இந்துக்கள் மஞ்சள் முண்டாசு அணியச்சொல்லும் தாலிபான் உத்தரவு சரிதான்.

This entry is part [part not set] of 13 in the series 20010527_Issue

சின்னக்கருப்பன்


தாலிபான் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது. இந்துக்கள் மஞ்சள் துண்டு அல்லது மஞ்சள் முண்டாசு கட்டியிருக்க வேண்டும் என்று தாலிபான் ஆணையிட்டிருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினரும் தனி அடையாளத்துடன் செல்லவேண்டும் என்பது அந்த அந்த மதத்தலைவர்களும், அந்த அந்த மதத்தினரும் வலியுறுத்தும் விஷயம். முஸ்லீம் என்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட உடை, தலையில் ஒரு வகை குல்லாய், ஒரு வகை தாடி போன்றவற்றை பெருமையுடன் அணிந்து கொள்கிறார்கள். கிரிஸ்தவர்களின் பாதிரிமார்கள் கூட ஒரு வகை வித்தியாசமான உடை அணிந்து கொள்கிறார்கள்.

ஏன் அவர்கள் பெயர்கள் கூட தனியாக இருக்கின்றன. ராபர்ட்டும், இஸ்மாயிலும் உங்களுக்கு உடனே அவர்கள் என்ன மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெளிவாக்கும் விதமாக இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்னர் நான் படித்த ஒரு இஸ்லாமிய ஏட்டில் ஒருவர் தன் மகனுக்கு அண்ணல் முகம்மது என்று பெயர் வைக்கலாமா என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிய முஸ்லீம் மதத்தலைவர் அது தவறு என்று கூறினார். பெயர்கள் எந்த விதத்திலும் தமிழ்ப் பெயராக இருக்கக்கூடாது, அது அராபியப் பெயராக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் பதில் சொன்னார். பத்திரிக்கையின் பெயர் முஸ்லீம் முரசு என்று நினைக்கிறேன். அதே போல கிரிஸ்தவர்களும் ஆங்கிலேயப் பெயர்களையே தங்கள் அடையாளங்களாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அது மஞ்சள் துண்டாக இருந்தாலும் சரி, அது ஆங்கிலப் பெயர்களாக இருந்தாலும் சரி, அவை தனி அடையாளங்களை நிறுவுவதிலும், அவைகளை பெருமையுடன் அணிந்து கொள்வதிலுமே உறுதிப்படுகின்றன.

இவ்வாறு இருக்கும் போது, ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரான இந்துக்களின் பாதுகாப்புக்காக தாலிபான் வெளியிட்டிருக்கும் உத்தரவை எதிர்ப்பது பொருளற்றது மட்டுமல்ல, அந்த இந்துக்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. ஏற்கெனவே இந்துக்கள் அமெரிக்க ஆதரவு முஜாஹிதீன் போராளிகள் ஆட்சி நடத்தும்போது அடாவடி, அராஜகம், அவமதிப்பு தாங்காமல் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். 50000 பேராக இருந்த இந்துக்கள் இன்று 500ஆக குறைந்துவிட்டார்கள்.

சுமார் 2 கோடி பேர் இருக்கும் ஆஃகானிஸ்தானில், இந்த 500 இந்துக்களுக்கு அடையாளம் கொடுக்க ஏன் தாலிபான் அந்த உத்தரவை வெளியிட்டது என்று பார்க்க வேண்டும்.

பெரும்பாலான முஸ்லீம்கள் தாலிபான் போலீஸை கடக்கும் போது அவர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். அவர்கள் சரியான அளவு தாடி வைத்திருக்கிறார்களா ? அவர்கள் சரியான முண்டாசு கட்டியிருக்கிறார்களா ? முஸ்லீம் பெண்கள் சரியாக தங்களை மூடி பர்தா அணிந்திருக்கிறார்களா என்று பரிசோதிக்கிறார்கள் இந்த தாலிபான் போலீஸார். சவூதி அரேபியாவில் இருக்கும் தமிழர்களுக்கு இது போன்ற பரிசோதனைகள் இருப்பது நன்றாகத் தெரியும். அங்கு முஸ்லீம்கள் மட்டுமல்ல, யாருமே பர்தா இல்லாமல் செல்ல முடியாது. இதை யாரும் கேள்வி கேட்பதுமில்லை.

அப்படிப்பட்ட பரிசோதனைகளின் போது, இந்துக்கள் தாங்கள் இந்துக்கள் என்றும் தாங்கள் தாடி வைத்துக்கொள்ள எந்தவிதமான மதக்கட்டாயமும் இல்லை என்று சொல்லியதால் அவர்கள் பரிசோதனைகளின் போது விலக்கு அளிக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் தாலிபான் போலீஸார் நீ இந்துவா என்று கேட்டுவிட்டு அடிப்பதில்லை. அடித்துவிட்டு கேட்பதுதான் எந்த மூன்றாம் உலக நாடு போலீஸின் பழக்கமுமே. இவ்வாறு அடிபட்ட இந்துக்கள் மேலதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார்கள். இந்த முறையீட்டின் பலனாக அவர்கள் தெளிவாக அடையாளப்படுத்தப்படுவதற்காக இந்துக்களுக்கு மஞ்சள் துண்டு, அல்லது மஞ்சள் முண்டாசு என்று தாலிபான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. மற்ற முஸ்லீம் ஆஃப்கானியர்களும் பல முஸ்லீம் கட்டாயங்களிலிருந்து தப்பிக்க பரிசோதனை இடங்களில் தங்களை இந்துக்கள் என்று சொல்லி தப்பும் வழக்கமும் பெருகிவிட்டது என்று தாலிபான் சொல்லி இருக்கிறது. ஐந்து வேளைத் தொழுகைக்கு எல்லா முஸ்லீம்களையும் கட்டாயப்படுத்தி மசூதிக்கு அனுப்பும் போது மற்ற வேலை உள்ள முஸ்லீம்கள், ‘நான் இந்து ‘ என்று சொல்லி தப்பும் நிகழ்ச்சிகளும் நடப்பதாக தாலிபான் அமைச்சர் டான் என்ற பாகிஸ்தானியப் பத்திரிக்கையில் சொல்கிறார். பல நேரங்களில் இந்துக்களையும் கட்டாயப்படுத்தி மசூதிக்கு அனுப்பும் விஷயமும் தாலிபான் போலிஸாரால் நடந்திருக்கிறது. இது போன்றவற்றை தடுப்பதற்காகவே தனியாக இந்துக்களை அடையாளப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார் அமைச்சர்.

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்பது போலவே இந்தியாவும் மற்ற நாடுகளும் இதை எதிர்க்கின்றன என்பது என் கருத்து. யூதர்களுக்கு எதிராக நடந்த நாஜிக்கொடுமைகளை மனதில் வைத்துக்கொண்டு இந்துக்களுக்கு எதிராக தாலிபான் நடக்கிறது என்று எழுதுவது சரியல்ல. தாலிபான் பெரும்பான்மையான முஸ்லீம்களைக் கட்டாயப்படுத்துகிறது. அதில் சிறுபான்மையினரான இந்துக்களை தவிர்க்கிறது. மற்ற நாடுகளில் நடந்தது, பெரும்பான்மையினரின் வசதிக்காக, அரசியலுக்காக சிறுபான்மையினரை கட்டாயப்படுத்துவதும், அச்சுறுத்துவதும், அதற்கு வசதியாக அவர்களை அடையாளப்படுத்தலும் நடந்தது. இரண்டையும் குழப்பிக்கொள்வது நாம் செய்வது.

மேலும் எல்லா முஸ்லீம் நாடுகளிலும் இந்துக்கள் இரண்டாம் தரக்குடிமக்கள் தான் என்பது உலகமெங்கும் நன்றாகத் தெரிந்த விஷயம். இதில் அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது. பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும், இலங்கையிலும், ரியூனியனிலும், பிஜியிலும், தென்னாப்பிரிக்காவிலும், இன்னும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்துக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.பிள்ளையார் சிலை ‘எலிஃபான்ட் டேமன் ‘ (யானைப்பூதம்) என்று ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டது. வெளிப்படையாக இந்து எதிர்ப்பு பேசும் பாட் ராபர்ட்ஸன் அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் இன்றைய ரிபப்ளிகன் கட்சியின் ராஜகுரு. உலகளாவிய இந்து எதிர்ப்பு என்பது இந்துக்கள் மனதிலும் ஊறிப்போய் ‘இந்து என்று சொல்லாதே இழிவைத்தேடிக்கொள்ளாதே ‘ என்ற வாசகங்கள் தமிழ்நாட்டுச் சுவர்களிலேயே நம்மை வரவேற்கும்போது எதற்காக இந்துக்களின் உரிமைகளுக்கு ஏன் ஆங்கிலேயர்களும், இதர மதத்தினரும் குரல் கொடுக்கிறார்கள் ?

இதே போன்ற ஒரு அடையாளம் நாஜிகளின் காலத்தில் யூதர்கள் மீது திணிக்கப்பட்டு அது கட்டுப்படுத்த இயலாமல் போய் ஹோலோகாஸ்ட் வரை சென்று பலகோடி யூதர்கள் விஷவாயுவினால் அழிக்கப்பட்டார்கள். அதன் பின் யூதர்கள் உலகத்தின் வங்கிகள், செய்தித்தாள்கள், சினிமா போன்ற முக்கியமான துறைகளில் முக்கியமான ஆட்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பத்திரிக்கைகளும், அவர்களது நன்கொடையில் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளும் யூதர்களுக்கு ஆதரவாக இருக்கட்டும் என்று முஸ்லீம்களை எதிர்ப்பதற்கு இந்த தாலிபானின் இந்த இந்து அடையாள அறிவிப்பை எதிர்க்கிறார்கள். இது இந்திய அரசுக்கு வசதியாக இருப்பதால் இந்தியா எதிர்க்கிறது.

அவ்வளவுதான்.

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்