இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா? ஜனநாயக விரோதமா?

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்


முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு இரங்கல் எழுதிய ’இந்தியா டுடே’ வன்மத்தைக் கக்கியுள்ளது. மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வந்தது தான் அவர் மீது உயர் சாதியினர் கொண்டுள்ள கோபத்துக்கு காரணம்.

உயர் சாதியைச் சேர்ந்த நண்பர்களிடம் நான் விருப்பு வெறுப்பு இல்லாமல், பின் வரும் உண்மைகளைச் சிந்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இந்தியாவில் பல்வேறு சாதிகள் உள்ளன. அவர்களில் உயர் சாதியினர் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேறியுள்ளனர். பிற்படுத்தப் பட்ட சாதிகளில் இருந்து வநதவர்கள், உயர் சாதியினரோடு ஒப்பிடும் போது கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ளனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தோடு ஒப்பிட்டால் அந்த வித்தியாசம் இன்னும் அதிகமாக இருக்கும். திராவிட இயக்க ஆட்சிகளின் பங்களிப்பாலும், தந்தை பெரியாரின் பரப்புரையாலும் தமிழகத்தில் பிற்படுத்தப் பட்டவர்கள் மிகப் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சி இன்னும் இந்தியா முழுவதும் வரவில்லை. சாதி ஏற்றத் தாழ்வுகள் உள்ளது உண்மை. சாதி ஏற்றத் தாழ்வுகள் மறையும் வரை, அனைத்து சாதியினரும் அவர்களது மக்கள் தொகை விழுக்காட்டுக்கு இணையான இட ஒதுக்கீட்டை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெறும் வரை இந்தியாவில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இன்னும் சரியாகச் சொன்னால், பொது ஒதுக்கீடு என்பது இல்லாமல் தொகுப்பு முறையில், அனைத்து இடங்களும் வகுப்பு வாரியாக விகிதாச்சார முறையில் பிரித்து அளிக்கப் பட வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் சாசனம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் வழங்கியுள்ள உரிமையே அன்றி அது ஒரு சலுகையல்ல. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துகளை கருத்துரிமை என்ற அளவில் நாம் தொடர்ந்து சகித்து கொள்ள வேண்டுமா? என்பதையும் அல்லது இவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பதையும் யோசிக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் இது வரை இல்லை என்றால், அதற்கான ஒரு சட்ட முன் வடிவை பிற்படுத்தப் பட்ட எம்.பிக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும்.


nabdulrahman@yahoo.com

Series Navigation