எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

வசீகரன்


ஏணையில் உறங்கும்
பச்சிளம் குழந்தையைக்கூட
ஏவுகணை வீசி
கொல்லும் எதிரிகளே
உங்கள் உலக சாதனையை
அம்மணமாய் நின்று கொண்டு
உலகம் வாழ்த்தட்டும்

எங்கள் வலிகள்
உங்களுக்கும் புரியவில்லை
இன்னும் இந்த
உலகத்திற்கும் புரியவில்லை

மனிதம் தொலைத்து
வெறிபிடித்த மிருகங்களாய்
கொடிய முகம்
கிழித்து வாருங்கள்
எங்கள் எல்லைகள் எங்கும்
உங்களுக்காய்
மரணக்குழிகள் காத்திருக்கிறது

எங்கள் குருதி உறைந்த
செம்மண் பூமி எழுந்து
உங்களைத் திண்டு விழங்கும்
வெறும் எலும்புக் கூடுகளாய்
உக்கிப்போன எச்சங்களை பொறுக்கி
உங்கள் வீட்டின் முற்றத்திலே
கொண்டுபோய் கொட்டுவோம்

கனரக வண்டிகள்
சுவர்களை உடைக்க
பறந்திடும் விமானங்கள்
பச்சைக்காடுகளை அழிக்க
குண்டு மழையிலே
எங்கள் மண் குளிக்கிறது

எங்கள் எல்லைக்குள்
எந்த இடத்திலே
நீஙகள் முன்னேறி வந்தாலும்
அந்த இடமே
உங்களின் சுடுகாடாய் மாறும்

இத்தனை ஆண்டுகளாய்
உங்களால் நாங்கள்
இழந்த உயிர்களுக்கும்
உறவுகளுக்கும்
எவரிடமும் கணக்குகளில்லை

அடக்கி ஆழ்வதற்காய்
ஆயுதம் தூக்கியவர்கள் நீங்கள்
எங்களை காப்பதற்காய்
ஆயுதம் தூக்கியவர்கள் நாங்கள்

நாங்களும் நீங்களும்
ஒரே காற்றை சுவாசித்தாலும்
ஓரே நீரைக் குடித்தாலும்
உங்கள் பூமிக்கும்
எங்கள் பூமிக்கும்
எத்தனை வேற்றுமைகள் பாருங்கள்?

புத்தரின் பெயரைச்
சொல்லிச் சொல்லியே
எங்கள் புன்னகைகள்
பறிக்கப்படுகிறது
புன்னகைகள் பறிபோனாலும்
எதிரிகளாக வந்து நீங்கள்
மரணக்குழியில் விழுகிற போது
தமிழராகவே நிமிர்கிறோம்

விடுதலை நெருப்பில்
வெந்து கொண்டிருந்தாலும்
எங்கள் வேர்கள் கருக
நாங்கள் விடமாட்டோம்!

கண்ணீரைத் துடைப்பதற்கு
நாங்கள் வைத்திருப்பது
கைக்குட்டைகள் அல்ல
கைத்துப்பாக்கிகள்!


வசீகரன்
நோர்வே
14.12.08

Series Navigation