உணர்வு

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

அனந்த்


உணர்வெனக் கூறுவ(து) உலகில் ஒவ்வொரு
கணமும் காணும் காட்சியின் விளைவாய்
நினைவிற் கிளர்ந்திடும் நுகர்வாம் அஃதே
வனையும் கவிதையின் வழியே நுகர்வோர்
உளத்தில் உவகையும் கவல்வும் அழுகையும்
களிப்பும் தோற்றிக் கவிதையின் பயனை
யாவரும் பெற்றிடப் பாவலர் கண்ட
வல்லமை வாய்ந்த வழியென அறிவோம்
சொல்வளம் சிறப்பதும் நல்லுணர் வாலே
கவிதையின் அழகைக் கற்பனை மிகுத்தல்
புவியில் என்றும் புதிதல எனினும்
குவியும் உணர்வில் குறையெதும் விளையின்
கவிதை இறக்கும் சிறப்பெதும் இன்றி;
தொல்நாள் முதலாய் இன்னாள் வரையில்
வெல்லும் தமிழில் விந்தை புரிந்த
பற்பல கவிஞரின் சொற்றிறம் மினுக்கும்
அற்புதக் கவிதைகள் ஆயிர மாக
உணர்வு கவிதைச் சிறப்பை உயர்த்திக்
கொணர்தலைக் காட்டும்; குறிப்பாய்க் குறளுக்(கு)
உயர்வைத் தருவது வள்ளுவன் உணர்ந்து
பயந்த மொழியின் பாங்கே அன்றோ ?
இங்குயான் யாத்த எளிய பாடலில்
எங்குமே விரவி இருப்பதும் உணர்வே
மெய்யாய் இதனை உணர்ந்துஉம்
ஐயம் தீருமின்! யாவும் உணர்வே!
—-
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்