இருபது/இருபது

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

நரேந்திரன்


ABC தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் ’20/20 ‘ என்ற நிகழ்ச்சி மிகப் பிரபலமானது. பார்பரா வால்டர்ஸ் என்ற புகழ் பெற்ற பெண்மணியுடன், ஜான் ஸ்டஸ்ஸல் (John Stossel) என்பவரும் தோன்றுவார். அந்தந்த வாரத்தில் உலகின் பல பாகங்களில் நடக்கும், நடந்த பற்பல விஷயங்கள் குறித்து விவாதிப்பது, காட்டுவதுதான் அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியின் நோக்கம். ஏறக்குறைய சி.என்.என். சேனலில் ஒளிபரப்பாகும் ’60 மினிட்ஸ் ‘ என்ற பிரபல நிகழ்ச்சியைப் போன்றதுதான் ’20/20 ‘. ‘இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் ‘ என்ற வகையைச் சேர்ந்தது என வைத்துக் கொள்ளலாம் அதனை.

இந்த கட்டுரை 20/20ஐப் பற்றியதல்ல. அதை நடத்தும் ஜான் ஸ்டஸ்ஸலைப் பற்றியது. அவர் எழுதி, தற்போது பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ‘Give Me a Break: How I Exposed Hucksters, Cheats, and Scam Artists and Became the Scourge of the Liberal Media ‘ என்ற மஹா நீளமான பெயருடைய ஒரு புத்தகத்தினைப் பற்றி ஆராய்வது.

அதற்கு முன்னால், எப்போதும் போல, எனது ரம்பம் இதோ ஆரம்பம்.

1990களில் கலிஃபோர்னிய ‘சிலிக்கான் valley ‘யில் இந்தியர்கள் புயலைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது. நாளொரு சாஃட்வேர் கம்பெனியும், பொழுதொரு டாட்.காமும் துவக்கி அமெரிக்கர்களை அசத்திக் கொண்டிருந்தார்கள். மூக்கில் வேர்த்த ஜான் ஸ்டஸ்ஸல் கலிஃபோர்னியாவிற்குப் போனார். வெற்றிகர இந்தியர்களைப் பேட்டி காண்பதற்காக. சராசரி அமெரிக்கர்களைப் போலவே அவருக்குப் புரியாத, ஆச்சரியமளித்த, மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது ஒரே ஒரு கேள்விதான்.

‘இந்தியர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் தனி மனித சுதந்திரமுள்ள ஜனநாயக நாடு. அங்கு கம்யூனிஸ்ட்களோ, சர்வாதிகாரிகளோ ஆட்சி புரியவில்லை. யார் வேண்டுமானாலும் எந்தத் தொழில் வேண்டுமானாலும் துவக்கலாம். நடத்தலாம். எந்தத் தடையும் இல்லை. பின் எதற்காகத் தொழில்துவங்க இந்தியர்கள் அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கிறார்கள் ? ‘ என்பதுதான் அது.

வெற்றிகர கலிஃபோர்னிய இந்தியர்கள் சிலரைப் பேட்டி கண்டார் ஸ்டஸ்ஸல். அத்தனை பேரும் ஒரே மாதிரியாகச் சொன்ன கருத்து, ‘ இந்தியாவில் ரெட்-டேப்பிசம் அதிகம். புதிதாக ஒரு தொழில் துவங்க அனுமதி வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும். அது மட்டுமில்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆத்தா, பூசாரி, தோலான், துருத்தியான்… என்று வரிசையாக லஞ்சம் கொடுத்தே பாதி முதலீடு அழிந்து விடும் ‘ என்றார்கள் அத்தனை பேரும்.

எதையும் ஆழமாக ஆராய்ந்தே பழக்கப்பட்ட அமெரிக்கரான ஜான் ஸ்டஸ்ஸலுக்கு நம்பிக்கை வரவில்லை. ரெண்டில் ஒன்று நேரடியாகப் பார்த்தே விடுவது என்ற முடிவுடன் இந்தியாவிற்குப் புறப்பட்டுப் போனார். போகிற வழியில், சீனாவின் கட்டுப்பாட்டிற்குப் போகுமுன், அன்று இங்கிலாந்தின் ஆளுகையின் கீழிருந்த, ஃப்ரீ-மார்க்கெட் சித்தாந்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் ‘ஹாங்காங் ‘கில் இறங்கினார். அவருடைய நோக்கம், புதிதாக ஒரு தொழில் துவங்க, இந்தியாவைப் போன்ற ஒரு ஆசிய நாடாகிய ‘ஹாங்காங் ‘கில் எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று மதிப்பிடுவது. பின் அதை வைத்து இந்தியாவில் புதிதாக ஒரு தொழில் துவங்க ஆகும் நேரத்தை ஒப்பிடுவது என்பதுதான்.

ஒரு வெளிநாட்டவரான ஜான் ஸ்டஸ்ஸல், ஹாங்காங்கில் புதிதாக அனுமதி பெற்றுத் தொழில் துவங்க ஆன மொத்த நேரம் எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? ஒரு நாள் ? இரண்டு நாள் ?…ஒரு வாரம் ?…

அதுதான் இல்லை.

மூன்று மணி நேரம்.

ஆம். வெறு மூன்றே மணி நேரம்தான்! (மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள்).

ஒரு பெரிய ஷாப்பிங் சென்டரில் கடை பார்த்து, லைசன்ஸ் வாங்கி (கவனிக்க, பத்து பைசா லஞ்சம் கிடையாது), ABC சேனலின் பத்துப் பதினைந்து டா சர்ட்கள், நாற்பது ஐம்பது பேட்ஜ்கள் என பிஸினஸ் ஜாம், ஜாம் என்று ஆரம்பம். இரண்டு, மூன்று கஸ்டமர்கள் வேறு கடையை எட்டிப் பார்த்து விட்டுப் போயிருந்தார்கள் அந்த மூன்று மணி நேரத்தில்.

ஜான் ஸ்டஸ்ஸலுக்கு ஒரே ஆச்சரியம். தனது சொந்த நாடான அமெரிக்காவில் கூடக் குறைந்தது நான்கு நாளாகும் இப்படியொரு தொழிலைத் துவங்க. ‘ஹாங்காங் சூப்பர் ஃபாஸ்ட்டாக இருக்கிறதே! ‘ என்று பூரித்துப் போனார்.

அதே பூரிப்புடன் அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து அவர் வந்து இறங்கிய இடம், ‘காம்ரேட் ‘களின் புண்ணியத்தால் கற்காலத்திலேயே நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் கல்கத்தா…ஐ மீன்… ‘கொல்கத்தா ‘.

வேடிக்கையே இனிமேல்தான் ஆரம்பம்.

முதலில், தொழில் துவங்க லைசன்ஸ் வாங்கியாக வேண்டும். ஆனால் அது எங்கு கிடைக்கும், யாரிடம் கிடைக்கும் என்ற விவரம் கொல்கத்தாவாசிகள் ஒருவருக்கும் தெரியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வழியாக சம்பந்தப்பட்ட தொழில்துறை அலுவலகத்தைக் கொல்கத்தாவெங்கும் அலைந்து, திரிந்து கண்டுபிடித்தார் ஸ்டஸ்ஸல்.

ஒரு பழைய விக்டோரியா காலக் கட்டிடம். இந்திய அரசு அலுவலங்களுக்கே உரித்தான, பார்த்தவுடனேயே நம்மை accute depression-இல் தள்ளும் அழுக்கான, அழுதுவடியும் ஒரு அலுவலகம் (தொழில்துறை அமைச்சர் அலுவலகமாம்!). உள்ளே ஒரு பத்துப் பதினைந்து பேர் தூங்கி வழியும் முகத்துடன், ஓட்டை, உடைசல் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கிறார்கள் (மேற்கு வங்காளத்தில் புதிதாகத் தொழில் துவங்க அனுமதி வாங்க வந்தவர்கள்). பத்தோடு பதினொன்றாக அவர்களின் நடுவே நமது ஆசாமியும்….(இத்தனையும் 20/20 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது என்பது நினைவிருக்கட்டும்).

அங்கிருப்பவர்களில் சிலர் வாரக் கணக்கிலும், இன்னும் சிலர் மாதக் கணக்கிலும் அந்த அலுவலகமே கதியாகக் கிடக்கிறார்கள் என்று தெரியவருகிறது ஜான் ஸ்டஸ்ஸலுக்கு. வெறுத்துப் போகிறது அவருக்கு. இதற்குள் லோக்கல் ஆசாமிகளின் மத்தியில் ஒரு வெள்ளைக்காரரும் கையில் காமெராவுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிற அலுவலர்கள், உடனடியாக அவருக்கு அமைச்ச தரிசனம் கிடைக்க வழி செய்கிறார்கள்.

‘காம்ரேட் ‘ அமைச்சர், வாயின் கீழ்த் தாடையில் இரண்டு பற்கள் மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிற, வயதான ஏதோவொரு ‘பட்டச்சார்ஜி ‘. (அது சரி, ஏன் பெரும்பாலான இந்திய ‘காம்ரேட் ‘கள் இப்பவோ, அப்பவோ என்று இருக்கிறார்கள் ? ஒரு இளமையான காம்ரேடைக் கூட இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு வேளை, ‘காம்ரேட்கள் ‘ பிறக்கும் போதே கிழவர்களாகப் பிறந்து தொலைக்கிறார்களோ என்னவோ ?!).

அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் எந்தக் கேள்வியையும் நேரடியாகக் கேட்பவர்கள். சுற்றி வளைப்பது, பூடகமாகக் கேள்வி கேட்பது எல்லாம் மிக அபூர்வம். அது அமெரிக்க ஜனாதிபதியானாலும் சரி, ஆப்பிரிக்க ஜனாதிபதியானாலும் சரி. வெட்டு ஒண்ணு. துண்டு ரெண்டுதான்.

அந்த வகையில் ஸ்டஸ்ஸலின் முதல் கேள்வி இது.

‘மிஸ்டர் மினிஸ்டர், உங்கள் மாநிலத்தில் ஒருவர் புதிதாக ஒரு தொழில் ஆரம்பித்தால் அது பலபேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கும். உங்கள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்குத்தான் நல்லது அது. புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கும் பலபேர் வெளியே காத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் மாதக் கணக்காகக் கூடக் காத்திருப்பதாகத் தெரியவருகிறது. தினமும் அவர்களைக் கடந்துதான் உங்களின் இந்த அலுவலக அறைக்குள் வருகிறீர்கள். லைசன்ஸ் வழங்க ஏன் இந்த தாமதம் என்று நான் அறிந்து கொள்ளலாமா ? ‘

இப்படியான தடாலடித் தாக்குதலை எதிர்பார்க்காத ‘காம்ரேட் ‘டின் முகத்தில் ஒரு கணம் திகைப்பு. சட்டென சமாளித்து, ‘ஆஷுன்…போஷுன்…ஜல் கான்… ‘ என்று அவர் பொல, பொலவென்று பெங்காலியில் பொளந்து கட்டியதையும், ஒரு மண்ணும் புரியாமல் ஜான் ஸ்ட்ஸ்ஸல் ‘தேமே ‘ என்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்ததையும் காணக் கண்கோடி வேண்டும்.

இந்திய அரசியல்வாதியா ? கொக்கா ?

இந்திய அரசாங்கங்களுக்கும், மக்கள் நலனுக்கும் சிறிதும் சம்பந்தமேயில்லை என்ற விஷயம் அமெரிக்கரான ஜான் ஸ்டெஸ்ஸலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான். அதே சமயம் அவர் தேடி வந்த பதில் அவருக்குக் கிடைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி.

இது தொடர்பான இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. 1990களின் ஆரம்பத்தில் ஏதோவொரு சிங்கப்பூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் கம்பெனி, தமிழ்நாட்டில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு சாஃப்ட்வேர் பார்க் தொடங்க நினைத்ததாகவும், ஆனால் அப்போது தமிழ்நாட்டை ஆண்டவர்கள் 30 கோடிக்கும் மேலாக (10 சதவீதம்) லஞ்சம் கேட்டதாகவும், அதனாலேயே அந்தக் கம்பெனி தன் முதலீடுகளை பெங்களூருக்குக் கொண்டு சென்று விட்டதாகவும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

இதில் இருக்கும் அவலத்தை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனியானது ‘ரிஸ்க் ‘ எடுத்து தமிழ்நாட்டில் 300 கோடி முதலீடு செய்ய முன் வருகிறது. மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் ? அவர்களை வரவேற்று, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்க வேண்டும். அப்படித்தான் நடக்கிறது ஆந்திராவிலும், கர்நாடகாவிலும். ஆனால் தமிழ்நாட்டை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் என்ன செய்கிறார்கள் ? செய்திருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. எண்ணிப்பார்பதற்கே துயரமாக இருக்கிறது.

300 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்பட்டால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் ? ஒரு விவாதத்திற்காக 3000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு என்று வைத்துக் கொண்டால், 30,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அந்த 30,000 பேர்களை நம்பியுள்ள 3,00,000 பேரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கக் கூடும். அத்தனையும் அடுத்த மாநிலத்திற்குப் போய்விட்டது. எதனால் ? சுயநலம் பிடித்தவர்களால். இதைக் காணும் மற்ற முதலீட்டார்கள் தமிழ்நாட்டின் பக்கம் வருவதற்கே அஞ்சுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப் படுபவர்கள் யார் ? தமிழ்நாட்டு மக்கள்தான்.

சமீபத்தில் வோல்ஸ் வேகன் கார் தயாரிக்கும் நிறுவனத்தினர் தமிழ்நாட்டிற்கு வந்த போது அவர்கள் நடத்தப்பட்ட விதமும், அதன் காரணமாக அந்தத் தொழிற்சாலை ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினத்திற்குப் போய் விட்டதுவும் நாமனைவரும் அறிந்த ஒன்று. எதனால் இப்படி நடந்தது என்பதைக் கேட்டு தமிழ்நாட்டின் எந்தவொரு பத்திரிகையும் இதுவரை எழுதியதில்லை. அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு. என்ன செய்ய ?

தமிழ்நாட்டின் இரண்டு திராவிடக் கட்சிகளும் மாஃபியா கும்பல்களைப் போலச் செயல்படுகின்றன. இல்லையில்லை. மாஃபியாக்களை விட மோசமான சமூக விரோத கும்பல்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். மாஃபியாக்களைக் கட்டுப்படுத்தவாவது சட்டங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் திராவிடக்கட்சிகளைக் கட்டுப்படுத்துவது எந்த சட்டத்தாலும் முடியாத காரியம். சட்டம் இருந்தாலும் அதனைச் செயல்படுத்த முடியுமா என்ன ?

அப்படியே ஒரு வெளிநாட்டுக் கம்பெனியோ/உள்நாட்டுக் கம்பெனியோ இவர்கள் கேட்கும் கமிஷன்களையும், லஞ்சத்தையும் கொடுத்துத் தன்னுடைய தொழிற்சாலையை தமிழ்நாட்டில்/இந்தியாவில் ஆரம்பிக்கின்றது என்று நினைத்துக் கொள்வோம். அந்தச் சமயத்திலும் மொட்டையடிக்கப் பட்டவர்கள் தமிழ் நாட்டு/இந்திய பொதுஜனங்களாகத்தான் இருப்பார்கள்.

எப்படி என்று விளக்குகிறேன்.

ஒரு உதாரணத்திற்கு, பிரபலமான ஜப்பானின் SONY கம்பெனி அதனுடைய தொலைக்காட்சிப் பெட்டி தயாரிக்கும் கிளையை 100 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் நிறுவுவதாக நினைத்துக் கொள்வோம். தமிழ்நாட்டில் கிடைக்கும் cheap labour மற்றும் குறைந்த தயாரிப்புச் செலவு காரணமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை ரூ. 10,000க்கு தயாரித்து, விற்க முடியும் என நினைக்கிறது அந்த நிறுவனம். ஆனால் நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றவர்களுக்குக் கொடுத்த லஞ்சம்/கமிஷன் காரணமாக அதன் விலையை உயர்த்தியே விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. அதாவது, ‘எங்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டு நீ எவ்வளவு லாபம் வைத்து வேண்டுமானாலும் விற்றுக் கொள். நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் ‘ போன்றதொரு எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்.

ஆகக் கடைசியில் தமிழ்நாட்டு/இந்திய கன்ஸ்யூமர்கள் தேவையில்லாமல் ஒரு பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்படுகிறார்கள். நியூயார்க் நகரைக் கலக்கிக் கொண்டிருந்த ஜான் காட்டி (John Gatti) போன்ற இத்தாலிய மாஃபியாக்கள் இதனைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். நியூயார்க் துறைமுகத்திலிருந்து வெளியே விற்பனைக்குச் செல்லும் ஒவ்வொரு பொருளிலும் அவர்களுக்குக் கமிஷன் இருந்தது. அதனால் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளின் விலையும் செயற்கையாக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் விற்பனையாகும் பொருள்களிலும் இது நடக்கிறது. நியூயார்க்கின் மாஃபியா, இந்தியாவில் அரசியல்வாதி. அவ்வளவுதான் வித்தியாசம்.

புத்தக விமரிசனம் செய்யவதற்கு ஆரம்பித்து எங்கெங்கோ போய்விட்டது கட்டுரை.

கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொண்டு, அடுத்த வாரம் புத்தக விமரிசனத்தைத் தொடர்கிறேன்.

**

narenthiranps@yahoo.com

Series Navigation