எழுது ஒரு கடுதாசி

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

புகாரி, கனடா


கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு
வாழ்ந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத்
தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை
நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான
எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை
நாடகங்களால் உள்ளே செத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும்
உயிர்பெற்று மீண்டும் புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப்
பண்பு மாறாமல் பாதுகாத்துவருகின்ற வரம்.

இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின்
பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவை
வாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம்
வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகர
வாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன்
எழுதும் கடிதமே இந்தக் கவிதை.

அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.

நேத்துவர எம்மனச
நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய் தம்பி
பருசமுன்னு சொன்னாங்க

வேத்துவழி தெரியாம
விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
ஒன்னெனப்பா பொங்குதிப்போ

பாழான எம்மனசு
பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ
நீ நடக்கும் நெலமாச்சி

மாளாத கனவாச்சி
மங்காத நெனப்பாச்சி
தாளாத தனிமையில
தீராத ஆசையில

வாடாத மருக்கொழுந்தே
வத்தாத தேனூத்தே
போடேண்டி கடுதாசி
பொல்லாத மனசமாத்தி

போடாட்டி எம்மனசு
புண்ணாகிப் போகூன்னு
மூடாத முழுநிலவே
மச்சினனத் தூதுவிட்டேன்

ஆடாத மனசோட
அசையாத மொகத்தோட
போடாம கடுதாசி
புதிராக இருந்துட்டே

வாடாத எம்மனசும்
வாடிப்போய்க் கெடக்குதடி
கூடாத காரியமா
குத்தமுன்னு யாருசொன்னா

தாத்தா சொன்னாரா
தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
போட்டாவக் கொடுத்தாங்க

கூத்தாத் தெரியலியா
கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
வீணாயேன் மறுத்தாங்க

யாருவந்து கேட்டாங்க
ஏம்பரிசம் போட்டாங்க
ஊரயெல்லாங் கூட்டிவச்சி
ஒன்னெனப்பக் கொடுத்தாங்க

நீரயள்ளி எறைச்சாக்கா
நெலம் ஈரம் ஆவாதா
தூரநாடு வந்ததால
தொலையுதுன்னு போவாதா

தேர இழுத்தும் இப்போ
தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
புதுவாசம் வீசலியே

நாளமெல்லப் போக்காத
நரகத்துல தள்ளாத
யாருநின்னு தடுத்தாலும்
எழுதமட்டும் தயங்காத

நாந்தான ஒங்கழுத்தில்
நல்லமல்லி மாலையிடுவேன்
வாந்தாலும் எங்கூட
வாடினாலும் எங்கூட

நாந்தானே ஒனக்கூன்ன
நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
எழுது ஒரு கடுதாசி

புகாரி, கனடா
buhari2000@hotmail.com
buhari2000@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி