எண்கள்! எண்கள்!

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

கரு.திருவரசு


எண்களுக்கும் தமிழருக்கும் என்னென்ன தொடர்பெனநம்
கண்களுக்குப் பட்டவரை கணக்கெடுத்துப் பார்ப்போமா!

ஒண்ணாம் கிழமையிலே ஓரிலக்கம் பூத்தொடுத்தேன்
இரண்டாம் கிழமையிலே இஈரிலக்கம் பூத்தொடுத்தேன்
சிறுபிள்ளை விளையாட்டில் தொடங்குகிற எண்ணிக்கை
விடைசொல்லும் விடுகதையில் விளையாடும் எண்ணிக்கை!

தமிழிலுள்ள சுவடிகளில் பழஞ்சுவடி எண்சுவடி
தமிழ்க்கணிதம் படித்தவர்க்கு பிறகணிதம் அரிச்சுவடி!

ஓரெண்ணைப் பலவாகப் பகுப்பதற்கு மற்றவர்கள்
ஓரெண்ணின் கீழென்றே எண்பிரித்துத் தொடர்வாரே

முந்நூற்றி இருபதாக ஓரெண்ணைப் பகுத்ததற்கு
முன்னோர்கள் சொன்னபெயர் முந்திரியாம்! அதுபோல
அரைக்காணி காணி அரைமா ஒருமா
இரண்டுமா நான்குமா கால்,அரை முக்கால்என
பின்ன இலக்கத்தைச் சன்னமாய் வகுத்ததற்கு
வண்ணமாய் வாய்பாடும் தொகுத்துள்ளார் திறமாக!

‘மனை ‘யென்றால் அஃதோர் வீடுகட்டும் அளவுநிலம்
கணித்துள்ளார் ‘நாற்பதுக்கு அறுபதடி ஒருமனை ‘யாம்!

பதினெட்டு முழப்புடைவை பாவையர்க்கு! முன்னாளில்
பதினெட்டு முழமென்ற ‘அளவின்பெயர் ஒருபுடைவை ‘!

மாதமென்றால் முப்பதுநாள் யாவருக்கும் தெரிந்ததுதான்
பாதிநாள் பதினைந்து அதர்பெயரோ ‘ஒருபக்கம் ‘!
இருபக்கம் ஒருமாதம்! அதுபோலத் தமிழ்முறையில்
இரண்டயனம் ஓராண்டு! ஆறுதிங்கள் ‘ஓர்அயனம் ‘!

கூடுகின்ற கால்நடையை மந்தையென்போம்! தமிழ்க்கணித
ஏடுசொல்லும் ‘எண்பது உருப்படிகள் ஒருமந்தை ‘!
குதிரைப்படை யானைப்படை எப்படையின் தொகுதிக்கும்
அதன்பெயரும் எண்ணிக்கை அளவுகளும் வைத்திருந்தார்!

தமிழ்கற்க எழுத்துகளைத் தொடக்குவது அரிச்சுவடி
தமிழிலுள்ள எண்கணித அடக்கம்தான் எண்சுவடி!

‘எண்ணென்ப எழுத்தென்ப கண்ணென்பர் ‘ வள்ளுவனார்!
‘எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகு ‘மென்றார்
எண்ணெழுத்து இகழேல் ‘என் றெழுத்துகளைச் சொல்லுமுன்னர்
எண்களையே முன்வைத்தார், எண்களையே சிறப்பித்தார்!
பின்னாளில் நடந்ததென்ன ? பின்னங்களை மறந்ததென்ன ?

எண்களைநம் கண்களென எழுதிவைத்துப் படித்துவிட்டு
எண்களிலே சுழியமென நம்கதைதான் ஆனதென்ன ?

thiruv@pc.jaring.my

Series Navigation