உயிரைத் தேடாதே !

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

புகாரி, கனடா


யாரங்கே…

குட்டிச் சுவரோரம் நின்று
திருட்டுத் ‘தம் ‘ அடிப்பது

உன்
நுரையீரல் மாளிகையில்
ஒட்டிக் கொள்ளப் போகும்
பிசாசுகளை விரட்ட
மந்திரக்கோல்
வைத்திருக்கிறாயா ?

O

வளையம் வளையமாய்த்
துப்புகிறாயே
புகை…

அவை உன்
ஆயுட் கைகளை
நீட்டவிடாமல்
மாட்டப்படும்
விலங்குகளென்று
தெரியுமா உனக்கு

உன்
சல்லடை உடலை
மெல்லப்போகும்
கல்லறைக் குழியை
அவசர அவசரமாய்த்
தோண்டும்
மண்வெட்டிகளே
சிகரெட்டுகள்
ஞாபகமிருக்கட்டும்

ஏன்
புகையைக் காதலித்துச்
சாம்பலை மணக்கிறாய் ?

உன்
தற்கொலை முயற்சிக்குக்
சிகரெட்டு நார்களிலா
கயிறு திரிக்கிறாய்

ஒரு கொள்ளிக்குத்
தாங்காத நீ
இன்னும்
எத்தனைச் சிகரெட்டுகளுக்குக்
கொள்ளி வைப்பதாய்
உத்தேசம் ?

*

புகாரி, கனடா
buhari2000@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி