இன்னொரு பிறவி வேண்டும்…….

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

நந்தா நா வேலூர்


ஆயிற்று –
ஆண்டுகள் இருபத்தைந்து
நாம் இருவர்
கரம் பற்றி.

அன்று போல் இன்றும் –
நீ
இனியும் இது போல் வேண்டாம் –
நான்

உன்னால் மட்டுமே சாத்தியம்…
இது வரை
உன் கரம் கொண்டு
அணைக்க மட்டுமே செய்தாய்!

மாறாய் நான்…
எண்ணும் பொழுதே – என்னை
குற்ற உணர்வுகள் கொள்கிறது.

பெண்ணுரிமை
எனும் போர்வையில்,
என் பெண்மையை சிதைத்தேன்.

நான் –
பெண் வர்க்கத்தின்
விதிவிலக்கு!

ஏன் ?
இத்தனை ‘ஆணவம் ‘
எனக்கு மட்டும்.

ஆணவத்தின் அணிகலனாய்
நான்!
அமைதி பூங்காவாய்
நீ!

அகங்காரம் என்னை ஆட்டுவிக்க,
அதன்படி உன்னை நான் ஆட்டுவிக்க,
ஆணாதிக்க சமுதாயத்திலும் – நீ
அமைதி காத்தாய்!
அமைதியான பெண்மையை
நான் ஆர்பரித்தேன்.

ரோஜாவனத்தில்
முள் பறித்தது
உன் துர்ப்பாக்கியம்.

எத்தனை குறைகள்
என்னிடம் ?!
ஒன்றை மறைக்க
இன்னொன்று முளைத்தது.

அச்சுறுத்தினேன்,
உன்னை பிரிவேனென்று!
நீ –
மாட்டாய் என்ற
ஒற்றை எண்ணத்தில்.

எத்தனை சிறுமனம்
எனக்கிருந்தாலும்
என்னவனே,
உறுதியாய்
ஒன்று சொல்வேன்!
உன் மீதான
என் காதல் ‘உன்னதம் ‘! – அதில்
எள்ளவும் சந்தேகம் வேண்டாம்.

பக்குவமில்லா மனம்…
ஒப்புக் கொள்ளா குறைகள்….
இவைகளன்றி
நீயுமோர் காரணம்
இந்நிலை நான் அடைய…

அணைத்தாய்!
அடித்தாயா ? என் கர்வம் குறைய…
மன்னித்தாய்!
கண்டித்தாயா ? என் குறைகள் களைய…

சிறுத்தையின் கட்டுபாடு
சாட்டையில் தானே ?
புள்ளிமானாய் பாவித்தது
உன் குறையன்றோ ?

இன்றும் –
மன்னிக்கும் மனம்
உண்டு உனக்கு.
கேட்கும் அருகதை
இல்லை எனக்கு.

என்னை வெறுத்து – நான்
மனம் புழங்கிய நாட்கள்
எனக்கு மட்டுமே வெளிச்சம்.

இனியும் இது போல் வேண்டாம்….

இன்னொரு பிறவி வேண்டும்…!
அதிலும் உன் துணையாதல் வேண்டும்!
அன்றன்றே என் குறைகள் களைய வேண்டும்!
உன் மடி பஞ்சணையாய் துயில வேண்டும்!
***
kanthimagan@yahoo.co.uk

Series Navigation

நந்தா நா வேலூர்

நந்தா நா வேலூர்