இது வெற்றுக் காகிதமல்ல…

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

ப.மதியழகன்


உனது கடிதம்
வந்து சேர்வதற்கு முன்னமே
எனது பதிலை வெள்ளைத்தாள்களில்
பதிவு செய்துவிடுகிறேன்
ஒவ்வொரு முறையும்
செய்வதைப்போல்
இப்பொழுதும்
என் உள்ளத்தைக் காயப்படுத்தி
என் சிறகை வெட்டிவிட முயலுவாய்
என்று எனக்குத் தெரியும்

காதல் சிலுவையில் அறையப்படுவது
காதலனுக்கு உயர்வையே தரும்
என்னை அறைவதற்கு ஆணிகளைத்
தாங்கி வரும்
இக்கடிதம் யாருடைய கைகளையும்
காயப்படுத்திவிடக்கூடாதென்பதே
என் கவலை
அப்புறம் நலம்தானே என்று
கேட்டிருக்கிறாய்
இவ்வளவு விமர்சனங்களையும்,
கண்டணைக் கணைகளையும்
என்னை நோக்கி வீசிவிட்டு
குறிபார்த்து எய்தாயல்லவா
அம்புகளை?
காயம் ஏற்படாமல் இருக்குமா
எனினும் சம்பிரதாயத்துக்காகச்
சொல்கிறேன்
நலம் தான் என் இனிய தோழி
உன்னுடைய கோபமும்,
அலட்சிய மனோபாவமும் உண்மைதானா
அல்லது உனது உள்ளத்தை
மறைக்க
நீ அணியும் முகமூடியா
நீ அணியும் முகமூடியே
ஒரு நாள் உன் நிஜமான முகமாய்
ஆகிப்போனால் என் செய்வாய்
என் உயிர்த் தோழி!

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்