வாப்பா.. நான் செஞ்சது தப்பா…. ?

This entry is part [part not set] of 13 in the series 20010527_Issue

முடவன் குட்டி.


பெரு விரல் பருமனில் நீளமான கயிறு. தூணோடு நிற்க வைத்து, கைகள் இரண்டையும் பின்னால் வளைத்துக் கட்டி, வயிற்றையும் இரண்டு சுற்று சுற்றிக் கட்டினார் அண்ணன். மீதிக் கயிற்றின் நுனியில், நிதானமாக முடிச்சுப் போட்டார். ‘ ஒரு முடிச்சுப் போதும்-ணேன். ஒண்ணு போதும் ‘- கதறணும் போல இருந்தது. ‘ இனிமே கண்ட கண்ட பயல்களோட செருப்பைக் காலில போடுவியா.. ? இந்தக் காலை வெட்டி தறிச்சா என்ன… ? ‘- விர் விர் ரென தொடையிலும், வயிற்றிலும், கரண்டைக் காலிலும் மாறி மாறி விளாரிற்று கயிற்று முடிச்சு. வலி உயிரை சுண்டிச் சுண்டி இழுத்தது. பற்களை இறுகக் கடித்து வேக வேகமாய்த் தலையை ஆட்டினேன்: டபால் டபால்-னு பின் தலையை தூணில் மோதினேன்: ஹா ஹா -ன்னு அடித்தொண்டை கிழியக் கத்தினேன்: என்ன பண்ணியும் வலியைப் போக்காட்ட முடியவில்லை. இதுக்கெல்லாம் காரணம் அந்த புத்துக் கால் நெய்னா முகம்மது தான்.கள்ள ஹராத்தில பொறந்த பய. அவன் வெளங்குவானா .. ? நேத்து கீழ வீட்டுக்கு வந்திருந்தான். வாசலில் செருப்பை கழட்டிப்போட்டுட்டு வீட்டுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான். அவனிடம் கேட்டேன். சரி ..போட்டுக்கோ. ஆனா தூரமா போவப்படாது. சீக்கிரம் வந்திடணும்-னு சொன்னான். செருப்பை போட்டுக்கிட்டு நாலே நாலு எட்டுத்தான் நடந்தேன்- உடனே திரும்பி விட்டேன். என்னையே பார்த்தவாறு, வாசலில் நின்று கொண்டிருந்தான் நெய்னா முகம்மது. ‘ செருப்பு-ன்னா ரொம்ப ஆசையாடே…. இன்னும் கொஞ்சம் தூரம் நடந்திட்டு வாயேன் ‘ -னான். வேண்டாம்-னு அங்கேயே கழட்டிக் கொடுத்துட்டு வந்துட்டேன். போட்டுக்கோ-ன்னு என் கிட்ட அன்பா சொல்லிட்டு, அண்ணன் கிட்ட கோள் சொல்லி, அடி வாங்கிக் கொடுத்துட்டான். வேய்.. இதுக்குத் தான் ஆண்டவன் உன் காலில புத்து (கால் ஆணி ) வச்சான். ரெண்டு காலிலையும் புத்து வந்து, நீ செத்து நாசமாப் போவணும்-னு கருவினேன். போன வாரம் க்ளாஸ்-ல, மம்மது ஷா செருப்புப் போட்டுக்கிட்டு வந்தான். ஏல.. ஒருக்க, ஒரே ஒருக்க..ன்னு, அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி செருப்பை வாங்கிப் போட்டு நடக்கையில, முத்தையா சார் எதிர்-ல வந்தது தெரியாம போச்சு. ‘ யாரு செருப்புல அது.. இன்னொருபய செருப்பை எப்படி நீ போடலாம் ‘-னு கன்னத்தில ஓர் அறை விட்டார். அவரைக் கண்டுக்காம, வணக்கம் சொல்லாம வந்ததுக்குத் தான் அடிச்சார்-னு ஹமீதா சொல்லிச்சு. ஹமீதா என் க்ளாஸ் மேட். வகுப்புல யார் ஃப்ர்ஸ்ட்- அவளா- நானா-ன்னு எப்போதுமே எங்களுக்குள்ள போட்டி. ராமகிருஷ்ணன் பள்ளிக்கூடத்திலயிருந்து பாதியிலேயே நிண்ணுட்டான். அவன் இருந்தா எப்பவுமே அவன் தான் ஃப்ர்ஸ்ட். ஹமீதா பணக்காரி. அவ வாப்பா சிங்கப்பூர்ல இருக்கிறார். தெனமும் புதுசு புதுசா பூப் பாவாடை கட்டி வருவாள். கலர் கலரா செருப்பு போட்டு வருவாள். ‘ செருப்பு ஒண்ணு வீட்ல கெடக்கு. தரவா ‘-ன்னு கேட்டாள். பணக்காரிங்கிற திமிர் உனக்கு-ன்னு குமுறினேன். அவ கண்ல குபுக்-னு கண்ணீர் கட்டியது.

திண்ணையில் தான் வாப்பாவும் நானும் தூங்குவோம்.வாப்பாவின் கழுத்தை சேர்த்தணைத்தவாறு, அவர் முதுகில் படுத்துக் கொள்வேன். மெதுவாக, உருண்டு உருண்டு ஊஞ்சல் ஆடியவாறு, கதை சொல்வார்.அப்படியே தூங்கிப் போவேன். இப்போதெல்லாம்- நான் ஆறாம் க்ளாஸ் வந்த பிறகு- வாப்பா கதை சொல்வது குறைஞ்சு போச்சு. நீ சொல்லுடா ..சொல்லு-ன்னு என்னைத்தான் சொல்ல வச்சுக் கேக்கிறார். வாப்பாவிடம் எதை வேணும்னாலும் சொல்லலாம். திட்ட மாட்டார். அடிக்க மாட்டார்.

இண்ணைக்கு வாப்பா முதுகில் படுத்து ஊஞ்சல் ஆடவில்லை. என்னை மடியில் கிடத்தி, என் நெஞ்சு, வயிறு, கால்களை மிருதுவாக தடவி தடவிக் கொடுத்தார். அண்ணன் கயிற்று முடிச்சால் விளாரிய தடிப்புக்களில்- அவர் கை விரல்கள் நின்று நின்று நடுங்கின. ‘ கொள்ளி முடிஞ்சுபோவான்…இளங்- குறுத்தை இப்படியா போட்டு அடிப்பான்.. ‘ -அம்மாவின் குரல் கர கரத்தது. ‘ அவனை ஏம்ளா வைய்யிறே.. ? பாகப் பிரிவினையில…. கூடப் பொறந்தவனால மோசம்போயி வீடு வாசல் இழந்து நிக்கிறேன்… பூர்வீகச் சொத்து-ன்னு என்ன வச்சிருக்கேன்.. ? நான் பட்ட கடனை.. .. கடனைத் தான அவன் தலையில கட்டியிருக்கேன்.. ? ‘ -வாப்பா மடார் மடார்-னு மார்பிலும் தலையிலும் அடித்துக் கொள்கிறார். ‘ பாவம்.. மூத்த புள்ளையா பொறந்துட்டான். ராப் பகலா தறி நெய்து, பாவு ஒடி சாவாம செத்து வேகாம வேகுறான். கடனை அடைப்பானா.. ? ஆமினா, சுபைதா, பாத்துமா-ன்னு .. வரிசையா நிக்கிற தங்கச்சிமாரை கரை சேப்பானா.. ?. அவனால என்னை அடிக்க முடியல்ல. அதனால தான்… இந்தப் பய ..செருப்பு கேட்டத காரணமா வச்சு…..எல்லாம் என் தலை எழுத்து… பெத்த புள்ளைக்கு செருப்பு வாங்கித்தர ஒரு பத்து ரூபாய்க்கும் வக்கத்த வெறும் பயலாப் போயிட்டேனே… ‘ – துண்டை வாயில் திணித்து அடக்கியும் வாப்பாவின் குமுறல் விக்கி விக்கித் தேய்கிறது..

யூசுப் தான் சொன்னான். சேவக்கன் சாச்சி வீீட்டில் நிலக்கடலைத் தோலை உரிச்சு, கடலையை தனியா பிரிச்சா மரக்காவுக்கு 25 பைசா கிடைக்கும்-னு. பள்ளிக்கூடம் விட்டதும் சாச்சி வீட்டுக்கு சிட்டாய்ப் பறந்தேன். அங்கே அஜீஸ், சேகனா, வகாப்-ன்னு மூலைக்கு மூலை உக்காந்து உரித்துக் கொண்டிருந்தனர். ‘ யாருல அது… ஹாஜாவா.. ? கடலை உரிக்கவா வந்தே.. வா. அங்க உக்காரு. எம்புடு வேணும்-ல.. ? சாச்சி கத்தினாள். ஒரு விரலைக் காட்டினேன். ‘ஒரு மரக்காவா.. ? ‘ – வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் தெரியச் சிரித்தாள். அவ சொன்னது தான் சரி. பாதி பக்கா உரிக்கையிலையே , விண் விண்-ணென்று கை வலிக்க ஆரம்பித்து விட்டது. கஷ்டப்பட்டு ஒரு பக்கா ஒப்பேத்தினேன்.

‘ காலையில சீக்கிரமே எழுப்பிடும்மா.. நூல் சுத்தணும். சின்ன ராட்டையை சரி பண்ணி வை. நல்ல நூலாகப் பாத்து இரண்டு கழி எடுத்து, சிட்டம் சிட்டமா பிரிச்சுப் போட்டுரு. குட்டி விளக்குல மண்ணெண்ணை இருக்குதுல்ல.. ? மறக்காம எழுப்பிடும்மா. இனிமே தினமும் எழுப்பணும் -அம்மாவிடம் சொன்னேன். அன்று இரவு வாப்பா முதுகில் ஊஞ்சல் ஆடியபோது…. சேவக்கன் சாச்சி வீட்டில் நிலக்கடலை உரித்து…. நூல் சுத்தி…. பாவு ஆத்தி…. நானாகவே துட்டு சேர்த்து கந்தூரிக்குள்ள செருப்பு வாங்கப் போறேம்பா.. அண்ணனிடம் துட்டு கேக்க மாட்டேன்-ன்னு வாப்பாவிடம் சொன்னேன். ஊஞ்சல் டப் பென நின்றது. அப்புறம் நிண்ணு நிண்ணு தான் ஆடியது… சீராக ஆடவில்லை.

காலையில் சீக்கிரமே எழுப்பி விட்டாள் அம்மா. நல்ல நூலாக இருந்தது. கிடு கிடு வென சுத்திவிட்டேன்.தெருவில் பாவு போட்டு விட்டார்கள். எதிர்த்த வீட்டு ஹமீது அண்ணனிடம் கேட்டேன். சரி. 5 பைசா வாங்கிக்கோ. கூடமாட ஒத்தாசை பண்ணு-ன்னான். பாவு வாளிக்கையிலேயே பீடி, சாயா வாங்கி வர விரட்டினான். பாவு வாளித்து முடிந்த பின்னாலும் அது செய் இது செய்-ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான். அண்ணே ஸ்கூலுக்கு லேட் ஆவுது. பாவு தான் ஆத்தி முடிச்சாச்சே.. என்றேன். ‘ சரி நீ போ -ன்னான். தயங்கி நின்றேன். ‘என்ன..துட்டு வேணுமா.. ?இன்னம் ஒரு மணி நேரம் நிப்பியா… ?-னான். ‘அண்ணே.. நீ 5 நேரம் தொழுவுறே.. நோன்பு பிடிக்கிறே.. இப்படியெல்லாம் ஏமாத்தலாமா.. ?-ன்னேன். அங்க கிடந்த கம்பை எடுத்து என் முகத்தில் வீசினான். அம்மாதான் சமாதானம் சொன்னா. ‘ நாளையில இருந்து ரகீம் தாத்தா கூட பக்கத்து தெருவுக்குப் போயி பாவு வாளி. அவர் கிட்ட சொல்லியர்றேன். ‘

பள்ளி வாசலில் காலைத் தொழுகை அழைப்பு வரும்போதே என்னை எழுப்பி விடுகிறாள் அம்மா.நூல் சுத்தியதும் பக்கத்து தெருவுக்கு ஓடுவேன். தாத்தா தங்கமானவர்.ஹமீது அண்ணன் மாதிரி ஏமாத்துக்காரர் இல்லை. பாவு ஆத்தி முடிந்ததும் டக் கென 5 பைசாவை என் உள்ளங்கையில் வைத்து அழுத்துவார். பொக்கை வாய் தெரிய அவர் சிரிப்பது காந்தி தாத்தா போல இருக்கும்.

‘ யாரு யாரு ஹோம் வொர்க் பண்ணலை.. ? பெஞ்சு மேல ஏறு – அலறினார் சுப்பையா சார். திக் கென்றது. கை கால் உதறியது. நூல் சுத்தி..பாவு ஆத்தியதில் மறந்தே விட்டது. அஜீஸும், யூசுப்பும் எப்போதுமே பெஞ்சுமேல ஏறி நிற்பவர்கள். அவர்களோட நானும் சேர்ந்துகொண்டதில் அவர்களுக்கு குஷி. ஹமீதா என்னைத் திரும்பி திரும்பிப் பார்த்தாள். கழுதை தேஞ்சு ….ன்னு ராகம் பாடியவாறு பிரம்பால் கையிலும் தொடையிலும் மாறி மாறி அடித்தார் சுப்பையா சார். நேற்று அண்ணன் அடித்த இடத்திலேயே பிரம்படியும் விழ, அலறிவிட்டேன். ‘ படுவா ராஸ்கல் லேசா அடிச்சதுக்கே அழுது ஊரைக் கூட்டுவியா.. ? இண்ணைக்கு முழுக்க பெஞ்சு மேல நில்லு -ன்னு சொல்லிட்டார்.

பள்ளிக்கூடம் விட்டதும் சேவக்கன் சாச்சி வீட்டுக்குப் போனேன்.கொஞ்சம் தான் உரிச்சிருப்பேன். சார் அடிச்ச இடம் பக பக-ன்னு எரிஞ்சது. பெஞ்சு மேல நிண்ணதால கால் கடுத்தது. சாச்சியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.வாசல் படியை தாண்டக் கூட இல்லை. ஓடிவந்தாள் சாச்சி. என் தலை முகமெல்லாம் தடவியவாறு ‘ ஏம்ல ராசா முகமெல்லாம் வாடி இருக்கு.. இந்தா வச்சுக்கோ-ன்னு கை நிறைய கடலை அள்ளி பையில் போட்டாள்.

சீக்கிரம் எழுந்து நூல் சுத்துவது.. பாவு ஆத்துவது.. பள்ளிக்கூடம் விட்டதும் சாச்சி வீட்டில் கடலை உரிப்பது.. என பழக்கமாகி விட்டது. கோலி, பம்பரம், மரத்துக் குரங்கு-ன்னு விளையாட யாரும் என்னை கூப்பிடுவது இல்லை. ‘ அவன் வர மாட்டான் டேய்.. செருப்பு வாங்க துட்டு சேக்கிறான்..டேய் ..ன்னு சத்தம் போட்டு ஏச்சங் காட்டினார்கள். அழுகை அழுகையா வந்தது. ஊஞ்சல் ஆடும்போது வாப்பாவிடம் சொன்னேன். ‘ விருதா பயலுக என்ன வேணும்-னாலும் சொல்லிட்டுப் போவட்டும். அதுக்காக எடுத்த காரியத்தை விட்டுராத…- ஆணி அறைஞ்ச மாதிரி வாப்பா சொன்னார்.

சேவக்கன் சாச்சி வீட்டுக்குப் போகும் வழியில் தான் நடராஜன் செருப்புக் கடை. எட்டிப் பார்த்தேன். தாடி மாமா தலை தெரிந்தது. என்னைப் பார்த்ததும் ‘ வாடேய்.. ஒன் செருப்பை பாக்கணுமா….ன்னு கேட்டவாறு டப் பென ஒரு ஜோடி செருப்பை என் முன்னால் போட்டார். காய்ந்த தரை நிறத்தில் பள பள..ன்னு செருப்பு மினுங்கியது. அதனை இரண்டு கையிலும் அள்ளி எடுத்து தடவிப் பார்த்தேன். ‘அது உனக்குத் தாண்டா. காலில போட்டு நடந்து பாரு ..-ன்னார் மாமா. ‘ கந்தூரிக்குள்ள துட்டு சேர்த்துடுவேன் மாமா-.ன்னேன். ‘ கந்தூரியா.. அதுக்கு இன்னும் 2 மாதம் இருக்கடே- ன்னார். ‘ ஏன் மாமா அது வரைக்கும் வச்சிருக்க மாட்டாங்களா..ன்னேன். ‘ அட பயந்தாரிப்பய மவனே… நீ எப்ப வந்தாலும் அது உனக்குத் தாம்-லேய்… இப்ப அதெ போட்டு நடந்து பாரு..ன்னார். செருப்புக்குள் காலை நுழைக்கப் போகையில், ஏதோ நினைத்து, கால்களை பின்னால் இழுத்துக் கொண்டேன். இல்லை மாமா இருக்கட்டும்-னு சொல்லி வெளியே வந்து விட்டேன்.

பள்ளிக்கூடம் விட்டதும் ஓடி வந்தான் யூசுப். ‘ ஏல ஹாஜா.. கஷ்டமே படாம அரை மணி நேரத்ல 25 பைசா சேக்கணுமா.. ? எங் கிட்ட ஒரு ஐடியா இருக்கு… சொல்லட்டா.. ? நாம இப்ப முக்கு கடை சாகுல்-கிட்ட போறோம். ஒரு பாக்கட் கடலை மிட்டாய் வாங்குறோம். துட்டு ஒரு வாரம் கழிச்சு கொடுத்தா போதும்..உன்னால விக்க முடியல்ல..ன்னா, நானே உனக்காக வித்துத் தாரேன். நீ எனக்கு ஒரே ஒரு கடலை மிட்டாய் கொடுத்தா போதும். என்ன சரியா.. ?-ன்னான். வேண்டாம்லே..ன்னேன். ‘ அப்ப நீ ஹோம் வொர்க் பண்ணாம பெஞ்சு மேல ஏறியத உன் அண்ணன்..ட்ட சொல்லிடுவேன்.. ன்னு பயமுறுத்தி முக்குக் கடைக்கு இழுத்துக்கிட்டு போனான். ‘ ஒரே ஒரு வாரம் தான் டைம். அதுக்குள்ள துட்டு வந்திடணும்.. கண்டிஷனா சொல்லி, மிட்டாய் பாக்கட்டை தந்தான் சாகுல். என் தோளை அணைத்தவாறு ‘நீ ஒண்ணும் பயப்படாதல. நான் வித்துத் தாரேன்..னு சொல்லி, மிட்டாய் பாக்கெட்டை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டான் யூசுப்.

அம்மாவிடம் நாலாவது தடவையாக கேட்டேன். கந்தூரிக்கு மாமா துட்டு தருவாரா..ன்னு. ‘ கண்டிப்பா தருவாருடா. எனக்கும் தருவார். அதையும் உனக்கே தாரேன் ..னு என்னை இறுக அணைத்துக் கொண்டாள் அம்மா. ‘ ஒரு செருப்பு வாங்க இப்படியெல்லாம் கெடந்து அல்லாடுறியே மவனே- ண்ணு அழுதாள். அவள் கண்ணீர் என் கன்னத்தில் சிதறியது.

‘ ஆண்டவன்..குர்வான்.. ‘ ன்னு சத்தியம் பண்ணினான் யூசுப். கடலை மிட்டாய் வித்து நேற்றே என்னிடம் 75 பைசா கொடுத்து விட்டானாம். ‘ஏல யூசுப்.. பொய் சொல்லாதல.. ஏமாத்திடாதல..என்னை ஏமாத்திடாதல.. ‘ ..ன்னு அவன் கையைப் புடிச்சு மன்றாடினேன். அந்தப் பய ஏமாத்தியே விட்டான். அம்மாவிடம் சேர்த்து வைத்த பணத்திலிருந்து முக்குக் கடை சாகுலுக்கு கொடுத்தேன். ‘ அந்த யூசுப் பய உன்னை மொட்டை போட்டு அந்த துட்டு-ல தென்காசிக்குப் போயி சினிமா பாத்திருக்காம்-ல. எம்.ஜி.ஆர். படம். ஆயிரத்தில் ஒருவன்- புது ரிலீஸ்- னு என் காதில் ஊதினான் அஜீஸ்.

ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு சேர்த்து வச்ச துட்டை அம்மாவிடமிருந்து வாங்கி எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன். எட்டரை ரூபா சேர்ந்திருந்தது. மாமா கொடுக்கிற கந்தூரித் துட்டு- அப்புறம் செருப்புக் கடை தாடி மாமா தாரேன்..னு சொன்ன நாலு அணா- எல்லாம் சேர்த்து 10 ரூபா ஆயிடும். கந்தூரி லீவு முடிஞ்சததும் செருப்புப் போட்டுக்கிட்டு பள்ளிக் கூடம் போகலாம். நேற்றுக்கூட தாடி மாமாவைப் பார்த்தேன். செருப்பைக் காட்டினார். ஒவ்வொரு தடவையும் செருப்போட அழகு கூடிக்கிட்டே போவுது.

மாமாவோட கந்தூரி துட்டு வந்து விட்டது. மொத்தப் பணத்தையும் வாப்பாவிடம் கொடுத்தேன். ‘ நீயே போயி வாங்கிக்க ராசா. உன்னோட செருப்பை தாடி மாமா காட்டினார். ரொம்ப நல்லா இருக்கு டேய்…ன்னார்.

தாடி மாமா என்னோட செருப்பை எடுத்துக் கீழே போட்டு ‘ இப்பவாவது போட்டு நடந்து பாருடே..ன்னார். பஞ்சுத் தலையணையில கால் வச்சது போல ஜம்-ன்னு கத கதப்பா இருந்தது செருப்பு. ‘ வேகமா நடடே… செருப்புக்கு வலிக்குமேன்னு வருத்தப் படாதடே..அ..அட.. சிரிச்சுட்டான் பாரு…-ன்னு ஹோ வென தொந்தி குலுங்க சிரியோ சிரி ன்னு சிரித்தார் தாடி மாமா. சின்ன அண்டாப் பானை அவர் வயிற்றுக்குள் கெடந்து பெரள்வது மாதிரி இருந்தது. மாமாவிடம் துட்டை எண்ணிக் கொடுத்தேன். அழகான ஒரு அட்டைப் பெட்டிக்குள் செருப்பை வைத்து என்னிடம் கொடுத்தார். பெட்டியை கைலியில் சுத்தி மறைத்து யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்தேன். மச்சு மேல் ஏறி, தங்கநகை, வீட்டுப் பத்திரம் எல்லாம் வைத்திருக்கும் ட்ரன்க் பெட்டிக்கு அருகே வைத்து விட்டு கீழே வந்தேன். சாப்பாடு..ன்னு ஏதோ பேருக்கு அள்ளிப் போட்டுவிட்டு மச்சுக்கு ஓடினேன். செருப்பை வெளியே எடுத்து காலில் போட்டு அடி மேல் அடி வைத்து மெதுவாக நடந்தேன்- நடந்து பார்த்தேன்.

அன்று ஊஞ்சலாடும் போது வாப்பா சொன்னது எதுவுமே காதில் விழவில்லை. வாப்பாவுக்கு புரிஞ்சு போச்சு. ‘ புதுச் செருப்பு வந்தாச்சு.. குட்டி ராசாவுக்குக்கு புதுச் செருப்பு வந்தாச்சு..டேய்…- ன்னு பாட்டுப் பாடியவாறு வேக வேகமாக ஆடி, சடால்-னு ஊஞ்சலிலிருந்து உருட்டி என்னைக் கீழே தள்ளினார் வாப்பா. வாப்பாவுக்கு சந்தோசம் ஜாஸ்தியானா இப்படித் தான் .

அண்ணைக்கு பள்ளிக்கூடத்திற்கு ரொம்ப சீக்கிரமே கிளம்பி விட்டேன். செருப்பு போட்ட கால், வீசி வீசி அதுவாகவே நடப்பது போல இருந்தது. வகுப்பில் சார் சொன்னது எதுவுமே காதில் விழ வில்லை. உள்ளங்கால் வேர்த்தது. செருப்பு நனைந்து வழுக்கியது .இருந்தும் செருப்பைக் கழட்டவே இல்லை. ஒருவேளை மறந்து போய் விட்டு விட்டால்.. ? சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு எல்லாரும் போன பிறகு தான், வெளியே வந்தேன். மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். காலுக்குள் ஜில்லுன்னு காத்து நுழைஞ்சு வியர்வை ஈரத்தை ஆத்தியது. யாரோகூப்பிடுவது போல இருந்தது. திரும்பி பார்த்தேன். தலைமேல் பெரிய மூட்டையை சுமக்கமுடியாம சுமந்து தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தான் – ராம கிருஷ்ணன். மூச்சு இரைத்தது. மூட்டையை தொப்- பென ரோட்டோரம் போட்டு மரக்கடை படியில் உட்கார்ந்தான். அவனைப் பார்க்க பாவமா இருந்தது. இனிமே பள்ளிக்கூடத்திற்கு வரவே மாட்டியா ராம கிருஷ்ணா.. ? .ன்னு கேட்டேன். ‘ இல்லடா.. வரவே முடியாது… அப்பா செத்துட்டாரு. தம்பி, தங்கச்சி, அம்மா எல்லாருக்கும் நான் தான் கஞ்சி ஊத்தணும்.. ‘ அவன் காலைப் பார்த்தேன். கந்தத் துணியையும் கிழிந்த தாள்களையும் சுத்திவைத்து சணல் கயிற்றால் தாறு மாறாக கட்டியிருந்தான்.கட்டு அவிழ்ந்து ரத்தம் கசிந்தவாறிருந்தது. ‘ டேய் ஹாஜா ..கல்லோ கண்ணாடிச் சில்லோ குத்திடுச்சுடே. இந்தத் துணி ரொம்ப நனைஞ்சு போச்சு.. வேற தாள், கந்த நூல் ஏதாச்சும் ரோட்ல கெடந்தா எடுத்துக் குடுக்க மாட்டியாடே..-ன்னான். டேய் இப்படி ரத்தம் வந்தா எப்படிடா நடந்து போவே..-ன்னேன். ‘ என்ன செய்றது ஹாஜா…நொண்டி நொண்டியாவது போயே ஆகணும்.. இன்னம் நாலு மைலு .. இந்த கைலி மூட்டையை ஹாஜியார் வீட்ல சேக்கணும்.. ‘. ரொம்பவலிக்குதாடே.. ன்னேன். குளிர் ஜுரத்தில் ஜன்னி கண்டவன் மாதிரி நடுங்கினான். பொல பொலன்னு கண்ணீர் வந்தது. நான் அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘ இந்தா இதை நீயே போட்டுக்கோ-ன்னு செருப்பைக் கழட்டி அவனருகே போட்டுவிட்டு, விறு விறு ..ன்னு வீட்டுக்கு நடந்தேன்.

அன்று இரவு வாப்பா முதுகில் படுத்து ஊஞ்சல் ஆடியபோது ‘ ராசா..புதுச் செருப்பு காலைக் கடிச்சுதாலே..-ன்னு கேட்டார்.வாப்பாவிடம்- எல்லாத்தையும் சொன்னேன். ஊஞ்சல் மெதுவாக ஆடியது.

வாப்பா நான் செஞ்சது தப்பா… ?

மெதுவாக ஆடிய ஊஞ்சல் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்தது. சடால்-னு ஊஞ்சலிலிருந்து உருட்டி என்னை கீழே தள்ளினார் வாப்பா. என்னை இறுகத் தழுவி நெத்தியிலும் முகத்திலும் மாறி மாறி முத்தமிட்டார்.

‘ நீ செஞ்சது தப்பில்லையடா- மகனே- தப்பில்லை. ரொம்பவும் சரி. இல்லை இல்லை. ‘சரி ‘-க்கும் மேலே ‘ -என்றார்.

Series Navigation

முடவன் குட்டி

முடவன் குட்டி