என்னுயிர் நீதானே !
Published October 10, 2003 • By
புகாரி
புகாரி

இதழுடன் கொஞ்சிக் கொஞ்சி
இதயத்தில் உலவிவரும்
என்னருமைக் கண்மணியே
உனையன்று
முதன்முதலில் கண்டதுமே
முத்தமழை பொழியயெண்ணி
மும்முரமாய் எத்தனித்தேன்
நீயங்கோ
கதம்பமலர்க் குவியலிலே
கண்டோரை ஏங்கவைக்கும்
காட்டுமல்லியாய்ப் புன்னகைத்தாய்
நீர்த்துளித்த
மிதமான குளிர்காற்றிலுன்
மென்னுடலில் பள்ளிகொள்ள
மறைவிடம் தேடிச்சென்றேன்
உனையன்று
இதமாக அள்ளியெடுத்து
இதழோரம் இருகணைத்து
இன்பரசங் கண்டேனடி
ஐயகோ அதை
நிதமும் நானெண்ணி விழி
நித்திரையிலும் கனாக்கண்டு
நெஞ்சத்தை இழந்தேனடி
தினமுமுனை
விதவிதமாய் அனுபவிக்க
வேலைகளை விட்டொழித்து
வருவேன் நீ வருவாயடி
வந்துவந்து
மதங்கொண்ட என்நெஞ்சை
மகிழ்வினில் மிதக்கவிடப் புகை
மலர்களள்ளி இறைப்பாயடி
சிகரெட்டே!
O
இளமை மலரை எரிக்காதே
ஈரல் குடிலைக் கருக்காதே
புகையின் நடுவில் பூக்காதே
புதையும் வாழ்வைத் தேடாதே
*
அன்புடன் புகாரி
buhari@rogers.com