இந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா


முன்னுரை: சுதந்திரம் அடைந்ததும் பண்டித நேரு பாரத நாட்டைத் தொழில்மயம் ஆக்கியதில், டாக்டர் ஹோமி பாபா போன்றோர் அணுவியல் துறைகளை நிலைநாட்டித் தற்போது அணு மின்சக்தி நிலையங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன! அந்த வேகத்தில் பாரத மக்கள் இன்னும் பல்லாண்டுகளுக்குப் அணுசக்தியின் நன்மை, தீமைகளை அனுபவிக்கப் போவது தவிர்க்க முடியாத தலைவிதி யாகும்! ஆனால் அணுமின் நிலைய எதிர்ப்பாளிகள் அவற்றை அறவே ஒழிப்பதற்கு முற்படுவதை விட்டுவிட்டு, மக்களிடையே அதைப் பாதுகாப்பாக எப்படிக் கையாளுவது என்று ஆக்க வழியில் புகுவது ஒன்றுதான் நாகரிகச் செயலாகும்.

Rajasthan Twin Units

பாரத தேசத்தின் பாதுகாப்புக்காக, எதிரிகளைப் பயமுறுத்த அணு ஆயுதங்களைக் பைக்குள் வைத்திருக்கிறது, பாரத மத்திய அரசு! அணு ஆயுத உற்பத்தியில் அணுப்பிளவுக் கழிவுகளை மீள் சுத்திகரிப்பு செய்யும் தொழிற் கூடங்களைச் செம்மையாய்க் கண்காணித்து, கதிரியக்கம் ஊழியரைத் தாக்காதவாறு முறைப்படிக் காத்து வருகிறதா வென்று எதிர்ப்பாளர் முற்படுவதை ஆதரிப்பாளிகள் வரவேற்க வேண்டும்! அந்நெறியில் அணுமின் சக்தி எதிர்ப்பாளரை, ஆதரிப்போர் கரம்நீட்டி வரவேற்க வேண்டும்! எதிர்ப்பாளிகள்தான் அணுமின் உலை வரவேற்பாளிகளுக்கு ஓர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்கள்!

இந்திய அணு உலைகளை ஒற்றை அரணோ அல்லது இரட்டை அரணோ பாதுகாப்பாக உள்ளடக்கி வைத்திருப்பதால், பெரும் விபத்து நேரும் சமயத்தில் புறத்தே வாழும் மாந்தருக்குக் கதிரடி விழுவது மிக மிக அபூர்வம்! ஆனால் அரணுக்குள் பணி புரியும் சமயத்தில் பாதுகாப்புக் கவச முறைகளைப் பின்பற்றாது போனால், பணியாளிகள் கதிரடி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன! அணுசக்தியின் பலன்களையும், பாதகங்களையும் மக்களிடத்தே அடிக்கடிப் புகட்டி, அதனால் அபாயங்கள் நேரும் போது கையாளும் முறைகளைத் திரைப்படம், டெலிவிஷன் மூலம் எடுத்துக் கூறி, பக்க ஊர்களில் பயிற்சிகள் அளிக்க, மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, கிராமிய அரசுகள் முன்வர வேண்டும்!

எதிர்ப்பாளிகள் அணு மின்சக்தி மீது அச்சமும், வெறுப்பும் வளர்த்து வருவதைத் தவிர்த்து, நிலையம் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி மாந்தர் மீதுக் கதிரடிகள் படாதவாறு கண்காணித்து வருகிறதா என்று பூதக் கண்ணாடி மூலம் பார்ப்பது வரவேற்கத் தக்க ஆக்கப்பணி! பாரதத்தின் அணு உலைகள் சிலவற்றை எதிர்ப்பாளிகள் ஒரு முறை அல்ல பல முறை நேரில் கண்டு, கதிரியக்கம் எவ்வாறு கையாளப்படுகிறது, கதிர்வீச்சு எவ்விதம் கவசத்தால் குறைக்கப் படுகிறது, மனித நலம் எப்படி பாதுகாக்கக் படுகிறது என்று தெளிவாக முதலில் அறிந்து கொள்வது அவசியம்!

பாரதத்தில் பெருகும் அழுத்தக் கனநீர் அணுமின் உலைகள்

டாக்டர் ஹோமி பாபா இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, ‘காண்டு ‘ எனப்படும் [CANDU, CANadian Deuterium (Heavy Water), Uranium (Natural Uranium Oxide)] கனடாவின் முன்னோடி அழுத்தக் கனநீர் அணுமின் உலையைப் [Pressurized Heavy Water Reactor (PHWR)] பாரதத்தில் நிறுவனம் செய்ய முயற்சி செய்தார். அத்திட்டப்படி ராஜஸ்தானில் முதல் இரட்டை அணுமின் நிலையங்கள் [2×220 MWe], கோட்டா நகருக்கு அருகே சாம்பல் நதிக் கரையில் அமைக்க ஏற்பாடாகின. கனடா நாட்டின் முன்னோடி டக்ளஸ் பாயின்ட் அணுமின் நிலையம் [Douglas Point Nuclear Generating Station (220 MWe)] முதலில் கட்டப்படும் போதே பாரத்தின் முன்னோடி அணுமின் உலை ராஜஸ்தானில் நிறுவனமாகி வந்தது!

உலகில் டிசைன் செய்யப்படும் கொதிநீர் அணு உலை [Boiling Water Reactor (BWR)], அழுத்தநீர் அணு உலை [Pressurized Light Water Reactor (PWR)], திரள்கரி மிதவாக்கி அணு உலை [Graphite Moderated Gas Cooled Reactor (GCR)], அழுத்தக் கனநீர் அணு உலை அனைத்திலும் மலிவான எரிபொருளைப் பயன்படுத்தி [Natural Uranium] நியூட்ரான் சிக்கனத்தில் [Neutron Economy] மலிவான மின்சக்தி பரிமாறும் நிலையம் கனநீர் அணுமின் உலை ஒன்றே! அதற்கு அடுத்த மூல காரணம் அணு உலை இயங்கும் போதே எரிக்கோல்களை மாற்றும் அணு எரு ஊட்டும் யந்திர சாதனங்கள் [On-power Refuelling Machines]! மேலும் அணு உலை அழுத்தக் கலனாக [Pressure Vessel] இல்லாததால், அதைத் தொழிற்சாலையில் ஆக்குவதும் எளிதானது, மலிவானது!

ராஜஸ்தானில் உள்ள முன்னோடி இரட்டை அணு உலைகள் [Prototype Twin Reactors (2×220 MWe)] 1960 ஆண்டுகளில் டிசைன் ஆன முதல் பிறப்பு [First Generation] தரத்தைச் சேர்ந்தவை! அவற்றைப் பல ஆண்டுகள் இயக்கிப் பராமரித்துச் செப்பணிட்டதில் கற்றுக் கொண்ட பாடங்கள் அநேகம்! அடுத்து முன்னோடிக் கனநீர் அணு உலை மேன்மைப் படுத்தப்பட்டு சென்னைக் கல்பாக்கத்தில் இரட்டை அணு உலைகள் [2×250 MWe] அமைக்கப் பட்டன. கல்பாக்கம் நிலையத்தில் இரட்டைக் கோட்டை அரண்கள் [Double Containment], ‘வெப்பத் தணிப்புத் தடாகம் ‘ [Suppression Pool] சேர்க்கப் பட்டன! பிறகு இரண்டாம் பிறப்பு [Second Generation] அணு உலை மாடல்கள் டிசைன் ஆகி நரோரா, கெய்கா, கக்ரபார், ராஜஸ்தான் [Narora, Kaiga, Kakrapar, Rajasthan Unit-3, Unit-4] ஆகிய இடங்கள் ஒவ்வொன்றிலும் இரட்டை அணுமின் நிலையங்கள் (2×220 MWe) அமைக்கப் பட்டன! தற்போது பாரதம் முழுக்க முழுக்க டிசைன் செய்த பூதக் கனநீர் இரட்டை அணுமின் உலைகள் [2×500 MWe] தாரப்பூரில் [Tarapur Unit-3, Unit-4] நிறுவகமாகி வருகின்றன!

ராஜஸ்தான் அணுமின் உலைகளில் விளைந்தத் தீவிர நிகழ்ச்சிகள்

ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் அமைந்தவை: 70% கனடா அனுப்பிய அன்னிய சாதனங்கள். 30% இந்தியத் தயாரிப்புச் சாதனங்கள். ராஜஸ்தான் மின்சாரத் தொடுப்பு ஏற்பாடு [Electric Grid System] தொய்வாக [Weak] இருந்ததால், யூனிட்-1 இயங்க ஆரம்பித்துப், பழுதுகளால் பாதிக்கப்பட்டு 1974 முதல் 1976 வரை மூன்று ஆண்டுகளாக அணு உலை மட்டும் 115 தடவைகள் ‘எதிர்பாரா நிறுத்தம் ‘ [Reactor Tripps] ஆனது! அதனால் அநேக அணுமின் நிலைய உபகரணங்கள் தளர்ச்சி யுற்று ஆயுள் குன்றிப் போயின! ராஜஸ்தான் மின்சாரத் தொடுப்பு வட இந்திய வட்டார 5000 MW ஆற்றல் திறத்தில் இணைந்த பிறகு, நிலையத்தின் இயக்கம் தொடர்ந்து ஓடி மேம்பட்டது.

ராஜஸ்தான் நிலைய டர்பைன் சுழலியின் தாங்கிகள் [Turbine Rotor Bearings] மிகச் சூடாகி அடிக்கடி மாற்ற வேண்டிய தாயிற்று. நீண்ட காலம் ஓடாமலே, 1974-1976 ஆண்டுகளில் மூன்று தரம் டர்பைன் சுழற் தட்டுகள் முறிந்து [Turbine Blade Failures], ஒவ்வொரு முறையும் மூன்றரை மாதங்கள் நிலையம் ஓடாமல் ஓய்வெடுத்தது! 1989 இல் மற்றுமோர் முறை டர்பைன் தட்டுகள் முறிந்து, முழுச் சுழலியும் நீக்கப்பட்டு உபரிச் சுழலி [Spare Rotor] ஒன்றை இணைக்க வேண்டிய தாயிற்று!

அபாய மழைத்தொட்டி வாய் திறந்து அரணில் பெரும் நீர்வீழ்ச்சி!

ராஜஸ்தான் யூனிட்-1, யூனிட்-2 கோட்டை அரணுக்குள் அணு உலைக்கு மேல் உயரமான இடத்தில் 1.8 மில்லியன் லிட்டர்க் கொள்ளளவு கொண்ட ‘அபாயநீர் மழைத்தொட்டி ‘ [Emergency Dousing Tank (480,000 US gallan Water)] நிர்மானிக்கப் பட்டுள்ளது! அபாய சமயத்தில் அணு உலைப் பழுதடைந்து, எரிக்கோல்கள் பல உடைந்து, நீராவிப் பைப்புகள் வெடித்துக் கதிர்வீச்சுப் பிளவுக் கழிவுகள் நீராவியில் வெளியேறும் போது, அபாயநீர்த் தொட்டியின் குழாய்கள் சுயமாகத் திறந்து நீர் வெள்ளம் மழையாகப் பெய்து அரண் வெப்பத்தைத் தணிக்கும்! அணு உலை இயங்கும் பொழுதிலோ அன்றி ஓய்வின் சமயத்திலோ பயங்கர இந்த ஏற்பாட்டை முழுமையாகச் சோதிப்பது ஓர் இயலாத சாதனை! நீர்த் தொட்டியின் கீழ்ப் பைப்புகளில் உள்ள இரட்டைக் குழாய்களை ஒவ்வொன்றாகத் திறந்து மூடி, இடைப்பட்ட நீரை வெளிநீக்கி மறைமுகமாகச் சோதித்துத்தான், அதன் ‘தயார்த் தன்மையை ‘ உறுதிப் படுத்த முடியும்!

1980 டிசம்பரில் யூனிட்-1 இயங்கும் போது, நிஜ அபாயம் எழாத சமயம், மின்னியல் பாதுகாப்பு ஏற்பாட்டில் மர்மப் பழுதுற்றுக் [Safety System Circuit Spurious Fault] குழாய்கள் தாமாகத் திறந்து, நீர்த் தொட்டியின் 480,000 காலன் வெள்ளம் நீர்வீழ்ச்சியாகக் கொட்டியது! நல்ல வேளை! அப்போது மனித நடமாட்டம் அரணில் இல்லை! அணு உலை பாதுகாப்பாக நிறுத்தப் பட்டது. மழை பெய்ததால் மின்சார, மின்னியல் வயரிங் ஏற்பாடுகள் நனைந்து, வயர் இணைப்புகளில் ‘மின்சாரக் குறுக்கீடுப் ‘ பழுதுகள் [Short Circuit Ground Faults] ஏற்பட்டு பல மின்சாரச் சாதனங்கள் பல முடமாகின! கோட்டை அரண் கீழ்த் தளத்தில் சேர்ந்த நீரை வெளியேற்றி, அனைத்து ஈரத்தையும் காயவைக்க 40 நாட்கள் கடந்தன! அதாவது 40 நாட்கள் மின்சக்தி உற்பத்தி இல்லாமல் நிதி இழப்பானது!

Madras & Narora Stations

இந்த நிதிச் செலவு அபாய நிகழ்ச்சிக்கு மூல காரணம் பல மனிதத் தவறுகளே! ஒரு மின்சாரத் ‘தொடுப்பி ‘ [Electric Fuse] அற்றுப் போனதும், மாற்ற உபரி [Spare Fuse] யில்லாமல் எச்சரிக்கை மின்மினி ஒளியை நீக்க, பழுதான தொடுப்பி அகற்றப் பட்டது! அதுதான் முதல் மனிதத் தவறு! அதை வெளியே எடுத்ததும், கோட்டை அரணைத் தனியாக்கும் மூடித் தட்டுகள் [Containment Isolation Dampers] மூடி, அரணில் காற்றோட்டச் சுற்றியக்கம் [Ventilation System] பாதிக்கப் பட்டது! அதைக் கவனிக்காது நழுவ விட்டது, அடுத்த மனிதத் தவறு! அழுத்தக் காற்றில் இயங்கும் கருவிகளில் எப்போதும் சிறிது கசிவுகள் இருப்பதால், கோட்டை அரணின் உள்ளழுத்தம் [Containment Pressure] மிகையாக்கிக் கொண்டே போனது! அரணில் உள்ள கொதி உலை அறை ‘மிகை அழுத்தம் ‘ எச்சரிக்கை ஒலி [Boiler Room High Pressure Alarm] அலறியும், ஆட்சி அறை இயக்குநர் கவனத்தைக் கவராமல் போனது, அடுத்த மாபெரும் மனிதத் தவறு!

Kakrapar Station

கோட்டையின் வாயு வெளியேற்று வாயில்களில் கதிர்வீச்சைக் கண்காணிக்கும் மானிகளில் [Exhaust Duct Radiation Monitors] பூஜியம் ஆனது, இயக்குநருக்குத் தெரியாமல் போனது அடுத்த தவறு! கசிவாகும் காற்றில் அரணின் அழுத்தம் முற்றியதும், அபாயநீர்த் மழைத்தொட்டியின் [Emergency Dousing Tank] குழாய்கள் திறப்பதற்குப் பூட்டுகள் நீக்கப் பட்டன [Locks, unlocked]! கொதி உலை அறை ‘மிகை அழுத்தம் ‘ + ‘காற்றோட்டம் ‘ ஆகிய இரு பழுதுகளும் சேர்ந்து கொள்ளவே, பூதக் குழாய்கள் திறக்கப் பட்டுக் கோட்டைக்குள்ளே பெரும் மழையைக் [480,000 காலன் நீர்] கொட்டியன!

உடனே அணு உலை சுயமாக நிறுத்தமாகி, ‘திடார்த் தணிப்பு ‘ [Crash Cooldown] ஏற்பாடு ஆரம்பமாகி, பிரதம நீராவி நீக்கி வால்வுகள் [Main Steam Discharge Valves] திறந்து நீராவி ஊளையிட்டு வெளியேறியது! பிரதம வெப்பத் தணிப்பு ஏற்பாடு [Primary Heat Transport System] அணு உலையில் சீக்கிரம் குளிர்ந்ததால், நீரளவு குறைந்து, ‘அபாயநீர் ஊட்டு ஏற்பாடு ‘ [Emergency Water Injection] ஈடு செய்யத் தானாகச் செலுத்தப்பட்டது! மெய்யாக அணு உலைக்குப் பாதகம் ஏதும் ஏற்படாததால், எரிக்கோல்கள் சிதைவு அடையவில்லை! ஆனலும் அபாயநீர்த் தொட்டியின் மழை, பொய்யான பழுதை மெய்யாக உணர்ந்தது பெய்ததால், நிஜமில்லை என்று உறுதியாக அறியும் வரை ‘அணு உலை அபாய அறிவிப்பு ‘ [Reactor Emergency] செய்ய வேண்டிய தாயிற்று!

அணு உலை முன்முனைக் கவசச் சாதனத்தில் ஏற்பட்ட பிளவு!

அணு உலைச் சாதனப் பழுதுகளில் மிகவும் கடுமையானது, 1981 செப்டம்பரில் ராஜஸ்தான் யூனிட்-1 இல் ஏற்பட்ட முன்முனைக் கவசத்தில் [Reactor End Shields] உட்புறம் உண்டான பிளவு! முன்முனைக் கவசம் நிறுத்தமான அணு உலை முன்பு பணி செய்வோருக்குக் கவசமாகப் பயன்பட்டுக் கதிர்வீச்சைக் குறைக்கிறது! அணு உலையின் இருபுறமும் முனைக் கவசங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று உட்புறம் தொடர்ந்து கதிர்வீசும் தணிப்பு நீரைக் கசிந்து தொல்லை கொடுத்தது! பலமுறை இண்டியம் இடையீடுகளால் [Indium Gaskets] அடைத்தும் பயனில்லாமல் போனது! இறுதியாக 1987 இல் திரள்கரி இடையீடுகளால் [Graphoil Gaskets] அடைக்க முற்பட்டு அது வெற்றி தந்தது!

கசிவை நிறுத்திய பின் அணுமின் உலையின் ஆற்றல் 50% ஆகக் குறைக்கப் பட்டு 95 MWe மின்சாரம் பரிமாறி வந்தது! மறுபடியும் அதே முனைக் கவசத்தில் 1989 இல் மற்றுமோர் இடத்தில் நீர்க் கசிவு துவங்கியது! அதுவும் அடைக்கப் பட்டது! ஆனால் அவ்வாறு அடைக்கும் போது கதிரியக்கம் தாக்காமல் இருக்க 15 அழுத்தக் குழல்களில் எரிக்கோல்கள் நீக்கப்பட்டு, நிரந்தரமாக வெறுமனே விடப் பட்டன! கசிவை அடைக்க ஆறு வருடங்கள் ஆயின! தீவிரக் கதிரியக்கச் சூழ்நிலையில் [Radiation 5-8 rem per hour] பணியாளிகள் வேலை செய்ய வேண்டிய தாயிற்று! அத்துடன் இனியும் கசிவு உண்டாகி குளிர்ந்தநீர், உஷ்ணமான அழுத்தக் குழல் மீது விழுந்தால், அழுத்தக் குழலில் பிளவு ஏற்பட்டுப் பெரும் விபத்து உண்டாக வாய்ப்புள்ளது! ஆகவே கசிவைக் கண்காணிக்க இராப் பகலாய் பயிற்சி அளிக்கப் பட்ட நான்கு இயக்குநர் ஆட்சி அறையிலே தயாராக வைக்கப் பட்டனர்!

முனைக் கவசம் செய்யப்பட்ட உலோகம் 3.5% நிக்கல் கார்பன் ஸ்டால் [3.5% Nickel Carbon Steel] தவறானது என்று கனடா அறிந்ததும் இந்தியாவுக்கு அறிவித்தது! ஆனால் அச்செய்தி மிகவும் தாமதமாக வந்தது! அதற்குள் ராஜஸ்தான் இரண்டு யூனிட்டுகள், கல்பாக்கம் இரண்டு யூனிட்டுகள் ஆகிய நான்கு அணு உலைகளில் தவறான கவச உலோகம் உபயோகமாகி விட்டது! மேலும் முதன் முதலில் ராஜஸ்தான் முனைக் கவசம் BHEL இல் [Bharat Heavy Electricals Ltd, Bopal] தயாரான போது, கனடா மாதிரித் தகடு [Template] துளைகள் போடப் பயன் படுத்தப் பட்டது! அதனால் மேற் கூறிய முனைக் கவசத்தில் சில துளைகள் நீண்டு போனதால், பழுதைத் திருத்த வேண்டிய தாயிற்று! யூனிட்-1 இல் பிளவு ஏற்பட்டு நீர் கசிந்தது போல், முனைக் கவசத்தில் அதே உலோகம் பயன்படுத்திய வேறு எந்த நிலையங்களிலும் [கனடாவின் டக்ளஸ் பாயின்ட், ராஜஸ்தான் யூனிட்-2, கல்பாக்கம் இரண்டு யூனிட்டுகள்] கசிவு இதுவரை நிகழவில்லை! ஆனால் புதிய அணுமின் நிலைய முனைக் கவசங்களில் [நரோரா முதல், கக்கிரபார், கைகா, ராஜஸ்தான் யூனிட்-3 & யூனிட்-4] யாவும் தணிவுக் கார்பன் உள்ள 304L ஸ்டெயின்லெஸ் ஸ்டால் [Low Carbon 304L Stainless Steel] உலோகம் மாற்றலானது.

கனடாவின் டிசைன் அணுசக்தித் துறையகம் [Atomic Energy of Canada Ltd (AECL)] பாரதத்துக்குக் கூறிய ஆலோசனையின் பேரில் 1994 இல் யூனிட்-2 இன் பிரச்சனையான 306 ஸிர்காலய் அழுத்தக் குழல்கள் [Zircaloy Pressure Tubes] நீக்கப் பட்டுப் புதிய மாடல் ஸிர்கோனியம் நியோபியம் அழுத்தக் குழல்கள் [Zr+2.5%Nb Pressure Tubes] நுழைக்கப் பட்டன! ஆனால் முன்முனைக் கவச நீர்க் கசிவில் பிரச்சனைக் குள்ளான யூனிட்-1 இருபது ஆண்டுகள் மின்சக்தி அளித்தபின் ஓய்வு எடுத்துக் கொண்டது! புதிய அழுத்தக் குழல்கள் எதுவும் மாற்றப் படாது, யூனிட்-1 நிரந்தரமாக நிறுத்தம் ஆகி, அனைத்து எரிக்கோல்களும் நீக்கப்பட்டு, இப்போது காட்சி மாடலாய்ப் பொது நபர்களுக்குக் காட்டப் பட்டு வருகிறது!

இரண்டாம் யூனிட்டில் ஏற்பட்ட தீவிபத்து, டர்பைன் சுழற்தட்டு முறிவுகள்!

டர்பைன் சுழற்தட்டு முறிவுகள் ராஜஸ்தான் யூனிட்-1 இல் ஏற்பட்டது போல், யூனிட்-2 டர்பைனிலும் நேர்ந்தது! யூனிட்-2 துவங்கி 1981 ஏப்ரலில் வணிக ரீதியாக மின்சாரம் பரிமாறி வந்தது! முதல் இரண்டு ஆண்டுகளில் டர்பைன் இரண்டாம் நிலைச் சுழற்தட்டுகள் [Second Stage Blades] இரண்டு தடவை முறிந்து அணு உலை இயக்கம் பாதிக்கப் பட்டது!

1985 இல் அணு உலை இயங்கிக் கொண்டிருந்த போது கொதி உலை அறையில் பிரதம வெப்பக் கடத்திப் பம்புக்கு [Primary Heat Transport Pumps] மின்சாரம் அளிக்கும் 3.3 kV பரிமாற்றுக் கேபிள் பிணைப்பில் சூடேறித் தீப்பற்றி, அருகில் உள்ள பல மின்சார வயர்களில் தீப்பரவிப் பல சாதனங்கள் முடமாயின! நல்ல வேளை, அணு உலை பாதுகப்பாக நிறுத்தப் பட்டது! அப்பழுதுகளைச் செப்பணிட்டுச் சீர்ப்படுத்த 72 நாட்கள் கடந்தன!

1993 மார்ச்சில் நரோரா அணுமின் உலை டர்பைன் சுழற்தட்டுகள் உடைந்து, தீப்பற்றி ஜனனியில் கசியும் ஹைடிரஜன் வாயுடன் மூர்க்கமாகப் பிடித்து பெரும் வெடிப்பு உண்டானது! டர்பைன் மாளிகைக் கேபிள்களில் தீப்பரவி, ஓர் பயங்கர விபத்து நேர்ந்து, அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடமாக்கி பல கோடிக் கணக்கான ரூபாய்ச் செலவானது [திண்ணை: 2003 ஏப்ரல் 6]! அத்துடன் புகை மூட்டம் பெருகி ஆட்சி அறையில் யாரும் நின்று கட்டுப்படுத்த முடியாதவாறு, இயக்குநர் வெளியே ஓட வேண்டிய தாயிற்று!

கல்பாக்கம் அணுமின் நிலையங்களில் நேர்ந்த தீவிர நிகழ்ச்சிகள்

சென்னை இரட்டை அணுமின் நிலையத்தில் [2×220 MWe] 90% இந்தியத் தயாரிப்புச் சாதனங்கள்; 10% கனடா, பிரான்ஸ் அனுப்பிய அன்னிய சாதனங்கள். ராஜஸ்தான் அணுமின் உலைகளில் சீர்ப்படுத்திய சாதனங்கள், முறைகள் யாவும் கல்பாக்க அணுமின் உலைகளில் இடம் பெற்றன! பிரச்சனையான ‘பூத மழைத்தகழி ‘ [Giant Dousing Tank] அபாயநீர்த் தொட்டி நீக்கப் பட்டு, தணிவான இரட்டை அரண் கட்டப்பட்டு, ‘அபாயத் தணிப்புத் தடாகம் ‘ [Emergecy Suppression Pool] ஒன்று அடித்தளத்தில் டிசைன் செய்யப் பட்டது! அபாய அணு உலை விபத்தின் போது, உண்டாகும் வெப்ப நீராவியின் உக்கிரத்தைத் தணிக்கத் தடாகத்தின் நீர் பயன்படுகிறது!

கல்பாக்கம் முதல் யூனிட் 1983 ஜூலையிலும், இரண்டாம் யூனிட் 1985 செப்டம்பரிலும் மின்சாரம் பரிமாற ஆரம்பித்தன! 1989 ஆண்டின் முடிவு வரைக் கல்பாக்கம் முதல் யூனிட்டின் ஆற்றல் தகுதி [Capacity Factor] 50%! அத்தனை மோசமாக யூனிட்-1 மின்சாரம் அளித்தற்குப் பல காரணங்கள் உள்ளன! முதன் முதலில் பயன்படுத்தப்படும் 90% இந்தியச் சாதனங்களின் தரத் தகுதி [Quality Status] ஒரு காரணம்! அதனால் அணு உலைச் சாதனங்கள், பொதுத்துறைச் சாதனங்கள் இரண்டிலும் பல பழுதுகள் விளைந்து அணு உலை இயக்கம் மிகவும் தடைப்பட்டது!

அணு உலைச் சாதனங்களில் ஒரு முறை யூனிட்-2 இல் அணு உலையில் எடுக்கப்பட்ட இரு எரிக்கோல்கள் கடத்தும் யந்திரத்தில் மாட்டிக் கொண்டு, வெளியே எடுப்பதற்கு நாட்கள் ஆயின! அடுத்து இரண்டு யூனிட் காலாண்டிரியாவில் [Calandria Reactor Vessel] மிதவாக்கிக் கனநீர் நுழையும் மடக்குச் சாதனத்தில் முறிவுகள் [Moderator Inlet Baffle Failures] ஏற்பட்டுப் பழுதை நிவர்த்தி செய்யப் பல மாதங்கள் ஆயின!

அடுத்து பொதுத்துறைச் சாதனங்களில் டர்பைன் மேலழுத்தச் சுழலியின் [Turbine High Pressure Rotor] சுழற்தட்டு முறிவுகள் [Blade failures], யூனிட்-1, யூனிட்-2 இரண்டிலும் ஏற்பட்டன! ஒரு தரம் யூனிட்-1 ஜனனியின் டிரான்ஃபார்மர் [Generator Transformer] பழுதடைந்து பல நாட்கள் நிலையம் ஓடாமல் ஓய்வில் இருந்தது! பிறகு அடிக்கடி கடல்நீர் வெப்பம் தணிக்கும் ஏற்பாடுகளில் [Sea Water Cooling System] பழுதுகள் நேர்ந்து, அணுமின் நிலையத்தின் இயக்கம் மிகவும் தடைப்பட்டது!

மிதவாக்கிக் கனநீர் குழலில் துளைகள்! நுழைவாய் இணைப்பில் பிளவுகள்!

1988 ஆகஸ்டில் கல்பாக்கம் யூனிட்-2 இன் காலாண்டிரியா மிதவாக்கிக் கனநீர் [Moderator Heavy Water] எங்கோ ஓரிடத்தில் கசிவது அறியப்பட்டது! அம்மாதிரிக் கசிவோடு அணு உலையை இயக்குவது முடியாத காரியம்! அணு உலை நிறுத்தப்பட்டு, ஒலிமுறை அதிர்வுக் கருவிகள் [Acoustic Emission Testing & Noise Analysis] மூலம் சோதித்ததில் ஒரு காலாண்டிரியா குழல் கசிவது தெரிய வந்தது! நாரொளிக் கருவி [Fibroscopic Testing] மூலம் அடுத்து ஆராய்ந்ததில், அக்குழலில் மூன்று ஊசிமுனைத் துளைகள் [Three Pinholes] இருந்தது காணப் பட்டது! அச்சிறு துளைகள் பிறகு திரள்கரி நிரப்பியுள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டால் [Stainless Steel Plugs with Graphoil Gaskets] அடைப்புகளால் மூடப்பட்டன!

கல்பாக்கம் அணு உலைகளில் ஏற்பட்ட எல்லா விதத் தீவிர நிகழ்ச்சிகளிலும் மிகப் பாதக மானது, காலாண்டிரியா கனநீர் நுழைவாய்ப் பைப்பில் [Inlet Manifold] உண்டான பிளவு! மிதவாக்கிக் கனநீர் தொடர்ந்து ஒழுகும் போது, அது அரண் பாதாளக் குழியில் ஓடிப்போய் தங்கிக் கொள்கிறது! அது சுத்தமாக்கப் பட்டு மீண்டும் அனுப்பட்டு அணு உலையை நிரப்பக் கால தாமதமாவதால், அணு உலை நிறுத்தப் பட வேண்டிய தாகிறது! மேலும் கனநீர் ஒழுக்கல் ‘உலை அரணுக் குள்ளே ‘ [Reactor Vault] இருப்பதால், அப்பிளவைச் செப்பணிட வழியு மில்லை! வசதியு மில்லை! அந்தச் சிக்கல் பிரச்சனையைச் செப்பணிடுவது, இமாலயச் சாதனையாகி விட்டது! அதைச் சீர்ப்படுத்த முடியாது, மிதவாக்கிக் கனநீர்ச் சுற்று ஏற்பாட்டில் [Moderator Circulating System] பெரும் மாறுதல் செய்ய வேண்டிய தாயிற்று!

மிதவாக்கிக் கனநீரைச் சுற்றியனுப்பும் பம்பு ஒன்றில் அதிர்வு ஏற்பட அதை நிறுத்திச் சோதிக்கும் போது அதன் சுழலிக்குள் [Pump Impeller] ஒரு காலாண்டிரியா துண்டு கிடக்கக் காணப்பட்டது! அத்துண்டு காலாண்டிரியாவுக்குள் நுழையும் மிதவாக்கிக் கனநீரைச் சீராக்கும் மடக்கிகள் [Flow Straightening Baffles] ஒன்றைச் சேர்ந்தது! கண்டு பிடிக்கப் பட்ட அந்தத் துண்டுதான், மடக்கி உடைந்துள்ளதைக் காட்டியது. ஒரே பழுது யூனிட்-1, யூனிட்-2 இரண்டு காலாண்டிரியாவிலும் ஏற்பட்டது வியப்பை உண்டாக்குகிறது! புறத்தே இயங்கும் கருவிகளையும் [Remote Control Tools], டெலிவிஷன் சாதனத்தையும் பயன்படுத்தி, உடைந்த துண்டுகள், காலாண்டிரியாவுக்குள் பாதுகாப்பான ஒரு மூலையில் தள்ளப் பட்டன! கனநீர் கசியும் அந்தப் பழுதுகளைச் செப்பணிட முடிய வில்லை! அதற்குப் பதிலாக காலாண்டிரியா கனநீர் வெளியேறும் புறவழி [Outlet] நுழை வாயிலாக [Inlet] மாற்றம் செய்யப்பட்டது! கனநீர் வெளியேறக் கீழமைந்த ‘கொட்டும் தொட்டியின் ‘ [Dump Tank] பைப் ஒன்று பயன்படுத்தப் பட்டது! 1989 இல் அப்பணிகளை முடிக்க யூனிட்-1 இல் 82 நாட்களும், யூனிட்-2 இல் 156 நாட்களும் எடுத்தன!

கல்பாக்கம் அணு உலை எரிக்கோல் ஊட்டும் யந்திரங்களில் பழுதுகள்!

எரிக்கோல் ஊட்டும் யந்திரங்கள் [Fuelling Machines] மிகவும் சிக்கலானவை! மென்மை யானவை! அடிக்கடி அந்த யந்திரங்களில் பழுதுகள் ஏற்பட்டு ஒன்று எரிக்கோல்கள் மாட்டிக் கொள்ளும்! அல்லது கனநீர் பெருமளவில் சிந்திவிடும்! அணு உலையில் தினமும் எரிக்கோல்கள் நீக்கப் பட்டு, புதுக்கோல்கள் ஊட்டப்பட வேண்டும்! அல்லாவிடில் அணுசக்தி உற்பத்தி குறைந்து விடும்! சாமர்த்தியமான இயக்குநர் யந்திரங்களை இயக்காமல் போனால், பெரும் மனிதத் தவறுகள் நேர்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன!

தீய்ந்த எரிக்கோல் [Spent Fuel Bundles] இரண்டை அணு உலையிலிருந்து நீக்கிக் கடத்தும் போது, ஆட்சி அறைக் காட்சிப் பழுதால் [Signal fault], குழல்பாதைக் குள்ளே அவை விழுந்து இருபுறமும் தள்ள முடியாதவாறு சிக்கிக் கொண்டன! அவை மாட்டிக் கொண்டது தெரியாமல் அடுத்துத் துடுப்பு [Ram Pusher] இயங்கிய போது, எரிக்கோல்கள் உடைந்து போய் சிக்கிக் கொண்டன! அவற்றில் ஆயிரக் கணக்கான அளவு [thousands of Rem/hour Radiation] கதிரியக்கம் இருந்ததால், தனிப்பட்ட தூரப்பணிக் [Remote Action] கருவிகள் மூலம்தான் அவைப் பாதுகாப்பாகக் கவசங்களுடன் நீக்கப் பட வேண்டும்! அப்பணிக்குத் தனிப்பட்ட கலன், கவசத் தொட்டி [Special Can & Shielded Flask] ஆகியவை தயாரிக்கப் பட்டு உடைந்த எரிக்கோல்கள் பல நாட்கள் கழித்து அகற்றப் பட்டன!

கனநீர் அணு உலைகளில் எரிக்கோல்கள் பிளவு!

அணு உலை இயக்கத்தின் போது, தயாரிப்புப் பிழைகளால் [Manufacturing Defects] எரிக்கோல்கள் பிளந்து, அடங்கி யுள்ள கதிர்வீச்சுக் கழிவுகள் வெப்பக் கடத்தி நீரில் கலந்து பம்புகள், வால்வுகள், வெப்ப நீக்கிக் கலன்கள் போன்ற சாதனங்களில் பரவித் தங்கிக் கொள்கின்றன! அணு உலைகளில் இவைத் தவிர்க்க முடியாத தீங்குகள்! எரிக்கோல் பிளவை அணு உலையில் உண்டாவதைக் கருவிகள் எச்சரிக்கை செய்த சில மணி நேரங்களில் அழுத்தக் குழலில் அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, உடனே அது அகற்றப்பட வேண்டும்! காண்டு அணு உலைகளில் இயங்கும் போது எரிக்கோல் மாற்றும் யந்திர சாதனங்கள் [On-Power Fuelling Machines] அமைக்கப் பட்டுள்ளதால், பிளவு பட்ட எரிக்கோல் வெகு எளிதாக இரண்டு மணி நேரத்தில் அகற்றப் படுகிறது!

அனுபவ ரீதியில் ஆராயும் போது இந்திய அணு உலை ஒன்றில் 10 ஆண்டுகள் உபயோகமாகி நீக்கப்படும் சராசரி 16730 மொத்த எரிக்கோல்களில் 200 இல் ஒன்று பிளவு படுகிறது! அதாவது அணு உலை இயங்கி 16730 எரிக்கோல்கள் நீக்கப் பட்டால், அவற்றில் 84 உடைந்து போக எதிர்பார்க்கலாம்! எரிக்கோல் ஒன்று நியூட்ரான் தாக்குதலால் பிளக்கும் போது, உள்ளடங்கிய கதிர்வீச்சுக் கழிவுகள், குறிப்பாக முதலில் ஐயோடின்-131 [I-131] பிரதம வெப்பக் கடத்தி நீரில் கலந்து, அதன் பின்புலக் கதிர்வீச்சளவு [Background Radioactivity] 50-100 மடங்கு மிகையாகி எச்சரிக்கை மணி அடிக்கும்! அணு உலையில் 306 அழுத்தக் குழலில் எந்தக் குழலில் உள்ள 12 எரிக்கோல்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டது பிளவு பட்டுள்ளது என்று உடனே அடுத்து அறியப்படும்! அதே சமயம் எரியூட்டும் யந்திரங்கள் தயாராகி, குறிப்பிட்ட குழலில் பிணைக்கப் பட்டு, பிளவுள்ள எரிக்கோல்கள் நீக்கப்பட்டு சேமிப்புத் தடாகத்தில் [Spent Fuel Storage Tank] சேர்க்கப் படுகின்றன!

அணுமின் உலை வரவேற்பாளர், எதிர்ப்பாளர் இருவருக்கும் வேண்டுகோள்!

இந்தியாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு மின்சாரம் பரிமாறிக் கொண்டு, மக்களுக்கு பணி செய்து வர போவது, அணுமின் நிலையங்களே! அந்த மெய்விதியை ஏற்றுக் கொண்டு ஆதரவாளரும், எதிர்ப்பாளரும் இணைந்து ஆக்க வினைகளில் ஈடுபடுவதுதான் மனித நாகரீகம்! அணுசக்தியின் பலன்கள், பாதகங்கள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அடிக்கடிப் புகட்டி, அதனால் எதிர்பார்க்கப்படும் அபாயங்களைக் கையாளும் முறைகளையும் திரைப்படம், டெலிவிஷன் மூலம் பள்ளிக்கூடப் பிள்ளைகள், கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுநபர் அனைவருக்கும் எடுத்துக் கூறி, பக்க ஊர்களில் பயிற்சிகள் அளிக்க மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, கிராமிய அரசுகள் முன்வர வேண்டும்!

அணு மின்சக்தி மீது அச்சமும், வெறுப்பும் வளர்ந்து வருவதைப் புறக்கணித்து, அதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்திக் கொள்ள பாரத மக்களுக்குத் திறமும், அறிவும், பொறுமையும் உள்ளன! அணு உலை ஆதரவாளிகள் அணுமின் சக்தியை ஆக்க வழிகளில் முன்னேற்றும் போது, எதிர்ப்பாளிகள் அது பாதுகாப்பாகப் பயன்படுத்தி வருவதற்குக் காவற்பணி புரியலாம்! மேலும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியத்தில் ‘ [Atomic Energy Control Board] கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு மனித நலத்துறையைக் [Health Physics Dept] கவனித்து வரலாம்! படைப்பாளிகள் விமானத்தை உருவாக்கி வரும் போது பயந்து, பாதுகாப்பாக இறங்க பாராசூட்டைக் கண்டுபிடித்தவர் எதிர்ப்பாளிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது! அணுமின் நிலைய எதிர்ப்பாளிகள் பாரதத்தின் அணு உலைகள் சிலவற்றை ஒரு முறை அல்ல பல முறை நேரில் கண்டு, கதிரியக்கம் எவ்வாறு கையாளப்படுகிறது, கதிர்வீச்சு எவ்விதம் கவசத்தால் குறைக்கப் படுகிறது, மனித நலம் எப்படி பாதுகாக்கக் படுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வது அவரது வார்த்தைகளுக்கு வலுவைக் கொடுக்கும்! மேலும் கதிரியக்கக் காப்பு முறைகளை ஆதரவாளர் மேற்கொண்டும் சீர்ப்படுத்த அந்த அனுபவம் உதவியாக இருக்கும்!

தகவல்கள்:

1. Indian Pressurised Heavy Water Reactors – Operation & Maintenance Experience & Developments by: G.R. Srinivasan, Chief Superintendent, Rajasthan Atomic Power Station,Presented at Vienna, Austria on the Exchange of Operational Safety Experience of Pressurized Heavy Water Reactors [20th to 24th Feb 1989]

2. Nuclear Engineering International, Moderator Leakage at Madras Atomic Power Station by: M.R. Balakrishnan [Feb 1990]

3. Nuclear News, India ‘s Growing Nuclear Energy Program by: Gregg Taylor [April 1990]

4. Case Study of Some Operational Events in Indian Pressurized Heavy Water Reactors By: M.S.R. Sarma, Executive Director, Atomic Energy Control Board [1985-1988]

5. Nuclear Europe Worldscan, Progress of India ‘s Nuclear Power Program

**********************************

jayabar@bmts.com

Series Navigation