என்னோடு என் கவிதை

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

மாலதி


—-

எந்த நட்சத்திர பாதிப்பில் என் கவிதை எனக்குள் இருப்பைத் தெரிவித்தது

என்று யோசித்தபோது எனக்குப் புரிந்தது.

இன்னது தான் என் ரசனை இது தான் என் தேவை என்று இனம் காண்பிக்கிற ஒரு

தெளிவு வாய்த்தபோது என் கவிதை என்னுள் இருந்தது.

என் உணர்வை நான் மதித்தபோதும், என்னைப் பற்றிய மதிப்பீடுகளை உதைத்து

அது என்னை மீறி வளர்ந்தபோதும் ஒரு பேதலித்த பெரும் முரட்டு மிருகத்தைக்

குட்டியிலிருந்து எடுத்து வளர்த்ததை ஒத்த அன்பையும் பயத்தையும் ஒருங்கே நான்

அதன்பால் மிக்கூர்ந்து, அதை அதிர்ந்தவாறே கண்காணித்து , அதை எல்லாருக்கும்

எடுத்துச்சொல்லி ஒப்புவித்து விடலாம் என்கிற முழு சரணாகதி மற்றும் உள்

புறம் ஒன்றேயான கண்ணாடித்தன்மை பூணுகிற தயக்கமின்மை கொண்டபோது என்

கவிதை என்னுள் அசந்தது.

அந்த சமயத்தில் என் மிருகம் என்னை என்ன செய்தாலும் கவலையில்லை, அதன்

பிறாண்டல்களைச் சூடிக்கொண்டு அலையக் குலைய நான் நடைபாதையில்

விழமட்டேன் என்கிற புத்தியின் பேச்சைக் கேட்டு நான் நண்டு போல் குழி

பறித்துப் பதுங்கி தூக்கத்திலோ சலிப்பேற்ற செயல் சங்கிலியிலோ என்னை

நடத்தி வென்று விட தீர்மானித்த போது அது என்னிடம் நைச்சியமாய் தன்

பலத்தை மறைத்து ஒரு சின்ன இருக்கையில் அமர்ந்துகொண்டு சன்னக் குரலில்

ஆணையிட்டது. ‘ஒன்று,இந்த நெருக்கடியை விட்டு நீ வெளியே போ, உன்

இடத்தில் நான் இருந்துகொள்கிறேன், அல்லது என்னுடன் நீயும் வெளியே வா,

கல்லடியோ கசையடியோ இருவருக்கும் ஆகட்டும் ‘ என்றது.

அத்தோடு நில்லாமல் என் சிறிய மெளன அங்கீகரிப்பில் என்னை அது

நகர்த்தியது. அப்போது வலியும் உச்சகட்ட அதிர்வுகளுமாய் தூக்கி என்னைக்

கூளம் போல லேசாக்கி வெளியில் எறிந்தன. நான் புழுதிபட்டபோது என்

கவிதை ஒரு விஷயமாயிற்று.

மலையுச்சியிலிருந்து தள்ளப்படும் விசையொத்த வன்மமுள்ள தாக்குதல் என் மீது

நேர்ந்ததற்கு எதிர்வினையாகத்தான் நான் கவிதைகள் எழுதினேன். என் மிகப்

பெரிய குறை என் முழு வலியை என்னால் எழுத்தில் பிரதிபலிக்க முடிவதில்லை

என்பது.

அப்படியாகும்பட்சத்தில் என்னைக் கேட்கலாம்.உன் கவித்துவத்தின் மேல் உனக்குப்

பயமா என்று. முதலில் பயம் தான் இருந்தது. பின்பு அதன் மேல் அன்பு

பெருகியது. அது தந்த வெற்றியால் அல்ல. அந்த அது எனக்கு ஏற்படுத்தித் தந்த

விடுதலை மிக்க உணர்வால். என் கவிதையின் மேல் எனக்கு அன்போடு கருணையும்

மீதூர்ந்ததால் தான் அழகாக ,குட்டி எவர் சில்வர் ஏனத்தைக் கவிழ்த்துப்

போட்டுக்கொண்டு தன்னைக் குறுக்கி அமர்ந்துகொண்டு ‘நீ போ வெளியே,நான்

இருக்கிறேன் உன்னிடத்தில் ‘ என்ற போது எனக்குத் தாங்கவில்லை.மூச்சு

முட்டினால் எனக்குப் பரவாயில்லை. என் கவிதைக்கு உள் நரகம் கூடாது. இந்த

சர்வ வியாபிக்கு விடுதலை வேண்டும் என்று தோன்றியது. இருவருமாக முக்தி

பெற்றோம்.

கவிதை எழுதுவதைப் போன்ற இளக்காரத்துக்குரிய செயல் கிடையாது. அதை

ஒப்புக் கொள்வதைப் போன்ற அழகான செய்தியும் கிடையவேகிடையாது.

மாலதி

14-4-2003 கவிதைக்கணம் சென்னை நிகழ்வில் பகிந்துகொண்டது

—-

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி