உள்ளிருந்து கேட்கும் குரல்!

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

எஸ்.அர்ஷியா


“ரசூலுல்லாவுக்குப் பி¡¢யமானது, பூனை.
அவரோட ஜிப்பாப் பைலேயே அது, தூங்கிருமாம்.
அதுபோல பலதடவை தூங்கிருக்கு.
ஒருதடவை, சல்லல்லாஹ¥ அலைவஸல்லம் தொழுகைக்குக்
கிளம்புறப்ப, சட்டைப் பையில அது தூங்கிக்கிட்டு
இருந்துருக்கு. அது விழிக்கிற வரைக்கும் காத்திருந்து,
அது விழிச்சப் பின்னாலத்தான் தொழுகைக்குப்
போனாராம். அந்த அளவுக்கு செல்வாக்கான பிராணி, பூனை!”
நீள் உறவின் பிணைப்பில் விழுந்த கோர வெட்டின் வேதனை, பன்முகப்பட்ட நிலையில் அதைச் செய்ய வேண்டியிருந்தது. கருணை வேண்டிநிற்கும் கடையறு நிலையின் பா¢தாபம், அதன் கண்ணுக்குள் அசைவற்ற பிம்பமாய் படிந்து கொண்டது. நடமாட்டத்தின்போது கால்களுக்கிடையில் வந்தும், உறக்கத்தின்போது அடிவயிற்றின் மடிப்பில் சுருண்டும், பொழுதுபோக்காய் பல்வேறு தருணங்களில் துள்ளித்தி¡¢ந்தும், அண்டை அசலுக்கு வீட்டின் அடையாளமுமாக அறியப்பட்ட அதன் உறவைத் துண்டிப்பதில், அறுபட்ட பல்லி வாலின் துடிப்பை உணர முடிந்தது. சட்டையைக் கழற்றுவது போலவோ, தூசியைத் துடைப்பது போலவோ அவ்வளவு எளிதான செயலாக, அது இருக்கவில்லை. இதற்கு முன் வேறு எதற்கும், இத்தனை கணம் அடைந்ததாக எனக்கு நினைவும் இல்லை.

துணிக்கடை விளம்பரத்தின் வலுத்த சாக்குப்பையின் உட்புற மழைக் காகிதம், கூ¡¢ய நகங்களால் கிழிபட்ட தருணங்களில், இதயச்சுவர்களில் கசியும் குருதியின் சூடு, உச்சிவெயில் தகிப்பாய் இருந் தது. வலையில் பிடிபட்ட விரால் மீன், தப்பித்து நீ¡¢ல் பாய முயலும் உயிர்த்துடிப்பின் யத்தனமும், இங்கே நிகழவே செய்தது.

அத்துவானக் காட்டில் என்னையும் அதையும் தவிர, வேறு உயிர்கள் அருகிருக்க வாய்ப்பில்லாத நொடிகள், அவை. சாக்குப்பையின் வாயைக் கட்டியிருந்த எட்டுப்பி¡¢ சணலை அவிழ்த்ததும், தாவிக் குதித்து வெளியே வந்தது, அது. வளர்த்த உறவே செய்யும் துரோகத்தைச் சகிக்க முடியாத துன்பியலு டன் காணப்பட்ட அந்தப் பூனை, சற்றுத் தள்ளிநின்றே என்னைப் பார்த்தது.

அதன் பார்வையில், மனித இனத்தின் ஒட்டுமொத்த வடிவமாகத் தொ¢யப்பட்ட நான், ‘மியாவ்வ்வ்’ என்று, இப்போது அது அழுத்தமாகப் பிரயோகித்த ஒற்றைச் சொல்லின் உச்சா¢ப்பை, வேறு எப்போதும் கேட்டதில்லை. அந்தப் பிரயோகத்தில், ‘கேவலம் என்றும்… இவ்வளவு தானா, உன் இனத்தின் பண்பாடு…’ என்றும் அது சொல்வதாக, நானே கற்பிதம் செய்து கொண்டேன். என் முன் நிற்க அதற்குப் பி¡¢யமில்லாததாலோ… நான், அதன் முன் நிற்பதை அது விரும்பாததாலோ, ஒரு கங்காருவின் பாய்ச்சலில், கருவேல மரங்களுக்கு இடையில் ஓடி மறைந்தது.

வழக்கமாய், இப்படி அனாதரவாக விடும்போது, விட்டுப்போக மறுக்கும் ஜீவன், கால்களைச் சுற்றிக் கதறும் என்றும், வந்த வாகனத்தில் ஓடிச்சென்று ஏறிக்கொண்டு, இறங்க மறுத்து அடமாய் அழிச் சாட்டியம் செய்தும், பின்தொடர்ந்து வீடு வந்துவிடுமென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும், ‘விட்டுட்டு உடனே திரும்பிப் பாக்காம வந்துரு’ என்று, சொல்லித்தான் அனுப்பப்பட்டிருந்தேன். ஆனால் பூனை என்னவோ ஓடி மறைந்தது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் கற்பித்துக் கொண்ட அர்த்தம், அர்த்தமுள்ளதாகத் தான் இருக்கிறது.

நான் நின்று கொண்டே இருந்தேன்.

அம்மாவால், ‘அமன்னா’ என்றும் பாவாவால், ‘மின்னு’ என்றும், அன்புடன் அழைக்கப்பட்டது, அந்தப் பூனை. அம்மா, பாவா, அப்புறம் என்னையும் தவிர, எங்கள் வீட்டில் ஒரு பூனை இருந்ததை யும் சேர்த்து, நான்கே உயிர்கள் தான். மஞ்சளைத் தங்கத்திலோ அல்லது தங்கத்தை மஞ்சளிலோ குழைத்துப் போட்டது போலானதொரு நிறம், அதற்கு. பச்சைக்கொடிமுந்தி¡¢ப் பழத்தைப் பதுக்கிக் கொண்டதாய் அதன் கண்கள். மொன்னை மூக்கின் இருபுறத்திலும் அலகுகள் குத்தியது போல, துருத்திய மீசை முடிகள். எங்கள் மூவரைப் போலவே, வீட்டின் எந்தப் பகுதிக்கும் போய்வரக் கூடிய சர்வ சுதந்திரமும் கொண்ட அது, வீட்டின் செல்லமாகவும் இருந்தது.

‘புசுபுசு’வென்று ஒண்ணரையடிக்குக் குறையாத நீண்ட வாலைக் கொண்டிருந்த அந்தப்பூனை, முன் தாழ்வாரத்தின் கம்பி வலைகளுக்கு உட்புறமாக, பின்னங்கால்களையும் பின்புறத்தையும் தரையில் அழுத்தி அமர்ந்து, வாலைப் பரத்தி அசைத்துக் கொண்டு, தெருவைப் பார்த்தபடியே உட்கர்ந்திருக் கும். ‘சட்’டென்று பார்ப்பதற்கு, பொ¢ய முயலொன்று உட்கார்ந்திருப்பதாகவே படும். முயலுக்கு ஒன்றும் குறைந்ததில்லை, எங்கள் பூனை!

தாழ்வாரத்தில் அது உட்கார்ந்தே இருப்பதால், ‘பூனை இருக்கும்ல்ல, அந்த வீடா?’ என்று பால்காரர் முதல் ஆட்டோகாரர் வரை அடையாளம் சொல்லும்போது கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தது.

அதுபோல, பூனைக்கான சகுனம் எதையும் நாங்களும் பார்க்கவில்லை. எங்கள் அண்டை அசலும் பார்க்கவில்லை. சாயங்கால வேளையில் பள்ளிக்கூடம் விட்டுவரும் சிறுவர்கள், அதைப் பார்த்து ‘மியாவ்’ என்று கத்தும்போது, வீட்டிலுள்ளவர்கள் யாராவது பக்கத்தில் இருந்தால், அது ஒரு ஏளனப் பார்வையை வீசும். ‘பாருங்க… இவனுக பூனை மாதி¡¢ ஆயிட்டானுங்க!’ என்பதாக அதில் அர்த்தம் இருக்கும்.

இது, எங்கள் வீட்டுக்கு இரண்டாவது பூனை! இதற்கு முன்பிருந்ததும், இதே நிறத்திலான ஓர் பெண் பூனைதான். மிகவும் அழகான பூனை, அது. எங்கள் வீட்டில் எலித்தொல்லை ஏதும் இல்லாத போதும், நாய் வளர்ப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டதாலும், தெருவழியே ஓடி வந்து, அதுவாகவே எங்கள் வீட்டில் அடைக்கலம் தேடிக்கொண்டதாலும், அந்தப் பூனை இருந்து விட்டுப் போகட்டுமே என்று ஏகமனதாக ஏற்கப்பட்டு விட்டது உட்பட இன்னபிற… தாலும்களாலும், அதற்கு வீட்டில் இடம் கிடைத்தது.

அதுவும், கிடைத்த பாலுக்கும், எலும்புச் சூப்புக்கும், பால் சோற்றுக்கும், சவ்வு அகற்றப்பட்ட சுத்தமானக் கறிக்குழம்புச் சோற்றுக்கும் தன்னை மாற்றிக் கொண்டது தான், அதன் பட்டறிவு!

எலி பிடிப்பது, கவுச்சியைக் கண்டதும் பாய்ந்து சென்று கவ்வுவது, சப்பி தெருவில் வீசப்பட்ட எலும்பையோ, செத்த பிராணிகளின் தோலையோ எடுத்துக்கொண்டு வந்து, நடுஹாலில் வைத்து நாறடிக்கும் பூனைகளுக்கான இயல்பைத் தொலைத்த ஜீவனாக, அது நடந்து கொண்டது. ஒருமுறைக் கூட, அது பால் சட்டியில் தலையை விட்டது இல்லை. தெருவில் வரும் மீன்காரனிடம் வாங்கி வைக்கப்படும் மீன் இருக்கும் பாத்திரத்தில் வாய் வைத்ததுமில்லை. கண்ட இடத்தில் பேண்டு வைத்து, யார் முகச்சுழிப்புக்கும் ஆளாகாமல், வீட்டின் பின்புறமுள்ளத் தோட்டத்தில், தனது கால்களால் ‘வறட் வறட்’டென்று சிறிய குழியொன்றைத் தோண்டி, அதில் பேண்டு வைக்கும் புத்தி சாலித்தனமும் அதனிடம் இருந்தது.

மாற்றிக்கொண்ட பழக்க வழக்கத்தால், அதற்கு வீட்டிலுள்ள எல்லோ¡¢டமிருந்தும் ஆதரவு இருந்தது. குறிப்பாக, என்னிடம். நான் படுக்கைக்குப் போகும்வரை காத்திருக்கும் அது, என் பக்கத்தில் வந்து படுத்துக்கொள்வதற்கான அனுமதியை அதுவாகவே பெற்றுக் கொண்டதும், அதன் சாமர்த்தியம் தான். இத்தனைக்கும், நன்றாக இருந்த மெத்தை ஒன்றை அம்மா கிழித்து, தன் அமன்னா படுப் பதற்கு ஏற்றவகையில் சிறிய மெத்தை ஒன்றையும் செய்து தந்திருந்தார். அதற்கு ஒரு தலையணை யையும் அம்மா செய்து கொடுத்தது தான் கொஞ்சம் அதிகமாகப் பட்டது. பகல்பொழுதில், அது அதில் படுத்துக் கொள்ளும். குளிர்நாளின் நள்ளிரவுகளின் போது, என் அடிவயிற்றை ஒட்டிப் படுத்துக் கொள்வதையும் தனக்கான உ¡¢மையாக அது எடுத்துக் கொண்டிருந்தது.

தனக்கான உணவு, தனது கிண்ணத்தில் முறையாக வைக்கப்பட்டுவிடும் உத்தரவாதம் அதற்குத் தொ¢ந்ததால், பாவாவுக்கு மேஜை மீது வைக்கப்படும் சாப்பாட்டுக்குப் பக்கத்தில், அதுவும் உட்கார்ந் திருக்கும். ஒருமுறையும் தவறு நேர்ந்ததில்லை. தனக்கான இடத்தையும், தனக்கு அளிக்கப்பட்டி ருக்கும் அந்தஸ்த்தையும் காப்பாற்றிக் கொள்ளத் தொ¢ந்ததாக, அது இருந்தது. அம்மா உட்கார்ந்து பா¢மாறாத போது, அதைப் பொ¢தாக எடுத்துக் கொள்ளாத பாவாவுக்கு, பூனை பக்கத்தில் இருந்தால் தான் சாப்பிட முடியும். சாப்பிடும் முன்பு, ‘மின்னு சாப்புட்டுச்சா?’ என்று கேட்டுவிட்டுத்தான் ‘பிஸ்மில்லா’ என்று உணவை வாயில் வைப்பார். அவரது கேள்வி அதற்குப் பு¡¢ந்ததுபோல, அம்மா பதில் சொல்லும் போது, அது அம்மாவின் முகத்தைப் பார்க்கும். அப்போது தன் ‘புசுபுசு’ வாலை ஆட்டி, பாவாவிடம் ‘சாப்புட்டுட்டேன்’ என்று உறுதியும் செய்யும்.

அம்மாவுக்கும் அதன்போ¢ல் நிறையப் பி¡¢யம் இருந்தது. ‘அமன்னா’ என்று அம்மா அதைக் கூப்பிடும் போது, ஒரு பெண் குழந்தையின் மீது கொண்ட வாஞ்சையின் சாயல் இருக்கும். அமன்னா என்பது பெண் குழந்தையைச் செல்லமாகக் கொஞ்சும் வார்த்தை. அம்மாவுக்கு, பெண் குழந்தை இல்லை எனும் ஏக்கம் எப்போதுமே உண்டு. ஓய்ந்த நேரத்தில், அம்மா அதை மடியில் போட்டுக் கொள்வார். குழந்தையைத் தூங்கவைப்பது போல, கால்களை மேலும் கீழுமாக ஆட்டித் தாலாட்டுவார். அதைப் பார்க்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, அது அதிர்ஷ்டம் செய்த பூனையாக வர்ணனைக்கு உள்ளாகும்.

அம்மாக்கூட உட்கார்ந்து அது டிவி பார்க்கும். அழுதுவடியும் சீ¡¢யல்களை ஒட்டுமொத்தமாகப் புறக் கணித்துவிடும் அம்மாவுக்கு, நேஷனல் ஜியாக்கிரபி சானல் ரொம்பப் பிடிக்கும். அதுபோல, அனிமல்ஸ் பிளானட். விலங்குகளின் வாழ்க்கைக் குறித்த அக்கறை அம்மாவுக்கு நிறைய ஏற்பட் டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நான் நினைப்பதுண்டு. அப்படியொரு நாள், அம்மாவும், அம்மாவின் செல்லமான அமன்னாவும் நேஷனல் ஜியாக்கிரபி சானலைப் பார்த்துக் கொண்டிருந்த போது, பூனைகளைப் பற்றிய வாழ்க்கையை ஒளிபரப்பினார்கள். அதில் அமன்னா வைப் போலவே ஒரு பூனை வந்தது. டிவி திரையில் தென்பட்ட பூனையைப் பார்த்ததும், உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அமன்னா, ‘திடுக்’கிட்டு எழுந்து நின்றது. டிவி திரையையும் அம்மாவையும் ஒருசேரப் பார்த்தது. அம்மா, ‘அங்கேப் பாரு ஒரு அமன்னா!’ என்று சொன்னது தான் தாமதம். அம்மாவிடமிருந்து விலகி டிவிப்பக்கம் போய், திரையில் தொ¢ந்த பூனையை நோக்கிச் சீற ஆரம்பித் தது. அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதனால் ஓ¡¢டத்தில் இருக்க இயலவில்லை. அம்மா, டிவி பூனை யைச் சிலாகித்ததை ஏற்க இயலாமல், பா¢தவிப்புடன் அலைபாய்ந்தது.

நிகழ்ச்சி முடிந்தபின்பு, அம்மா வைத்த பால் சோற்றைச் சாப்பிடாமல், கோபித்துக் கொண்ட சவலைப் பிள்ளைப் போல அதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அம்மாவுக்கு அதன் செயல்பாடு விசித்திர மாக இருந்ததால், சும்மாவேணும் கூடுதலாகச் சீண்டியதை, அது தனக்கு எதிரானதாக உணர்ந்து கொண்டிருந்தது. ‘சா¢.. சா¢..’ என்று அதைச் சமாதானப்படுத்தி சாப்பிட வைப்பதற்குள் பெரும் பாடாக இருந்தது. தனது ராஜ்ஜியத்தில், இன்னொரு பூனைக்கு இடம் இல்லை என்பதை அது உறுதி செய்திருந்தது.

அன்றிரவு பாவா வந்த பின்பு, அமன்னா நடந்து கொண்டதை அம்மா பகிர்ந்து கொண்ட போது அது, ‘மியாவ்!’ என்று எச்சா¢த்தது.

பாவா, சொன்னார். “ரசூலுல்லாவுக்குப் பி¡¢யமானது, பூனை. அவரோட ஜிப்பாப் பைலேயே அது, தூங்கிருமாம். அதுபோல பலதடவை தூங்கிருக்கு. ஒருதடவை, சல்லல்லாஹ¥ அலைவஸல்லம் தொழுகைக்குக் கிளம்புறப்ப, சட்டைப் பையில அது தூங்கிக்கிட்டு இருந்துருக்கு. அது விழிக்கிற வரைக்கும காத்திருந்து, அது விழிச்சப் பின்னாலத்தான் தொழுகைக்குப் போனாராம். அந்த அளவுக்கு பூனை செல்வாக்கான பிராணி!” என்று சொல்லும் பாவாவுக்கு ஆஸ்துமா இருந்தது. அதற்கு தூசி, தும்பு, முடி ஆகாது என்று உணர்ந்திருந்தும், பூனை முடி ஆஸ்துமாவை அதிகப்படுத் தும் என்று அறிவுறுத்தப்பட்டும் பாவா அவரது மின்னுவை விலக்கி வைக்கவில்லை.

பூனைகளின் உலகம் ரகசியமானது. அது, தனது பாலுணர்வுகளை எப்படித் தீர்த்துக்கொள்கிறது என்பதற்கான ஆராய்ச்சி இது இல்லையென்றாலும், பருவத்தே பயிர் செய் என்று பழமொழியே இருக் கிறதல்லவா? ஆடு, மாடு, நாய் தங்கள் பருவ உணர்வைக் கணைத்தோ, கத்தியோ, அல்லது சீற்றமாகக் குரைத்தோ காட்டித்தரும். ஆடும், மாடும் பொருளாதாரம் சார்ந்ததால், அதன் மீது அக்கரை காட்டிக்கொள்வது உடன்பாடானது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு தரப்படும் மா¢யாதை சிலவேளைகளில் மிகையாகப்படும். தெருநாய்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பல வேளை களில் மனிதர்கள் செய்யும் கூட்டுத்தவற்றை தெருக்களில் அப்பட்டமாகச் செய்து, பைரவத்தனத் தைக் காட்டிக்கொள்ளும். ஆனால் பூனைகளுக்கென்று ஏதேனும் அடையாளங்கள் இருப்பதாக எனக்குப் படவில்லை.

வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகாத எங்கள் வீட்டுப் பூனை, ஒரு மாலைப் பொழுதின் போது, என்னால் கூர்ந்து கவனிக்கப்பட்ட நொடிகளில் தான், அதன் வயிறு மேடிட்டிருப்பதை உணர முடிந்தது. ‘அம்மா, இன்னிக்குப் பூனை நிறையத் தின்னுருச்சோ?’ என்று கேட்டதற்கு, ‘கொஞ்ச நாளா அது சா¢யாவே சாப்புடுறது இல்லை!’ என்று புகார்தான் வாசித்தார்.

‘பிறகு எப்படி வயிறு பொ¢தாக?’

எங்கள் வீட்டுப்பூனையும் பூடகமாக நடந்து கொள்ளும் என்று தொ¢யவந்தபோது, கொஞ்சம் அதிர்ச்சியும் நிறையப் பு¡¢தலும் உண்டாயிற்று. அது, இரண்டு முறை எட்டெட்டு குட்டிகளைப் போட்டது. எந்தக் குட்டியையும் நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை. அமன்னா பெற்றெடுத்த அந்தக் குட்டிகளுக்கு, ஊ¡¢ல் ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

இங்கே ஒருவிஷயம். அமன்னாவுக்கு ஒரு தோழன் இருந்தான். அது, தெருவில் தி¡¢யும் ஒரு ஆண் நாய். தெருமுழுவதும் தன் ஆளுகை என்று தெருவில் போகும் வரும் மனிதர்களையெல்லாம் குரைத்து விரட்டி மகிழும் அது, அமன்னா கம்பி வலைக்கு உள்புறமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விட்டால், அப்படியே வாலைச்சுருட்டிக்கொண்டு வலைக்கு இந்தப்பக்கம் உட்கார்ந்து கொள்ளும். இப்போது அதன் மீது கல்லைக்கொண்டு எ¡¢ந்தாலும், ஞானத்தின் நிலையை அடைந்து விட்டது போல சாதுவாக எடுத்துக் கொள்ளும். அப்போது அதன் முகத்தில், ‘நட்புக்காக நாங்க எதையும் செய் வோம்ல்ல’ என்பதாக ஒரு பெருமிதம் இருக்கும்.

அமன்னா, தெருநாயின் செய்கைகளை அமைதியாகப் பார்த்துவிட்டு, எழுந்து உள்ளே வந்துவிடும். அப்போது, அதனிடம் ஒரு தோரணை இருக்கும். அதில் கர்வம் தொ¢யும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேளை. மணியடித்தாற்போல் ஒண்ணரை மணிக்கு, சாப்பாட்டு மேஜைக்கு வந்துவிடும் அதை, ரொம்ப நேரமாகக் காணவில்லை. வேலை மும்முரத்திலிருந்த அம்மா, அதைக் கவனிக்கவில்லை. பாவாவும் அப்போது வீட்டிலிருந்தார். ‘மின்னுவ எங்கேப்பா?’ என்று என்னிடம் கேட்ட பின்பு தான், நானும் அதைத் தேட ஆரம்பித்தேன். பசி மறந்து போனது. வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் தேடியாகிவிட்டது. அதைக் காணவில்லை. தோட்டத்துக் கிணற்றுப் பக்கம் போனபோது, உள்ளிருந்து குரல் கேட்டது. எட்டிப் பார்த்தால், அது!

எப்படி உள்ளே விழுந்தது என்று தொ¢யவில்லை. வெளியேற முடியாமல் ரொம்ப நேரமாகத் தவித்துக் கொண்டிருக்க வேண்டும். பா¢தாபமாக நசிந்து போயிருந்தது, அதன் குரல். பக்கத்து வீட்டு ஆட்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு, அதை வெளியே எடுக்க முயற்சித்தோம். கிணற்றுக்குள் வாளியை இறக்கி ‘மின்னு.. மின்னு..’ என்று அழைத்தோம். அம்மா ஒருபக்கம் நின்று கொண்டு, ‘அமன்னா.. அமன்னா..’ என்று மேலே வரச்சொல்லி, அழைத்தார்.

அது களைத்துப் போயிருந்தது. வாளி, அதன் பக்கத்தில் போய் தண்ணீ¡¢ல் மிதக்கும்படி செய்தும், அது வாளியில் ஏறவில்லை. நீண்ட நேரமாய் நடந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது.

பூனை கிணற்றுக்குள விழுந்துவிட்ட செய்தி அதற்குள் தெருவெல்லாம் பரவிவிட்டது. பூனையை நாங்கள் வளர்த்த விதமும், அது எங்களிடம் வளர்ந்த விதமும் பல்வேறு பா¢மாணங்களில் அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

எதிர் வீட்டிலிருக்கும் ரவூப், ‘பயர் சர்வீசுக்குப் போன் போடுங்க. அவங்க வந்து இறங்கி எடுத்துரு வாங்க!’ என்று அறிவுரை வழங்கிவிட்டு, அந்தப் பக்கமாக வந்த ஒருவரை நிறுத்தி, ‘ஒனக்கு லோன் சேங்ஷன் ஆகிருச்சாம்ல்ல!’ என்று பேசப் போய்விட்டார். அப்போது தான் இந்த செய்தி, தெருவின் கடைசியிலிருக்கும் கொட்டகை சுப்பையாவுக்குத் தொ¢ந்திருக்க வேண்டும். வரும்போதே அவர் நீளமாய் மூன்று மூங்கில்களுடன் தான் வந்தார். கூடவே மணிக் கொச்சக்கயிறும் எடுத்து வந்திருந் தார். மூன்று மூங்கில்களையும் ஒன்றுடன் ஒன்றாய் நீளமாகக் கட்டினார். மூங்கில்களில் இடை வெளி யில்லாமல், மணிக் கொச்சக்கயிற்றைச் சுற்றினார். நீளமான அந்த மூங்கிலை கிணற்றுக்குள் இறக்கி விட்டு, ‘எல்லாரும் வெலகிப் போங்க’ என்று விட்டு அவரும் விலகிக் கொண்டார்.

ஐந்து நிமிடம் போயிருக்கும். மூங்கிலில் சுற்றப்பட்டிருந்த மணிக் கொச்சக்கயிற்றின் பிடிப்பில் மேலேறி வந்த பூனை, கிணற்றிலிருந்து பக்கத்துச் சுவற்றுக்குத் தாவியது. ஒருநொடி அங்கிருந்த எல்லோரையும் பார்த்தது. எப்போதுமே ‘கொழுக் மொழுக்கென்று’ அறியப்பட்டிருந்த அந்தப் பூனை, இப்போது நனைந்த கோழிக்குஞ்சாய் பா¢தாமாக இருந்தது. நான் அருகில் போய் வா¡¢எடுக்க முயற்சித்த நொடிகளில் அது, ‘மியாவ்வ்வ்வ்’ எனும் சத்தத்தை எழுப்பியபடி ஓடிவிட்டது.

பூனை திரும்பிவராத வருத்தம் வீட்டிலுள்ள எல்லோருக்கும் இருந்தது. ஏதோ ஒன்றை இழந்து விட் டது போலானதொரு அவஸ்தை, என்னிடம் கூடுதலாக இருந்து கொண்டே இருந்தது.

அதன் பிறகுதான் பாவா, ‘நம்ம மின்னு மாதி¡¢யே இருந்துச்சு. கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்!’ என்று எங்கிருந்தோ, இதைக் குட்டியாகக் கொண்டு வந்து நடமாடவிட்டார். அம்மாவும் புது மின்னு விடம் அமன்னா தொ¢வதாகச் சொல்லி உடனடியாகப் பழகி விட்டார். என்னால் அப்படியாக ஒட்ட முடியவில்லை. காலம் போகப் போக, இது அந்தப் பூனையை விட சாமர்த்தியம் நிறைந்ததாகவும் அறிவுப்பூர்வமாகவும் நடந்துகொண்டு, தன்னைத் தவிர்க்க முடியாததாக ஆக்கிக்கொண்டது. என்னுடன் பந்து உருட்டி விளையாடியது. சாயங்காலம், வெளியில் பொ¡¢க்காரர் மணியடித்தால், உள் வேலையிலிருக்கும் அம்மாவிடம் வந்து கத்தி, அவரை அழைத்துப் போகும் சூசகமும் கற்று வைத் திருந்தது. அவர் தரும் பொ¡¢யை, சிந்தாமல் சிதறாமல் தின்று சாகசம் காட்டியது. மணியடித்துக் கொண்டு வரும் மூன்று சக்கர பப்ஸ் வண்டிக்காரரையும் அது, சிநேகிதம் பிடித்து வைத்திருந்தது.

கொஞ்ச நாளிலேயே பழைய பூனையை மறக்கச் செய்த அதன் வசியம் எனக்குப் பிடித்திருந்தது.

வீட்டுக்கு வந்திருந்தப் பள்ளித் தோழன், பூனையைப் பார்த்துப் பிரமித்ததும் இல்லாமல், அதைப் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு போனான். அடுத்த வாரம், தமிழின் முக்கிய வார இதழொன்றில் எங்கள் வீட்டுப் பூனை, படத்துடன் செய்தியாகியிருந்தது. அந்தப் பூனைப் படத்தை வீட்டில் மாட்டி வைத்து, அதற்கு மா¢யாதை செய்தோம். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், தன்னைப் பற்றிப் பேசுவது அதற்கும் பு¡¢கிறது என்பது மாதி¡¢, ‘மியாவ்!’ குரல் கொடுத்து, தன் இருப்பைப் பதிவு செய்து கொள்ளும்.

·

வலது காலை எடுத்து வைத்து, வீட்டுக்குள் நுழைந்த என் புது மனைவி, முதலில் தன்னை வரவேற்ற பூனையைப் பார்த்தும், மிரண்டு பின்வாங்கினாள். ‘ப்ப்பூப்ப் பூனாய்ய்’ என்று, பூனைப் போலவே தவ்வி ஓடினாள். ‘அதை விரட்டுங்க!’ என்று கத்திக் கூச்சல் போட்டாள். அவளை ஆசுவாசப்படுத்தி உள்ளே அழைத்துப் போனபோது, பூனையும் உள்ளே வந்தது. தரையில் கால் பாவாமல், ஆகாயத்தில் நடப்பவளாகப் பாய்ந்து சென்று, கட்டிலில் ஏறிக் கொண்டாள். ‘இதை இங்கே வளக்குறீங்களா?’ என்று பதறினாள்.

‘ஆமா!’ என்று சொன்ன போது, ஆகாததைத் தின்றுவிட்டு வாந்தி எடுப்பவளாகக் குமட்டலுடன் ஓங்கா¢த்தாள். ‘எனக்குப் பூனைப் பிடிக்காது!’ என்று அசூயைப் பட்டாள். வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே, ‘இதை எங்கேயாச்சும் கொண்டுபோய் விட்டுருங்க!’ என்று பா¢தவித்தாள்.

அன்றிரவு எங்களுக்குள் முதலிரவு நடக்கவில்லை எனும் வருத்தத்தை விட, பூனைக்கு இனி எந்த இரவும் இந்தவீட்டில் இருப்புக்குச் சாத்தியமில்லை என்பது உறுதியாகத் தொ¢ந்து விட்டது. அதனால், தூங்காமல் கொட்டக் கொட்ட உள்ளே நானும்… வெளியே பூனையுமாக மட்டுமே இருந்திருப்போம். இரவு முழுவதும் அவள் சொன்னது, பூனையைப் பற்றியது தான்!

அடுத்த நாள். விருந்து பற்றிய பேச்சைவிட பூனையைப் பற்றியப் பேச்சே பிரதானமாக இருந்தது. அம்மா, பாவா இரண்டு பேருமே, ‘வேற வழி தொ¢யலைப்பா… பூனையை விட உன் வாழ்க்கைப் பெருசுப்பா!’ என்று, இந்த முடிவுக்கு வந்து, அதைச் சாக்குப்பையில் கட்டித்தந்து அனுப்பினார்கள்.

வண்டியை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய போது, பூனை என்னை வரவேற்க வேண்டும் என்று வழி நெடுகிலும் எண்ணிக் கொண்டே வந்தேன். ஆனால், நான் நினைத்தது போல எதுவும் நடக்க வில்லை. மனது எதிலும் ஈடுபட மறுத்து, நீள் களைப்பில் அசந்து தூங்கியபோது, ‘மியாவ்வ்வ்வ்’ எனும் குரல் என்னை எழுப்பியது.

பூட்டப்பட்ட அறைக்குள், என் புது மனைவி மட்டும் விழித்துக் கொண்டு இருந்தாள்.

arshiyaas@rediffmail.com

Series Navigation