This entry is in the series 20020812_Issue

ஸ்ரீனி.


விளக்குக் கம்பத்தைச் சுற்றும்
விட்டில் பூச்சிகளாய்
மனதின் உள்ளே
ஆயிரம் நெருடல்கள்.

படித்த வாக்கியங்களின்
அர்த்தங்கள் மறைந்து போய்
உதடுகளுக்கு தண்டனையாய்
உச்சரிப்புக்கள் மட்டும்.

இருந்த போது தொடாது நின்று
காணாமல் போனபின்
கனவில் வந்து உறுத்தும்
செல்ல நாய்குட்டியான சிந்தனைகள்.

அலை
அடிக்கும் போது
விலகி நின்று
திரும்பப் போகையில்
நனைவதற்காய் துரத்தி போகும் சிந்தனைகள்.

மடியில் விழுந்த பூவை காயவிட்டு
கிளையில் இருப்பதை
கிள்ளி பார்க்க முயலும்
‘இந்த பழம் புளிக்கும் ‘ சிந்தனைகள்.

நித்தம் நித்தம்
நினைவுகளில் மூழ்கி
முத்துக்களை எதிர்பார்த்து
சிப்பிகளை மட்டுமே சேகரிக்கும் சிந்தனைகள்.

***
Ramachandran_Srinivasan@eFunds.Com

Series Navigation