இரவில் காணமுடியாத காகம்

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இரவில் காண முடியாது காகங்களை
எந்த கூட்டில் எந்த காகமோ

என்ன பெயர் சொல்லி அழைக்கும்
தாய்காகம் தன் குஞ்சை

என்ன குழந்தை வேண்டுமென்று
கேட்பதில்லை காகங்கள்.

எனது மொழி காக்கைக்கு தெரிகிறது
எச்சி சோற்றை செடிமூட்டில் தட்டி
காகாவென ஒலி எழுப்பிவிட்டால்
எங்கிருந்து வருமோ தெரியாது
இந்த காகங்கள்

தொடர்ந்து காற்றில் நீந்திய காகம்
அசையில்
கம்பத்தில்
மதிற்சுவரில்
இடம் மாறிப் பார்த்தும் அகப்படவில்லை
வருத்தங்களைப் பகிர்ந்து கொள்ள
இன்னொரு காகம்.

நெல் உலர்த்தும் போது
கம்பில் நாட்டப்பட்ட காகம்
இறந்த காகத்தின் உலர்ந்த சிறகுகாட்டி
மிரட்டப்படுகின்றன
வாழும் காகங்கள்.

தன்னை பிரகடனப்படுத்தியவாறு
தோட்டிப் பறவை
பறைப் பறவையென
ஆலன்டாண்டிஸின் மூடிய புத்தகத்திலிருந்து
பறந்து வந்ததொரு காகம்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்