என்றாவது வருவாள்

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

ஆ.மணவழகன்


தூரத்து மின்மினியாய்
துரத்துகின்ற உன் நினைவு!
காற்றுக்குள் இசையாக
கலந்துவிட்ட உன் உறவு!

கடற்கரை மணலெங்கும்
பலநூறு கால்தடங்கள்!
ஒவ்வொன்றாய் நான் தேட,
ஒன்றுகூட உனதில்லை!

‘நாம் ‘ அமர்ந்த இடந்தனிலே,
‘நான் ‘ மட்டும் அமர்ந்திருக்க,
எட்டிப் பார்த்த சிறு நண்டும்
ஏதேதோ முனுமுனுப்பாய்..

கால் நனைக்க மாட்டாயா ?
காத்திருந்த பெரு அலையும்
எனைமட்டும் கண்டலாலே
ஏக்கம் கொண்டு தவிதவிப்பாய்…

நம் இடைவெளுயைக் குறைப்பதற்கே
எங்கிருந்தோ வரும் காற்றும்
தீ கண்ட புழுபோலே – என்னை
தீண்டாமல் திரும்பிச் செல்லும்…

நின்று ஒரு கணம்
நிலவு கூட கேட்கிறதே…
‘ நீ ‘ மட்டுமா வந்தாய் ?

பாய்மரக் களமொன்று
பார்வையை வீசிவிட்டுச் சென்றது – என்
பக்கத்தில் வெற்றிடத்தை….

பார்த்து மகிழ்ந்த பெளர்ணமிக்கும்,
பழகிவைத்த பிறை மதிக்கும்;
ஊடல் தீர்த்த நண்டிற்கும்,
உறக்கம் பறித்த தென்றலுக்கும்;
கோலம் வரைந்த கரைமணலிற்கும்,
கோவம் கொண்ட கடல் அலைக்கும்;

மொத்தமாய் என்பதிலை
ஒன்றை சொல்லால் உதிர்த்து வந்தேன்…
இம்ம்ம்,
‘என்றாவது வருவாள் ‘

**************
a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்