எளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

பாவண்ணன்சாதாரணமாக நம் கண்ணில் படுகிற பல காட்சிகளிலும் காதால் கேட்கிற சொற்களிலும் பொதிந்திருக்கிற நுட்பத்தை ஆழ்ந்த கவித்துவத்தோடு முன்வைக்கும் தேவதச்சனின் கவிதைகள் தமிழ்க்கவிதையுலகுக்கு வலிமை சேர்ப்பவை. பார்வைக்கு எளியவையாக தோற்றமளிக்கும் வரிகள் கவித்துவச் சுடருடன் ஒளிரும்போது நம் மனத்தில் இடம் பிடித்துவிடுகின்றன. தொகுப்பின் தலைப்பாக உள்ள “யாருமற்ற நிழல்” அழகான படிமமாக மலர்ந்து வாசகர்களை ஈர்க்கிறது. உண்மையில் இத்தலைப்பில் தொகுப்பில் ஒரு கவிதையும் இல்லை. மொத்தக் கவிதைகளுக்கும் பொருந்திவருகிற மாதிரி இத்தலைப்பு அமைந்துவிடுகிறது. அன்பின் நிழலா, வாழ்வின் நிழலா, நிம்மதியின் நிழலா, எதன் நிழல் இது? ஏன் யாருமற்ற நிழலாக உள்ளது? நிழலின் அருமையை ஏன் யாருமே உணரவில்லை? நிழலில் வந்து நிற்கக்கூட நேரமில்லாமல் எதை அடைவதற்காக இந்த வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்? ஒருவேளை அருகிலேயே இருக்கிற நிழலின் இருப்பை உணராமல் எங்கோ இருக்கிற நிழலைத் தேடித்தான் நாம் ஓடுகிறோமா? இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி ஓடுவதே மானுடனின் விதியா? இப்படி பல திசைகளiல் எண்ணங்கள் பயணமிட இத்தலைப்பு தூண்டுதலாக அமைகிறது.

உல்லாசத்தின் மகத்துவத்தைச் சித்தரிக்கும் கவிதை “அந்தி உறங்கச் செல்லும்”. சுவைஞர்கள் நிறைந்திருக்கிற மாபெருங்கூட்டமொன்றில் எதிர்பாராத தருணத்தில் உற்சாக வேகத்தில் எழுகிற ஒரு கைத்தட்டல், ஒன்று நூறாக, நூறு ஆயிரமாக கைகள் தட்டுவதற்குத் தூண்டுதலாலக அமைந்து விடுவதையும் கைத்தட்டலின் ஓசை கூரையில் பட்டு எதிரொலிக்கும்வகையில் உச்சத்துக்குச் செல்வதையும் நாம் கவனித்திருக்கலாம். திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நம்மைக் குலுங்கக்குலுங்கச் சிரிக்கவைக்கிற நகைச்சுவை வசனவரிகளை தாமாகவே உள்வாங்கி நினைவில் படியவைத்துக்கொள்கிற நம் மனம் வீட்டிலும் நட்புவட்டாரத்திலும் அலுவலகத்திலும் நம்மையறியாமலேயே அதே வசனவரிகளை மறுபடியும் திரும்பத்திரும்பச் சொல்லி சிரிப்பில் ஆழ்ந்துவிடுவதை நாம் உணர்ந்திருப்போம். மகிழ்ச்சி என்பது காந்த ஆற்றலைப்போல. அருகில் இருக்கிற எந்த இரும்புப்பொருளையும் தன்னைநோக்கி இழுத்து, அதன்மீதும் காந்த ஆற்றலைப் படியவைத்துவிடுவதுபோல மகிழ்ச்சியும் தன்னைச்சுற்றி இருப்பவர்களிடையே வெகுவிரைவில் பரவத் தொடங்கிவிடுகிறது. அதுதான் உல்லாசத்தின் மகத்துவம். அந்த மகத்துவத்தை உணர்த்த தேவதச்சன் எடுத்துக்கொள்கிற நேரம் அந்தி நேரத்தின் இறுதிக்கட்டம். அதாவது இன்னும் சிறிது நேரத்தில் இரவு படியத்தொடங்க வாய்ப்புள்ள சமயம். பள்ளிச்சிறுவர்கள் பள்ளியை முடித்துக்கொண்டோ அல்லது தனிவகுப்புகளை முடித்துக்கொண்டோ ஆட்டோவில் திரும்பும் நேரம். வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு அடங்கிஅடங்கி மனத்தில் கவிந்துபோன அலுப்பை உயர்ந்த ஸ்தாயியில் குரலெழுப்பிக் கொண்டாடுகிறார்கள். கொண்டாட்டத்துக்கு அவர்கள் கண்டடைந்துவைத்திருக்கிற ஒரே வழி ஓவென சத்தம் போடுவதுதான். அமைதிஅமைதி என கண்ணுக்குப் புலப்படாத வகுப்பறைக் கட்டுப்பாட்டுக்கு நாளெல்லாம் அடங்கிஅடங்கி, அதை உடனடியாக மீறுவதே கொண்டாட்டத்தின் இலக்கணமாக மாறிவிட்டது. பறவைகள் அடங்கி தத்தம் கூடடைகிற வேளையில், மானுடப்பறவைகளாக சிறுவர்சிறுமியர்கள் ஒலியெழுப்புகிறார்கள். அது பறவைக்குரலின் எதிரொலியாக இருக்கிறது. தற்செயலாக இக்காட்சி, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த வயதான லோடுமேன் ஒருவருடைய பார்வையில் பட்டு, அவரையும் உற்சாகம் கொள்ளவைக்கிறது. உடனே அவரும் ஓவென சத்தமிடுகிறார். பிள்ளைகளின் சத்தத்தோடு அவருடைய சத்தமும் சேர்ந்துகொள்கிறது. அவருடைய கைகள் பிள்ளைகள் செல்லும் திசைநோக்கி நீள்கின்றன. மானசிகமாக ஒரு யுகசந்திபோல, இளந்தலைமுறையும் முதிய தலைமுறையும் அத்தருணத்தில் இணைகின்றன. குரலோசையால் உறக்கத்திலிருந்து விழித்துவிட்ட அந்தி நட்சத்திரமென்னும் விழிதிறந்து பார்த்தபடி படர்கிறது. ஒரு மான்குட்டியைப்போல புள்ளிக்குப்புள்ளி தாவிச்செல்கிற உல்லாசத்தையும் அதன் சுவடு பட்ட இடங்கள் உல்லாசம் பலமடங்காகப் பெருகுவதன் பதிவைப் படிக்கும் கணத்தில் அந்த உல்லாசம் நம் மனத்திலும் படர்ந்து பரவுகிறது. வழக்கமான சலிப்பும் சங்கடங்களும் புகார்களும் ஆற்றாமைகளும் நிறைந்ததாக இல்லாமல், இளஞ்சிறுவர்களிடமிருந்து உல்லாசத்தை வாங்கிப் பிரதிபலிப்பதாக இக்கவிதையில் தீட்டிக்காட்டப்பட்டுள்ள முதுமை முக்கியமான ஒரு மாற்றம். இளமைக்கு எப்போதும் வழங்குவதைமட்டுமே தன் குணமாகக் கருதாமல், இளமையிடமிருந்து மனமாரப் பெற்றுக்கொள்வதையும் தன்னுடைய குணமாகக் கொண்டிருக்கும் முதுமை மிகப்பெரிய புதுமை.

இளமையிடமிருந்து முதுமை பெற்றுக்கொள்ளும் இன்னொரு காட்சி இடம்பெற்றிருக்கும் கவிதை “காலையில் எழுந்ததும்”. ஒரு நாள் காலை. அன்று அவள் பிறந்தநாள். ஐம்பத்துநான்கு வயது என்பது பழுத்த முதுமையல்ல என்றபோதும் நரையோடத் தொடங்கிவிட்ட முதுமை என்று சொல்லலாம். ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு ஆண்டுகள் உள்ளன என்று மனத்துக்குள்ளேயே முணுமுணுத்துக்கொள்கிறாள். அவளுக்கு வாழ்த்துச் சொல்ல, அவளுடைய குடும்பத்தில் யாருமே இல்லை. விடிந்தும் விடியாத அதிகாலையிலேயே குளிக்கிறாள். வாசலில் கோலம் போடுகிறாள். மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த கலவையாக இருக்கும் அவள் மனத்தைப்போலவே வாசலும் இருளும் வெளிச்சமும் கலந்த கலவையாக உள்ளது. தாமதிக்காமல் சமைத்து, உண்டுவிட்டு, உடைமாற்றி வேலைக்குச் செல்கிறாள். நேரிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ, அலுவலகத்தில் இருப்பவர்களோ அல்லது உறவினர்களோ யாருமே அவளை அழைத்து வாழ்த்துச் சொல்லவில்லை. வேலைச்சுமையின் காரணமாக இதழிதழாகப் பிய்ந்து வாடி உதிர்ந்துவிட்ட தாமரைப்பூவைப்போல, அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகிறாள். உதிர்ந்த தாமரைப்பூ அவளுடைய அன்றைய கோலத்துக்கான உவமைமட்டுமல்ல, அவளுடைய ஐம்பத்திநான்கு ஆண்டு வாழ்க்கைக்கான உவமை. ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு வயதாக வாடி உதிர்ந்து விடுகிறது. தற்செயலாக அவளுடைய மாலைநேர பேருந்துப் பயணத்தில் எதிர்வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமியொருத்தி சற்றே தள்ளி உட்கார்ந்துகொண்டு அருகில் அமரும்படி இடம்தருகிறாள். தலை கலைந்திருந்தாலும் வாடாத தாமரைப்பூவை அவள் சூடியிருக்கிறாள். இளமையிடமிருந்து அவள் பெறுகிற அன்பும் ஆதரவும் மிகமுக்கியமானவை. கவிதை இத்துடன் முடிந்தாலும் நம் மனம் இன்னும் நிகழ்வதற்கு சாத்தியமான சம்பவங்களை உத்வேகத்துடன் எழுதிப் பார்த்துக்கொள்கிறது. சிறுமியின் சிரிப்பு ஒரு நல்ல உரையாடலுக்கு வழிவகுக்கலாம். இருவரும் ஒருவரையொருவர் விசாரித்துக்கொள்ளலாம். பேச்சினூடே தன் பிறந்தநாள் செய்தியை அவள் அச்சிறுமியிடம் பகிர்ந்துகொள்ளும் தருணம் அமைந்திருக்கலாம். சிறுமி சட்டென புன்னகைத்தோ அல்லது கைகுலுக்கியோ அல்லது முத்தமிட்டோ தன் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லியிருக்கவும்கூடும்.

அன்பின் எழுத்துக்களை வைப்பதற்கான ஒரு ரகசிய இடம் வேண்டும் என்று கோரும் குரலைப் பதிவு செய்துள்ள அன்பின் எழுத்துக்கள் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கக்கூடிய கவிதை. குருவிக்குஞ்சை வைப்பதுபோல அலுங்காமல் குலுங்காமல் அந்த ரகசிய இடத்தில் அவ்வெழுத்துக்களை வைத்துவிடலாம் என்று எண்ணிக்கொள்கிறது அந்தக் குரலுக்குரிய மனம். பிறகுதான், எதார்த்தத்தில் அப்படிப்பட்ட ஒரு ரகசிய இடம் எங்கேயும் இல்லை என்பது புலப்படுகிறது. முடிவில் தன் நினைவுகளiலேயே அவை படிந்து வளரட்டும் என்று விட்டுவிடுகிறது. நினைவில் படிந்த எழுத்துகள் உயிரோடும் உடலோடும் இரண்டறக் கலந்துவிடுகிறது. மெல்லமெல்ல உடலின் நிழலாகவே மாறிவிடுகிறது. வசதிப்படும்போது உடலிலிருந்து வெளிப்பட்டு நிழல் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது. நெருக்கடியான தருணத்தில் உடலோடு சுருங்கி மறைந்துகொள்கிறது. எழுத்துகளை பாதுகாப்பாக வைக்க ரகசிய இடம் கிட்டாத இந்த உலகில் உடலோடு நிழலாக ஒளிந்துகொள்ள இறுதியாக ஓரிடத்தைக் கண்டடைந்துவிடுகிறது. அன்பின் வலிமை என்று இதைச் சொல்லலாமா? அன்பின் வலிமையை முன்வைக்கும் இன்னொரு கவிதை பை. அந்தப் பையில் ஒன்றுமே இல்லை. வெறும் பை. ஆனாலும் அந்தப் பையை எல்லா நேரங்களiலும் அவன் கையிலேயே வைத்திருக்கிறான். வீட்டுக்குள்ளும் ஆணி, கட்டில், மேசை, தரை என எந்த இடத்திலிருந்தாலும் அது தன் பார்வைவளையத்துக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறான். வெறும் பையை ஒருவன் வேலை மெனக்கிட்டு எதற்காக எடுத்துக்கொண்டு சுற்ற வேண்டும் என்ற கேள்வி எழாமலில்லை. அவனுடைய காதலுக்குரியவள் காலைநேரத்தில் அந்த வெறும் பையை தன் கையால் எடுத்துத் தருகிறாள் என்கிற காரணத்துக்காகவே அவன் அந்தப் பையை கையில் சுமந்தபடி திரிகிறான். தோற்றத்துக்கு வெறும் பைதானே தவிர, அது அவளுடைய காதல் நிரம்பிய பை. அந்தக் காதலின் நெருக்கத்துக்காகவே அந்த வெறும் பையை எங்கு சென்றாலும் சுமந்தபடியே திரிகிறான். அதுதான் காதலின் வலிமை.

இப்படி எடுத்துச் சொல்ல பல நல்ல கவிதைகள் தொகுப்பில் உள்ளன. பகற்கனவு, ஒரு வண்ணத்துப்பூச்சி, அக்காவும் தம்பியும் என்பவை ஒருசில எடுத்துக்காட்டுகள்.

(யாருமற்ற நிழல். கவிதைகள். தேவதச்சன். உயிர்மை பதிப்பகம். 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம். சென்னை-18. விலை.ரூ40)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்