எழுதப்படாத கவிதை

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

லறீனா அப்துல் ஹக் (இலங்கை)


‘என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஆனால், ஏதேதோ எழுத வேண்டுமென்று உள்ளம் விழைகின்றது. வார்த்தைகள்… வெற்று வார்த்தைகள்… இவற்றினால் என்ன செய்துவிட முடியும்? ஆழ்ந்த துயரால் மனக்கிண்ணம் நிரம்பி வழிகின்ற பொழுதுகளில் அவை வார்த்தையின் வடிவெடுத்துத்தான் வழிந்தோடுகின்றனவோ? இருக்கலாம். ஈரப்பசை வரண்டு போய்விட்ட பாலை நிலத்தில் வெறுமனே நின்றிருக்கும் ஒரு பட்ட மரத்தின் உயிர்ப்பு பற்றிய கனவுகள் எவ்வளவு அபத்தமானவை என்று எண்ணும் போது சிரிப்பு வருகிறது.

ஏன் இதையெல்லாம் எழுதுகின்றேன் என்பது புரியவில்லை. உள்ளுக்குள் இருந்துகொண்டு ‘எழுது…எழுது’ என்று என் பிடறியைப் பிடித்து உந்துவது எதுவென்று தெரியவில்லை. கால் போன போக்கில் நடந்து… என்ற சொற்றொடர் போல… இது மனம் போன போக்கில் நினைப்பதை…கைபோன போக்கில் எழுதுவதாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகின்றது.

நூற்றாண்டு காலங்கள்… யுகங்கள் பல… வாழ்ந்து தொலைத்து விட்டதான அலுப்பு மேலிடுகின்றது. அற்புதமானது வாழ்க்கை. அப்படித்தான் பலர் சொல்கிறார்கள். அந்த ரசானுபவத்தைத் தொலைத்தது நமதே கைகள் தானே என்று எண்ணுகையில் விதிமேல் பழிபோட மனம் துணியவில்லை. தங்கள் கைகளால் தேடிக்கொண்டவை பற்றி அல்குர்ஆனில் வருமே, அதுபோல!

எல்லாக் கழிவுகளும் வந்தடையும் கடல் போல… எல்லா வகையான வலிகளும் வந்து நிறைந்து நிரம்பி வழிகிறது மனக்கடல். ஒரு வழிப்போக்கனின் வாழ்வுப் பாதையில் பார்வையாளனாய் இருந்து மட்டும் வாழ்வைப் பார்க்கும் திறன் கைவரப் பெறுதல் எவ்வளவு சுகானுபவம்? பற்றற்று வாழ்வைக் கடந்துபோக முடியுமென்றால் என்ற கேள்வி எழுந்தாலும், பட்டுப் போன்ற ஒரு தொட்டால் வாடி மனசை வைத்துக் கொண்டு அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்று அறிவு கேள்வி எழுப்புகிறது.

இந்தளவு படித்ததும், நிறையச் சிந்தித்து இது இன்னதுதான் என்று விளங்கும் திறனை வளர்த்துக் கொண்டதும் தான் பிழையாகிப் போய்விட்டதா? ஒரு பத்தாம் பசலியாய்…ஒரு பொத்தாம் பொதுவான வாழ்க்கையைத் தெரிவு செய்திருந்தால், இந்தளவு வலித்திருக்காதோ? இது போன்று அடிக்கடி பலநூறு கேள்விகளால் அலையடிக்கும் கடலாய் மனசு….

இன்னும் நிறைய எழுத வேண்டும் போலத்தான் இருக்கிறது. ஆனால்… வார்த்தைகள் விலாசமற்றுப் போய் எங்கோ ஒர் இருட் குகைக்குள் பதுங்கிக் கொண்டு வெளிவர மறுப்பதான பிரமையில்… ஆரம்பமும் முடிவும் அற்று வெறுமனே நிறைவுறுகிறது மடல்… ஓர் ஏழைப் பெண்ணின் ‘வாழ்க்கை’ பற்றிய கனவுகளைப் போல…
டயறியை மூடிவைத்துவிட்டு எழுந்தேன். மனசு கலங்கித்தான் போயிற்று. நீண்ட பெருமூச்சு காற்றோடு கலக்கிறது. ச்சே! எவ்வளவு அற்புதமான பெண் அவள்! இந்த சமுதாயம் அவளை என்னபாடு படுத்திவிட்டது. பற்றியெரியும் நெருப்புச் சுவாலையை உள்ளுக்குள்ளேயே பொத்தி வைத்துக்கொண்டும், சிரிக்கச் சிரிக்கப் பேசியபடி வளையவர எப்படி முடிந்தது, அவளால்? எனக்கு வியப்புத் தாள முடியவில்லை.
வெளியே கிளம்பும் போதே என் மனைவி கேட்டாள்.
“என்ன, இன்னைக்கும் கிளம்பியாச்சா? தினந்தோறும் தரிசனம் பண்ணியாகணுமோ?’ அந்த எகத்தாளமான தொனி என் ஆத்திரத்தைக் கிளறுவதாக இருந்தது. எனினும், கோபத்தைக் கடும் பிரயத்தனம் பண்ணி அடக்கிக்கொண்டு கேட்டேன்.
‘சரி, இப்போ உனக்கு என்ன ஆகணும்? அதைச் சொல்லு.’
நான் இன்னைக்கி எங்க உம்மா ஊட்டுக்குப் போகணும்னு நெனைச்சிருந்தேன்…’
‘நீ நெனைக்கிறதையெல்லாம் தெரிஞ்சுகொள்ள எனக்கென்ன வஹி இறங்குதா, இல்லாட்டி நான் சாத்திரம் பாக்குறேனா? சொன்னால் தானே தெரியும்! சரி, சீக்கிரமாப் போய் ரெடியாகிட்டு வா. உன்னை அங்க கொண்டுபோய் விட்டுட்டு, நான் என் பயணத்தைப் போறேன்.’
தன் உம்மா வீட்டுக்குப் போற குஷியில் அதற்கு மேல் என் மனைவி எதுவும் தொணதொணக்காமல் விட்டது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
வழிநெடுக அவள் ஏதேதோவெல்லாம் வளவளத்துக்கொண்டே வந்தாள். நான் வெறுமனே தலையை ஆட்டி ஆட்டிக் கேட்பதைப் போல பாவனை காட்டிக்கொண்டே வந்தேன்.
என் சிந்தனை பழைய நினைவுகளை நோக்கிச் சிறகடித்துப் பறந்தது. ‘இப்படி அலுக்காமல் சலிக்காமல் சளசளவென்று எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறாயே! எழுதத் தொடங்கினாலும் பந்தி பந்தியாய் எழுதித் தள்ளுகிறாயே! எப்படி சாத்தியப்படுகிறது?’ ஒருதரம் வாய் தவறி விளையாட்டாகக் கேட்டு விட்டதற்காய் ‘அவள்’ எப்படி நொந்து போனாள் என்பது என் நினைவுக்கு வந்தது. அடுத்தமுறை ‘அவள்’ எனக்கு அனுப்பிவைத்த மெயிலின் ஒவ்வொரு வரியும் கல்லில் வடித்த சாசனம் போல் இன்னும் பசுமையாக…

‘எவ்வளவுதான் பேசினாலும் அலுப்பதே இல்லையா? பந்தி பந்தியாய் இப்படி எழுதித் தள்ளுகிறாயே!’ என்று கேட்கிறாய், நீ.

செவிமடுக்கப்படாத வார்த்தைகளின் வலி தெரியுமா உனக்கு? கேட்கப்படாமல் அல்லது வெளியே பிரஸ்தாபிக்கப்படாமல் இருக்கும் வார்த்தைகளின்… எண்ணங்களின் பாரத்தை… என்றேனும் உணர்ந்திருக்கிறாயா?

அறிந்துகொள். பணிகளுக்காக மட்டுமே என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் எங்கோ ஓர் ஓரத்தில் புறந்தள்ளப் பட்டிருக்கும் எங்கள் மனசும்… அதில் ஆழ்ந்து அமிழ்ந்து புதையுண்டு போயிருக்கும் ஆயிரக்கணக்கான… லட்சக்கணக்கான எண்ணங்களும் எந்தப் பெறுமதியுமே அற்றனவாய்…

ஆனால்… வானமும் நட்சத்திரங்களும் நிலவும் சூரியனும் மலையும் கடலும் நிலைத்திருக்கும் வரையில் என்றோ ஒரு நாள் அந்த வார்த்தைகளின் வலியையும் துயரத்தையும்…அதன் தாக்கத்தையும் பயங்கரத்தையும் இந்த உலகம் உணரத்தான் போகின்றது என்பதில் நான் இன்னுமே முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்துவிடவில்லை.

நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பது உனக்கு சிலபோது புரியலாம். புரிய முடியாத வெறும் பிதற்றலாகத் தோன்றலாம். அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை.இந்த நிமிஷத்தில் எழுதப்படும் இந்த வரிகள் பதிவு செய்யப்படுகின்றன. நாளைய தினம் அவை மறுவாசிப்புக்கு உட்படலாம். அல்லது காலங் காலமாகப் புறந்தள்ளப்பட்டுப் போயிருக்கும் பெண்களின் குரலாய் அவையும் கண்டுகொள்ளப்படாது போகலாம். என்றாலும், என்னுடைய ஆத்ம திருப்திக்காக நான் எழுதுவேன்… எழுதிக்கொண்டே இருப்பேன், இன்ஷா அல்லாஹ்! நீ முடிந்தால் வாசி இல்லையேல் ஓர் இருட்டு மூலைக்குள் அவற்றை வீசு. எனக்குக் கவலையில்லை.

உலகமே ஆழ்ந்து துயிலும் நள்ளிரவில்… இரவின் மௌனத்தை செவிமடுத்திருக்கிறாயா? நான் செவிமடுத்திருக்கிறேன். நட்சத்திரங்கள் தங்களுக்குள் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டு இருக்கும் இரவுகளில்… காற்றின் ஓலத்திற்குள் புதைந்திருக்கும் பெருந்துயரை உணர்ந்திருக்கிறாயா? காலந்தோறும் நியாயமே அற்ற முறையில் பல்வேறு தளைகளால் பிணிக்கப் பட்டிருக்கும்… மௌனமாக விசும்பிக் கொண்டிருக்கும்… பெண்களின் பெருமூச்சுக்களை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது, காற்று. கடலின் பேரிரைச்சலை உள்வாங்கிக் கொண்டு வான்வெளியெங்கும் சுற்றிச் சுழலும் அந்தக் காற்றின் ஓலத்தை இரவின் தனிமையில் நீ செவிமடுத்திருந்தால்… பெண்களின் கண்ணீரும் வலியும்… அவர்களின் அடக்கிவைத்த துயரமும் விசும்பலும் உனக்குக் கேட்டிருக்கும், எனக்குக் கேட்டதைப் போல!

இருள் நிறத்தில் முகம் காட்டும் எங்களின் எதிர்காலம் பற்றிய ஆயிரமாயிரம் கனவுகள் மேகமூட்டமாய் கலைந்து போகலாம்… மழையெனப் பொழிந்து இந்த உலகை வளம்படுத்தலாம். சுற்றியிருக்கும் வேலிகள், தடைகளைத் தாண்டி… தமது கால்களால் எங்களை மிதித்து நசுக்கி சேற்றுக்குள் ஆழப்புதையச் செய்துவிட முயலும் ஆண்களின் வலிமையை மீறிக் கிளர்ந்தெழுந்து ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் நமது பிரயத்தனம் வெற்றியடையலாம்… சிலவேளை தோற்றும் போகலாம்… காலம் அதைச் சொல்லும்.

எங்கள் வார்த்தைகளைப் பொறுமையாகச் செவிமடுப்பதே இத்தனை சுமையாகத் தோன்றுமென்றால்… அந்த வார்த்தைகளுக்குள் பொதிந்திருக்கும் வலிகளையும் கண்ணீரையும் காலங்காலமாகச் சுமந்துகொண்டிருக்கும் எங்களுக்கு எத்தனை ஆழ்ந்த சுமை உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்த்தால்… முடியுமா, உன்னால்?

“என்ன பேயடிச்சமாதிரி உட்கார்ந்திட்டிருக்கிறீங்க? இறங்குங்க! உம்மா ஊட்டுக்கு வந்தாச்சு”.

‘சரி, நீ போ’
‘இது நல்லாவா இருக்கு? வாசல் வரைக்கும் வந்துட்டு நீங்க திரும்பிப் போனா அவங்க என்ன நெனப்பாங்க? எனக்கும் மரியாதையா இருக்காது.’
‘சரி சரி சும்மா பொலம்பாதே. ஏம்பா, ஆட்டோ! ஒரு… அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு. இதோ வந்துர்றேன்.’
மாமி வீட்டுக்குப் போய் ஒப்புக்குத் தலையைக்காட்டி நாலு வார்த்தை நின்ற படியே பேசிவிட்டு, அவர்களின் பிடிவாதத்துக்காய் ஒரு கப் தண்ணீர் அருந்திவிட்டுக் கிளம்பி விட்டேன். ஆட்டோவில் ஏறியபடி கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். பரவாயில்லை இன்னும் கொஞ்சநேரம் இருக்கிறது.
கமருன்னிஸா- ‘நிலாப்பெண்’. அதுதான் அவள் பெயர். எவ்வளவு அழகான பெயர்!
எவ்வளவு உணர்ச்சிமயமானவள்! சமூக முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம் என்றெல்லாம் எத்தனையெத்தனை பணிகளில் இடையறாது ஈடுபட்டாள்! பிறக்கும்போதே அனாதையாக்கப்பட்ட அவளுடைய உணர்வுகளை அவளைச் சுற்றியிருந்த யாருமே சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். ஏன், நான்கூட. சொந்த மச்சான் என்பதை விட ஒரு நல்ல நண்பனாய் இருந்தும்கூட என்னால் அவளுடைய ஆழ்ந்த துயரங்களுக்கு உரிய ஆறுதலளிக்க முடியாமல் போய்விட்டதே என்பதை நினைக்கையில் குற்ற உணர்வால் அடிக்கடி கூனிக் குறுகிப் போகின்றேன். என் விருப்பத்துக்கு மாறாக, என் குடும்பத்தவர்களின் விருப்பத்துக்கும் பிடிவாதத்துக்கும் முன்னால் தளர்ந்துபோக நேர்ந்த என் இயலாமையை கோழைத்தனம் என்பதா, கையாலாகாததனம் என்பதா? இரண்டும்தான். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. அவளுக்காக நான் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவளுடைய வார்த்தைகளையெல்லாம் மௌனமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்தேன். சில வேளைகளில் ஒற்றை வார்த்தையில் பதிலளித்திருப்பேன். அதற்குக்கூட அவள் எந்தளவு நெகிழ்ந்து போயிருக்கிறாள் என்பதை எண்ணும்போது… இப்போதும் என் கண்கள் பனிக்கின்றன.
அவள் கறுப்பாகப் பிறந்ததற்காய், குடும்பத்தின் வறுமை நிலைக்காய், பெற்றோரின் அரவணைப்பை இழந்ததற்காய் என்று எதெதற்கெல்லாமோ எத்தனை எத்தனைக் கடுஞ் சொற்களை, ஏளனங்களை, புறக்கணிப்புக்களை, பாரபட்சங்களை எதிர்கொண்டிருப்பாள்! அறிவுக் கூர்மையோடு எதிர்க்கேள்வி கேட்ட போதெல்லாம் எத்தனை குட்டும் அடியும் உதையும் வாங்கியிருப்பாள்! பள்ளிக்கூடம் அவளின் திறமைகளை வளர்த்தெடுத்த பூஞ்சோலையாகவும் ஒருசில கர்வமும் பொறாமையும் கொண்ட ஆசிரியர்களால் பாலைவனமாகவும் ஒருசேர உருக்கொண்டதாய் அடிக்கடி சொல்லிச் சிரித்திருக்கிறாள்.
ஒருமுறை நான் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவள் எழுதியனுப்பியது என் நினைவுக்கு வருகிறது.

‘யுகங்களாய் நிரப்பப்படாமல் …தாகித்தபடி… வெறிதே கிடந்தது, மனக்கிண்ணம். நரம்பும் வரம்பும் அற்ற நெருப்பு நாக்குகளால் ஆங்காங்கே சிதிலமடைந்துபோய்…

ஒரு புன்னகைக்கு…ஓர் இதமான நல்ல வார்த்தைக்கு என்ன விலை? இந்தக் கேள்விக்குப் பலரிடம் சரியான விடையில்லை.

சுற்றியிருக்கும் மனித ‘உயிரி’களை வெற்று ஜடங்களாகக் கருதாமல், மானுடமாகப் பார்க்கும் பார்வை விசாலம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? விலைமதிப்பற்ற இந்த வாழ்க்கையை அற்புதமானதாக்கவும்… அந்த அற்புதத்தின் ரசானுபவத்தை நம்மைச் சூழவும் உள்ள அனைவருக்கும் பகிரவுமாய் வகுத்துக் கொள்வதில் எவ்வளவு கஞ்சத்தனம், இந்த மனிதர்களுக்கு!

காயப்படுத்துவதற்கான கூராயுதமாய் பலருக்கும் பயன்படும் வார்த்தைகள், உள்ளங்களை ஒரு நந்தவனமாக்கும் மணமுள்ள மலர்களாய்ப் பூக்குமானால்… வாழ்வின் இயல்பான துயரங்களால் நொந்து வாடியிருக்கும் உள்ளங்களுக்கு இதந் தரும் தென்றலாய் வருடிக் கொடுக்க அவற்றினால் முடியுமானால்… அட! வாழ்தலுக்கான, வார்த்தைகளுக்கான புதிய பரிணாமமே அங்கே தோன்றிவிடாதோ!

ஆனால்… பெரும்பாலானவர்கள் இதை உணர்ந்து துய்க்காமல்… சுற்றியிருப்பவர்களுக்கும் துய்க்கவிடாமல் வாழ்க்கையை வெறுமனே நெட்டித்தள்ளி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

நீ என்ன நினைக்கிறாய்?’

நான் அவளைவிட மூன்று வயது மூத்தவனாக இருந்தாலும் அவள் என்னை ‘நீ, வா, போ’ என்றுதான் அழைப்பது வழக்கம். அதற்காக எங்கள் வீட்டில் பல தடவை திட்டு வாங்கியுமிருக்கிறாள். அவளை மணக்க விடாமல் மறுத்ததற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக என் உம்மா அதையும் முன்வைத்திருந்ததை நினைக்க, சிரிப்புத்தான் வருகிறது, எனக்கு.
ஆட்டோ திடீரென்று நின்றுவிட்டது. வீதியில் ஏதோ கூட்டம். என்ன என்று ஆட்டோக்காரன் யாரையோ விசாரித்ததில் ஏதோ வீதிமறியல் போராட்டம் என்று சொன்னார்கள். எனக்கு வெறுத்துப்போய்விட்டது. ஏற்கெனவே மற்றப் பாதையை திருத்தவேலைகளுக்காக என்று அடைத்திருந்தார்கள். இந்தப் பாதையிலும் இப்படியென்றால்… ஐயோ என்றிருந்தது, எனக்கு. இப்போது உடனே திரும்பி மாமி வீட்டுக்குப் போனால் வெற்றிச் சிரிப்போடு எதையோ சாதித்துக் கிழித்ததுபோல என் மனைவி ஒரு பார்வை பார்ப்பாள் என்பது எனக்குத் தெரியும். எனவே, ஆட்டோவைத் திருப்பச் சொல்லி நேரே ‘அவளின்’ வீட்டுக்குப் போகச் சொன்னேன்.
சின்ன மாமி, அதாவது கமருன்னிஸாவின் சாச்சி என்னை முகம் மலர்ந்து வரவேற்றார்.
‘என்னடாப்பா! உன்னை இந்தப் பக்கம் காணுறதே அபூர்வமாயிருக்கு?’ என்று உரிமையோடு கடிந்துகொண்டார்.
எந்தப் பதிலும் கூறாமல் வெறுமனே ஒரு புன்னகையோடு சமாளித்துக் கொண்டேன்.
‘நிஸாட மாப்புள்ள ரெண்டாம் கலியாணம் முடிச்சிட்டாரு தெரியுமா? அவருக்கென்ன! மனுஷனுக்கு அவளைப் பத்தி எந்தக் கவலையுமே இல்ல. போதாததுக்கு அந்த மனுஷி அன்னைக்கி ராஃபிட கலியாண ஊட்டுல வெச்சி, நாங்க ஏதோ நோய்க்கார புள்ளைய அவங்கட மகன்ட தலையில கட்டிட்டோம் எண்டு சொல்லி ஒரு ஆட்டம் ஆடிமுடிச்சிட்டா. ஏண்டா அந்தக் கலியாணத்துக்குப் போனோம் எண்டு இருந்திச்சி. அதுதான் தலாக் சொல்லி, அந்த மனுஷன் இன்னொரு பதினெட்டு வயசுக் குட்டிய கலியாணம் கட்டியுமாச்சே! இன்னும் எதுக்கு பழைய கதையெல்லாம் பேசணும்? சரியான….’
‘அவங்கட கதைய பேசாம உட்டுப் போடுங்க மாமி. அது எப்பவோ தெரிஞ்ச கதை தானே! இன்னும் பேசப்பேச கவலையும் மனக்கஷ்டமும்தான் மிஞ்சும்’ என்றவாறு அவருடைய பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்றேன்.
‘எப்படி இருந்த புள்ள! இப்படி…’ அவர் சேலை முந்தானையால் கண்களைத் துடைத்தபடி குசினிப் பக்கமாய்ப் போனார்.
இப்போது கண்ணைக் கசக்குவதை விடுத்து அப்போதே அவளைக் கொஞ்சம் இதமாய் நடத்தியிருந்தால்… இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்ற கேள்வி எனக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எப்போதுமே ‘இஸ்லாம், இஸ்லாமியப் பணி, சமூகச் சீர்திருத்தம், இலட்சிய வாழ்வு’ பற்றியெல்லாம் பேசும் ஒருவர் அவளைக் கரம்பற்ற முன்வந்தபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவேளை அவளுக்கு மானசீகமாகத் துரோகம் செய்துவிட்டதான குற்ற உணர்விலிருந்து தப்பியோடும் சுயநலமும் அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் ஒளிந்திருந்ததோ என்னவோ!
ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மகிழ்ச்சியின் இடத்துக்குப் பதிலாக வாழ்க்கை முழுவதும் துரத்தி வரக்கூடிய பெருந்துன்பம் என்னைப் பீடித்துக்கொண்டு விட்டதைப் பின்னர் உணர்ந்து கொண்டேன். காரணம், அவர்களின் திருமணத்தை அவளின் கணவர் சார்ந்த அமைப்பு தனது பிரபலத்துக்குக்குரிய ஓர் அம்சமாகப் பயன்படுத்திக் கொண்டது. ‘இவர் யார் தெரியுமா? எங்கள் அமைப்பின் பொருளாளர். இந்த அனாதைப் பெண்ணுக்கு வாழ்வளித்த தியாகச் செம்மல். அவரை அப்படி வளர்த்திருக்கிறது நமது அமைப்பு.’ என்ற ரீதியிலான அறிவிப்புகளும் கூற்றுகளும் வாழ்வு முழுதும் ரணகளமாகியிருந்த அவள் மனதை மேன்மேலும் குத்திக் கிழித்தன. கூனிக்குறுக வைத்தன. வெளிச்சத்தைக் கண்டு அஞ்சியொளியும் இருள்போல ஆகிவிட்டாள்.
அவளுடைய கணவன் இரவு – பகல் பாராமல் தன்னுடைய சமூகப் பணிகளில் மூழ்கிப் போனார். வீட்டில் ஒருத்தி அவருக்காக ஏக்கங்களையும் தவிப்புக்களையும் சுமந்த இதயத்தோடு காத்துக்கொண்டிருப்பது அவருக்கு நினைவிருப்பதாகவே தெரியவில்லை. எல்லோரும் சுற்றியிருந்தும் தனிமையில் தவித்தபடி… தனக்கென்று என்றோ ஒருவன் வருவான்… நிரப்பப்படாத வெற்றுப்பக்கங்கள் நிறைந்த தன் வாழ்வுப் புத்தகத்தை தனது கனிவாலும் காதலாலும் நிரப்புவான்; செவிமடுக்கப்படாத வார்த்தைகளையெல்லாம்… எண்ணங்களையெல்லாம் செவிதாழ்த்திக் கேட்பான் என்றெல்லாம் நீண்ட கனவுகளோடு காத்திருந்த அவளுக்கு வாழ்வே ஒரு சிலுவையாய்… தாள முடியாத சுமையாய் மாறிப் போனதை அவளது டயறியின் கண்ணீர்ப் பக்கங்கள் சொல்லிநின்றன.
ஒருநாள் அவள் வீட்டுக்கு நான் சென்றிருந்தபோது ரொம்ப நேரம் யோசித்து யோசித்து ஏதோ எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது. எனக்குள் அவள் என்னதான் எழுதுகிறாள் என்று அறியும் குறுகுறுப்பு. ஏதாவது கவிதையாக இருக்குமோ என்று அதைப் பார்க்கும் ஆவல் என்னை உந்தித் தள்ளியது. பார்த்துவிட்டு ஏதாவது குறைகண்டு பிடித்து அவளை வம்புக்கிழுப்பது என் திட்டம். அவள் கணவன் லைனில் இருப்பதாகப் பக்கத்து வீட்டு ஃபர்வீன் வந்து கூப்பிட, அவள் ஓட்டமும் நடையுமாய் அவசர அவசரமாக வெளியேறிப் போன தருணத்தைப் பயன்படுத்தி, மேசையில் திறந்தபடியே கிடந்த அந்தப் பக்கத்தை எட்டிப் பார்த்தேன். திருடனுக்குத் தேள் கொட்டியது போல இருந்தது, எனக்கு. அதைப் பார்க்காமல் இருந்திருக்க வேண்டுமே என்று மனசுகிடந்து அடித்துக்கொண்டது.

“உனக்கான என் வார்த்தைகளை இப்போதெல்லாம் மௌனம் மட்டுமே செவிமடுத்துக் கொண்டிருக்கிறது; வான்வெளியில் கண்சிமிட்டிக் கதைபேசும் நட்சத்திரங்களின் மொழியை கிளைகளில் இழைந்துள்ள இலைகளும் தளிர்களும் செவிமடுத்துக் கொண்டிருப்பது போல! காடு கரைகளிலெல்லாம் கண்டுகொள்ளப்படாதிருக்கும் பூக்களின் மொழியைத் தென்றல் செவிமடுத்துக் கொண்டிருந்தது போல!

நான் எனது வார்த்தைகளை உனக்காகவே தேர்ந்து எடுத்தேன். காதலெனும் வர்ணம் வருடி… உணர்வுகளைக் கொட்டிவைத்து… அதனை மேன்மேலும் மிருதுவாய்… மிக மென்மையாய் மெருகேற்றி வைத்தேன். ஆனால்… அவை, இப்போதெல்லாம் மௌனப் பெருவெளியில் கரைந்துகொண்டிருக்கின்றன.

நான் மனம்விட்டு ஏதாவது பேச முனையும் போதெல்லாம்… வெறும் வார்த்தைகளைப் பேசிப்பேசி என்னதான் செய்வது என்று நீ மிகவும் சலித்துக் கொள்கின்றாய். ஆனால், வார்த்தைகள் வலிமையானவை. உனக்குத் தெரியுமா? ஆண்டாண்டு காலம் செவிமடுக்கப்படாமல் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை… சின்னச் சிட்டுக்குருவி கூடுகட்ட வைக்கோலையும் சிறு சுள்ளிகளையும் தன் சின்னஞ்சிறிய அலகினால் சேர்த்துச் சேர்த்துச் சேமிப்பது போல நானும் சேமித்து வைத்திருக்கிறேன். நீ என் வாழ்வில் பிரவேசித்தபின் அவற்றையெல்லாம் செவிமடுப்பாய் என்று என் வார்த்தைகளை நெஞ்சுக்குள் பொத்திவைத்துப் பத்திரப்படுத்தியிருந்தேன். என் வாழ்வுப் புத்தகத்தின் நிரப்பப்படாத இடைவெளிகள் உன் பரிவான, பொறுமையான செவிமடுத்தலால் சீர்செய்யப்படும் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன். அலையென எழுவாய்…மழையெனப் பொழிவாய் என் மனத்தரிசு பூவாய்த் துளிர்க்கும் என்றெல்லாம் எத்தனை எத்தனை கனவுகளை என் விழிகளுக்குள் தேக்கிவைத்திருந்தேன் என்பது உனக்குத் தெரியுமா?

உன்வேலைப் பளுவுக்குள்… களைத்துறங்கும் கணங்களுக்குள் அந்தக் கனவுகள் யாவும் கரைந்துதான் போயின. இப்போது மீண்டும் என் வார்த்தைகள் மௌனப் பேரலையால் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உனக்குப் புரியத்தானில்லை. புரிந்துகொள்ளும் அந்த நாள் இனி ஒருபோதும் வராமலும் போகலாம். பரவாயில்லை….”

‘எப்போதிருந்து இந்தத் திருட்டுத்தனமெல்லாம்?’ என்ற கேள்வி என் முதுகுக்குப் பின்னால் ஒலிக்கவே, திடுக்கிட்டுத் திரும்பினேன்.
அவள் நின்றிருந்தாள். முகத்தில் நிழலாடியது கோபமா, எரிச்சலா என்று மட்டிட முடியாத ஒருவித வெறுமையில் இருந்தது அவள் முகம்.
‘அது…வந்து… சும்மா…கவிதை ஏதாச்சும்னு பார்க்க… அதுசரி, நீ ரொம்ப சந்தோஷமா இருப்பதா ஏன் பொய் சொன்னே?’ என் குரலில் தொனித்த கோபம் அவளைப் பாதிக்கவில்லை. இறுகிப் போன குரலில் திருப்பிக் கேட்டாள்.
‘தெரிஞ்சு என்ன பண்ணப்போறாய்?’
நான் ஒருகணம் விக்கித்துப்போனேன். ஆனாலும் அடுத்த கணம் சூடாகவே சொன்னேன்.
‘எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு என்கிட்ட வந்துடு. நான் ஏத்துக்கிறேன். இஸ்லாத்தில் இன்னொரு கலியாணம் கட்டுறதொண்ணும் ஹராமில்லையே! இந்தச் சமூகத்தைப் பற்றியெல்லாம் சும்மா கவலைப்படாதே! அது எப்படி வேண்டுமானாலும் பேசிட்டுப் போகட்டும்! நீ இந்தக் கட்டுக்களையெல்லாம் உடைச்செறி. நான் ஏற்கெனவே ஒருதரம் உன்னை மிஸ் பண்ணிட்டேன். இப்பவாவது…’
அவள் என்னை வினோதமாகப் பார்ப்பது புரிந்தது. அப்போதில்லாத துணிச்சல் காலங்கடந்து இப்போது வந்திருப்பதை நினைத்துத்தான் அவள் அப்படிப் பார்த்திருப்பாளோ!
என்னுடைய ஏ. எல். காலத்தில் தான் அவள் எங்கள் ஸ்கூலில் சேர்ந்தாள். முதல் தடவையில் பல்கலைக்கழக அனுமதிக்கான போதிய வெட்டுப்புள்ளி இல்லாததால் நான் இரண்டாம் தடவையாகப் பரீட்சை எழுதும் உத்தேசத்தில் இருந்தேன். அதன் பின்தான் எங்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் அதிகரித்து அவரவர் விருப்பம், ரசனை, கனவு என்பன பற்றியெல்லாம் பரஸ்பரம் சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது. இரண்டு மணிநேர பஸ் பயணம் அதற்குப் பெரிதும் வழிவகுத்தது. நூற்றுக்குத் 99 சதவீதமான விடயங்கள் மிகவும் ஒத்திருந்ததை எண்ணியெண்ணி வியந்திருக்கிறோம். இருந்தும் கலியாணப் பேச்சு வந்து, நான் கோழையாகிப் போனபோது அவள் எந்தளவு நொறுங்கிப் போயிருப்பாள் என்பதை நானும் உணர்ந்துதான் இருந்தேன். அந்த வலி இப்போது அந்தக் கண்களில் மறுபடியும் பிரதிபலிப்பதாக ஒரு பிரமை எனக்குள் எழுந்தது.

‘என்ன மகன் கடும் யோசின?’ சின்ன மாமியின் குரல் கேட்டுத் திடுக்கிட்டாலும் என்னைச் சுதாகரித்துக் கொண்டேன். அவர் டீக் கப்பை நீட்டினார். அதை அருந்திவிட்டு நேரே ‘அவள்’ இருந்த அறைக்குள் நுழைகின்றேன். முதலில் என் கண்களில் அவளுடைய புத்தக அலுமாரிதான் பட்டது. அதையடுத்து அவளுடைய ஷோகேஸ் கப்போர்ட் இருந்தது. அதற்குள் கதை, கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், சித்திரம், பாட்டு, விளையாட்டு என்று ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் அவள் அடுக்கிக் குவித்திருந்த சான்றிதழ்களும் தங்கப் பதக்கங்களும் கேடயங்களும் கண்களையும் மனசையும் பற்றி ஈர்த்தன.
சுவரோரமாய் இருந்த மேசைமேல் இருந்த ஃபோட்டோ ஆல்பத்தை விரல்கள் தம்மையறியாமலேயே புரட்டலாயின. ஆல்பம் முழுக்க அவளுடைய சாதனைகளை, திறமைக்குக் கிடைத்த அங்கீகாரங்களை, பாராட்டுதல்களை, கௌரவிப்புக்களைச் சொல்லாமல் சொல்லிநின்றது. என் தொண்டைக்குள் கனதியான ஏதோ ஒன்றுவந்து அடைத்துக் கொள்வதான ஒருவகைத் தவிப்பு. மனசு முழுக்க அமிலத்தைக் கொட்டியது போன்ற ஒருவகை எரிவு. சொல்லத்தெரியாத ஒரு வலி. காதுக்கருகில் உடைந்துபோன அவள் குரல் ஒலிப்பதான பிரமையில் முதுகுத்தண்டு அப்படியே ஜில்லிட்டுப் போய்விட்டது.

“என்ன சொல்லிவிட்டாய், நீ? புரிந்துதானா… அல்லது என்ன சொல்கிறோம் என்று புரியாமலேயா?

உன் பாராட்டுகளால்தான் இந்த மனசு இப்படி பஸ்மமாய்ப் போயிற்று என்கிறாயா, நீ? அப்படியென்றால், இதுவரை காலமும் அடுக்கிக் குவித்திருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் விருதுகளும் பொன்னாடைகளும் இதுவரை அப்படி என்னதான் செய்துவிட்டன, என்னை? எதுவுமே இல்லை!

வசந்தம் இனி வரவே வராது என்று கனவுவெளிக்குள் மட்டுமே சிறகடித்துப் பறந்த குயில், பருவம் தப்பி எக்குத்தப்பாய் எதிர்கொண்ட வசந்தத்தை நுகரமுடியாமல் வரையறுக்கப்பட்ட வான்வெளிப் பரப்பில் விலங்குபூட்டிய சிறகுகளுடன் வலம் வரும் அவஸ்தையின் கனதி புரியுமா, உனக்கு?

சில வார்த்தைகளுக்குள் தொலைந்து போகுமளவு, என்னைத் தொலைத்து விடுமளவு வீதியில் வீசுண்டு கிடக்கும் மலிவான கூழாங்கல்லா, என் மனசு? நான் அப்படி நினைக்கவில்லை.

கனவு மெய்ப்பட வேண்டும் என்ற பாரதி கவிதையைப் படித்தபோது, சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை, என்னுடைய கனவும் அப்படியே உணர்வோடும் உயிரோடும் சதையோடும் நரம்போடும் எழுந்துவந்து என் கண்முன்னே நிற்குமென்று. ரசித்து ரசித்து…அனுபவித்து அனுபவித்துப் படித்திருக்கிறேன் அந்தக் கவிதையை. என்ன நடந்தது, என்ன பிரச்சினை என்று கேட்கிறாய், நீ? என்ன சொல்லட்டும், நான்? தாங்கிக் கொள்ளவே முடியாத கொடூரமான நிமிஷங்களை… மணித்துளிகளை… இரவுகளை… பகல்களை… யுகங்களாய் நகர்த்திக் கொண்டிருக்கிறேன், என்றா? வற்றாத அருவியாய்… காட்டாற்று வெள்ளமாய்… விழிகள் உருமாறி விட்டதையா? ஆழிப் பேரலையாய் மனம் குமுறிக் குமுறிக் கொந்தளிப்பதையா? எதைச் சொல்ல? எதை விட?

‘காணி நிலம் வேண்டும் பராசக்தி…காணி நிலம் வேண்டும்’ கவிதையைப் படித்திருக்கிறாயா? படித்துப்பார். உன் ‘மோகினித் தீவை’ தூக்கிச் சாப்பிட்டுவிடும், அது. வைரமுத்துவின் ‘யாருமில்லாத தீவொன்று வேண்டும்’ முழுக்க முழுக்க அந்தக் கவிதையின் மறுஉற்பத்திதானே (Re-production) தவிர வேறில்லை.

உருவமும் உணர்வும் ரசனையும் கனவிலிருந்து மெய்ப்பட்டு நிற்பதை உணர்ந்ததிலிருந்து… கண்ணாடியில் தன்னையே ஒருதரம் பார்த்துக் கொள்வது போல்… ஒவ்வொரு சொல்லும் அசைவும் நினைவும் இரண்டறக்கலந்து போய்…. எதிர்வந்தும் ஏறிட்டுப் பார்க்க விழியும் அதில் ஒளியும் அதனாலேயே வழியும் அற்றுப்போன… கண்ணிழந்தபின் பெற்றும் பெறுதல் சாத்தியமற்றுப்போய்… ஓ! அந்தக் கொடும் சித்திரவதையை எவ்வளவு இலகுவாக… வெறுமனே சில வார்த்தை வருடல்களுக்குள் அடையாளம் தொலைத்துநிற்பது போல… சொல்லிவிட்டாயே, நீ? எனக்கு எந்தளவு வலித்திருக்கும்? உணர முடிகிறதா, உன்னால்? நீ உணர் அல்லது உணர்ந்தும் உணராதது போல் பாவனை காட்டிக் கொண்டிரு. எனக்கு அக்கறையில்லை.

கட்டுடைப்பு பற்றிப் பேசுகிறாய், நீ. எங்களூரில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘விற்ற மாட்டுக்கு விலையில்லை’ என்று. அதுபோல… இல்லாவிட்டால், சிந்திவிட்ட பால்போல… எந்தப் பெறுமதியுமே அற்றுப் போய்… சிதறிப்போய்… சிதைந்துபோய்க் கிடக்கிறது ஒரு வாழ்க்கை. சீராக்க முடியாதது, எதுவுமே இல்லை என்று தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறாய், நீ. நீ எப்போதும் போல் அப்படியே பேசிக்கொண்டிரு. நானும் ‘காற்றாய்ப் பறத்தலெண்ணி கனவுகள் வளர்த்திருந்தேன்… சேற்றில் மலர்ந்துவிட்டு, சே! இது வெறுங்கனவு’ என்று எழுதிக்கொண்டே இருக்கின்றேன்.

சுட்டு விடும் என்று தெரிந்தும் சுடரைத் தொட்டுவிட அடம்பிடித்தழும் குழந்தையாய் கரையுடைத்துப் பாயத் துடிக்கும் மனசுக்கு என்ன கடிவாளம் இடட்டும், நான்?

தொலைந்து போகின்றேன், நான். எங்கோ ஒரு மூலைக்குள் முடங்கிப் போகின்றேன், நான்… ”

திடீரென்று மூச்சு முட்டுவது போலிருந்தது, எனக்கு. சடாரென்று ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கிறேன். வீட்டுக்குப் பக்கவாட்டில் அவள் ஆசையோடு வளர்த்த ரோஜாச் செடிகள்… பல்வேறு வண்ணங்களில்… காற்றில் தலையைச் சிலுப்பிச் சிலிர்த்தபடி… ‘எனக்கு ரோஜாப் பூ என்றால் ரொம்பப் பிடிக்கும். ஏனென்று சொல்லு பார்க்கலாம்!’ என்று குழந்தைத்தனமாய்க் கேட்டாள், அவள். ‘உலகிலேயே ரொம்ப ஆடம்பரமான பூ அதுதானாமே! அதனாலாக இருக்கும்.’ நான் அவளை வேண்டுமென்றே சீண்டினேன். அவள் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தன்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டு போனாள்… ‘ஏன் தெரியுமா? ரோஜாப் பூ முட்களுக்கு மத்தியில் தான் பூக்கிறது. அந்த முட்கள்தான் அதற்குத் துணையாகவும் துயராகவும் கூடவே இருக்கிறது. அதனால்தான் அந்த ரோஜாப் பூமேல் எனக்கு ரொம்பப் பாசம்…பரிவு…பச்சாதாபம் எல்லாமே!’ அவள் கண்கள் ஏதோ ஒரு கனவுலகில் மிதப்பதாய்த் எனக்குள் தோன்றிற்று.
சட்டென்று ஏதோ ஓர் உள்ளுணர்வு. மெல்ல அவளின் புத்தக அலுமாரியைத் திறக்கின்றேன். வலது பக்க ஓரத்தில் வரிசையாக அடுக்கப்பட்ட அவளுடைய மூன்று டயறிகள் இருந்தன. அவற்றுள் கைபோன போக்கில் ஒன்றை எடுத்தேன். எதேச்சையாக விரித்த பக்கத்தில்… என்ன இது… எனக்கு என் கண்களையே நம்ப முடியவில்லை. எனக்கு அந்தச் சம்பவம் கண்முன் வந்துபோனது. ஒருநாள் நான் அவளிடம்,
‘நீ இப்படியே கல்லுமாதிரி இருக்காதே. என்னால் தாங்க முடியாது. இருடி இரு. ஒருநாள் உன் வீட்டுக்கு வந்து, உன் புருஷன் முன்னாடியே உன்னைத் தூக்கிட்டுப் போறேனா இல்லையா பாரு. அடேய், மடையா, நீ இவளை சந்தோஷமாய் வைத்துப் பார்த்துக் கொள்ளப் போறியா, இல்லாட்டி நான் அவளை மறுமணம் செஞ்சிகொள்ளவா எண்டு கேட்கத்தான் போறேன், நீ வேணா பாரு. இது நடக்கத்தான் போகுது ஒருநாள்.’
நான் ஆவேசமாகப் பேசப்பேச பயத்தில் அவள் முகம் வெளுத்துப் போவதைக் கண்டு என்னால் தாங்க முடியவில்லை. மனம் பாகாய்க் கரைந்து போனது.
‘என்னடி, பயந்துட்டியா? நான் அப்படியெல்லாம் அடாவடித்தனம் பண்ணிட மாட்டேன். என்னைக்காவது நீயாக எல்லாத்தையும் விட்டுப் போட்டுட்டு என்னைத் தேடி வந்தால் இந்த ரெண்டு கையாலும் ஒரு பூவை வாரி எடுக்கிறமாதிரி வாரியெடுத்து, உன்னைக் கண்ணுக்குள்ள வைச்சி பார்த்துப்பேன்டி’ என்று மென்மையான குரலில் சொன்னபோதுதான் அவள் தன் இயல்பு நிலைக்கு மீண்டாள்.
தலையைச் சிலுப்பிக் கொண்டு பழைய நினைவுகளை உதறினேன். டயறியின் வாசகங்கள் என் மனசுக்குள் ஊடுருவிச் சென்றன.

“சுடர் தரும் சூரியனாய் பிரகாசிக்க இந்த அமாவாசைக்கு என்ன வீண் கனவு? இடர்தரும் நிதர்சனங்கள் நிழலாய்த் துரத்திவரும்போது, துயர்தரும் கனவுகளோடு போராடிப் போராடி செத்துப்போய்விட்டது மனசு. உயிர்க்கும் எதிர்பார்ப்புகள் இனியில்லைதான்.

ஆனால், ஒரு மெல்லிய குரல் உயிரின் அடிவாரத்திலிருந்து ரகசியமாய் இப்படிச் சொல்கிறது எனக்குள், ‘ ஒரு நாள் மலரும். அன்று நீ, ‘நான் வேடிக்கையாய்… குறும்பாய் சொன்னவற்றை நம்பி எப்படியெல்லாம் மிரண்டு போனாய் நீ?’ என்று கேலிசெய்வாய், என்னை. அந்தக் கணத்தில் நாணிப்போய்… அசடுவழிய தலைகுனிந்து நிற்பேன், நான்… உன் பக்கத்தில்…’

நிலவு பொழியுமோர்
பௌர்ணமி இரவினில்…
காற்றுவெளியிடையில்- நீள்
கடற்கரையோரம்…
அலைகடல் கால்களை
அளைந்தளைந்து ஓட…
கரம் பற்றி…
கானமிசைத்தபடி …
நான் செல்வேன்…

என் கனவில்!

ஆழ்துயர் கரைந்து ஓடும்- மிகு
ஆனந்தம் கரைபுரண்டோடும்!
யுகங்களாய் நீண்ட தவிப்பெலாம்- இருந்த
சுவடின்றித் தொலைந்து போகும்!
காவியக் கதைகளெல்லாம்- ஆங்கே
கைவசப்படும்!

கனவு மெய்ப்படும்!

களிப்பு வசப்படும், வாழ்தல் குதூகலிக்கும்!
தடைகள் தகர்ந்திடும்!

அந்த மோகனப் போழ்தினில்…

காற்றாய் நான் பறப்பேன்…
முகிலாய் மிதப்பேன்…
பனிபோல் கரைவேன்…
மலராய் முகிழ்ப்பேன்…
நிலவாய்ப் பொழிவேன்….

வாழ்வினைத் துய்ப்பேன்…
இன்பத்தில் தோய்வேன்…

என் கனவில்!”
என் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடிற்று. ‘அடிப்பாவி! இத்தனை நேசத்தை மனசுக்குள் பொத்தி வைத்துக்கொண்டா.. நீ?’ அதற்குமேல் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தீர்மானமான ஒரு முடிவோடு அன்று மாலையே மறுபடி போனேன், அவளைப் பார்க்க. வழமையாய் சோகம் கவிந்து… வெறுமை சுமந்து நிற்கும் அந்த மனநல மருத்துவமனையின் கட்டிடங்கள் இன்று புதுப்பொலிவோடு ஜொலிப்பதாய் எனக்குள் ஒரு பிரமை. அவள் இருந்த கட்டிடத்தை நெருங்கும் போதே ஒருவகைப் பதட்டம் தொற்றிக்கொண்டது எனக்கு.
‘ஏன் இங்கு ஒருவகைப் பதட்டம்? ஏன் எல்லோரும் கூடி வெளியே எட்டியெட்டிப் பார்க்கிறார்கள்? நர்சுகளும் மருத்துவமனைப் பணியாளர்களும் ஏனிப்படி அங்குமிங்கும் ஓடுகிறார்கள்!’ எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
என்னுடைய ‘நிலாப்பெண்’ணின் அறை காலியாக இருந்தது. முதலில் ‘திக்’கென்று இருந்தாலும் வழமையான ‘செக்அப்’புக்குக் கொண்டு சென்றிருப்பார்கள் என்ற எண்ணம் நம்பிக்கை தந்தது. பதறிக்கொண்டோடிய ஒரு நர்சைப் பிடிதது நிறுத்திக் கேட்டேன், ‘சிஸ்டர், கமருன்னிஸா?’ அவர் சொன்ன செய்தியைக் கேட்டு எனக்கு இடிவிழுந்தது போலாயிற்று. பைத்தியம் பிடித்தவன் மாதிரி தடதடவென்று மாடிப் படிகளில் இறங்கிக் கீழே ஓடினேன். அங்கே… சீமெந்துத் தரையில் … தலை பிளந்து… இரத்த வெள்ளத்தில் தோய்ந்து… உயிரின்றிக் கிடந்தாள், என் நிலா.
‘மச்சான், என் தலைக்குள்ள எந்த நேரமும் தடதடன்னு ஒரு ரயில் ஓடிட்டே இருக்குடா’

‘நான் ஒரு கவிதை எழுதிவைச்சேன், படிச்சியா மச்சான்? ஐயோ! ஐயோ! நீ சரியான லூசு! நான் அந்தக் கவிதைய இன்னும் எழுதவே இல்ல. அது இன்னமும் என் மனசுக்குள்ளதான் இருக்கு. இனி, நீ எப்படிடா அதைப் படிப்பாய்! சரியான கிறுக்கன்! லூசு!’ வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்தது போல அவள் கலகலத்துச் சிரித்தாள்.
என்னால் தாங்க முடியவில்லை. ‘எல்லாருமாச் சேர்ந்து என் நிலாவைக் கொன்னுட்டீங்களே பாவிகளா!’ என்று வெறிபிடித்தவன் போலக் கத்திக் கதறவேண்டும் போலிருந்தது. என் மனைவியின் தோளைப் பற்றி உலுக்கி, ‘இப்போது உனக்குச் சந்தோஷம் தானேடி?’ என்று கேட்டுக் கத்தவேண்டும் போல் தோன்றியது. ஆனால்… என் நாடி நரம்புகள், தசைகள், உடற்கலங்கள் அனைத்தையுமே யாரோ இறுக்கமாகக் கட்டிப்போட்ட மாதிரி… கொஞ்சமும் அசைக்கமுடியாத மாதிரி… இது என்ன… கண்கள் மெல்ல மெல்ல இருட்டிக்…
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

Series Navigation