என் தாய் பண்டரிபாய்

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

ராமசந்திரன் உஷா


‘ ‘எனக்கு அம்மானா அது பண்ரிபாய்தான்,மொகத்திலேயே என்னா அன்பு,பாசம்,தியாகம்! அம்மாங்கறதுக்கு ஒரு தகுதி வேண்டாம் ‘, சாருக்கு போதை தலைக்கு மேலே ஏறியாச்சு! இனி பேசிபயனில்லை.மெதுவாய் எழுந்துவிட்டேன்.ஆச்சரியமாய் இருந்தது,அவரிடம் அவர் அம்மாவை பற்றிக்கேட்டால்,பழைய நடிகை பண்டரிபாயைப் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார். கோவிந்தன் எனக்கு தூரத்து உறவு,என்னைவிட பத்து வயசு அதிகமிருக்கும்.சின்ன வயசில் மிகவும் கஷ்டப் பட்ட குடும்பம்.அப்பா கடனாளியாய்,ஊரைவிட்டு ஓடிவிட்டார்.என் அப்பா உட்பட உறவினர்கள் உதவியால் படித்து ஓரளவிற்கு இன்று வசதியாய் இருக்கிறார்.விடுமுறைக்கு சென்னைக்கு வந்தப்போது, கோவிந்தன் தன் அம்மாவை,அனாதை என்று உதவும் கரங்களில் சேர்த்த கதை காதில் விழுந்தது. அப்பாவும் அவரை விசாரிக்கச் சொன்னார்.

முதலில் அவருடைய வீட்டுக்குப்போனேன்.அவர் மனைவியோ இது

தாய்க்கும்,மகனுக்கும் உள்ள பிரச்சனை என்று சொல் நழுவி விட்டார்.விடக்கூடாது என்று கோவிந்தன் வரும் வரை காத்திருந்தேன்.ஊர் கதை எல்லாம் பேசிவிட்டு மெதுவாய் விஷயத்துக்கு வந்தேன்.

அதற்கு அவர் பிடிக்கொடுத்தே பேசவில்லை.அப்புறம் மாடிக்குப்போய் குடிக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவர் அம்மாவை பற்றிக்கேட்டால்,பண்டரிபாய் புராணத்துக்கு போய்விட்டார்.அந்த அம்மாளுக்கு விபத்தில் கைப்போய்விட்டது,சர்க்கரை நோயால் அவதிப்பட்டார்,அப்படி இருந்தும் இறந்தப் பிறகு கண்தானம் செய்தார்,எப்பேர் பட்ட தியாகம் என்று கண்ணில் நீர் விட்டார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.சரி விட்டு பிடிக்கலாம் என்று பேசாமல் படுத்துவிட்டேன்.

மறுநாள் காலை கிளம்பிவிட்டேன்.என்னை கொண்டுவிடுகிறேன் என்று காரில் ஏறச் சொன்னார்.வண்டியை நேராய் கடற்கரைக்கு விட்டார்.செல்போனை எடுத்து,ஆபிசுக்கு தாமதமாய் வருவேன் என்று சொல்லிவிட்டு என்னைப்பார்த்தார்.

‘இப்போ நா சொல்ற விஷயத்த யாருகிட்டையும் சொல்லக்கூடாது. சின்ன வயசுல எங்க அப்பா வீட்ட விட்டு ஓடிட்டாரு! நானும்,எங்க அம்மாவும் ரொம்ப கஷ்டப்பட்டோம்.ஒரு சமயம்,மூணு நாளு பட்டினி, யாரோ பரிதாபப் பட்டு கொஞ்சம் அரிசி கொடுத்தாங்க!அம்மா அத கஞ்சி காச்சிச்சு! எனக்கு கொஞ்சமா கொடுத்துட்டு மொத்தத்தையும் அதுவே குடிச்சிடுச்சு! நா கேட்டதுக்கு,நல்ல அடி,இன்னும் கூட தழும்பு இருக்கு!ஒரு தாய் இப்படி செய்யலாமா! எப்பவும் அது நல்லா தின்னுட்டு,எனக்கு கொஞ்சமாதா கொடுக்கும்!படத்துல அம்மாவா பண்ரிபாய் நடிக்கறத பாத்து அம்மானா இப்படிதா இருக்கணும்னு கற்பன பண்ணிப்பேன்,இப்பவும் எனக்கு ஏதாவது கஷ்டம்னா,அந்த அம்மா மடில தலைவச்சி படுக்கர்தா கற்பனை பண்ணிப்பேன்! எனக்கு அம்மானா அது பண்ரிபாய்தான்! ‘ என்று முடித்தார்.

அம்மா என்றாலும் அவளுக்கும் வயிறு உண்டே என்று என் மனம்புலம்பியது. இது என்ன மாத்ருபூதம் கேசா என்று நினைத்துக்கொண்டு, ‘அப்ப உங்கள பெத்த அம்மா ? ‘என்று கேட்டதற்கு, ‘அவுங்க அங்கேயே இருக்கட்டும் ‘! அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது! ‘ என்றுச் சொல்லிவிட்டு காரை கிளப்பினார்.

***

ramachandranusha@rediffmail.com

Series Navigation