இந்த வாரம் இப்படி, மே 27, 2001

This entry is part [part not set] of 13 in the series 20010527_Issue

மஞ்சுளா நவநீதன்


இஸ்லாமிய நாஜிகள் தாலிபான் உருவில்

புத்தர் சிலைகளைத் தகர்த்த பின்பு, பெண்கள் வேலைக்குப் போவதை விட்டொழித்த பின்பு, எல்லாச் சிறுபான்மையினரையும் அழித்த பின்பு, இருக்கிற கொஞ்ச நஞ்சம் இந்துக்களும் தம்மைத் தனியாக அடையாளம் காண்பிக்க மஞ்சள் துணியை அணிய வேண்டும் என்று தாலிபான் கட்டளையிட்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் போர் துவக்கத்தில் 50000 பேர் இந்துக்கள் இருந்தார்கள் . இன்று 500 அல்லது ஆயிரம் பேர் தான் இந்துக்கள் இருக்கிறார்கள். ஹிட்லரின் நாஜி அரசில் யூதர்களை ஆறு முனைகள் உள்ள நட்சத்திர வடிவத் துணியை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். 60 வருடங்களின் பின்பு இப்போது தாலிபான் இந்துக்களுக்கு இந்த இழிவை வழங்கியிருக்கிறது. கலாசார வித்தியாசம் தான் இதுவும் என்று யாரும் வாதிடுவார்களா என்று தெரிய வில்லை.

புத்தர் சிலை உடைப்பின் போதும் இதையே நான் சொன்னேன். இந்த உடைப்புகளில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. அதே போல் இப்போது இந்துக்களை மஞ்சள் துணி அணிவதற்குக் கட்டாயப் படுத்துவதிலும் வியப்படைய எதுவுமில்லை. கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய நாடுகளுமே மற்ற மதத்தினரை இரண்டாம் தரக் குடிமகன்களாகவே நடத்துகின்றன. மேல் நாடுகள் போல மற்ற நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்குக் குடியுரிமை அளிப்பதோ, அவர்களுக்கு ஜன நாயக அடிப்படை உரிமைகளினை அளிப்பதோ அவர்களுக்கு உவப்பில்லை. பாகிஸ்தானில் இந்துக்களுக்கு மற்ற முஸ்லீம்களுடன் சேர்ந்து வாக்களிக்கும் உரிமை கூடக் கிடையாது. இப்படிப்பட்ட கொள்கைகளின் தர்க்க ரீதியான வளர்ச்சி தான் தாலிபான் இந்து அவமதிப்புச் சட்டம்.

ஹிட்லருக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து , ரஷ்யா இணைந்து போரிட்டு மக்களை மீட்டது போன்று இன்றும் தாலிபனுக்கு எதிராகப் படை திரண்டு தாலிபன் சக்திகளை அழிக்காவிட்டால், இந்தப் போக்கு வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

**********

ஜெயலலிதா பதவி ஏற்பை எதிர்த்து வழக்கு

ஜெய லலிதா பதவி ஏற்கலாகாது என்று பொது நல வழக்குத் தொடரப் பட்டுள்ளது. இதன் பலன் என்னவாக இருந்தாலும் அடிப்படையான ஒரு விஷயம் மாறப் போவதில்லை. ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தாலும் அவருடைய பேனாமியாக – லாலுவுக்கு ராப்ரி தேவி போல – யார் நாற்காலியில் உட்கார்ந்தாலும், ஜெயலலிதா தான் திரை மறைவில் இருந்து இதனை இயக்கப் போகிறார். எனவே இந்த வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவிற்குத் தான் வெற்றி.

இதற்குப் பதிலாக ஜெயலலிதாவின் மீதுள்ள மற்ற ஊழல் வழக்குகள் மத்திய அரசு அல்லது சி பி ஐ-யின் மூலம் நடத்தப் பட்டு துரிதப் படுத்தப் பட வேண்டும். இதனால் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறை செல்ல நேர்ந்தால், சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும்.

***********

வாஜ்பாய் – முஷரஃப் பேச்சு வார்த்தை

வாஜ்பாய் முஷரஃபிற்குப் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்ததை எல்லோரும் வரவேற்றிருக்கிறார்கள். இந்து போன்ற பத்திரிகைகளில் மிக நல்ல திருப்பம் என்று தலையங்கம் கூட எழுதியிருக்கிறார்கள். எனக்கு இதில் பல விஷயங்கள் புரியவில்லை. முஷரஃப் நிலைபாட்டில் என்ன மாறுதல் நிகழ்ந்து விட்டது ? முஷரஃப் இன்னமும் கூட ஜனநாயகத்திற்கு பாகிஸ்தானைத் திருப்புவதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. அதில்லாமல் , அங்கே போன காஷ்மீர் தலைவர்களை ஏவி விட்டு பாகிஸ்தானுடன் தான் காஷ்மீர் சேர வேண்டும் என்று அறிக்கை விடச் செய்கிறார். (காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கழட்டி விடப் பட்டிருக்கிறது.) எல்லைப் புறத்தில் வேலி அமைப்பதையும் எதிர்த்திருக்கிறார். பாகிஸ்தான் ஏவி விடுகிற வன்முறைச் செயல்கள் குறைந்ததாகவும் புது தில்லியிலிருந்து தகவல் இல்லை.

ஒரு நவாஸ் ஷரீஃபுடன் பேசிவிட்டுத் திரும்பியவுடன் கார்கில் போர் வெடித்தது. முஷரஃப் அதைச் சாக்கிட்டு சர்வாதிகாரியாகி விட்டார். முஷரஃபுடன் பேச்சு வார்த்தை முடிந்தபின்பு எந்த அஷரஃப் வருவாரோ தெரியவில்லை. இந்த லட்சணத்தில் எதை நம்பிப் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறார்கள் இவர்கள் ?

******

பிச்சை புகினும் கற்கை நன்றே

பிச்சை எடுத்து அதன் மூலம் வருகிற சொற்பக் காசுகளை வைத்து பத்தாவது தேறியுள்ள சிறுமி நாகரத்னாவிற்கு என் வணக்கங்கள். இது மாதிரி எத்தனை நாகரத்னாக்கள் எங்கெல்லாம் மறைந்திருக்கிறார்களோ ? வாய்ப்பில்லாமல் முடங்கிப் போகிறார்களோ என்று என்ணும் போது துயரமும் கையாலாகாத கோபமும் பொங்கி எழுகிறது.

******

இன்னொரு தெலிங்கானா போராட்டம்

மார்க்ஸ் சொன்ன ஒரு வாசகம் பலராலும் பல முறை திரும்பத்திரும்பச் சொல்லப் பட்டது. ‘ வரலாற்றின் நிகழ்ச்சி முதல் தடவை பெரும் வீர சாகசச் சோகமாய் நடந்தால் அடுத்த முறை அது கேலிக் கூத்தாய் நிகழும். ‘ தெலிங்கானா போராட்டம் ‘மீண்டும் ‘ தொடங்கப் போவதாய்ப் படித்த போது இது தான் என் நினைவிற்கு வந்தது. அந்தப் பழைய தெலுங்கானா போராட்டம் உண்மையான பிரசினைகளை முன்னிறுத்தி நடந்த வீரம் செறிந்த போராட்டம். இன்று ?

காங்கிரஸ் தெலிங்கானா போராட்டம் நடத்தப் போவதாய்ப் படித்த போது இது தான் என் நினைவிற்கு வந்தது. தெலிங்கானா பகுதி ஆந்திராவின் மிகப் பின்னடைவு பெற்ற பகுதி வளர்ச்சி குறைவு, தனி மானிலம் ஆவதால் இன்னமும் கவனம் குவிந்து வளர்ச்சி முயற்சிகள் நடக்கலாம். ஆனால் காங்கிரஸ் நோக்கம் அதுவல்ல. சந்திர பாபு நாயுடுவை எதிர்த்து ஆந்திர ஆட்சியைக் கைப்பற்ற இப்போதைக்கு முடியாது என்ற உணர்வில் தெலிங்கானா போராட்டம் ஆரம்பிக்கப் போகிறார்களாம். போராட்டம் பற்றி திட்ட வரைவு செய்து மேலிடத்தின் அனுமதிக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த மேலிடம் தான் காங்கிரஸின் சாபக்கேடு. பாவம் சோனியா அம்மையார் ஒன்றும் புரியாமல், இந்திய வரைபடத்தில் தெலிங்கானா என்ற பகுதி எங்கே என்று தடவிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

மார்க்ஸிஸ்ட் கட்சியுன் சீதாராம் எச்சூரி இதனை எதிர்த்திருக்கிறார். கூர்க்கா போராட்டம் இடது சாரி ஆட்சிக்குக் கொடுத்த தலைவலியை ஞாபகத்தில் வைத்துத் தான் இந்த எதிர்ப்பு உருவாகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மொழி வாரி மானிலங்கள் உருவானதன் அடிப்படையை இது பாதிக்கிறது என்கிறார் அவர். அப்படிப் பார்க்கப் போனால், உ பி-யும் ம பியும் சேர்ந்து ஒரு மானிலமாக அல்லவா இருக்க வேண்டும் ?

தென் தமிழ் நாடு மானிலம் கோரி நடந்த மாநாடு என்னாயிற்று என்று தெரியவில்லை. அம்மையார் ஆட்சிக்கு வந்து விட்டதால் இழுத்து மூடி விட்டார்கள் என்று தோன்றுகிறது.

******

அதிகார பீடங்களில் பெண்கள்

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னமும் பாராளுமன்றத்தில் கிடக்கிறது. இன்றைய கேரளா அமைச்சரவையில் ஒரு பெண்ணும் இடம் பெற வில்லை என்று செய்தி. இட ஒதுக்கீடை ஆதரிக்கிறேன் என்று சொல்கிற கட்சிகள் கூட பெண்களுக்கு இடங்களை வழங்கிவிடவில்லை. ஆனால் ஜெயலலிதா கட்சியில் தொடர்ந்து பெண்களுக்குச் சற்றே அதிக அளவில் இடங்கள் வழங்கப் பட்டு வந்திருக்கிறது. இது வரவேற்கத் தக்க ஒன்று. (பெண்கள் தான் ஆண்களை விடத் தன்னிடம் தனிப்பட்ட முறையில் விசுவாகமாக இருப்பார்கள் என்று அம்மையார் கருதுவதாகவும் ஒரு கருத்து உண்டு.)

ஆனால் பெண்களுக்கு அதிகாரம் அதிக அளவில் வழங்கப் படுவதால் மட்டுமே நல்லாட்சி வந்து விடும் என்பது ஒரு மாயை. அதற்கு ஜெயலலிதாவே உதாரணம். இந்திர குமாரி என்ற முன்னாள் அமைச்சரும் தண்டனை பெற்றதை அறிவோம்.. இனி சரியான பெண்களைத் தேடி அதிகாரம் வழங்க வேண்டும் என்று நமக்கு இது ஒரு பாடம்.

*****

உழவர் சந்தைகள் ஒழிகின்றன

ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் தமிழ் நாட்டில் இதே கூத்து தான். பழைய ஆளின் திட்டம் என்பதாலேயே கிடப்பில் போடுகிற இந்த அசிங்கமான , சின்ன புத்திச் செயலை எம் ஜி ஆர் தான் தொடங்கி வைத்தார் என்று நினைக்கிறேன். வீராணம் திட்டம் கிடப்பில் போடப் பட்டதற்கு அது கருணாநிதி காலத்திய செயல் திட்டம் என்பதைத் தவிர வேறு எதுவும் வலுவான காரணம் சொல்லப் படவில்லை. நல்ல வேளையாக , கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் , கிருஷ்ணா நதி நீர்த்திட்டம் எம் ஜி ஆர் காலத்திய திட்டம் என்பதால் நிறுத்தி வைக்கப் படவில்லை.

இப்போது உழவர் சந்தைகளை எடுக்கப் போகிறோம் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளது இப்படிப் பட்ட ஓர் ஈனச் செயல் தான். உழவர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் நடுவில் இடைத் தரகர்களை நீக்கியதால், உழவர்களுக்கும் பயன் கிடைத்தது. நல்ல பண்டங்கள் குறைந்த விலையில் கிடைத்ததால் மக்களுக்கும் பயன் கிடைத்தது. இனிமேல் தரகர்களுக்குக் கொண்டாட்டம் தான். பல இடங்களில் உழவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாய் அறிகிறோம். ஜெயலலிதாவின் பழைய போக்குகளை வைத்துப் பார்த்தால் இவர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப் படுவது நிச்சயம் .

அதி மு க வின் தேர்தல் அறிக்கையில் உழவர் சந்தை ஒழிப்புப் பற்றி ஏதும் இருக்குமா என்று தேடிப் பார்த்தேன். ஒன்றும் காணோம். உண்மையில் உழவர் சந்தைகள் – இந்தப் பெயர் பயன் படுத்தப் படவில்லை – விரிவு படுத்தப் படும் என்று தான் போட்டிருக்கிறார்கள். (தேர்தல் அறிக்கையையெல்லாம் பொருட்படுத்திப் படிக்கிறாயாக்கும் என்கிறீர்களா – அதுவும் சரி தான். )

*******

போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்கள் பெயர்கள்

மறுபடியும் கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் இடப் பெறும் என்று அறிவிப்புப் பார்த்தேன். நான் இதை வரவேற்கிறேன். அன்னை சத்தியா, அன்னை சந்தியா, சகோதரி சசிகலா , அன்னை ஜெயலலிதா போன்ற தியாகச் செம்மல்களின் பெயர்களில் தொடங்கட்டும். . கொஞ்சம் பின்னால் போய் ஏன் இந்தப் பெயர்கள் நீக்கப் பட்டன என்று பார்த்தால் அது ஓர் அப்பட்டமான சாதியச் செயல் என்பது புரியும். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் ஒருவர் பெயரைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சூட்டுவதா என்ற மேல்சாதியினர் ஆத்திரத்தால் , பரவிய வன்முறையைத் தொடர்ந்து , அந்த மேல் சாதியினரைத் திருப்திப் படுத்தத் தான் பெயர்கள் நீக்கப் பட்டன.

நம் சமூகத்தின் சாதிச் சார்பையும், சாதி ஒழிப்பு என்ற பம்மாத்து தமிழ் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொய் என்பதை நிருபிக்க வேண்டியும், சாதித் தலைவர்கள் பெயர் சூட்டப் படட்டும். நம்முடைய சமூகம் சாதியச் சமூகம் என்பது நம் நினைவில் எப்போதுமே இருக்க வேண்டும். நம் தலைவர்கள் அவரவர் சாதனைகளைத் தாண்டியும் சாதியப் பிரதிநிதிகளாய்த் தான் கருதப் படுகிறார்கள் என்பதும் நம் நினைவில் எப்போதும் இருக்கட்டும்.

******

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts