‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

லதா ராமகிருஷ்ணன்.


—-

ஒரே முனைப்பாக, நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் ஆர்வமாக இயங்கி வரும் மூத்த கவிஞர்களையும் , இளைய கவிஞர்களையும் தொடர்ந்து சாடி வருவது மூலமே தன்னை மேம்பட்ட இலக்கியவாதியாகவும், சமூகசீர்திருத்தவாதியாகவும் நிறுவிக் கொள்ள முழுமூச்சாய் செயல்பட்டு வருபவர் கவிஞர் திலகபாமா. மிக மோசமான ஒரு ‘reductionist theory ‘ அவருடையது. நவீன தமிழ்க் கவிஞர்கள் கையாளும் உருவகங்களும், குறியீடுகளும், உவமான உவமேயங்களும் அவர்களுடைய பிரக்ஞாபூர்வமான தேர்வு. அத்ற்கு அவர்கள் திலகபாமாவின் அங்கீகாரத்தையோ, அனுமதியையோ பெற வேண்டிய அவசியமில்லை. எந்த நவீனக் கவிதையிலிருந்தும் அங்கொன்றும், இங்கொன்றுமாக வரிகளைப் பிடுங்கியெடுத்து சம்பந்தப்பட்ட கவிதையையும், கவிஞரையும் வசைபாடுவதும், ஒரு கவிதையில் தனது ‘காமாலை ‘க் கண்களுக்குக் கிடைக்கும் அரைகுறை வாசகப் பிரதியை அதன் ஒட்டுமொத்தமான அர்த்தமாகப் பொருள் தருவதும் சிலருக்குப் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. கவிஞர் திலகபாமாவுக்கும் அப்படியே. மூத்த கவிஞர்கள் ஞானக்கூத்தன், கலாப்ரியா, சுகுமாரன் முதல், ஃப்ரான்ஸிஸ் க்ருபா, யவனிகா ஸ்ரீராம், சங்கரராமசுப்ரமணியன் என்று யாரையுமே விட்டு வைப்பதில்லை இவர். யாராவது ஒருவரையேனும் இவர் சிலாகித்துப் பேசியிருப்பாரா என் பது சந்தேகமே.

ஊத்தைக்குழிகளாக பெண்களைப் பாடிய சித்தர்களை மறுவாசிப்பு செய்யப் புக நேரமிருக்கும் இவருக்கு தன் சக கவிஞர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மமோ தெரியவில்லை. பெண்ணியக் கருத்துக்களைத் தான் ஒரு கவிதையில் தேட வேண்டுமென்று விரும்பினால் அது அகண்ட கவிதை வெளியை ஒரு குறுகிய சந்தாக மாற்றி விடும். தவிர, பெண்ணியக் கருத்துக்களை சொல்வதன் மூலம் திலகபாமா போன்றோர் ஏதோ அந்தக் கருத்துக்களெல்லாம் தங்களிடமிருந்து தான் முதன்முதலாக வருவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயலுகிறார்கள். உண்மையில், இன்று தமிழ்க் கவிதையில் இடம்பெறும் பெண்ணியக் கருத்துக்களெல்லாம் இருபது, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெண்ணியவாதிகளாலும், பெண்ணிய அமைப்புக்களாலும் அகல்விரிவாக பேசப்பட்டு வருபவை தான். பெண்ணிியவாதத்தை முன்வைக்கும் கவிதைகள் என்ற ஒரே அளவுகோல் _ beான் அவசியமா, கவிதை ரசனைக்கு ? இந்த அளவுகோலின் மூலம் கவனம் பெறுவது திலகபாமா போன்றோருக்கு சுலபமாக இருக்கிறது. உண்மையில், தமிழில் ஆண்கவிஞர்களிடமிருந்து பெறக் கிடைக்கும் பெண்ணியவாதக் கவிதைகள் நிறையவே உள்ளன. அவற்றை இவர் பொருட்படுத்துவதில்லை.

‘ அவள் எனக்குத் தங்கையானாள் ‘ என்று முடியும் கவிதை என்னளவில் ஒரு சிறந்த ‘சுய விசாரணை ‘க் கவிதை, சுயவிமரிசனக் கவிதையாகவே படுகிறது.அல்லது, மனவோட்டத்தின் ஒரு நேர்மையான பதிவு, அல்லது, அத்தகைய வேடதாரிகளைப் பற்றிய நையாண்டி… கவிதையில் வரும் ‘நான் ‘, ‘என் ‘, என்பதையெல்லாம் கவிஞனாகவே தான் பார்ப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திலகபாமா இயங்கி வருவது பரிதாப

த்திற்குரியது. கவிதையின் தொனி வாசகருக்கு வாசகர் மாறுபடலாம். முன்நிபந்தனைகளோடு நவீன தமிழ்க் கவிதையை அணுகுபவருக்கு அதில் கேட்கக் கிடைக்கும் தொனி அவர் மனம் போலத் தான் அமையும்.

இவர் குறிப்பிட்டுள்ள கவிஞர் சுகிர்தராணியின் கவிதை குறித்து ஏப்ரல் தீராநதி இதழில் இடம்பெற்ற சுகிர்தராணியின் பேட்டியில் அவர் பின்வருமாறு விளக்கமளித்திருக்கிறார்.(இதை திிலகபாமா படித்திருக்கும் சாத்தியப்பாடுகள் அதிகம்) :_ ‘திருமணம் என்பது காலங்காலமாக குடும்ப அமைப்பின் தொடர்ந்து வரும் ஒரு பகுதி. திருமணம் பெண்ணுக்கு விடுதலையைத் தராது என்பது தான் என் கருத்து. ஆனால், ஒரு பெண் கவிஞராக இருக்கும் காரணத்தால் பெண்ணியக் கருத்துக்களை வலியுறுத்தி மட்டுமே கவிதைகள் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நான் பார்க்கிற மற்ற விஷயங்களையும் கவிதையில் சொல்லும் தேவை எனக்கு இருக்கிறது. திருமணம் தேவை என்று நினைக்கிற, அதற்காக ஏங்குகிற பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களைத் தான் அந்தக் கவிதையில் பிரதிபலித்தேன். கவிதைகளைப் பற்றிப் பேசும் போது அந்தக் கவிதை பற்றித் தான் பேச வேண்டும். மாறாக, கவிதையில் இருப்பவர் படைப்பாளி தான் என்று எடுத்துக் கொண்டு பேசுவது சரியல்ல. ‘

சுகிர்தராணி சுட்டியிருக்கும் அந்த அநாகரீகத்தைத் தான் திலகபாமா அந்தக் கவிதை குறித்த தனது விமரிசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேவிதமான அநாகரீகத்தை நாம் மேற்கொள்வதெனில், ‘திருமணம் பெண்ணடிமைத்தனத்தைப் பேணுவது, ஆண்_பெண் ஈர்ப்பு பிற்போக்குத்தனமானது என்று அத்தனை தீர்மானமாக நம்புபவர்கள் ஏன் அவற்றை தங்கள் வாழ்வில் அறவே வெறுத்தொதுக்கவி ல்லை ? ‘, என்ற கேள்வியை எழுப்ப முடியும்.

திலகபாமா வசைபாடியிருக்கும் கவிஞர் சங்கரராமசுப்ரமணியனின் ‘சில பொமரேனியன்கள் ஸ்டிக்கர் பொட்டிட்டுள்ளன ‘, என்று முடியும் கவிதை உண்மையில் poignant and sensitive படைப்பு. முழுக் கவிதையும் கீழே தரப்பட்டுள்ளது:_

இன்னொரு கதவு

—-

பொமரேனியன்கள்

கதவுக்கப்பால் நின்றிருக்கும்

மனிதர்கள் மீது

காற்றில் பாய்ந்து குறி தவறி

எப்போதும் தோல்வியையே தழுவுகின்றன

ரோமங்களுக்கு இடையில் உள்ள அதன்

கழுத்து

ஒரு மெலிந்த கரம் பற்றி விடக் கூடியது

அதன் குரைப்பு

வன்மமற்று

ஒரு பாடலைப் போல

பாதசாரிகளின் காதுகளை வந்தடைகிறது

பொருத்தமற்ற காலத்துக்குள்

வந்து விட்ட சோகத்தில் வீடுகளின்

பால்கனியில்

இருளில் தன் பொம்மை முகம் நீட்டி

மெளனித்துக் கொண்டிருக்கின்றன

தன் உறக்கத்தில் அவை வேட்டை

நாய்களைக்

கனவு காண்கின்றன

சில பொமரேனியன்கள்

ஸ்டிக்கர் பொட்டிட்டுள்ளன.

__ ஓரளவு கவிதைப் பரிச்சயம் உள்ளவர்களால் கூட இந்தக் கவிதை முன்வைக்கும் மையக் கருத்தை– நாயாகப் பிறந்தும் நாயாக இயங்கி வர முடியாத அவலத்தை அல்லது, ‘நாயாக முடியாத நாயாக ‘ இயல்பிலேயே அமைந்து விட்ட தன்மை குறித்த சோகத்தை பேசும் கவிதை இது என்பதை உள்வாங்கிக் கொள்ள முடியும். இயல்பாக வாழ முடியாத மனிதர்களின் துக்கத்தை, அவலத்தை வடிக்கும் கவிதை இது. உச்சபட்சமாக ஸ்டிதூ cகர் பொட்டிடப்படும் அவலத்திற்கு ஆளாக்கப்படும் ஜீவனைப் பற்றிய கவிதை இது. இன்னொரு வகையில், ஸ்டிக்கர் பொட்டிட்டுள்ள பொமரேனியன் அனுபவிக்கும் அவமானமும், இயல்பாக இயங்க முடியாத அதன் துக்கமும் சமூகத்தில் பெண்ணின் அவல நிலையைக் குறிப்பாலுணர்த்துவதாகக் கூட கொள்ள முடியும். ஆனாலும் இந்தக் கவிதை திலகபாமாவைப் பொறுத்தவரை பெண்ணை எள்ளும் கவிதை!

‘சித்தர்களைப் போல் எங்கெங்கு உடலைக் கொண்டாட வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் ‘, என்று கூறுகிறார் திலகபாமா. ஆனால் அவர் முன்வைக்கும் கருத்துக்களெல்லாம் உடலை மறுதலிப்பதாக, அவமானப்படுத்துவதாகத் தான் உள்ளது. ‘பின் -நவீனத்துவத்தின் சாராம்சங்களை உணராமல் அதை கேலி பேசுவது அவர் அறியாமையையே அம்பலப்படுத்துகிறது என்பதை இனியேனும் அவர் உணர வேண்டும். அதேே பால், அவரொத்த வசதி வாய்ப்புகள் எதுவுமின்றியும் ஆர்வம் காரணமாய் நவீன தமிழ்க் கவிதையுலகில் முனைப்போடு இயங்கி வரும் சக கவிஞர்களை தனது கட்டுரைகளிலும், சர்வதேச அரங்குகளிலும் ( நல்லவேளையாக,புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய ரசனை திலகபாமாவினால் பட்டை தீட்டப்பட வேண்டிய நிலையில் இல்லை!) சகட்டுமேனிக்கு சாடி வருவதையும் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தை தன் கவிதை ரசனையை மேம்படுத்திக் கொள்வதில் அவர் செலவழித்தால் நன்றாயிருக்கும்.

—-

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation