இலை போட்டாச்சு ! 26 – பாசிப்பருப்புக் கதம்பக்கூட்டு

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

பாரதி மகேந்திரன்


தேவை

பாசிப்பருப்பு கால் கிலோ
வெங்காயம் கால் கிலோ
உருளைக் கிழங்கு கால் கிலோ
பட்டாணி 100 கிராம்
தக்காளி கால் கிலோ
பீன்ஸ் 100 கிராம்
கேரட் கால் கிலோ
முள்ளங்கி 100 கிராம்
சீமைக் கத்திரிக்காய் (சௌ சௌ) 100 கிராம்
கத்திரிக்காய் 100 கிராம்
சீரகம் அரை தே.க.
பெருஞ்சீரகம் அரை தே.க.
உப்பு 4 தே.க. (அல்லது தேவைப்படி)
பச்சை மிளகாய் 10 / 15 (அல்லது தேவைப்படி)
கரம் மசாலாப் பொடி 1 மே.க.
எலுமிச்சம்பழம் 2
கடுகு அரை தே.க.
உளுத்தம்பருப்பு 2 தே.க.
கறிவேப்பிலை 5, 6 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை 3 கைப் பிடிகள்
எண்ணெய் 4 மே.க.
நெய் 1 மே.க.
பெருங்காயம் 1 தே.க.

தோல் சீவிய, சற்றே பெரிய உருளைக் கிழங்குத் துண்டங்கள், பொடியாய் நறுக்கிய கேரட், முள்ளங்கி, பீன்ஸ், சௌசௌ ஆகியவற்றைச் சிறிதளவுத் தண்ணீருடன் உப்பில் பாதியைப் போட்டு ஓர் ஏனத்திலும், பாசிப்பருப்பை
இரண்டரை மடங்குத் தண்ணீர் விட்டு மற்றொரு பாத்திரத்திலும் குக்கரில் இரண்டு கூவல்கள் வரை வேகவிட்டு இறக்கவும்.

பின், கடாயில் எண்ணெய், நெய் ஆகிய இரண்டையும் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகைப் போட்டு அது முக்கால்வாசி வெடித்தபின் உளுத்தம்பருப்பு, சீரகம், சோம்பு (பெருஞ்சீரகம்) ஆகிய வற்றைப் போட்டு அவை சிவந்த பின் பச்சை மிளகாய்த் துண்டங்கள், கறிவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் முக்கால் பாகம் வதங்கிய பிறகு, அரிந்த கத்திரிக்காய், உரித்த பட்டாணி, அரிந்த தக்காளி ஆகியவற்றைப் போட்டு இவை யாவும் நன்கு வதங்கும் வரை கிளறவும். பின் மசாலப் பொடியையும், மீதமுள்ள உப்பையும் அதில் சேர்க்கவும். எல்லாம் வெந்து வதங்கிய பிறகு ஏற்கெனவே சமைப்பானில் வேகவைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், சௌசௌ, முள்ளங்கி, பீன்ஸ், பாசிப்பருப்பு ஆகியவற்¨றைச் சேர்த்துக் கலக்கவும்.
பெருங்காயத் தூளையும் கொத்துமல்லித் தழைகளையும் கடைசியில் சேர்த்து இறக்கவும். ரொம்பவும் கெட்டியாக இருப்பது பிடிக்காவிட்டால் தண்ணீர் ஊற்றி இளக்கிக் கொள்ளலாம். அடுப்பிலிருந்து கீழே இறக்கிய பிறகு எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து நன்றாய்க் கலக்கவும். (எலுமிச்சைச் சாறு அடுப்பில் கொதிப்பது ஆரோக்கியக் குறைவானது என்பார்கள்.)

இந்தக் கூட்டைச் சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

author

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்

Similar Posts