளுக்கு இன்னொரு ஆளு வந்துப் பேசினா, அது உங்களுக்கு மீட்டிங்க. மொதல்ல இந்த நோட்ட பிடிங்க, இந்தாங்க பேனா! நா சொல்ல சொல்ல எளுதுங்க, சும்மா நடுவுல நடுவுல வளவளான்னு பேசக்கூடாது” என்றவள் ” முன்ன எழுதி வெச்சது காணோம். இப்ப டிரெண்டும் மாறிடுச்சு. சும்மா நூத்து
கணக்குல கமெண்டு அள்ளுராங்க. சில பேரூ ஆயிரத்தக்கூட தாண்டிட்டாங்க… என்றுச் சொல்லும்போதே, ஏதோ யோசனையில்
முகம் ஆழ்ந்தது.

“ஹைலைட் செஞ்சி ஒண்ணு ஒண்ணா எழுதுங்க.. நம்பர் ஓன் இன்னில இருந்து தினமும் எல்லாருக்கும் பின்னுட்டம் போடணும்”

கணவர் முழிப்பதைப் பார்த்து, ” தமிழ்ல பின்னுட்டம்ன்னா கமெண்டுன்னு அர்த்தம்… அதிலும் புதுசா வந்தவங்களுக்கு கொஞ்சம்
தாராளமாய் போட்டால், நன்றி மறக்க மாட்டாங்க. பின்னுட்டம் சரியா குவியலைன்னா மானக்கேடா இருக்கும்”

“நெக்ஸ்ட்… உனக்குதான் சுஜாதாவோட ரைட்டிங்ஸ் ரொம்ப பிடிக்குமே.. அவரைப் பற்றி எழுதேன்”

” சுஜாதாவா? அவர பத்தி எளுதணுமான்னு யோசிக்கிறேன். முன்ன எழுதி வெச்சிருந்தேன்னு சொன்னேனே, அதுல சுஜாதா சிறுக்கதை
தொகுப்பு பற்றி இருந்துச்சு. ஆனா இன்னைக்கு டிரெண்டுல அவர பத்தி எழுதணும்னா.. ஆங்… பார்பனீய சுஜாதாவின் பேனாவில் பீறிடும் அக்ரஹாரத்து மை ந்னு எழுதினாத்தான் வொர்க் அவுட் ஆகும். குறிச்சிட்டீங்களா?”

“எங்கே இன்னொருக்கா சொல்லு” என்றதும், ஏகாம்பரி மீண்டும் சொன்னாள்.

“அது என்ன அக்ரஹாரத்து மை?”

“நான் தான் மொதல்லேயே சொன்னேனே, குறுக்க குறுக்க கேள்விக் கேட்க கூடாதுன்னு… என்றவள், “அட மறந்தே போயிட்டேனே,
மொதல் இடுகை, தன்னடக்கத்துடன் பணிவான வணக்கம். கடைசி இடுகை நன்றி நவிதல்”

“இடுகைன்னா…

“அதுதாங்க போஸ்ட்”

“ரெண்டு மூணு கவிதைகள் எளுதி வெச்சிருக்கேன். அதப் போட்டுட்டலாம்! பின்னிரவில் முயங்கும் பூனைகளின் எச்சங்கள், மரணத்தவன் கை எழுதுகோல் சித்திரங்கள் .. அப்புறம்”

“பூனையா? காக்கா, குருவி போடுவதைத் தானே எச்சம்னு தமிழ்ல சொல்லுவாங்க”

“ஐயா சாமி! இது நவீன இலக்கியம், பொதுவா பூனை, எப்பவாவது நாய் ஆகிய ரெண்டே விலங்குகள் மட்டுமே கவிதையில வரும். மரணம், சாவு, தற்கொலை, இரவு, நிழல், மேல் தட்டு வர்க்க பார்வையில் கெட்ட வார்த்தைகளாய் சொல்லப்படும் சில சொற்கள்… இதெல்லாம் நவீன இலக்கியத்தின் இலக்கணங்கள். இதை மீறி யாராலும் நவீன கவிதையோ அல்லது கட்டுரையோ எழுதிட முடியாது.

மானசீகமாய் தலையை அடித்துக் கொண்டு, நவீன கவிதை என்றுக் குறித்துக் கொண்டார்.

“அடுத்து, தமிழ் ஈழம், பெரியார் பற்றி! ரெண்டையும் கூகுளில் தேடிப்பிடிச்சி மேட்டரைத் தேத்திடலாம்”

“ஸ்ரீலங்கா மேட்டர் எல்லாம் உனக்கு என்ன தெரியும்? பெரியாரா? உனக்கும் பெரியாருக்கும் என்ன சம்மந்தம்? போன வெள்ளிக்கிழமைகூட விளக்கு பூஜை செஞ்சே? எனக்கு மூவாயிரம் செலவு”

“சில விஷயங்கள் இப்படிதான்னு இருக்கு. சும்மா லொட்ட கேள்வி கேட்காம சொல்லரத நோட் பண்ணிக்குங்க. பதிவு போடரது,
அதுவும் நட்சத்திர பதிவு போடரதுன்னா சும்மாவா? எல்லாம் ஹாட் டாபிக்கா இருந்தா, அந்த வார ஆவில வந்தா எப்படி இருக்கும்?
என்னத்தான் பிலாக் எளுதினாலும், விகடன்ல கதை கிதை வந்தா ஒரு கெத்துதான்”

“சரி சரி! இப்ப ஆறு மேட்டர் ஆச்சு. வணக்கம், நன்றி, நவீன கவிதை, அக்ரஹாரத்து சுஜாதா, பெரியார், ஸ்ரீலங்கா.. அப்புறம்?”

“இன்றைக்கும் பெண் ன்னு பெண்ணீய சிந்தனை மேட்டர் ஒண்ணு இருக்கு. எப்படியும் நாலு பேரூ வந்து, நம்ம எடத்துல அடிச்சிக்குவாங்க. நாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கலாம். ஏழு ஆச்சா? வட்டார வழக்கில் ஒரு கதை இல்லாட்டி ஏதாவது சமூக சிந்தனையை வெளிப்படுத்தும் நுண்ணரசியல் கட்டுரையும் போட்டுட்டா ஆச்சு”

“அது என்ன நுண்….?”

“நானும் இப்பதாங்க கத்துக்கிட்ட வார்த்தை இது. சேது சமுத்திர திட்டத்தில் நுண்ணரசியல் நடத்தும் நடுவண் அரசுன்னு ஒரு பொலிட்டிக்கல் மேட்டர் போட்டா ஆச்சு! அட சொல்ல மறந்துட்டேனே, மத்திய அரசுன்னு சொல்லக்கூடாது. நடுவண் அரசுன்னு சொல்லணும். ண் ரெண்டு சுழியா, மூணு சுழியான்னு சரியா தெரியலை”

” நீ சொன்னா மாதிரி இதுல குறிச்சிட்டேன். மணியாச்சு, நா குளிச்சிட்டு கிளம்புரேன். மதிய சாப்பாடு சரவணபவன்ல இருந்து வாங்கிவந்துடரேன். அந்த ஒருவாரம், பக்கத்து பிளாக்குல ஒரு மாமி சமைச்சிக் கொடுக்கிறாங்களாம். அதுக்கும் சொல்லிடு”

“அப்படியே உங்கக்கா, அடுத்த வாரம் வரேன்னு சொல்லியிருந்தேளே. இப்ப வர வேணாம்னு சொல்லிடுங்க. எனக்கு ஒடம்பு
சரியில்லைன்னு சொல்லுங்க. உங்களுக்குன்னா என்ன ஏதுன்னு பார்க்க வரேன்னுவா. எனக்குன்னா, இங்க வந்தும் சமையல், வீட்டுவேலை
செய்யணும்னு வரமாட்டா”

“சரி சரி! நா கெளம்புரேன்.. அந்த பெண்ணீய சிந்தனைகள் மட்டும் டெஸ்க் டாப்பில் போட்டு வெச்சிரு. நா படிக்கணும்” என்றுச்
சொல்லிவிட்டு வெளியேறினார்.

ஏகாம்பரி பரபரவென்று தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

**************************************************************************************************************

ராமசந்திரன் உஷா
17-10-2007

ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா