உந்தன் நினைவில்…

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

கு.முனியசாமி


உலா வரும் நிலா முகம்
கனா வரும் தினம் தினம்
சுகம் தரும் வரம் தரும்
மனம் தினம் நினைத் தொழும்..

நிலவு உலவும் நேரம் – உந்தன்
நினைவு உணவு ஆகும்
கவிதை எழுதும் யோகம் – எழில்
காண வந்து சேரும்..

இளைய விழிகள் அழைக்கும் -என்
இதயம் நனைந்து சிாிக்கும்
அழுத இரவும் விழிக்கும் – கவி
எழுத என்னை விளிக்கும்..

கொங்கு தமிழ் கொஞ்சும் – இதழ்
குளிர் நிலவை மிஞ்சும்
அஞ்சும் இள நெஞ்சம் – அதில்
ஆசை வந்து கெஞ்சும்..

தஞ்சம் என மஞ்சம் – நிழல்
தந்தால் சுகம் மிஞ்சும்
வஞ்சம் எனில் நஞ்சும் – அமிழ்
தாகும், உயிர் துஞ்சும்..

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி