இரண்டாவது ஜனனம்
கவிதா நோர்வே
என் உயிரின் கடைசித் துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுது
பேசத் தோன்றுகிறது
குறைந்தபட்ச வாழ்க்கையே
தூரத்து வானமாய் போன
தேசங்களிடை…
வண்ணாத்தி பிடித்து
விளையாட
பூக்கள் இல்லாத தெருக்களின்
அதிகரிப்பு
கபாலங்கள் ஆக்கிரமித்த
பாதைகளிலும்
வாழ்வோம் என்று
கருக்களை சுமந்த வண்ணம்
காத்திருக்கிறது மனிதம்
வெற்றுவானத்தில் தூரல் வருமென
சுடுமணலில் குந்தியிருந்து குந்தியிருந்து
கொப்பளித்துப்போனது நம்பிக்கை
என் முப்பாட்டனின் கனவுகள்
இன்னும் புதிதாய்
என் பேரனின் கண்களிலும்…
பரம்பரைச்சொத்தாய் பயணிக்கும்
கொடுரம்
மனித உரிமைகளெல்லாம்
மனுக்களோடு மரணிக்க
எம் நிறங்களை எரித்த
தீயின் மிச்சமாய்
புலம்பெயர் வாழ்வும்
இரண்டாவது ஜனனம்
நிச்சியமென்றிருந்தால்
இதைப்பற்றியெல்லாம்
பேசியிருக்கத் தேவையில்லை
யுகம் சமைக்குமென
சுயம் எரித்து
அடுத்தது என்ன
என்ற கேள்வியொடு
என் உயிரின் கடைசித் துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுது
பேசத் தோன்றுகிறது
இத்தனையும்
– கவிதா நோர்வே