எப்போதாவது…

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

புதியமாதவி


உன் சொற்கள்
கரடு முடனானவை
உன்னைப் போலவே.

உன் கைகள்
வணங்கியதுமில்லை
உன் கண்கள்
வாழ்த்தியதுமில்லை.

கனவுகளைக்கூட
முத்தமிட மறுக்கின்றன
உன் இதழ்கள்

என் எழுத்துகளின்
இடையிடையே
ஒற்றுப்பிழையாய்
உன் நினைவுகள்.

எப்போதாவது
உன்னைக் காதலித்தேனா ?
தெரியவில்லை.

இப்போதாவது
இதைச் சொல்லிவிடேன்
நீயும்-
எப்போதோ
என்னைக் காதலித்தாய்
என்பதை.

—-

மாநாடுகள்
—-

சாதி ஒழிப்பு
மாநாட்டில் சந்தித்தோம்
நம் சந்திப்புக்கள்
தொடர்ந்தன..
நம்
சாதிச் சான்றிதழ்கள்
சந்திக்கும்வரை !.

++++

அன்புடன்,

புதியமாதவி,
மும்பை
puthiyamaadhavi@hotmail.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>