ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

முனைவர் மு.இளங்கோவன்


நாம் வாழும் இப்பூமிப்பந்தினைச் சூழ இருப்பது கடல்.இக்கடலின் இயற்கை அழகில் மாந்த இனம் மகிழ்ச்சியடைகின்றது. கடல் தரும் வளங்களைப் பயன்படுத்தும் இம்மக்கள் திரள் கடலின் சீற்றத்திற்குப் பலமுறை ஆளாகியுள்ளனர்.பல உயிர், உடைமைகளை, நிலப்பரப்புகளை இழந்த இவர்கள் தங்கள் இழப்புகளை வலிவாகப் பதிவு செய்யும் வாய்ப்பு இல்லமல் இருந்தனர். அண்மையில் ஏற்பட்ட கடல்கோள் உலக மக்களைக் கடலின் சீற்றத்தை, அதன் வலிமையை நேரடியாக உணர வழிவகுத்தது.

மக்களின் உள்ளத்தில் மாறாத வடுவினை ஏற்படுத்திவிட்ட கடல்கோள் ஈழத்து மக்களையும் மண்ணையும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது. ஈழமண்ணில் பிறந்த மக்கள் பலர் மடியவும் தங்கள் உறவினரை யும் உடைமைகளையும் இழந்து மிகப்பெரிய சோகத்தில் வாழவும் செய்துவிட்டது.இம்மண்ணின் மைந்தரான ஈழத்துப்பூராடனாரைக் கடல்கோள் காவியம் பாடவைத்தது.2007 இல் வெளிவந்துள்ள இக்காப்பியத்தை இங்கு அறிமுகம் செய்கிறோம்.

கடல்கோள் காவியம் 52+260 =312 பக்கங்களைக் கொண்டுள்ளது.மரபுப்பாடலகளால் காவியம் பாடப்பட்டுள்ளது. நூலாசிரியர் முன்னுரையும், இளையதம்பி தங்கராசா அவர்களின் ஆங்கில முன்னுரையும் கடல்கோள் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளன.பல்வேறு நூல்களைக் கற்று நூல் எழுதும் இயல்புடைய ஈழத்துப்பூராடனார் இந்நூலையும் அவ்வகையில் பயனுடைய தகவல்களை வழங்கிக் கற்பவருக்குப் பெருந்துணை புரிந்துள்ளார்.

கடலியல் பற்றிய அறிவியல் கருத்துகளைச் செய்யுள் வடிவில் மக்களிடையே பரப்புவது இந்நூலின் நோக்கமாகும். இயற்கை இயல்புகள் புராணச் செய்திகளாகவும், கற்பனைச் செய்திகளாகவும் திரிக்கப் பட்டுள்ளதை ஆசிரியர் நினைவு கூர்ந்துள்ளார்.இயற்கைச் சீற்றம் நிகழ்வது(புயல்,கடல் அலை,இடி எதுவாயினும்)சிறிது நேரம்தான்.ஆனால் அது ஏற்படுத்தும் தழும்புகள் ஆறாதவை.

இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதை முன்கூட்டியே அஃறிணைகள் உணர்ந்துகொள்கின்றன.ஆனால் பகுத்தறிவுபெற்ற மாந்தர்கள்தான் இயற்கைப் பேரழிவை உணரமுடியாமல் உள்ளனர்.இலங்கையில் ஏற்பட்ட பேரழிவில் மனிதர்கள்தான் பலவகையில் மடிந்தனர்.ஆனால் விலங்குகளான ஆடு,மாடுகள்,யானை முதலியன ஒன்றும் மடியாமல் தப்பிவிட்டமை அனைவராலும் வியப்புடன் பேசப்பட்டது.

பழந்தமிழகத்து மக்கள் இயற்கை பற்றிய பேரறிவு பெற்றிருந்தனர்.அத்தகு அறிவு பெற்றவர்களுக்கு இன்று பலநிலைகளில் இவ்வறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளன.சங்க நூல்களில் வானியல்,புவியியல் சார்ந்த செய்திகள் பேசப்பட்டுள்ளன. ஆனால் இடைக்காலத்தில் எழுந்த நூல்கள் கற்பனைகள் மிகுந்தும்,சமயம்சார்ந்த செய்திகள் மிகுந்தும் அறிவியல்செய்திகள் முற்றாக இல்லாமலும் போய்விட்டன.இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து ஈழத்துப்பூராடனார் கடல்கோள் ஓவியத்தை இயற்றியுள்ளார்.

மரபுப்பாடல் இயற்றுவோர் குறைந்து காணப்படும்இக்காலத்தில் இந்நூலைப் பாராட்டி வரவேற்க வேண்டும். வெளியீட்டு முறையிலும், இலக்கியச்சுவை அமைப்பதிலும் சிறு குறைவு தென்பட்டாலும் அகவை முதிர்ந்த பேரறிஞரின் பணி என்ற வகையில் இந்நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். முன்பே ஈழத்துப்பூராடனார் புயலின் கொடுமைய அனுபவித்தவர்.புயற்பரணி பாடிய பெருமைக்கு உரியவர்.இப்புயற் பரணியில் புயல் உண்டாவதற்கான காரணிகளையும்,கடலியல்,நீரியல்,புவியியல் சார்ந்த அறிவியல் தத்துவங்களின் உண்மைகளையும் எடுத்துக்காட்டியவர்.எனவே அவர் 2004 இல் ஏற்பட்ட கடல்கோள்பற்றி ‘கடல்கோள் காவியம்’ பாடியமை பொருத்தமேயாகும்.

கடல்கோளின் தோற்றம்,அது நிகழ்த்திய அழிவுகள் ஆங்கிலத்தில் இளையதம்பி தங்கராசா அவர்களால் விரிவாக எழுதப்பட்டுள்ளது.கடல்கோள் பற்றிய தமிழ்க்கட்டுரையும் நூலில் இடம்பெற்றுள்ளது.கடல்கோளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும்.முன்பே போரினால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட அந்நாட்டு மக்களை வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போல் கடல்கோள் துன்பம் செய்துவிட்டது.

பல்லாயிரம் மக்கள் உயிரிழந்தனர்.பலர் காணாமல் போயினர்.பல்லாயிரம் மக்கள் ஏதிலிகளாக ஏதிலி இல்லங்களில் தங்கவைக்கப்பட்டனர்.மீன்பிடித்தல்,உழவுத்தொழில்கடுமையாகப்பாதிக்கப்பட்டன. இக் கொடுமைகளை அறிந்த ஈழத்துப்பூராடனார் பாட்டு வடிவில் காவியமாக்கியுள்ளார்.கடல் என்னும் நீலத்திரையில் கடலியல், கடலியல் சார்ந்த கருத்துகளை வண்ணக்க லவையாக்கி,எழுத்துக்கவிதை என்னும் தூரிகையால் இக்கடல்கோள் காவியம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் புலவர் குறித்துள்ளார்.

மூன்று பாகமாக நூல் அமைந்துள்ளது.

1.இயற்கைவியற் பகுதி

2.நூற்பகுதி

3.உண்மை நிகழ்ச்சி காட்சிப்பகுதி

என்பன அவை.

முதலாவது பாகம் 1.இயற்கைவியற் பகுதி

கடவுள் வாழ்த்தியல்

பருவ காலவியல்

கடலென்னும் பாதாள உலகு

கடலடி அதிர்வியல்

பேரலை இயல்

கடல்கோளியல்

கடல் கொள்ளைகொண்ட கோண்டுவானா

தமிழகக் கடல்கோளியல்

கடல்கோள்சார் எடுத்துக்காட்டியல்

கடலும் கடல்சார்ந்த நெய்தல் நிலவியல்

நோவா காலப் பிரளவியல்

இரண்டாம் பாகம் – 2.நூற்பகுதி

ஒன்பதாவது கடற்கோள் தரவியல்

உலகளாவிய ஆனந்தத் திருநாளியல்

விண்ணும் மண்ணும் விரிகடலும் விம்மி அழுதன

பகுத்தறியும் பாங்கிழந்த பகுத்தறிவாளர் இயல்

மூன்றாவது பாகம்

உண்மை நிகழ்ச்சி காட்சிப் பகுதி

ஓவிய வரைவு இயல்

மனிதன் நினைத்தான்

இயற்கை அழுதது- இறைவன் நகைத்தான்

இலக்கிய நுகர்வோர்க்குச் சிறு தகவல்

சுமத்திரா கடற் கன்னியின் பிரசவ வேதனை

தரையிற் தாவித் தவழ்ந்த மாக்கடல்

பதப்பொருள் விளக்கம்

ஊரை அழித்த நீரழிவு

ஆழிப்பேரலை அளித்த மனித அவலம்

வாழ்வு அவலம்

என்னும் தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ஈழத்துப்பூராடனார் பொருத்தமான யாப்பு அமைப்புகளைப் பாடலின் கருப்பொருளின் தன்மைக்கு ஏற்ப அமைத்துள்ளார். மனித அவலப் பகுதியைப் பாடும்பொழுது அறுசீர் ஆசிரிய யாப்பு ஈழத்துப்பூராடனார்க்கு நன்கு கைகொடுத்துள்ளது. இரங்கற் பாக்களைப் பாடப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பாவியல் அறிஞர்கள் இத்தகு யாப்பைத்தான் பயனபடுத்தியுள்ளனர்.

கடல்கோள் நிகழ்வுகளுக்குப்பிறகு கண்ட காட்சியைப் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

மாந்தர் வாழாப் புவியதனை

மயானம் என்று சொல்லுவார்கள்

போந்த கடலலைக் கொள்ளைதான்

புகுத்தின புதுப்புது மயானத்தை

ஊர்கள் தோறும் பிணக்காடு

ஊன்நீர் ஊற்றே பன்னீராம்

சார்ந்து மணப்பது சகிக்கொண்ணாச்

சாவில் அழுகிய சடலங்கள் …

கூரை விழுந்ததாற் கூன்பட்டு

குப்புறக் கிடக்கும் பிணம்மேலே

காரை பிளந்த சுவர்மூடி

கல்லறை யாகிய கவின்மனைகள் …

ஆட்டம் முடிந்து அலுத்தார்போல்

ஆவி நீத்தார் ஆங்காங்கே

கூட்டம் கூட்டமாய்க் குவியுடலிற்

கொசுவும் எறும்பும் குலவினவே…

கரும்புலி கடற்புலி வான்புலியென்

கவினுற் ஈழப் போர்மறவர்

இரும்பெனக் காவலர் அனுரதபுரி

இலங்கை வான்தளம் புகுந்தளித்த

களம்போல் கிடந்த கடற்கரையுங்

கடல்சார் நெய்தல் கவினிடமுங்

குளமது வற்ற மீன்பரக்கக்

குவிந்த பிணங்கொள் கூறான…(பக்.193-198)

என்று பாடி இயற்கைப் பேரழிவில் வரலாற்று நிகழ்வுகளை ஈழத்துப்பூராடனார் பதிவு செய்துள்ளமை பாராட்டினுக்கு உரியது.

இயற்கையழகை ஈழத்துப்பூராடனார் சிறப்புடன் பல இடங்களில் பாடியுள்ளார்.

கருங்குயில்கள் பூபாளம் பாடிப் பாடிக்

கருமிருளின் துயர்தன்னைக் கதையாய்க் கூறும்!

அருகிவிழும் பனித்துளியை அருந்த மாவும்

ஆவென்று நாவதனை நீட்டல் போல

முருகுநிகர் செந்தளிரை முறையே தொங்கி

முன்வரும் காலைக்குத் தீபம் காட்டும்.

தருவெல்லாம் பூமலரும் தளராத் தெங்கு

தண்பாளைச் சிரிப்பூட்டும் அழகும் அழகே!

எனவும்

எழுசுரத்தின் பஞ்சமங்கள் இசையைப் போலும்,

இசைந்துகவி வாணர்நா வசைப்ப போலும்,

தழுவும்யாழ் நரம்பதிர்ந்து தண்ணுமை தட்டத்

தரைவளையும் வேய்ங்குழல் தண்காற் றூதி

விழுமென்று கஞ்சமிசைத் தாளத் தீர்க்க

விரியொலியின் கூட்டிசையாய் உலக மெங்கும்

அழுமொலியும் ஆனந்தத்தால் ஆகும் ஒலியும்

அகிலமெங்கும் பரந்துபடும் பகலின் போதே!

எனவும் பாடியுள்ள பகுதிகள் சிறப்பிற்குரியன.

சமகால நிகழ்வுகளை மரபுப்பாடலில் பதிவு செய்யும் போக்கு தமிழில் இன்று அருகிக் காணப்படுகின்றன. இந்நிலையில் ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் வரவேற்கத்தக்க முயற்சியாகும்.

நூல் கிடைக்குமிடம் :

seevan publishers

#3, 1292, sherwood Mills BLVD, MISSISSAUGA,

L5V 1S6, ONT, CANADA

விலை : 20 கனடிய டாலர்

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்