உலக நடை மாறும்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை.


மாலை மணி ஐந்து அடித்ததும், நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந்திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிவடைந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக நான் என் செயலர் பரந்தாமனைப் பார்த்துக் கையசைத்தேன் அந்த அசைப்பின் பொருளைப் புரிந்துகொண்டவனாக அவனும் வெளி வராந்தாவுக்குச் சென்று, என்னைப் பார்க்க வந்திருந்தவர்களை மறு நாள் வந்து சந்திப்பதற்குரிய நேரத்தையும் இடத்தையும் தெரிவித்து அனுப்பி வைப்பதற்கு முற்பட்டான். என்னெதிரில் உட்கார்ந்திருந்த பெரியவர் – தம் மகனுக்கு ஏதோ பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதாய்ச் சொல்லிக்கொண்டு என்னிடம் அதைப்பற்றிப் புகார் செய்ய வந்திருந்தவர் – பெரியகும்பிடு ஒன்றைப் போட்டுவிட்டு எழுந்துகொண்டார்.

‘நான் வரட்டுமா ? :ஏதோ உங்களைப்பார்த்து விஷயத்தைச் சொன்னால் நியாயம் கிடைக்குமே என்பதற்காக வந்தேன் ‘

‘நான் விசாரிக்கிறேன். உங்கள் முறையீட்டில் நியாயம் இருக்கிறதா என்பதைப் பரிசீலித்து அறிந்து, அதன் பிறகு ஆவன செய்கிறேன். சட்டப்படி எதைச் செய்ய முடிந்தாலும் செய்வேன். ‘

‘அது போதுமே. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்… ‘

பெரிய உடம்பைத் தூக்கிக்கொண்டு ஆடி அசைந்து நடந்து சென்ற அவரது பரந்தமுதுகைப் பார்த்துக்கொண்டு நான் சில விநாடிகள் ஓய்வாக உட்கார்ந்திருந்தேன். வெளி வராந்தாவில் காத்திருந்தவர்களின் கும்பல் ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற ஆரவாரம் எழுந்து அடங்கியதும் என் செயலர் பரந்தாமன் என்னறையினுள் நுழைந்தான்.

‘சிலரை நாளைக்கும், சிலரைத் திங்கள் கிழமையன்றும் வரச்சொல்லி அனுப்பிவிட்டேன்….ஆறு மணிக்கு இசை விழாவில் உங்கள் தலைமை வகிப்பும் பேச்சும் இருக்கின்றன… ‘

‘ஞாபகம் இருக்கிறது… ‘

செயலர் தன் அறைக்குச் சென்ற பிறகு நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். என் மனம் பல ஆண்டுகள் பின்னோக்கிப் பறந்து சென்றது. பத்து வயதுச் சிறுவனாக என்னை நானே பார்த்துக்கொண்டபோது கந்தல் உடையும் சிக்குப் பிடித்த பரட்டைத் தலை முடியும் தானுமாக விசாலாட்சி அம்மன் கோவில் வாசலில் ஆண்டு தோறும் நடைபெறும் இராமநவமிக் கச்சேரிகளை அக்கிரகாரத்துக்காரர்கள் பார்க்க முடியாதபடி ஒளிந்து நின்றுகொண்டு கேட்டுப் புளகித்துப் போன தோற்றம்தான் சட்டென்று என் நினைவில் எழுந்தது. அது நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய சமாசாரம். இன்று எங்கள் ஊர் எப்படி இருக்கிறதோ! அக்கிரகாரமே இருக்கிறதோ, இல்லாவிடில் கால மாறுதல்களால் பாதிக்கப்பெற்று அது இல்லாமல் கலப்பு அடைந்துவிட்டதோ! நான் பிறந்த ஊருக்குப் போய் வெகு நாளாயிற்று. நான் அந்த ஊரைச் சேர்ந்தவன் என்பது கூட அண்மைக்காலம் வரையில் அந்த ஊர்க்காரர்களுக்கே கூடத் தெரிந்திருக்க நியாயமில்லை. அது தெரிய நேர்ந்த பின்னர் அந்த ஊரிலிருந்து எனக்குப் பல கடிதங்கள் வந்தன. தங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராகி இருப்பது பற்றித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வந்த பாராட்டுக் கடிதங்கள்தான் அவை.

என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் ? ஆமாம். இராம நவமிக் கச்சேரிகளைக் கோவிலிலிருந்து சற்றுத் தொலைவில் – அக்கிரகாரத்துக்காரர்களின் பார்வையில் படாத தொலைவில் ஒளிந்துகொண்டு கேட்டு மகிழ்வது என் வழக்கம் என்றேன். இசையில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இருந்தது. இன்றும் இருக்கிறது. எனக்கு மட்டும் வசதியும் வாய்ப்பும் கிட்டியிருப்பின் இன்று நாடாளும் அமைச்சர்களுள் ஒருவனாக ஆனதற்குப் பதில் நாதத்தை வழிபடும் பாடகனாக – ஆகியிருந்திருப்பேன். எனக்கு இருந்த குரல் வசதி அத்தகையது. மஞ்சளாற்றின் கரையில், யானைக் கல்மீது உட்கார்ந்துகொண்டு ஊரோசை அடங்கியதற்குப் பிறகு எத்தனை இரவுகளில் நான் எனக்குப் பிடித்த பாடல்களைத் தப்பும் தவறுமாய்ப் பாடியிருக்கிறேன்! உருப்படிகளின் சொல்லமைப்புத் தெரியாத இடங்களில் எல்லாம் ‘ தனனன… தனனன ‘ என்று இழுத்து நிரப்பியிருக்கிறேன்! தமிழே சரியாகத் தெரியாத நிலையில் தெலுங்குப் பாடல்களைப் பிழையின்றி எப்படிப் பாடுவது ? அனர்த்தங்களாக்கி எப்படியெல்லாம் உளறிக்கொட்டி அவற்றைப் பாடி யிருந்தேனோ என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்னை வெட்கம் பிடுங்கித்தின்னுகிறது. என்னையும் மீறிக்கொண்டு சிரிப்பு வந்து விடும் போலிருக்கிறது.

‘சரச சாம தான பேத தண்ட சதுர… தனனன தானன ஆனானனா… ‘ – பத்து வயசில் எனக்கிருந்த குரல் இப்போது என் காதில் ஒலிக்கிறது.

எங்கள் குடியிருப்பு தெற்குத் தெருவில் இருந்தது. அங்கே கீழ்ச்சாதியினர் என்று முத்திரை குத்தப்பெற்றவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தார்கள். எங்கள் குடும்பத்தினரும் தங்கள் சாதிக்குரிய அந்தக் குறுகலான தெருவில்தான் வசித்து வந்தார்கள். எங்கள் தகப்பனார் முத்தன் நாவிதர் வகுப்பு. அக்கிரகாரத்தில் பலர் அப்பாவைத்தான் கூப்பிடுவார்கள். ஆற்றங்கரையில் அதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த திடலில் அப்பா தம் தொழிலைச் செய்வதைத் தொலைவில் நின்றவாறு நான் வேடிக்கை பார்ப்பதுண்டு. அப்பா மிக நன்றாக நாயனம் வாசிப்பார். எங்கள் வறுமை நிறைந்த குடும்பத்தில் மிக விலையுள்ள பொருள் அந்த நாதசுரம்தான். இசையில் மிகுந்த ஈடுபாடு எனக்கு இருந்ததைப் புரிந்துகொண்ட அப்பா எனக்கு நாயனம் சொல்லிக்கொடுக்க முனைந்தார். ஆனால், தொடர்ந்து அதைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மா சீக்காகப் படுத்தபோது அதை விற்று மருத்துவம் பார்க்க வேண்டிய இக்கட்டு நேர்ந்தது. அதை விற்பதற்கு அப்பா எவ்வளவு தயங்கினார் – எவ்வளவு வருந்தினார் – என்பது இன்றும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது. ஆனாலும் அம்மாவைக் காப்பாற்ற முடிய்வில்லை.

விசாலாட்சியம்மன் கோவிலில் சாமியின் புறப்பாட்டின்போதும், தேர் ஊரின் அக்கிரகாரத்து வீதிகளை வலம் வந்ததன் பிறகு கடைத்தெருவைச் சுற்றிவிட்டு மறுபடியும் கோவிலுக்கு வரும்போதும் சங்கீதக்காதுகள் படைத்த இசையன்பர்களின் குடுமிகள் அவிழ்ந்து புரளும் அளவிற்கு ரசிக்கும் வகையில் நாயனம் வாசித்துப் பேர் வாங்கியிருந்த நாயினாப் பிள்ளையைப்போல் நானும் பேர் வாங்கவேண்டும் என்கிற என் கனவில் மண் விழுந்தபோது நான் எப்படித் துடித்துப் போனேன் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். நாயனத்தை விற்றுவிட்டு வந்த அன்று அப்பவுக்கும் கூட உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. நான் பித்துப் பிடித்தவன் போன்று நாயனம் வழக்கமாக நிறுத்திவைக்கப்படும் வெறிச்சோடிப்போன மூலையைப் பார்த்துக்கொண்டு வெகு நேரம் கண்கள் கலங்க நின்றேன் – அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல்தான்.

நாயனம் வாசிக்கமுடியாத குறையை வாய்விட்டுப் பாடுவதன் வாயிலாக நான் ஓரளவு போக்கிக்கொள்ள முயன்றேன். அப்போது எங்கள் ஊரில் ஓரிருவர் வீடுகளில் மட்டுந்தான் ரேடியோ இருந்தது. அவர்களின் வீடுகளுக்கு அருகில் கூட நான் அண்ட முடியாத காலம் அது. சில மிலிட்டேரி ஓட்டல்களில் அந்த நாள்களில் கிராமஃபோன் வைத்திருந்தார்கள். நான் பெரும்பாலும் அந்த ஓட்டல்களின் வாயில்களில்தான் பழி கிடப்பது வழக்கம். ‘ மருவே செறிந்த குழலார் மயக்கின்… ‘ என்னும் தமிழ்ப்பாடலை – அது எனது தாய்மொழி என்கின்ற காரணம் பற்றி – ஓரளவு பிழையின்றிப் பாடக் கற்றுக்கொண்டேன். கல்லாவின் அருகே தலையை ஆட்டியபடி உட்கார்ந்திருந்த ஓட்டல் முதலாளியிடம் அந்தப் பாட்டைப் பாடியவர் யார் என்று நான் கேட்டதும்,. ‘திருச்செந்தூர் ஷண்முகவடிவு ‘ என்று அவர் பதில் சொன்னதும் இன்னும் எனது நினைவில் பசுமையாக இருக்கின்றன. ‘ என்ன ராகம், அய்யா ? கொஞ்சம் பிளேட்டைப் பார்த்துச் சொல்லுங்களேன் ‘ என்று நான் தொடர்ந்து வினவியபோது கண்களை அகல விரித்து என்னை விந்தையாகப் பார்த்தவாறு, ‘சிந்துபைரவி ‘ என்று இசைத்தட்டை உற்றுப் பார்த்துவிட்டு அவர் சொன்ன பதில் கூட எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்தப் பாட்டின் பின்புறத்தில் அதே பெண்மனி பாடியிருந்த மற்றொரு பாட்டான, ‘வண்ணத் தினை மாவைத் தெள்ளியே உண்ணும்… ‘ எனும் பாட்டும் எனக்கு மனப்பாடம் ஆகியது. அது பைரவி ராகத்தில் பாடப்பட்டிருந்தது என்பதையும் கடை முதலாளியைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அப்புறம், ஸ்ரீ ராம நவமிக் கச்சேரிகளைக் கேட்டுத் தப்பும் தவறுமாக நான் கற்றுக்கொண்ட தெலுங்கு, வடமொழிப் பாடல்களும் ஏராளம். என் குரலில் நானே மயங்கிப் போய்ச் சில நேரங்களில் குரலை உயர்த்தி நான் பாடுவது உண்டு. எனக்குப் பாட்டில் இருந்த ஆர்வத்தைப் பார்த்து அப்பாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லி மாளாது. ஆயினும் தாழ்ந்த வகுப்பில் பிறந்து ஏழையாகவும் இருந்ததால் எனது திறமை பளிச்சிடக் குறைந்த பட்ச வாய்ப்புக்கூட இல்

லாதது அவரை வருத்தியது. தமது வருத்தத்தை அவர் வாய் விட்டுப் புலம்புவதும் உண்டு.

‘ஏண்டாலே! ஏம் வவுத்துல பொறந்ததுக்குப் பதிலா ஒரு அய்யர் வீட்டுல பொறந்திருந்தா எம்மாம் நல்லாயிருந்திருக்கும்! ‘ என்று அவர் பல தடவைகள் புலம்பியிருக்கிறர். எனக்குப் பத்து வயது ஆகிக்கொண்டிருந்த பொழுது, நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். என்தகப்பனார் நாவிதராக இருந்தும், அவருக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் ஓரளவு தெரியும். என்னையும் படிக்கவைக்க அவர் விரும்பினார். நான் அப்படி யொன்றும் படிப்பில் புலி இல்லைதான் ஆனாலும் ஆண்டு தோறும் தேறிக்கொண்டு வந்தேன். எங்கள் இனத்தாரில் அப்பாவும் நானும் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தோம். அப்பா கல்வியின் அருமையை உணர்ந்தவராக இருந்ததை இன்று நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நான் படித்தது மிகவும் குறைவு தானெனினும் அந்தக் குறைந்த படிப்பேனும் இருப்பதால்தான் நான் இன்று அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கையில் என் கண்களில் நன்றிக்கண்ணீர் ததும்புகிறது. இந்த மகிழ்ச்சியினூடே நான் பாட்டுக் கற்றுக்கொண்டு ஒரு பேர் பெற்ற இசைக் கலைஞனாக ஆவதற்கு எனது சாதி தடையாக இருந்தது என்னும் கசப்பும் பானகத்துரும்பாக நெஞ்சில் நெருடத்தான் செய்கிறது…

ஒரு நாள் ஆற்றங்கரையில் அப்பா அவ்வூர்ப் பெரிய மனிதருள் ஒருவரும், பெரும் இசைக்கலைஞரும் ஆன சடகோபாச்சாரி அவர்களுக்கு முகம் மழித்துவிட்டுக் கொண்டிருந்த போது அருகில் இருந்த நான் எனது இசை ஞானம் பற்றி அப்பா அவருடன் பேசியதைக் கேட்க நேர்ந்தது.

‘எம்மவன் ரொம்ப நல்லாப் பாட்றாங்க, சாமி! குரல் ரொம்ப நல்லாருக்கு. நாயனமாச்சும் கத்துக் குடுக்கலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். முடியல்ல. அதையும் விக்கும்படி ஆயிறுச்சு…குரல் இல்லாதவனுக்குத் தானுங்களே விரல் ? அதனால் வாய்ப் பாட்டாச்சும் சொல்லிக் குடுக்கலாமான்னு ஆசை கெடந்து அடிச்சுக்குது… ‘

‘ அப்படியா ? எங்கே, ஒரு பாட்டுப் பாட்றா பயலே,கேப்போம், ‘ என்று ஐயர் பணிக்கவும், நான் கூச்சத்துடன் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.

அப்பா சிரித்துக் கொண்டே, ‘ பயப்படாம பாட்றா… ‘ என்று என்னை உற்சாகப்படுத்தினார். நான் அப்பாவின் காதுக்குள், ‘ என்ன பாட்டுப்பா பாடட்டும் ? ‘ என்று முணுமுணுப்பான குரலில் கேட்டேன். நான் கேட்டது அய்யரின் காதில் விழுந்துவிடவே, ‘ எது வேணும்னாலும் பாட்றா, பயலே. குரல் நல்ல குரலாயிருந்தா எந்தப் பாட்டும் நன்னாத்தான் இருக்கும். பாட்ற தினுசிலேர்ந்தே தெரிஞ்சு போயிடும் – அது கர்நாடக சங்கீதம் கத்துக்கக் கூடிய குரலா இல்லையாங்கிறது… ‘ என்று ஐயர் எனக்கு ஊக்கமூட்டினார்.

ஸ்ரீ ராமநவமிக் கச்சேரிகளில் நான் கேட்டு அரையும் குறையுமாய்க் கற்று வைத்திருந்த தெலுங்கு – வடமொழிப்பாடல்களைப் பாடுவதற்குக் கூச்சமாக இருந்ததால், தமிழ்த் தெம்மாங்குப் பாட்டு ஒன்றைப் பாடினேன். ‘சதுரகிரி மலையோரம் சார்ந்திருக்கும் ‘ என்று ஓங்கிய குரலில் நான் பாடத் தொடங்கியதும், ‘முத்தா! உன் வேலையைக் கொஞ்சம் நிறுத்திக்கோ, ‘ என்றார் ஐயர்.

அப்பா மழிப்பதை நிறுத்திவிட்டுப் பெருமையுடன் என்னைப் பார்த்தார். பழநி அஞ்சுகம் அந்தப் பாட்டைப் பாடியதாக நினைவு. அதைப் பாடி முடித்துவிட்டு வெட்கத்துடன் நான் அய்யரை ஓரக்கண்ணால் நோக்கியபோது அவரது பரந்த முகத்தில் சிரிப்புப் பரவியிருந்ததைக் கண்டேன். எனது பாடுந்திறனைஆமோதித்ததற்கான அடையாளமாக அதைப் புரிந்துகொண்டு நான் மகிழ்ந்துபோனேன்.

‘நல்ல குரல் இருக்கு உனக்கு. கமகம் ரொம்ப நன்னாப் பேசறது. சுத்தாமான சாஸ்திரீய சங்கீதக் குரல்டா உன்னோடது! இதெல்லாம் கடவுளுடைய வரப் பிரசாதம். எல்லாருக்கும் பாட வந்துடுமா ? ‘ என்ற ஐயர், ‘ இன்னொரு பாட்டுப் பாடேன், ‘ என்று சொல்லவும், அப்பாவின் உத்தரவுக்குக் காத்திராமல் நான் ‘பாதி மதி நதி ‘ எனும் திருப்புகழ்ப் பாடல் ஒன்றை உற்சாக

த்துடன் பாடினேன்.

‘ரொம்ப நன்னாப் பாட்றேடா, பையா. கண்ட கண்ட பாட்டை யெல்லாம் பாடாதே. பாட்டுங்குறது பகவானைப் பாராட்டுறதுக்குன்னு ஏற்பட்டது. மனுஷனைப் பண் படுத்தறதுக்காகவும் ஏற்பட்டது. தத்துவப் பாடல் பாடலாம். பக்திப் பாடல் பாடலாம். கீழ்த்தரமான பாட்டுகளையெல்லாம் பாடக்கூடாது… ‘ என்று அவர் கூறிய சொற்களின் முழுப்பொருளும் விளங்காவிட்டாலும் ஏதோ கொஞ்சம் புரியவே செய்தது.

அப்பா துளியும் தயங்காமல் பட்டென்று கேட்டுவிட்டார்: ‘நீங்கதான் எம் மவனுக்குச் சங்கீதம் கத்துக்குடுங்களேன், சாமி! ‘ என்று.

அய்யரின் முகம் சட்டென்று மாறியது. ‘என்ன முத்தா இது ? நீ என்ன பேசறே ? நான் வந்து உம்மகனுக்குப் பாட்டுச் சொல்லிக் குடுக்கறதா ? நடக்கற காரியமா அது ? நான் உன் மகனுக்குப் பாட்டுச் சொல்லிக் குடுத்தா, அப்புறம் என்னை ஜாதிப் பிரஷ்டம் பண்ணிடுவாடா இந்த ஊர்ல! ஏனக்கு வர்ற கச்சேரியெல்லாம் கூடப் போயிடும். .. மகாத்மா காந்தி பேசறதைக் கேட்டுட்டுக் கை தட்டிட்டு, மீட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வர்றச்சயே அவர் சொன்னதையெல்லாம் வேட்டி மணலை உதறித் தட்டிட்டு வர்ற மாதிரி வந்துட்ற நம்ம ஜனங்கள் நான் உம்மகனுக்குப் பாட்டுச்சொல்லிக் குடுத்தேன்னா என்னை ஒதுக்கி வெச்சுடுவாங்கடா! … நல்ல கேள்வி கேட்டே முத்தா! எனக்குச் சிரிக்கிறதா இல்லே அழறதான்னே தெரியல்லியே! இப்படியும் ஒரு மண்டு இருப்பியா! எனக்கு ஜாதிகள்ள நம்பிக்கை இல்லேதான். ஆனா ஊரும் உலகமும் நம்பறதே ? ஊரோட ஒத்துத்தானேப்பா நாமும் போகணும் ? நம்ம சாஸ்திரங்கள்ல தீண்டாமைங்குறது இல்லே. ஆனாலும் என்ன செய்யறது ? மகாத்மா காந்தி சொன்ன மாதிரி இதெல்லாம் நம்ம மதத்தைப் பிடிச்சிருக்குற சாபக்கேடு! ‘ என்று தமது ஏலாமை குறித்துச் சலித்துக்கொண்டபோது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

அப்பா, ‘ஏதோ ஆசை வெக்கமறியாதுன்னு கேட்டுப்புட்டேஞ்சாமி. மன்னிச்சிருங்க… ‘ என்று மெல்லிய குரலில் அவரை நோக்கிச் சொல்லிவிட்டுத் தம் வேலையைத் தொடர்ந்தபோது, ‘நீ கேட்டது தப்பே இல்லே, முத்தா. சில பழக்க வழக்கங்களை மீற முடியறதில்லை. நீதான் என்னை மன்னிக்கணும். இவ்வளவு நல்ல குரலுடைய ஒரு பிள்ளையாண்டானை நிராகரிக்கிறோமேன்னு எனக்கும் உள்ளூற வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்யறது ? ஹரிஜன்னு உங்களுக்கெல்லாம் பேரு வெச்சு மகாத்மா காந்தி கொண்டாடினாலும் – நானும் அதை மனப்பூர்வமா ஒத்துண்டாலும் -லெளகீகம்கிறதா ஒண்ணு இருக்கோல்லியோ ? அதை ஒட்டித்தானே வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கு ? நான் நிறைய சம்ஸ்கிருதம் படிச்சவன். நம்ம மதம் எந்த நையாண்டிகளுக்கு இப்பல்லாம் சில படிச்ச மனுஷாளால – முக்கியமா வெள்ளைக்காரனால – உள்ளாக்கப்பட்றதோ அதுக்கெல்லம் துளிக்கூட நியாயமே கிடையாதுங்குறது எனக்கு நன்னாத் தெரியறது. சாஸ்திரங்களை அரையும் குறையுமாப் படிச்சுட்டு சிலர் நம்ம மதத்தைத் திட்றா…குறை மதத்திலயோ சாஸ்திரங்கள்லயோ இல்லே. அதையெல்லாம் சரியாப் புரிஞ்சுக்காம மனுஷா பண்ற அக்கிரமங்கள்லதான் இருக்கு. ஆனா உலகத்தோட ஒட்டி வாழவேண்டியிருக்கிற நெலைமையில அந்த அக்கிரமங்களுக்கு அடி பணிஞ்சுதான் தீர வேண்டியிருக்கு… எதுக்கு இவ்வளவும் சொல்றேன்னா, உண்மையில எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. இவ்வளவு நல்ல சாரீரம் இருக்குற பிள்ளையாண்டானை ஒதுக்கித் தள்றோமேன்னு இருக்கு. நான் இவனை ஒதுக்கல்லைன்னா, இந்த அக்கிரகாரம் என்னை ஒதுக்கிடுமே, முத்தா ? ‘

அவர் நீளமாய்ப் பேசப் பேச, அவரது மெய்யான வருத்தமும் அது குறித்து அவர் பட்ட மனத்துன்பமும் எனக்கு நன்கு புரிந்தன. ‘ என்ன படித்து என்ன பயன் ? ஊராரை எதிர்ப்பதற்கு இந்த மனிதருக்குத் துணிச்சல் இல்லையே! ‘ என்று என் மனம் எண்ணி ஏமாற்றமுற்றது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்கள் இருப்பது நினைவில் தோன்றியபோது ஊருக்கும், லெளகீகம் எனப்படுகிற உலகநடைக்கும் அவர் அஞ்சியாகவேண்டியதன் இன்றியமையாமையும் எனக்குத் தெற்றெனத் தெரிந்தது.

… அடுத்த வருடம் அப்பா செத்துப்போனார். என் கிராமத்தை விட்டு நான் சென்னையில் லாண்டரி வைத்து நடத்திக்கொண்டிருந்த மாமன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வசதிகொண்டமாமன் என்னைப் படிக்க வைத்தார். அவருக்குப் பிறந்தவை யெல்லாம் பெண்களாகவே இருந்ததால்,என்னைத் தம் மகனைப்போல் எண்ணிச் சீராட்டினார். பத்தாம் வகுப்பு வரையில் படித்தேன். பள்ளியில் நடந்த பாட்டுப் போட்டிகளில் எல்லாம் முதல் பரிசு எனக்குத்தான். முறைப்படி இசை பயிலமுடியாமல் போனது குறித்து எனக்கு அளப்பரிய வருத்தம்தான். எங்களூர்ச் சடகோபாச்சாரியார் பேச்சைக் கேட்ட பிறகு, எதனாலோ சங்கீதம் கற்கும் எண்ணம் என்னைவிட்டுப் போய்விட்டது. அப்பாவும் போய்விட்ட நிலையில் பாடுவதற்கு வாயைத் திறந்தாலே, ‘ என்னடா பாட்டு வேண்டியிருக்குது ? பாடங்களை ஒழுங்காப் படிப்பியா ? ‘ என்னும் மாமன் – மாமியின் இடையறாத மிரட்டல்களின் விளைவாக என்னிடம் கொஞ்சநஞ்சமிருந்த ஆவலும் ஆர்வமும் பெருமளவுக்குத் தணிந்து போயின. இருப்பினும். இசையின் மேல் எனக்கு இருந்த பற்றுதல் மட்டும் குறையவில்லை. நான் பாடாவிட்டாலும், பாட்டுக் கேட்பதில் எனது நேரத்தின் பெரும்பகுதியைக் கழித்தேன்.

படிப்பு முடிந்ததும் மாமன் எனக்கென்று சொந்தத்தில் ஒரு சலவைக்கடையை நிறுவிக் கொடுத்தார். அது தொடர்புள்ள தொழில் நுட்பங்களையும் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். சென்னையில் எனக்குக்கிடைத்த சில நண்பர்களின் சேர்க்கையால், அரசியல் கட்சியொன்றில் சேர்ந்து நான் கட்சிப்பணியாற்றினேன். சில ஆண்டுகளுக்கு முன், தொண்டன் என்னும் பதவியிலிருந்து கட்சியின் செயலாளர் எனும் பதவிக்கு மாறுகின்ற அளவுக்கு எனது செல்வாக்கு வளர்ந்தது.

பல கூட்டங்களில் பேசிப் பழகி நான் மிகச்சிறந்த பேச்சாளனானேன். தொண்டனாக மட்டும் இருந்தபோது கட்சிக் கொள்கைகளையும் தலைவர்களையும் பற்றி நானே பல பாடல்களைப் புனைந்து கூட்டங்களில் அவற்றைப் பாடினேன். இசையோடு எனக்கிருந்த தொடர்பு – இறுதித்தொடர்பு – அதுதான். நான் கட்சியின் பெருந்தலைகளுள் ஒன்றாக ஆனபிறகு, எப்போதாவது என்னையும் மறந்து பொய்க்குரலில் பாட்டுகளை முனகுவதோடு சரி…

சடகோபாச்சாரியாரால் நான் நிராகரிக்கப்பட்ட ஆண்டு 1930. நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நாற்பது ஆண்டுகளுக்குள் ஊரும் உலகமும்தான் எவ்வளவு மாறிவிட்டன! லெளகீகம் என்பது எத்தகைய மாறுதல்களுக்கு உட்பட்டுவிட்டது! சடகோபாச்சாரியாரால் அன்று குறிப்பிடப்பட்ட லெளகீகம் என்னும் உலகநடையை இன்று நூற்றுக்கு நூறு நான் மீறப்போகிறேன். இன்று அமைச்சராகி யிருப்பவன் – இசைவிழாவுக்குத் தலைமை தாங்கி உரையாற்ற இருப்பவன் – இன்னான் என்பது அவருக்குத் தெரியவந்தால் அவருக்கு எப்படி இருக்குமோ!. இன்று அவருக்கு எண்பது வயசுக்கு மேல் ஆகியிருக்கும்….

… இசை விழாவைத் துவக்கி வைத்து நான் உரையாற்றினேன். இசையைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டவன் என்கிற முறையில் அதைப்பற்றிக்கூடப் பேசினேன். எனக்கும் பாட வருமென்று பெருமையாய்ச் சொல்லிக்கொண்டேன். எனக்கு மட்டும் வசதியும் வாய்ப்பும் இருந்து, உயர்குலம் என்று பட்டயம் கட்டப்பட்டிருக்கும் இனங்களுள் ஒன்றில் நான் பிறந்திருந்தால் இன்று ஒரு பெரிய இசைவல்லுநனாக ஆகியிருந்திருப்பேன் என்பதைத் தெரிவித்துக்கொண்டேன். அதை மெய்ப்பிக்கும் வகையில், தவறின்றி எனக்குப் பாடத்தெரிந்த தியாகையரின் கிருதியாகிய ‘மாகேலரா விசாரமு ‘ என்னும் பாட்டைக்கூடப் பாடிக்காட்டினேன். இசைத் துறையில் ஈடுபட எனக்குக்கொடுத்து வைக்கவில்லை என்பதையும், கேவலம் ஓர் அமைச்சராக மட்டுமே ஆக முடிந்தது என்றும் சொல்லிக்கொண்டேன்.

பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் என்னிடமிருந்து விருது பெறுவதற்காக அருகில் அமர்ந்திருந்த முதுபெருங் கிழவரை அடிக்கடி என் கண்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. அவருக்கு என்னைப் புரிந்திருக்க வழியில்லை. ஊரைவிட்டுப் பல ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பிப் போய்விட்டிருந்த நான் அதற்கு அப்புறம் அந்தப்பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை எனும் நிலையில் என்னைப்பற்றி அவர் எங்கே கேள்விப்பட்டிருக்கப் போகிறார் ? அதிலும் அவர் சென்னைக்கு வந்து என்றோ குடியேறிவட்டாராம்…கேள்விப்பட்டிருந்தேன்…

அடுத்து நான் பேசினேன்: ‘ உயர்திரு சடகோபாச்சாரியாரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் எங்கள் ஊர்க்காரர்தான்…. ‘ – ஓரக்கண்ணால் நான் அவரைக் கவனித்தபோது அவரது முகத்தில் வியப்புக்குறி படர்ந்ததைக் கண்டேன். ‘ஸ்ரீராம நவமியின்போது எங்களூரில் அவர் செய்துள்ள கச்சேரிகள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கின்றன. அவரிடம் பாட்டுக் கற்றுக்கொள்ளலாமா என்று கூட நான் யோசித்ததுண்டு. ஆயினும் சின்னஞ்சிறு வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்துவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டதால் அந்தப்பேறு எனக்குக் கிடைக்காமலே போய்விட்டது. போகட்டும்.. அவருக்குப் பதக்கம் அளிக்கும் பேறாகிலும் எனக்குக் கிடைத்ததே! அதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்… ‘

கண் பார்வை சற்றே மங்கியிருந்த சடகோபாச்சாரியார் எழுந்து நின்றார். ஒலிபெருக்கியைத் தள்ளி வைத்த நான், ‘ஐயா! என்னைத் தெரியுதா ?… நாந்தான் முத்தனின் மகன்… ‘ என்று அவருக்கு மட்டும் கேட்கும்படியான குரலில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். சடகோபாச்சாரியார் சட்டென்று என் கைகளைப்பற்றித் தம் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

‘எது நடந்தாலும் நல்லதுக்குத்தான்! பாட்டுச் சொல்லிண்டிருந்தா, நீங்க இவ்வளவு பேரும் புகழும் உள்ள அமைச்சரா ஆயிருக்கமுடியுமா ? ‘ என்று கண்ணீரூடே என்னைப் பார்க்க முயன்றவாறு அவர் சொன்ன சொற்கள் தழுதழுப்பினூடே வெளிப்பட்ட தினுசு அவர் மிகவும் மாறி விட்ட உண்மையை எனக்கு உணர்த்தியது எனக்கும் எதனாலோ கண் கலங்கிவிட்டது. அவரது கைப்பிடியின் அழுத்தத்தில் அவரது மனமாற்றத்தை உணர்ந்தேன்.

நான் அவரால் நிராகரிக்கப்பட்ட உண்மையை அங்கே சொல்லாது விட்டதை எனது பெருந்தன்மையாக அவர் கருதியிருக்கக்கூடும்.

‘ஐயா! என்னைப் பன்மையில் அழைக்கவேண்டாம். என்னதான் இன்னைக்கு அமைச்சராயிட்டாலும் ஒரு காலத்துல உங்ககிட்ட சங்கீதம் சொல்லிக்க விரும்பின மாணாக்கந்தான் நான்! நீங்க என் குருவுக்குச் சமானம்… ‘ என்றேன்.

அவர் என் முகத்தைத் தடவி, ‘தீர்க்காயுசா நன்னாருக்கணும் ‘ என்று வாழ்த்திய போது, அவர் என்னை நிராகரித்தது மனத்தின் ஒரு மூலையில் வலித்துக்கொண்டிருந்த புண் சட்டென்று மந்திரம் போட்டாற்போல் ஆறியது.

– ‘ நீலக்குயில் ‘ மாத இதழ் – 1974-இல் வந்தது.

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை.

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை.