இத்தனை வருடங்களும் – இப்படித்தான்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்த வாரம் இப்படி என்று தான் தலைப்பிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், நான் எழுதாமல் இருந்த இடைப்பட்ட வருடங்களில் எல்லா வாரங்களும் இப்படித்தான் என்பதாக ஒரு மாற்றமில்லாத அபத்த நாடகமாக உலக அரங்கிலும், இந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் அரசியல் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில், கோடி என்பது சில்லறைக் காசாகிவிட்டது போல் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல் என்கிறார்கள். மாயாவதி தன் சிலைகளை மானிலத்தில் நிறுவி திராவிட இயக்கத்திலிருந்து தான் பாடம் கற்றுக் கொண்டதைச் சொல்லாமல் சொல்கிறார். சோனியா காந்தி குடும்பம் இந்தியாவின் தலைமைக் குடும்பமாய் உருவாகியுள்ளது. ஸ்ரீலங்காவின் துயரங்கள் முடிவற்று நீள்கிறது. ஆனால் அந்தத் துயரம் தமிழ்நாட்டில் அரசியல் நாடகத்தில் ஒரு பின்னணிக்காட்சியைத் தவிர வேறு எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் தன் பாட்டில் வரலாறு செல்கிறது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் ஆ·ப்கானிஸ்தானும், பாலஸ்தீனமும் அப்படியே தான் இருக்கும். வரலாறு முன்னோக்கிச் செல்கிறதா?

என் எ·ப் ஹ¤சைன் “எதேச்சாதிகார ” இந்தியாவை விட்டுவிட்டு, கலை வெளிப்பாட்டு சுதந்திரம் பூத்துக் குலுங்கும் கத்தார் நாட்டின் குடிமகனாகிவிட்டார். தஸ்லீமா நஸ்ரீன் மீது முஸ்லீம் எம் எல் ஏக்கள் கொலைமுயற்சியில் ஈடுபட்டு புத்தக வெளியீட்டைக் குலைக்கிறார்கள். டார்·பரில் அரபு முஸ்லீம்கள், கறுப்பின முஸ்லீம்களைக் கொன்று குவிக்கிறார்கள். ஆனால் சூடானின் அரசியல் தலைமை மீது சார்த்தப் பட்ட “மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்காக” நடவடிக்கை எடுக்க முடியாதபடி சீனா, மேற்கு நாடுகள், ஆ·ப்ரிக்க யூனியன் எல்லாமே பாதுகாத்து நிற்கின்றன. கொலம்பியாவில் போதைமருந்து யுத்தத்தில் சிறுவர்களின் பங்களிப்பால் ஒரு தலைமுறை அழிக்கப் பட்டு வருகிறது. நைஜீரியாவில் இஸ்லாமிய-கிருஸ்துவப் போர்கள் பெரும் அழிவுக்குக் காரணமாய் உள்ளன. யார் சொன்னது நாம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்று?

மாவோயிஸ்டுகள் தம்முடைய கொலைக் களனாக இந்தியாவின் கணிசமான பகுதிகளை மாற்றிவிட்டனர். அறிவுஜீவிகள் இதனைப் புரட்சி என்று கொண்டாடுகின்றனர். சீனா, சோவியத் யூனியன், கம்போடியா, கியூபா என்று புரட்சியின் வண்ணம் மனித ரத்தச் சிவப்புத்தான் என்று பறைசாற்றினாலும், நம் அறிவுஜீவிகள் மட்டும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே இல்லை. மார்க்சியத்தின் பேரால் நிகழ்த்தப்பட்ட எந்த புரட்சியாலும், உலக வரலாற்றில் எந்த நாடும் உருப்படியாக நிமிர்ந்து நின்றதில்லை என்று நிதர்சனமாகத் தெரிந்தாலும், நாங்கள் மார்க்சிஸ்டுகள் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வார்கள். இந்த வன்முறையை வலிமையான முறையில் எதிர்கொள்ளத் தெம்பில்லாமல் சோம்பி நிற்கிறது இந்திய அரசு.

தமிழ்நாட்டின் முதற்குடும்பம் அரசியல் வலிமையிலும் , செல்வ வலிமையிலும் உச்சாணிக் கொம்பில் நிற்கிறது. எதிர்க்கட்சிகளோ, இரு பெரும் கட்சிகளை அண்டிப் பிழைக்கும் வகையில் தான் உள்ளனவே தவிர தமிழ்நாட்டின் மனசாட்சியாய்ச் செயல்பட இயலாமல், சாதி அரசியலிலும், கட்டைப் பஞ்சாயத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் ஆதரவை இழந்து தனிமைப் பட்டு நிற்கின்றன.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் தொடங்கி உலகை பவனி வந்து இன்று பாகிஸ்தானிலேயே பெரிய தலைவலியாய் உருப்பெற்று நிற்கிறது. ஸ்பெயின் மும்பை, பிலிப்பைன்ஸ் என்று பரவிவரும் நாசத்தின் தீவிரம் அறியாமல், நம் அறிவுஜீவிகள் வழக்கமான பைத்தியக் காரத்தனத்துடன். இஸ்லாமிய பயங்கரவாதம் என்றெல்லாம் சொல்லக் கூடாது, காரணத்தைப் பாருங்கள், வன்முறையாளர்களை விடுதலை செய்யுங்கள் என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தன்னைத் தானே கொல்லும் வியாதியாக இஸ்லாமிய அடிப்படைவாதம் பல நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது – தமிழ்நாடு உட்பட.

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் இன்னமும் ஓயாமல் பெருகி வருகின்றன. இந்த லட்சணத்தில் சென்சஸில் ஜாதியைப் பதிவு செய்து இந்தப் பிறழ்வை நிரந்தரமாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.

அமெரிக்காவில் பராக் ஒபாமா குடியரசுத் தலைவரானது ஒரு பெரும் பாய்ச்சல் என்றால், அதன் எதிரொலியாக, நிறவெறி வேறு வேறு வடிவங்களில் புத்துயிர் பெற்று, ஒபாமாவுக்கு எதிரான இயக்கமாக உருவாகி வருகிறது. அதன் அடிநாதமாக கிருஸ்துவ அடிப்படை வாதமும், பரிணாம எதிர்ப்பு மற்றும் அடிமைத் தனத்தை நியாயப் படுத்துதல் என்று பின்னோக்கிப் போகிறது அமெரிக்க அரசியல்.

ஐரோப்பாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மறைக்கும் புர்காவைத் தடை செய்ய ·பிரான்ஸ் முதலான நாடுகள் சட்டம் இயற்றுகின்றன. அமெரிக்காவின் தகர்க்கப்பட்ட இடிபாடுகளுக்கு அருகில் பெரும் மசூதி ஒன்று கட்ட அனுமதி கோருவது பற்றி சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. மலேசியாவில் இந்துக்கள் தம் வாழ்வு நிச்சயமற்று இருக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். நூற்றாண்டுகள் கழிந்து நவீன உலகில் மதங்கள் செயலிழந்து போகும் என்ற கணிப்பைப் பொய்யாக்கி எல்லா மட்டங்களிலும் மதரீதியான அரசியலும் அடிப்படைவாதமும் பல்கிப் பெருகி பூதாகாரமாய் ராட்சசம் மேற்கொண்டுவிட்டன.

நிதி நிறுவனங்கள் யாருக்கும் புரியாத வகையில் முதலீட்டுச் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பலப்பல அரசாங்கங்களையே வீழ்த்தி விட்டனர். எல்லா நாடுகளும் அழிவின் விளிம்பில் இல்லை என்றாலும் , பல ஐரோப்பிய நாடுகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. வங்கிக் கடனை வாரி வழங்கி மக்களை மயக்கி அவர்கள் தகுதிக்கு மீறிய கடனில் ஆழ்த்தி, பொருளாதாரம் அடியோடு நொறுங்கி விழ அமெரிக்க வங்கிகள் காரணமாயின.

சுனாமி, ஹைடியில் பூகம்பம் என்று தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடிய உயிரிழப்புகள் லட்சக் கணக்கில் நிகழ்கின்றன. பூகம்பத்தைச் சமாளிக்கும் கட்டடங்கள் இல்லாத ஹைடி அழிவின் கோரத்தில் ஆழ்ந்தது.

அமெரிக்க கடற்பகுதியில் எண்ணெய்க்கிணறு வெடிப்பில் கடலின் ஜீவராசிகள் செத்து மிதக்கின்றன. மீனவர்கள் தம் வாழ்வாதாரத்தை இழப்பது மட்டுமில்லாமல், மனித சேதம் என்ன எப்படி விளையக் கூடும் என்று கணிக்கக் கூட முடியாமல் தத்தளிப்பில் மாசு கடற்பரப்பில் விரிந்து செல்கிறது. மலிவுவிலை என்ணெய்க்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்பற்ற யந்திரங்களை நம்பி வாழ்க்கை போய்க் கொண்டிருக்க்றது.

நம்பிக்கைக் கீற்றுகள் ஏதோ ஒரு முனையில் எப்போதேனும் தோன்றும் என்று எல்லா மக்களையும் போல நம்பிக் கொண்டே நானும்…..
——————-

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts