உருவ வழிபாடுதான் சரியான வழிபாடு

This entry is part [part not set] of 15 in the series 20010325_Issue

சின்னக்கருப்பன்


முதலாவது கேள்வி – இந்த கட்டுரை தேவையா ? என்பது.

சமீபத்தில் இந்த பாமியான் சிலை உடைப்பின் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, எக்ஸ்பிரஸ், ரீடிஃப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளில் முஸ்லீம்களும் மற்றவர்களும் எழுதிய கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. முக்கியமாக வல்ஸன் தம்பு அவர்களும், ஸ்வாமி அக்னிவேஷ் என்ற ஆர்ய சமாஜ் தலைவரும் இணைந்து எழுதிய கட்டுரையும், ‘இந்து ‘வில் திரு காஞ்சா அய்லய்யா அவர்கள் எழுதிய கட்டுரையும், இன்னும் இந்திய பாகிஸ்தானிய முஸ்லீம் தலைவர்கள் (அஸ்கார் அலி என்ஜினீயர், இர்ஃபான் ஹஉசேன்) எழுதிய கட்டுரைகளும் உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. அவைகளிலெல்லாம், உருவ வழிபாட்டைச் செய்யும் இந்துக்களை மதிப்பதற்காகவே சிலைகளை உடைக்கக் கூடாது என்று சொல்கின்றன.

சரியான பல வழிபாடுகளில் உருவ வழிபாடும் ஒன்று என்று கூட இவர்கள் குறிப்பிட வில்லை. ஸ்வாமி அக்னிவேஷ் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர். ஆரிய சமாஜிகள் , கிறுஸ்தவ இறையியலால் பெரிதும் பாதிக்கப் பட்டு இந்து மதத்தில் சீர்திருத்தங்கள் புகுத்தியவர்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையில் தன் அம்மா ராமர் சிலை வைத்துக் கும்பிட பால் வேண்டும் என்றபோது ஒரு முஸ்லீம் வியாபாரி காசு வாங்காமல் பால் கொடுத்துவிட்டு போனதை எழுதி, அதுபோல தலிபான் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார் ஒரு தென்னிந்தியர்.

எனவே இந்தக் கட்டுரை உருவ வழிபாடுதான் சரியான வழிபாடு என்று வாதிட முனைகிறது. இந்தக்கட்டுரைதான் சரி என்றும் மற்ற கருத்துக்கள் தவறென்றும் நான் சொல்லவில்லை. இது போன்ற பார்வையில் ஒரு கட்டுரை இல்லாததாலேயே (அல்லது எனக்குப் படிக்க கிடைக்காததாலேயே) இது எழுதப்பட்டது. முஸ்லீம்கள், கிரிஸ்தவர்கள் மற்றும் யூதர்களது மத நம்பிக்கைகளை புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. உருவவழிபாடு ஒன்றும் அவ்வளவு பெரிய தவறல்ல என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ள இது எழுதப்பட்டது.

என்னைப்பொறுத்தவரை இந்தக் கட்டுரை தேவையில்லை. (எத்தனையோ பேர் பட்டினியில் சாகிறான், உருவ வழிபாடு இருந்தால் என்ன போனால் என்ன ? என்று என் இடதுசாரி நண்பர் ஆவேசப்படுகிறார்.) தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதி, அந்தப்பாட்டை எழுதிவிட்டேன் என்று வேறு எந்தப்பாட்டும் எழுதாமலில்லை அல்லவா. அதுபோல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

**

இணையத்திலிருந்து குரான் வரிகள் (முஸ்லீம் மாணவர் சங்க வலைப்பக்கத்திலிருந்து. ஷாகிர் என்பது மொழிபெயர்த்தவரின் பெயர்)

021.051 SHAKIR: And certainly We gave to Ibrahim his rectitude before, and We knew him fully well.

021.052 SHAKIR: When he said to his father and his people: What are these images to whose worship you cleave ?

021.053 SHAKIR: They said: We found our fathers worshipping them.

021.054 SHAKIR: He said: Certainly you have been, (both) you and your fathers, in manifest error.

021.055 SHAKIR: They said: Have you brought to us the truth, or are you one of the triflers ?

021.056 SHAKIR: He said: Nay! your Lord is the Lord of the heavens and the earth, Who brought them into existence, and I am of those who bear witness to this:

021.057 SHAKIR: And, by Allah! I will certainly do something against your idols after you go away, turning back.

021.058 SHAKIR: So he broke them into pieces, except the chief of them, that haply they may return to it.

021.059 SHAKIR: They said: Who has done this to our gods ? Most surely he is one of the unjust.

021.060 SHAKIR: They said: We heard a youth called Ibrahim speak of them.

021.061 SHAKIR: Said they: Then bring him before the eyes of the people, perhaps they may bear witness.

021.062 SHAKIR: They said: Have you done this to our gods, O Ibrahim ?

021.063 SHAKIR: He said: Surely (some doer) has done it; the chief of them is this, therefore ask them, if they can speak.

021.064 SHAKIR: Then they turned to themselves and said: Surely you yourselves are the unjust;

021.065 SHAKIR: Then they were made to hang down their heads: Certainly you know that they do not speak.

021.066 SHAKIR: He said: What! do you then serve besides Allah what brings you not any benefit at all, nor does it harm you ?

021.067 SHAKIR: Fie on you and on what you serve besides Allah; what! do you not then understand ?

021.068 SHAKIR: They said: Burn him and help your gods, if you are going to do (anything).

021.069 SHAKIR: We said: O fire! be a comfort and peace to Ibrahim;

021.070 SHAKIR: And they desired a war on him, but We made them the greatest losers.

பைபிள்

Ps 135:15-18 The idols of the nations are silver and gold, the work of men ‘s hands.16 They have mouths, but they do not speak; eyes they have, but they do not see;17 They have ears, but they do not hear; nor is there any breath in their mouths.18 Those who make them are like them; so is everyone who trusts in them. ‘

உருவவழிபாடு என்பதை எதிர்க்கும்போது, அந்த உருவம் பேசாது என்பது பெரிய குறையாக இருக்கிறது. சிலையைக் கட்டும்போது அந்தசிலை பேசும் என்றெண்ணி அந்த உருவத்தைப் படைத்தார்களா சிற்பிகள் ? ஓவியம் வரையும்போது அந்த ஓவியம் பேசும் என்றெண்ணி வரைந்தார்களா ஓவியர்கள் ? ஒரு மொழியை எழுதும்போது அந்த மொழி தானாக காகிதத்திலிருந்து பேசும் என்றெண்ணி எழுதினார்களா எழுத்தர்கள் ?

ஓவியத்துக்கும், வரைவதற்கும், இசைக்கும், கவிதைக்கும், சிற்பத்துக்கும் எதிரானது இஸ்லாம். இந்தத் தகவலை மறுப்பதற்கு ஆதாரமாக முஸ்லீமாக இருக்கும் சில கலைஞர்களை என்னிடம் காண்பிக்காதீர்கள். புனிதக்குரானிலும், நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றிலும் இந்த உருவ வழிபாட்டு எதிர்ப்பிற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இஸ்லாமிய அடிப்படை வாதம் தவறு என்று பேசும் மனிதர்கள், குரானில் சொல்லும் சில விஷயங்களை அப்படியே இன்று பயன்படுத்தக்கூடாது என்று கருதியே பேசுகிறார்கள். ஆனால் முஸ்லீம் மதகுருக்களோ அப்படி நம்புவதில்லை. இஸ்லாம் கடவுள் உலகத்தில் ஸ்தாபித்த கடைசி மதம் என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால், குரானில் சொன்னவற்றை அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை. அதுவே இஸ்லாமிஸம் என்றும், முஸ்லீம் அடிப்படை வாதம் என்றும் பேசப்படுகிறது. இவ்வாறு கடைப் பிடிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது வட்டி தவறு என்று குரான் சொல்கிறது. ஆகவே வட்டி இல்லாமல் ஒரு பொருளாதாரத்தை கட்டமைப்பதில் முஸ்லீம் பொருளாதார நிபுணர்கள் பலகாலம் சிந்தித்தும் இன்னும் ஒரு பொருளாதார அமைப்பை கட்டமுடியவில்லை. அது முஸ்லீம் மதகுருக்களுக்கு முக்கியமான விஷயம் அல்ல, வட்டி என்பதை தடை செய்து சட்டம் இயற்றிவிட்டால் எல்லாப் பிரச்னைகளும் முடிந்துவிடும் என்று ஆத்மார்த்தமாக நம்புகிறார்கள். இது போன்ற பல நியதிகளை முன்னிறுத்தி ஷாரியத் என்ற முஸ்லீம் மதச் சட்டத்தை முழுமையாக அமல் செய்ய பாகிஸ்தானிலும், பிற இஸ்லாமிய நாடுகளிலும் கோரிக்கை எழுந்துள்ளது. அவ்வாறு அமல் செய்வதில் இன்னும் பல சிக்கல்கள் இருக்கின்றன. (உதாரணமாக பாஸ்போர்டில் புகைப்படத்தைப் போட முடியாது போன்ற சிக்கல்கள்.)

இதையெல்லாம் தீர விமர்சிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை. யூத மதத்தின் ஸ்தாபகரான மோஸஸ் என்ற தீர்க்கதரிசியும், அவர் வழி வந்த தீர்க்க தரிசிகளும், பின்னர் யேசு கிரிஸ்துவும், பின்னால் நபிகள் நாயகம் அவர்களும் வலியுறுத்திச்சொன்ன உருவவழிபாடு எதிர்ப்பு பற்றி உரத்துச் சிந்திப்பது என்பது மட்டுமே இந்தக்கட்டுரையின் நோக்கம்

***

என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா உருவ வழிபாட்டைப் பற்றி விளக்கம் கொடுத்ததிலிருந்து நான் எடுத்து எழுதியிருக்கிறேன்.

கடவுள் அற்ற மனிதர்களையும் பொருள்களையும், கடவுள் என்று வணங்குவது idolatry என யூத மதமும் கிரிஸ்தவ மதமும் கூறுகின்றன. பத்துக்கட்டளைகளில் முதலாவது ‘ ‘You shall have no other gods before me. ‘ (எனக்கு முன்னால் வேறெந்த கடவுளையும் வைக்காதே) என கூறுகிறது. இதோடு கூடவே ‘You shall not make yourself a graven image, or any likeness of anything, ‘ (உனக்காக எந்த பிம்பத்தையோ, உருவ ஒற்றுமையுள்ள எதையுமோ உருவாக்கிக்கொள்ளாதே) என்றும் கூறுகிறது.

யூத மதத்திலும் கிரிஸ்தவ மதத்திலும், உருவ வழிபாடு என்பது கடவுள் அற்ற மற்ற விஷயங்களையோ, மனிதர்களையோ வணங்குவது தவறானது.

Thou shalt have no other gods before me. Thou shalt not make unto thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth: Thou shalt not bow down thyself to them, nor serve them: for I the LORD thy God am a jealous God, visiting the iniquity of the fathers upon the children unto the third and fourth generation of them that hate me; And shewing mercy unto thousands of them that love me, and keep my commandments.

Ex 20:1-8

Their land also is full of idols; they worship the work of their own hands Isa 2:8-12

நான் கிராமத்தான். சென்னை கல்லூரித் தமிழில் ‘ஊரான் ‘. என் கால்கள் உறுதியாக நிலத்தில் இருக்கின்றன. என் குழந்தையின் காதுகுத்தும் விழாவுக்கு நான் ஆட்டுக்கடா வெட்டி, படையல் போட்டு காட்டேரி அம்மனுக்கும், மதுரைவீரனுக்கும் சாராயத்தோடு படைத்துதான் கொண்டாடுகிறேன். எங்கள் ஊர் அய்யனார் விழாவுக்கு நான் சென்னையிலிருந்து எங்கள் ஊருக்கு வருடம் தவறாமல் போகிறேன். வெக்காளி அம்மன் கோவில் விழாவுக்கு எங்கிருந்தாலும் பணம் அனுப்புகிறேன். வீட்டில் எல் ஆர் ஈஸ்வரியின் பாடல் கட்டாயம் கேட்கும்.

ஆனால் எந்தக்காலத்திலும் காட்டேரி அம்மன் என்னிடம் வட்டி வாங்கக்கூடாது என்று சொல்லவில்லை. கம்ப்யூட்டர் வேலை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. வெக்காளி அம்மன் கோவிலுக்கு வரும் செருப்புத்தைப்பவர்களிலிருந்து, அய்யர் வரை எல்லோரையும் ஆங்காரமாக மேல் கூரை இல்லாமல் உக்கிரமாகப் பார்க்கிறாள் வெக்காளி, அவள் கண்ணைப் பார்க்காதே அவள் காலைப்பார் என்று என் சித்தப்பா எனக்கு அறிவுரை கூறுகிறார். அந்தக்கால் உன் அகம்பாவத்தின் மேல் மிதிப்பதாக யோசி என்று என் சித்தப்பா சொல்கிறார்.

ஆறு ஓடுகிறது அருகில். அம்மா என்று ஆற்றைக்கும்பிட்டு வணங்குகிறார் சித்தப்பா. குளித்துவிட்டு படியேறும்போது பிள்ளையார் சிலை. கீழே சிதறிக்கிடக்கும் காய்ந்த அரச இலைகளின் மீது நடக்கும்போது பிள்ளையாரின் முன் சற்று தயங்கி நின்று கும்பிட்டுவிட்டு படியேறுகிறார் சித்தப்பா.

வீட்டுக்குப் போகும்போது கேட்டேன். ‘சித்தப்பா, நட்ட கல்லும் பேசுமோ ? ‘ என்றேன். சித்தப்பா கேட்டார் ‘நாதன் உள்ளிருக்கையிலே ? ‘.

‘போடா, நீ பெரியவனானா தெரியும் உனக்கு. போ ‘ என்றார்.

அவர் சொன்னது என் கேள்விக்கு பதிலும் அல்ல, என் கேள்விக்கு எதிர்க் கேள்வியும் அல்ல. அவர் சொல்வது எனக்கு எப்போது பதில் தெரியும் என்பது பற்றி. அனுபவமும், மன முதிர்ச்சியுமே எனக்கு பதில் சொல்லும் என்று சொல்கிறார் சித்தப்பா. இப்போது இதை யோசித்துப் பார்க்கும் போது , இந்த வார்த்தைகளை உருவ வழிபாட்டிற்கு எதிரான வாதமாக நான் எண்ணியதன் தவறு எனக்குப் புரிகிறது. ‘நாதன் உள்ளிருக்கையில் ‘ என்ற வார்த்தை யூத-கிருஸ்தவ-இஸ்லாமிய மதங்களின் அடிப்படைகளுக்கு முற்றும் முரணானது. ‘உள் ‘ளிருக்கும் நாதன் என்பது இந்த மதங்களில் தெய்வ நிந்தனைக்குச் சமம்.

***

மோஸஸ் தனது புதிய மதத்தில் உருவ வழிபாட்டு எதிர்ப்பை புகுத்தியபோது, அந்த விஷயம் எதிர்காலத்தில் ஒரு பெரிய புயல்காற்றாக ஆகி உலகத்தின் பெரிய மூன்று மதங்களின் முக்கிய சிந்தனையாகவும், அது மற்ற மனிதர்களின் கலாச்சாரத்தின் மீது தாக்குதலுக்கான குவியும் புள்ளியாக மாறும் என்றும் அவர் சிந்திந்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். (அவர் அவரது பழங்குடியினர் கடவுளும் மற்றவர்களின் பழங்குடியினர் கடவுளும் ஒன்றுதான் என்று சிந்தித்திருந்தாரா என்பது எனக்கு தெரியாத விஷயம். எல்லொர்ருக்கும் ஒரே கடவுள் என்ற சிந்தனை அவருக்கு இருந்ததாகச் சொல்ல முடியாது. தம் கடவுள் என்று பரோவாக்களின் கடவுளிலிருந்து தம் கடவுளை வேறுபடுத்தியே பெச்சுகிறார் என்று தோன்றுகிறது. இந்தச் சிந்தனையைப் புரிந்து கொள்ள முடியும். அடிமைப் பட்டவர்களுக்கும், அடிமைகளின் ஆண்டான்களுக்கும் எப்படி ஒரே கடவுள் இருக்க முடியும் ?).

அவர் தனது கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளைப் பெற்று வரும்போது, அவர் எகிப்திய அரசர்களான பரோவாக்களிடமிருந்து தன் இனமான யூத இனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைய வைத்து இஸ்ரேலுக்கு கொண்டுவந்தார். அந்த அரசர்களான பரோவாக்கள் தாங்களே கடவுள்கள் என்று கூறினார்கள். யூதர்களின் கடவுளை, இந்த மாதிரியான கடவுள்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட அவர் Thou shalt have no other gods before me. என்று தம் மக்களிடம் கூறினார். நம் கடவுளோடு மற்ற கடவுள்களைக் (இந்த நேரத்தில் மனிதர்களான அரசர்களைக்) கும்பிடக்கூடாது. அப்படியென்றால் பக்கத்தில் வைத்துக்கொள்ளலாமா எனக் கேட்காதீர்கள். இந்த வரிக்கு, அன்றைய, இன்றைய பொருள் என்னைத்தவிர வேறொருவரை கும்பிடாதே என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாவது கட்டளையான Thou shalt not make unto thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth: Thou shalt not bow down thyself to them, nor serve them:

**

சிற்பமோ, ஓவியமோ எந்த படிமத்தையும் பண்ணாதே என்று சொல்கிறது. இது கடவுள் என்று சிலை வைக்காதே என்று மட்டும் சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும். வானத்தில் இருக்கும் எந்த விஷயத்தைப் போலவோ, பூமியில் இருக்கும் எந்த விஷயத்தைப் போலவோ, தண்ணீருக்குள் இருக்கும் எந்த விஷயத்தைப் போலவோ எந்த மாதிரியும் சிற்பம் வடிக்காதே. படிமத்தைச் செய்து அதை வணங்காதே என்றும் சொல்கிறது. (என் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கும் பட்சத்தில் ஆங்கிலத்தைப் பார்க்கவும்)

இரண்டாவது எகிப்திய அரசர்களான பரோவாக்கள் தங்கள் உருவங்களை பெரும் பெரும் சிலைகளாக வடித்தார்கள். பெரும் பெரும் கட்டடங்களைக் கட்டி அதில் தங்கள் உருவங்களை பாதுகாத்தார்கள். அவைகள் அவர்கள் இருக்கும்போதே அந்த கட்டடங்களிலும் சிலைகளிலும் இருந்த தங்கம் மற்றும் பல பொருள்களுக்காக திருடப்பட்டன, உடைக்கப்பட்டன. இதனாலோ என்னவோ, மோஸஸ் இரண்டாவது கட்டளையாக கடவுளுக்கான உருவச்சிலைகளைச் செய்யவேண்டாமென்று கூறியிருக்கலாம்.

அதற்கு அர்த்தம் கடவுள் உருவமற்றவர் என்பது அல்ல. கடவுள் தன் உருவத்தின் மாதிரியிலேயே ஆதாமைப் படைத்தார் என்று பைபிள் குறிப்பிடுகிறது.(god has created adam in his image) எனவே யூதக்கடவுளுக்கு கைகளும், கால்களும், தலையும் கண்களும் மற்ற அங்கங்களும் இருக்கின்றன. யூத பழங்குடியினர் தங்கள் கடவுளின் அருளைப் பெற்றுத்தர ஒரு தங்கக்கன்றுக்குட்டியை வடிவம் செய்ததன் பிறகுதான் கடவுள் இந்தக் கட்டளைகளைத் தருகிறார் மோசஸ்சுக்கு. தன் பிரதிமையில் தான் கடவுள் மனித இனத்தைப் படைத்தார் என்று யூத-கிருஸ்தவ மதங்கள் உறுதியாய் நம்புகின்றன. அதனால் தான் பரிணாமக் கொள்கை கடவுள் விரோதக் கொள்கை என்றும் , மனிதன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் ‘உயர்ந்த ‘ இனம் என்றும் இந்த மதங்கள் நம்புகின்றன.

ஆனால் கிரிஸ்தவ மற்றும் யூத கோவில்களில் பிரதிமைகளும், ஸிம்பாலிஸமும் நிறையக்கிடக்கின்றன. சிலுவை, மினோரா, சிலுவையில் தொங்கும் ஏசு. ஒரே மாதிரி செய்யப்படும் சடங்குகள், லத்தீனிலும், மற்ற மொழிகளிலும் ராகமாய் இசைக்கப்படும் பேச்சு மொழிப்படிமங்கள் ஆகியவை காணலாம். உருவ வழிபாட்டை எதிர்க்கிற புரொட்டஸ்டண்ட் மதம் – இன்று தாலிபன் செய்த சிலை உடைப்பை புரொட்டஸ்டண்ட் மதத்தினரும் கூடச் செய்ததுண்டு – கூட சிலுவையை வணங்க முற்படுகிறது.

இஸ்லாம் இன்னும் சற்று முன்னுக்குச் சென்று எல்லாப் படிமங்களையும் உடைக்க முந்துகிறது. ஓவியங்கள், சிலைகள் எல்லாமும் இஸ்மாமில் தடைசெய்யப்பட்டவை. குரானில் கீழ்க்கண்ட வரிகள் இருக்கின்றன.

ஆகவே எது உருவவழிபாடு என்று நிர்ணயம் செய்யப்படுகிறது ?

கடவுளைத்தவிர வேறொன்றை வணங்குவதோ, வேறொன்றுக்கு விசுவாசமாக இருப்பதோ உருவவழிபாடு என்றும் இந்தமதச்சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். Thou shall have no gods before me.

எந்த விஷயத்துக்கும் உருவமோ, படிமமோ செய்வதும் தடைசெய்யப்பட்ட ஒன்று. கடவுளுக்கும் உருவம் வடிக்கக்கூடாது என்பதும் சொல்கிறார்கள். வடித்த உருவத்தை கடவுளின் வடிவமாக வணங்கக்கூடாது என்றும் கூறுகிறார்கள்.

Encyclopedia Britannica பின்வருமாறு கூறுகிறது.

In Judaism and Christianity, the worship of someone or something other than God as though it were God. The first of the biblical Ten Commandments prohibits idolatry: ‘You shall have no other gods before me. ‘

Several forms of idolatry have been distinguished. Gross, or overt, idolatry consists of explicit acts of reverence addressed to a person or an object–the sun, the king, an animal, a statue. This may exist alongside the acknowledgment of a supreme being; e.g., Israel worshiped the golden calf at the foot of Mount Sinai, where it had encamped to receive the Law and the covenant of the one true God.

A person becomes guilty of a more subtle idolatry, however, when, although overt acts of adoration are avoided, he attaches to a creature the confidence, loyalty, and devotion that properly belong only to the Creator. Thus, the nation is a good creature of God, but it is to be loved and served with an affection appropriate to it, not with the ultimate devotion that must be reserved for the Lord of all nations. Even true doctrine (e.g., true doctrine about idolatry) may become an idol if it fails to point beyond itself to God alone.

**

இந்தக்கட்டளைகளை அப்படியே, அதன் எல்லா பின்புலத்தோடும், அதனால் சொல்லப்படும் எல்லா விஷயங்களையும் பின்பற்றினால் சமுதாயமே அழிந்து போய்விடும்.

யூதமும் யூதம் சார்ந்த மதங்களையும் சேர்ந்த மதச்சிந்தனையாளர்கள் வெவ்வேறு கொள்கைகளும், குழுப்பார்வையும் கடவுள் எச்சரித்த இதுபோன்ற கடவுள்களே என்று கூறுகிறார்கள். ஜனநாயகம், கிரிஸ்தவ சர்ச், கேபிடலிஸம், கம்யூனிஸம், போன்ற சிந்தனைகள் தீர்வையும், சந்தோஷத்தையும் தரும் என்று மக்கள் நம்புவதும் தவறு என்றும் கூறுகிறார்கள். இந்தக் கடவுள்கள் உண்மையானக் கடவுளை மக்கள் கும்பிடாமல் திசை திருப்பிவிடுகின்றன என்று வாதிடுகிறார்கள்.

மேலே – Encycloppedia Britaannica – வில் எழுதிய கட்டுரை ஒரு தேசத்தை கடவுளின் உருவாக்கம் என்று கூறுகிறது. அது மனிதர்களின் உருவாக்கம் என்பது நடைமுறை. தேசத்துக்கு விசுவாசமாக இருக்கலாம் அது கடவுளிடம் ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய விசுவாசத்திற்கு அதிகமாக இருக்ககூடாது என்று கூறுகிறது. இது ‘எனக்கு முன் வேறு கடவுள்களை வைக்காதே ‘ என்ற கொள்கையை, வேறு முறையில் ‘பக்கத்தில் வைக்கலாம் ‘ என்று பொருளில் குறிப்பிடுகிறது. அப்படியென்றால், எகிப்திய ராஜாக்களையும் கடவுளாகக்கும்பிடலாம் ஆனால் யூதக்கடவுளைவிட அதிகமாக கும்பிடக்கூடாது என்று புரிந்து கொள்ளலாமா ? அது தவறு என வாதிடுவார்கள். இவ்வாறு நாட்டுப்பற்றையும் கடவுள்பற்றையும் எதிர் எதிர் திசைகளில் இந்தக் கொள்கை வைக்கிறது.

மக்கள் இயற்கையாகவே குழுக்களில் வாழ்கிறார்கள். யூதமக்களும், வெவ்வேறு மக்களும் தங்கள் தங்கள் குழுக்களில் வாழ்கிறார்கள். எல்லோரும் இணைந்த ஒரு வலிமையும், குழுவுக்கு அதன் உறுப்பினர்கள் கொடுக்கும் விசுவாசமுமே எல்லோருக்குமான பொது வலிமையாக மாறுகிறது. யூதர்கள், ‘நான் கடவுளுக்கு மட்டுமே விசுவாசமானவன், இந்த குழுமத்துக்கு விசுவாசமாக இருக்கமாட்டேன் ‘ என்று கூறி, மக்கள் தங்களது கடவுள் கொடுத்த கட்டளையை குழு விசுவாசத்துக்கு எதிரானதாக புரிந்திருந்திருப்பார்களேயானால், அவர்கள் இன்று யூதர்களாகவே அறிந்து கொண்டிருக்கப்படமாட்டார்கள். குழும விசுவாசம் இல்லாத மக்கள் மற்றவர்களால் அழிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டிருப்பார்கள். அப்படி குழு விசுவாசம் இல்லாத மக்கள் அடிமைகளாகப்பட்டதும் அழிக்கப்பட்டதும் வரலாறு முழுவதும் காணக்கிடக்கின்றது. மக்கள் தங்கள் ஒற்றுமைக்காகவும் தங்களை திருடர்களிடமிருந்தும், மற்ற அழிவுகளிலிருந்தும் காப்பாற்றிக்கொள்ள அரசனையும், அரசையும், மற்றும் பல வேறு அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். அவையெல்லாம் ‘வேற்றுக் கடவுள்கள் ‘ என்று வாதிட்டால் கடவுளைப்பற்றி சிந்திக்கக் கூடிய நேரமும் வசதியும் செய்துதரும் சமுதாய அமைப்பே அழிந்தல்லவா போகும் ?

கொள்கைகள் இல்லாத ஒரு சமுதாயத்தையும் சிந்தித்துப்பாருங்கள். ஒரு மனிதன் சிந்திப்பதையே நிறுத்த வேண்டும் என்று இது கோருகிறது. ஏனெனில் எந்தச்சிந்தனையும் அது இன்னொரு மனிதனிடம் தன் சிந்தனையைச் சொல்வதை காரணமாக்குகிறது. இன்னொரு மனிதன் அதை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ செய்யலாம். அது ஒரு விவாதத்தையும், மறு சிந்தனையையும் கொண்டுவருகிறது. பேச்சுகளும், விவாதங்களும் ஒரு தன்னுள் இணங்கிய ஒரு கோரிக்கைகளாகவும் கொள்கைகளாகவும் தோன்றுகின்றன. எல்லா கொள்கைகளும் ஒரு குறிப்பிட்ட மக்களின் நல்வாழ்வையும், அந்த மக்களின் எதிர்கால வாழ்வையும் உறுதி செய்வதாகவுமே மக்களின் முன் ஆய்வுக்கு வைக்கப்படுகின்றன. மக்களும் எந்த கொள்கை அந்த சூழ்நிலையில் வாழ்வதற்கு உதவுமோ அதை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அரசனால் கட்டாயப்படுத்தப்பட்டு மதம் மாறுவதும், அரசுக்கு விசுவாசம் என்பதை மக்களே முன்னிருத்துவதும், குறிப்பிட்ட ஒரு சிறுபான்மையினரின் கொள்கை பெரும்பாலானவர்களின் அழிவுக்கு வழி வகுக்கும் என்று சிறுபான்மையினரின் கொள்கைகயைக் கட்டுப்படுத்த நினைப்பதும், பலவேறு சிறுபான்மையினரே மிகுந்த நாட்டில் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் கொள்கையை வகுத்துக்கொள்வதும் இதனாலேயே நடக்கின்றன. மக்கள் எந்த கடவுள் பற்றிய கொள்கைகளில் எந்தக்கொள்கை சிறப்பானது என்று ஆராய்ந்து, நுணுக்கங்கள் புரிந்து, எல்லைகளை அறிந்து ஒரு மதத்துக்குச் செல்வதில்லை. தமது வாழ்க்கையும், தம் தம் சந்ததியாரின் வாழ்க்கையும், எதனால் உறுதிப்படும் என்று நினைக்கிறார்களோ அவைகளை முதலிலும், எந்தக்கடவுள் என்பதை அடுத்ததும் வைத்துக்கொள்கிறார்கள். ஏனென்று பார்ப்பது கடினமில்லை. கடவுள் பற்றிய கொள்கை முக்கியம் என்று சொன்னவர்களின் அழிவும், மாற்றிக்கொள்வதை லேசாக எடுத்துக் கொண்டவர்களின் வாழ்வுமே காரணம். (ஒரு காலகட்டத்தில் நல்ல வழியாக இருந்தது, இன்னொரு காலகட்டத்தில் நல்ல வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் இதில் உள்ளடங்கும்)

அடுத்த கட்டளை இன்னும் நடைமுறைக்கு ஒவ்வாதது.

படிமம் என்பது இன்னொரு நிஜத்தின் நிழல். நிழலே நிஜமாகிவிடாது என்பது நிழலைப்படைத்தவனுக்கும், நிழலைப்பார்ப்பவனுக்கும் தெரியும். இருந்து நிழல் ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறது. அதனாலேயே அது தேவையாக இருக்கிறது. தங்கத்தை ஒரு கன்றுக்குட்டி போல வடிவமைத்தால் அது மினுக்கும் தங்கக்கன்றுக்குட்டி என்பது தெரிகிறது. ஒரு சாதாரண கன்றுக்குட்டியை விட விலை மதிப்பு வாய்ந்த இது, நிச்சயமாக ஒரு கன்றுக்குட்டியாக முடியவே முடியாது. ஒரு ஓவியம் பல வண்ணங்களின் தீற்றலாக வெவ்வேறு இடங்களில் தீட்டப்பட்டு ஒரு மனிதனின் பார்வைக்கு அது கன்றுக்குட்டியை நன்றாக ஞாபகப்படுத்தலாம். இருப்பினும் அது கன்றுக்குட்டியல்ல. யார் ஏமாந்தது ? யாரேனும் ஏமாந்தால், ஏமாந்தவன் அதைப் படைத்தவனை அவ்வாறு ஏமாறும்படி திறமையாகப் படைத்ததற்கு பாராட்டவே செய்வான்.

நாம் படிமங்களின் உலகத்தில் வாழ்கிறோம். நாம் செய்யும் ஒவ்வொன்றும், சிந்திக்கும் ஒவ்வொன்றும் படிமங்கள் மூலமாகவே சாத்தியமாகின்றது. நம் சமுதாயத்தில் திரும்பும் இடமெங்கும் படிமங்களைப் பார்க்கிறோம். படிமங்கள் இல்லையேல், நமது பேச்சு மொழியும், எழுத்து மொழியும், சிந்தனையும், கல்வியும் சுத்தமாக அழியும்.

சிஸ்டைன் கோவிலில் மேரி தன் மடியில் இறந்த ஏசுவை கிடத்தி கண்ணீர் வடிக்கின்றார். மைக்கலாஞ்சலோவின் மகத்தான படைப்புக்களில் ஒன்று இது. அதைப்பார்க்கும்போது, தாயான தான் இறப்பதற்கு முன்னர் இறந்துபோன மகனைப்பார்த்து ஒரு தாய் வடிக்கும் கண்ணீராகப்பார்க்கலாம். ரத்தம் தோய்ந்த ஏசுவை மடியில் தாங்கிக் கலங்கிப் போய் இருக்கும் மேரியின் சோகத்தை பார்க்கலாம். ஏசுவின் கதையை அறிந்திராத ஒருவனுக்கு தாய் தன் மகனின் சாவிற்கு வருந்துவதாய்த் தோன்றலாம். யார் எதைப்பார்க்கிறார்கள் என்பது பார்ப்பவரின் கண்களில், அவரது அனுபவத்தில், அவரது சிந்தனையின் வீச்சைப் பொறுத்தது. இருந்தும் அந்தச் சிலை ஒரு குருட்டு குஷ்டரோகிக்கு என்ன பயன் ? பார்க்கவும் இயலாது, தொட்டுணரவும் இயலாது. ஆக ஒரு சிற்பத்தில் இயற்கையாக உள்ளே ஒன்றும் கிடையாது. பார்க்க முடியாதவனுக்கு வெறும் கல்தான். இதைப்போலவே ஒரு குருடனுக்கு ஓவியமும், பிறவிச்செவிடனுக்கு இசையும், படிக்கத்தெரியாதவனுக்கு எழுத்து மொழியும் பொருளற்றது.

தொல்காப்பியர் எல்லாச்சொற்களும் தற்குறிப்பேற்றம் தான் என்று சொல்கிறார். எந்தப்பொருளுக்கும் உள்ளார்ந்த அர்த்தம் என்று ஒன்றும் கிடையாது. நாம் ஒரு ஓசை மீது நாம் ஏற்றும் பொருளே அதன் படிமம் என்று கூறுகிறார். இஸ்லாமியர் தங்கள் கடவுளை ‘அல்லா ‘ என்று அழைக்கின்றனர். ஓசையைக் கேட்பவருக்கு அந்த ஓசை ‘இல்லை ‘ என்று பொருள்படும். கிரிஸ்தவர்கள் தங்கள் கடவுளை ‘ஏசு ‘ என அழைக்கின்றனர். தமிழில் அந்த வார்த்தைக்கு ‘திட்டு ‘ என்று பொருள்படும். கடவுளைக் குறிப்பிடும் வார்த்தைகள் கூட எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை அல்ல. ஒரு வார்த்தைக்கும் தானாக உள்ளார்ந்து பொருள் கிடையாது. எல்லா வார்த்தைகளும் இன்னொரு விஷயத்தை குறிப்பிடும் குறியீடுகள்தான்.

படிமங்களை சிதைக்க விரும்பும் மதம் சார்ந்த மக்கள், அவர்களது வேதப்புத்தகங்களின் பக்கங்களை, எதிர்ப்பாளர்கள் எரித்தால் கோபப்படுகிறார்கள். எரித்த பக்கங்களில் இருந்ததென்ன ? அந்தக்காகிதங்கள் மனிதர்களால் தயாரிக்கப்பட்டவை. அந்தப்பக்கங்களில் ஒரு குறிப்பிட்ட பிராந்திய மொழியில் மனிதர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்தப்பிராந்திய மொழியும் பல படிமங்களும் குறியீடுகளும் சேர்ந்த ஒரு கூட்டு. அம்மொழியில் இருக்கும் குறியீடுகளும் வேறொன்றை குறிப்பிடும் குறியீடுகள். (நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்தா போய்விடும் ?) புத்தச்சிலை புத்தரல்ல. புத்தரை குறிப்பிடும் ஒரு குறியீடு. புத்தர் என்று சொல்வது எப்படி புத்தரை ஞாபகப்படுத்துமோ அது போல புத்தச்சிலையும் ஒரு மனிதனுக்கு புத்தரை மகத்தான முறையில் ஞாபகப்படுத்தும் ஒரு குறியீடு. அப்படி இருக்கையில் ஏன் அம்மக்கள் அவர்களது வேதப்புத்தகத்தை எரித்ததும் கோபப்பட்டார்கள் ? அவ்வாறு எரித்தால் ஒரு சாரார் கோபப்படலாம் எனில் புத்தச்சிலை உடைக்க ஏன் மற்றவர்கள் கோபப்படலாகாது ? (குறியீடு அடையாளமாகி, குறியீடு அழிக்கப்படும்போது, தமது அடையாளம் அழிக்கப்படுவதாக மக்கள் உணர்வதைப் பாருங்கள்)

மீண்டும் குறியீடு/படிமம் விவாதத்துக்கு வருவோம்.

முஸ்லீம்களும் கிரிஸ்தவர்களும் அவர்களது வேதப்புத்தகங்கள் கடவுள் பேசியவற்றின் தொகுப்புகள் என நம்புகிறார்கள். புத்தகமும் மனிதன் படைத்தது, வார்த்தைகளும் மனிதன் எழுதியது. அந்தவார்த்தைகளுக்கும் மனத்தில் தோன்றும் அர்த்தங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்துவதன் மூலமே ஒரு மனிதச் செயலுக்கு வடிவம் பிறக்கிறது. அர்த்தங்கள் அனர்த்தங்கள் ஆவதும் அது திருத்தப்படுவதும், ஒரு பகுதி மனிதர்களின் கூட்டு நிகழ்வாக நடத்தப்படுகிறது. இவர்கள் எனவே கடவுளைவிட்டுவிட்டு கடவுள் சொன்னதாக மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆகவே இதுவும் உருவ வழிபாடு ஆகும். கடவுளின் வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. எனவே கடவுளின் வார்த்தைகளை மதிக்கவேண்டும் எனச்சொல்லலாம். வார்த்தைகள் வானவீதியில் தனியே நிற்க முடியாது. அவை ஒரு வடிவம் தரப்படவேண்டும். மனிதன் தொடும் அளவுக்கான வடிவம் தருவதும் படிமப்படைப்பு எனச்சொல்லலாம். ஆகவே கடவுளின் வார்த்தைகள் இருக்கும் புத்தகம் (என நம்பப்படுவதை) மதிக்கப்பட வேண்டும் எனச்சொல்லும் இவர்கள் ஏன் கடவுள் படைத்த கண்ணுக்கு முன் உள்ள இயற்கையை மதிக்கக்கூடாது ? ஏன் அந்தக் கடவுள் படைத்த மனிதர்களை மதிக்கக்கூடாது ? ஏன் அந்த மனிதர்கள் படைத்த படைப்புக்களை மதிக்கக்கூடாது ? மனிதன் கலையையும் கலாச்சாரத்தையும் சிற்பத்தையும் ஓவியத்தையும் இசையையும் படைத்தான் என்றால் அப்படிப்பட்ட மனிதனைப் படைத்த கடவுளை திட்டவா முடியும் ? எய்தவனிருக்க அம்பை நோகலாமா ? ‘என் கடவுள், நீ கடவுளைப் புரிந்து வைத்திருப்பது தவறு என்று சொன்னார் ‘ என்று சொல்லி அந்தப் பிரதிமைகளை உடைக்க ஆணைகளோடு வரும்போதுதான், உன் சுதந்திரம் என் மூக்குக்கு சற்று முன் நின்று போய்விடுகிறது என்று மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.

இந்தக்கேள்விகள் எல்லாம் தாண்டி, உண்மை என்னவென்றால் படிமங்களும் குறியீடுகளும் இன்றி மனிதன் மனிதனாக இருக்க முடியாது. விலங்குகள் இது போன்று படிமங்களைப் பயன்படுத்துவதில்லை. எனில் , கடவுளின் கருணை அவைகளுக்கு மிக அதிகமாகவே வர வேண்டும். ஆனால் விலங்குகள் கூட படிமங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்துகின்றன. ஒரு தேனீ மற்ற தேனீக்களின் முன் நடனம் ஆடுகிறது. அந்த நடனம் தேன் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும், அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதையும், சூரியனுக்கு எந்தக்கோணத்தில் இருக்கிறது என்பதையும் குறியீடுகளாக ஆடுகிறது. குறியீடுகள் இல்லையேல் தேனீ கூட்டமே உணவின்றி அழியும் எனில் மனிதர்கள் எங்கே இருப்பார்கள் ? குறியீடுகள் இல்லையேல் கடவுளை எப்படி குறிப்பது ? அந்த குறியீடு வார்த்தையாக இருந்தால் என்ன, இசையாக இருந்தால் என்ன, ஓவியமாக இருந்தால் என்ன, சிற்பமாக இருந்தால் என்ன ? குறியீடுதானே எல்லாம் ?

குறியீடுகள் இருக்கும் போதுதான் குறியீடுகள் தாண்டிய ஒரு நிர்குணப்பிரம்மத்தைச் சிந்திக்கக்கூட இயலும். சகுணப் பிரம்மமான மனிதனின் அறிவுக்கெட்டிய கடவுள் கூட மனிதனின் சிறு சிறு தவறுகளுக்கு கோவித்துக்கொள்ளப்போவதில்லை. தாயாய் தந்தையாய் சகோதரனாய் நண்பனாய் மனைவியாய் கடவுளைப் பார்க்கும் ஒரு மனிதன் எல்லாவற்றையும் தாண்டி எல்லோருக்குள்ளும் இருக்கும் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் கடவுளை பாமியான் புத்தச்சிலையிலும், ஒரு சிறுபிள்ளை செய்த மண் பொம்மையிலும், தாய்மார்கள் மஞ்சள்தூள் கொண்டு பிடிக்கும் பிள்ளையாரிலும், மாவிளக்கிலும், மகத்தான மைக்கலாஞ்சலோ சிற்பத்திலும், மனிதன் படைத்த பெருங்காப்பியங்களிலும், அழிவிலும் ஆக்கத்திலும் நின்று ஆடும் மாசில் வீணையிலும் மாலை மதியத்திலும் வீங்கிள வேனிலிலும் தன் அழகான அனுபவத்தின் உச்சத்தில் இறைவனை உள்ளில் உணரவும், அந்த மஞ்சள்தூள் பிள்ளையார் தண்ணீரில் கரைக்கப்படும்போது படிமத்தின் நிலையாமை தாண்டி, படிமத்தின் உள் நிற்கும் கடவுளை உணரவும் இயலும்.

முதலாவது கட்டளையும் இரண்டாம் கட்டளையும் சமுதாயத்துக்கு எதிரானவை, நடைமுறைக்கு ஒவ்வாதவை, மனிதர்களை விலங்குகளாக ஆக்கி அழிக்கக்கூடியவை, அர்த்தமற்றவை.

Series Navigation