எங்கள் கலைக்கூடம் கலைந்தது!

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

புகாரி


ஜூலை 21, 2001

காற்று, ஓர் உன்னத தமிழனின் மூச்சுக்கு நிராகரிக்கப்பட்டு
தன் புனிதம் கெட்டது. தமிழ் மொழிபோல் இனிதாவது வேறெங்கும்
காணோம் என்று பாரதி சொன்னான். அதை நிரூபிக்கும்
சான்றுகளாய், தன் உயிர் சொட்டும் உச்சரிப்பால், நம்
செவிகளையெல்லாம் தலையாட்ட வைத்த நடிகர் திலகம்
இன்று மறைந்தார்.

கட்டபொம்மனாகட்டும் அல்லது அந்தக் கடவுளாகட்டும்
அவர் காட்டாமல் எந்தப் பாமரனுக்கும் தெரியாது. நகமும்
முடியும்கூட நடிப்பை உருக்கி உணர்வுகளை வார்க்க,
பொய்யான திரைக்குள், நிஜத்தைக் காட்டி தமிழ்
சினிமாவுக்குக் கிரீடம் சூட்டிய பத்மஸ்ரீ இன்று மறைந்தார்.

எப்படி கர்ஜிப்பது என்று சிங்கங்களுக்கு வகுப்பெடுக்கும்
குரல் சக்கரவர்த்தி. பாசமலர் பார்த்தால், நமெக்கெல்லாம்
சகோதரனாவார். புதிய பறவை பார்த்தால், ‘எங்கே நிம்மதி’
என்று நம்மையும் அலையவைப்பார். பார்க்க வந்தவர்களையும்
பாத்திரங்களாக்கி வென்ற செவாலியர் சிவாஜி இன்று மறைந்தார்.

நடிப்பின் அகராதி, மூன்றாம் தமிழின் ஒப்பற்ற கலைக்
களஞ்சியம், இப்படி மறைந்துவிட்டார், மறைந்துவிட்டார் என்று
கூறுவது சரியா ? கலைஞர்கள் மறைவதில்லை. கலைஞர்களையே
உருவாக்கும் பிரம்மக் கலைஞருக்கு ஏது மறைவு ?

தீந்தமிழ்ச் சாறெடுத்து
….தித்திக்கும் தேன்குழைத்து…
பாந்தமாய்ப் பேசியாடி
….பலகோடி மக்கள் நெஞ்சில்…

வேந்தனாய் பவனிவந்த
….வெற்றித்திலகமே! தமிழனே
ஏந்தினாய் தீபமொன்று
….எந்நாளும் அணையுமோ ?

தவமெனப் பெற்றாளே
….தமிழன்னை உனையிங்கே
எவருண்டு உன்நடிப்பை
….எள்ளளவும் நகலெடுக்க

சிவனே என்றாலும்
….சிவாஜி நீ காட்டாது…
நவரசக் கலைஞனே
….நானிலந்தான் அறியுமோ

நடையெனில் ஒருநூறு
….நகைப்பெனில் நானூறு
புடைக்கின்ற நரம்புகளில்
….புவியையே அளந்தவன்

தடையற்ற வெள்ளமெனத்
….தமிழ்ச்சொல் வீசியே
படையெடுத்து நின்றவுன்
….பார்புகழ் அழியுமோ

இனிதெனில் தமிழேயென
….ஈடற்ற மாகவியும்
பனிமலர்த் தூவியே
….போற்றினான் செந்தமிழை

தனியனாய் நின்றதனை
….தங்கக் குரலெடுத்து
இனியது தமிழேயென
….வழிமொழிந்தத் திலகமே

நுண்மதி மாந்தர்கட்கும்
….நடிப்பையா காட்டினாய்
வண்ணத்திரையில் நீ
….வாழ்க்கையன்றோ காட்டினாய்

சின்ன அசைவினிலும்
….பொன்னென மின்னினாய்
இன்னுமோர் நடிகனும்
….இனியில்லை என்றானாய்

மூன்றாம் தமிழ்வளர்த்த
….முதன்மைக் களஞ்சியமே
ஆன்றோர் வியந்துவக்கும்
….அகராதி நீதானே

வான்தொடு உயரத்தில்
….வெற்றித் திருச்சுடர் நீ
தேன்வளர் திரைக்கலைஞர்
….தேடும் பொற்கனா நீ

சிங்கங்கள் அணிவகுக்கும்
….சிம்மக்குரல் கேட்க
அங்கங்கள் சிலிர்க்குமெந்த
….அரசவைப் புலவர்கட்கும்

மங்கா புகழ்வென்றாய்
….மறையா நிலைபெற்றாய்
எங்கெலாம் கலையுண்டோ
….அங்கெலாம் சிரிக்கின்றாய்

கண்ணீர் பொங்குதய்யா
….காலனுனைக் கவர்ந்தானே
வெந்நீர் விழுந்தமலர்
….வேதனையில் துடிக்குதய்யா

உன்னதக் கலைஞர்களை
….உருவாக்கும் பிரம்மனே
உன்புகழ் வாழ்க வாழ்க
….உனக்கென்றும் மரணமில்லை !

*

புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation