எங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

மஞ்சுளா நவநீதன்


‘தமிழைப் பேசி ஏமாற்றிப் பிழைப்பவர்களை விட்டு விட்டு, எங்கிருந்தோ வந்தவரிடம் குறை காண்பது முறையல்ல ‘ என்று அவைத்தலைவர் காளிமுத்து குறிப்பிட்டு இருக்கிறார். இண்டாம் இதழ் பார்க்க.

இது ஜெயலலிதா அவர்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது ஜெயவர்ஷனி போன்ற வடமொழிப்பெயர்களை வைக்கிறார் என்று பாவாணர் விழாவில் இறைக்குருவன் என்பவர் பேசியபோது அவைத்தலைவர் காளிமுத்து கூறிய பதில் இது.

மேற்கண்ட அவைத்தலைவரின் பேச்சில் இரண்டு வகை கேள்விகள் எழுகின்றன.

முதலாவது தமிழைப்பேசி ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் தெளிவாக்க வேண்டும். இப்போதைக்கு காளிமுத்துவுக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் தி மு க வினரா ? (இப்போதைக்கு என்று தான் குறிப்பிட வேண்டும். நாளை நடப்பதை யார் அறிவார் ?) தமிழைப்பேசுபவர்கள் எல்லோரும் ஏமாற்றிப் பிழைப்பவர்களா ? ஏமாற்றிப் பிழைக்கும் சிலர் தமிழ் பேசுகிறார்களா ? தமிழைப் பேசுகிறேன் என்று சிலர் ஏமாற்றிப் பிழைக்கிறார்களா ?

இரண்டாவது, ‘ யார் எங்கிருந்தோ வந்தவர் ? ‘ என்பதை அவர் தெளிவாக்க வேண்டும். அவைத்தலைவர் காளிமுத்து ஜெயலலிதாவை எங்கிருந்தோ வந்தவர் என்று குறிப்பிட்டிருக்கலாம். அவர் கர்னாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் என்பதன் அடிப்படையில் அதனை குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவும் தமிழர்தானே ? அவர் கன்னடர் அல்லவே ? இங்கிருந்து அமெரிக்காவுக்கு வேலை செய்யச் செல்லும் தமிழர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்களா ? அவர் கன்னடராகவே ஒருவேளை இருந்தாலும் அவர் திராவிட மொழி பேசும் திராவிடர் தானே ? அவர் எப்படி எங்கிருந்தோ வந்தவர் ஆவார் ? அல்லது ஜெயலலிதா பார்ப்பன குலத்தினர் என்பதால், பார்ப்பனர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற காலாவதியான கருத்துக்களின் அடிப்படையில் குறிப்பிடுகிறாரா ?

பார்ப்பனர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று ஆங்கிலேயர்கள் எழுதி பிரித்தாளும் கொள்கையை ஆரம்பித்துவைத்தாலும், அவர்கள் போய் 50 வருடம் சுதந்திர நாட்டில் இருந்தாலும், அது தமிழர்களின் தலையிலிருந்து போவதாகத் தெரியவில்லை. அப்படியே கைபர் போலன் கணவாய் வழியாக வந்திருந்தாலும், இன்று அறிவியலாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக கூறுவது மனித குலம் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான் என்பது. அங்கிருந்து வந்த மனிதர்கள் (!) ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த வழி ஒன்றுதான் என்பது டி என் ஏ மூலக்கூறு காட்டும் விஷயம். இவர்களை தமிழர்களாக ஒப்புக்கொள்ளாமல் விரட்டியடித்தால், முதலில் ஆரியர்கள் ஆப்பிரிக்கா சென்றவுடன் பின்னாலேயே திராவிடர்களும் ஆப்பிரிக்கா செல்லப்போகிறார்களா ?

காளிமுத்து கிரிஸ்தவர் என்று கேள்விப்பட்டேன். கிரிஸ்தவ சமுதாயத்தில் ஆங்கிலப்பெயர்களையே வைக்கிறார்கள். அலெக்ஸாண்டர் என்ற பெயர் கிரிஸ்தவ மதம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான அரசனின் பெயர். அதனை ஏன் கிரிஸ்தவர்கள் தமிழ் நாட்டின் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள் என்று இவர்கள் பேசப்போகிறார்களா ? ஏன் தமிழ் முஸ்லீம்கள் அராபியமொழிப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள் என்று இவர்கள் கேட்கப் போகிறார்களா ? வில்லியம்சும், அப்துல்லாவும் தமிழ்ப் பெயர்கள் இல்லை என்பதால் அவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா ? தமிழர்கள் இல்லை இவர்கள் என்று சொல்ல்ப் போகிறார்களா ? ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்களும் இதையே தானே சொல்கின்றன. ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்கள் இஸ்லாமும், கிறுஸ்தவமும் வெளியிருந்து வந்த மதங்கள் என்று சொல்வதற்கும், அவைத் தலைவர் ஜெயலலிதா வெளியிருந்து வந்தவர் என்று சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

சுத்தத் தமிழ்ப் பெயரை வைத்துக்கொள்ளும் பார்ப்பனக்குலத்தினர் திருவுடைநம்பி என்று பெயர் வைத்துக்கொண்டும், தமிழில் வைணவக்கோவில்களிலும், சைவக்கோவில்களிலும் பாராயணம் செய்தும் தமிழை வளர்த்துவந்தாலும் அவர்கள் என்றென்றும் வெளியிலிருந்து வந்தவர்களா ?

இன்னும் எத்தனை நாள் இந்த அவலமும், பாரபட்சமும், மனித உரிமைகள் மறுப்பும், அடிப்படை நாகரிகச் சிதைவும் தொடரப்போகிறது ?

‘எங்கிருந்தோ வந்தவரின் ‘ கட்சியில் தொங்கிக்கொண்டு பதவிக்காகவும் பணத்துக்காகவும் ஜால்ரா அடித்தாலும், இந்த காலாவதியான கருத்துக்களை மட்டும் விடாமல் எங்கே கேட்பவர்கள் இருப்பார்களோ அங்கே தெளித்துக் கொண்டு அலைகிறார்கள். இரண்டு குதிரைகளில் பயணம் செய்கிற ஆசையின் விளைவு இது. அறிவு நேர்மை என்பது தமிழகத்தில் என்றுமே பணத்துக்கும் பதவிக்கும் அடிமையாக இருக்கும் வரை சுயமரியாதையும் வராது சுயசிந்தனையும் வராது.

ஆனால் இதையும் மீறிய என் கேள்வி இது தான்: தேவநேயப் பாவாணர் விழாவில், இப்படிப் பட்ட அரசியல் வாதிகளின் அரவணைப்பிற்காக , ஏன் தமிழறிஞர்கள் என்று அறியப் படுபவர்கள் , அலைகிறார்கள் ? வள நாடும் உன்னதோ, உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்று ஒரு புலவன் அறச் சீற்றம் கொண்டு அரசினைப் பகைத்து எடுத்தெறிந்த கதை நமக்குத் தெரியும். அரசாங்க பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆட்களுக்கு சேவகம் செய்யக் காத்திருக்கும் இந்தத் தமிழறிஞர்கள் அந்தப் புலவனின் தமிழை ஓதத் தகுதியற்றவர்கள் என்பது நன்றாய்ப் புரிகிறது.

**************

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்