உன் போலத்தானோ ?

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

வேதா


உன் போலத்தானோ
இந்தக் கவிதையும்!!

ஆசையாய் நெருங்கினால்
அபத்தமாகிப் போகிறது….

அற்பமாய் தூர நின்றால்
அடிமையாகிப் போகிறது….

‘பிடிச்சிருக்கு… ‘ எனும்போது
வார்த்தைகளின் வார்ப்புக்களில்
பிடிவாதம் செய்கிறது…

முடித்(ந்)துவிட நினைக்கும்போது
முரண்டு பண்ணுகிறது……

காணாமல் திரும்பி நின்றால்
கைது செய்து பார்க்கிறது…..

நினைத்து நினைத்தே
செத்துப் போகும் தருணங்களில்,
நிறைவாகி,
என்னையும் நிர்மலம் செய்கிறது…

நீங்காமல்
என் நினைவுகளில் உறங்கி,
நிஜங்களில் என்னைத் தாலட்டும் செய்கிறது…

பித்தாகிப் பிரிந்து போகும் நேரங்களில்
பின்னிய தழும்பே இல்லாத
பிறை நிலவாய்,
என்னைப் பிதற்ற வைக்கிறது….

பிரியாமல் பிணைய நினைத்தால்
பிரித்துப் பிரித்துப் பார்க்கிறது….

கருவாகி உருவாகி – மூச்சுக்
காற்றோடு கலந்திருந்து
கரையும் நேரம் பார்த்து
கலைந்து போகிறது….

உருக்கி உருக்கி உருவாக்கி,
உருவம் கொடுக்கக் கொடுக்க,
‘உனக்கல்ல.. ‘ என்பதுபோல்
ஓடிச் சென்று மறைகிறது…

பொல்லாத புரிதல்களில்
புரியாமல் புதைந்துபோய்,
புதிது புதிதாய், என்னைப் புடம் போடுகிறது….

உண்மை எதுவும்
உணரவே இயலாது
உணர்வே இல்லாது,
சிதறிப் போய்
சிதைந்துவிட்டதாய் நம்பி இருந்தால்,
சேர்ந்து திரண்டு வந்து,
செதுக்கிய என்னையே
சிறையில் வைக்கிறது….

எதிர்பார்த்துக் காத்திருந்தால்
ஏமாற்றி ஏமாற்றி
ஏங்கிப்போகச் செய்கிறது….

எதைப்பற்றியும் நினைக்காமல்
எப்போதும்போல் இருந்தால்,
‘எதற்காகத் தேடுகிறாய் ?
உனக்குள் வைத்துக்கொண்டே…. ‘ என்பதுபோல்,
என் மடியில் தவழ்ந்து,
என்னையே நனைக்கப் பார்க்கிறது…

உயிரில் கலந்து,
என்னையே உலுக்கிப் பார்க்கிறது…

பல சமயங்களில்,
உன் போலத்தானோ இந்தக் கவிதையும் ?

veda
piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா