இடுக்கண் வருங்கால்…

0 minutes, 17 seconds Read
This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

கவிநயா


அம்மா அப்பாவின் அன்னியோன்யத்தைப் பார்க்கப் பார்க்க வித்யாவுக்குக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. கொஞ்சம் என்ன, நிறையவே! அவ்வப்போது விவேக்கின் பக்கம் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டாள். அவனோ இவள் இருப்பதையே மறந்தவன் போல், வரிசைப் பற்கள் மின்னச் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். வித்யாவுக்கு ஒரே ஆத்திர ஆத்திரமாக வந்தது. ஒன்றுமே நடவாதது போல் எப்படி இருக்கிறான் ?!

அம்மா அப்பாவின் 25-வது திருமண நாளுக்காகக் கூடி இருந்தவர்கள் எல்லாம் வரிசையாக வந்து வாழ்த்துச் சொல்லிய வண்ணம் இருந்தார்கள்.

‘ஏம்மா, வித்யா, நீயும் உம் புருஷனோட இதே மாதிரி 25-வது கல்யாண நாள் கொண்டாடணும், அதுக்கு நான் வந்து வாழ்த்துச் சொல்லணும் ‘, பக்கத்து வீட்டு மாமி அன்போடு அவள் கன்னத்தை வழித்துத் திருஷ்டி கழித்தாள். வித்யாவுக்கோ அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. புது மணக் கணவனோடு வாழ ஆரம்பித்து இன்னும் ஒரு வருடம் கூட முழுசாய் முடியவில்லை; அவ்வளவு பெரிய பிணக்கு அதற்குள்! இருவரும் பேசிக் கொண்டு பத்து நாளாகிறது. இந்த இலட்சணத்தில் 25 வருஷமா ? சரிதான் போ; கற்பனை கூடப் பண்ண முடியவில்லை. எண்ணமிட்ட வண்ணம், ‘தாங்க்ஸ், மாமி ‘, தனக்கே கேட்காமல் முணுமுணுத்தாள். அதற்குள் ‘அதுக்கென்ன மாமி, உங்களுக்கு அனுப்பாமயா ? ‘ என்று, திடாரென்று எங்கிருந்தோ வந்து அவள் பக்கத்தில் முளைத்த விவேக், அவள் தோளில் கை போட்டான். அவன் கையை மெதுவாக விலக்கி விட்டு, அவனைப் பார்க்காமல் தவிர் த்தபடி அங்கிருந்து நழுவினாள், வித்யா.

சாப்பாடு அமர்க்களமாக இருந்தது. அம்மாவை அப்பாவிற்கு ஊட்ட வைத்து, அப்பாவை அம்மாவிற்கு ஊட்ட வைத்து, கூடியிருந்தவர்கள் எல்லாம் ஒரேடியாகக் கலாட்டா பண்ணி விட்டார்கள்.

‘ஆண்ட்டி, உங்கள் வெற்றிகரமான மணவாழ்க்கையின் இரகசியம் என்னவோ ? ‘ நிருபராக ஆசை கொண்ட ஒரு இளம் பெண், ஒரு கரண்டியை மைக் போல அம்மாவின் முன் பிடித்துக் கொண்டு கேட்க, ஒரே சிரிப்புதான். அம்மா அந்த வயதிலும் அழகாய் வெட்கப்பட்டாள்.

இதற்குள் சாப்பிட்டு முடித்த கூட்டம் எல்லாம் ஆங்காங்கு உட்கார்ந்து அரட்டைகளைத் தொடர, அம்மா, அப்பாவைத் தொடர்ந்து வித்யாவின் குடும்பம் முழுதும் முன்னறைக்கு வந்து ‘அப்பாடா ‘வென்று உட்கார்ந்தது. ‘மாமா, நிஜமாத்தான் கேட்கிறேன், உங்க ரெண்டு பேருக்கும் சண்டையே வராதா ? ‘, விவேக் ரொம்ப சீரியஸாகக் கேட்க, அம்மாவும், அப்பாவும், தாத்தா, பாட்டிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள் – ஏதோ அவர்களுக்குள் உள்ள இரகசியம் போல! ‘ரொம்பத்தான் அலட்டல். ஒரு கேள்வி கேட்டா நேரடியா பதில் சொன்னா என்னவாம் ? ‘ மானசீகமாக முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள், வித்யா.

பெரிய பேச்சாளரைப் போல் தொண்டையைச் செருமிக் கொண்டார், அப்பா. ‘மாப்பிள்ளே, நீங்க சொன்னா நம்ப மாட்டாங்க. எங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தன்னிக்கே சண்டைதான். முதல் பத்து நாளும் நாங்க பேசிக்கவே இல்ல ‘, என்றதும் வித்யாவும், அவள் தம்பி அருணும், ‘இதென்ன புதுக் கதை ? ‘ என்பது போல பார்த்துக் கொண்டார்கள்.

‘அப்பா, இதென்ன கதை ? நீங்க எங்களுக்கே சொன்னதில்லயே ? ‘ சற்றே ஆச்சர்யத்துடன் கேட்டான், அருண்.

‘உங்க ரெண்டு பேருக்கும் காதல் கல்யாணமா ? ‘ விவேக்கின் கேள்வியில் கதை கேட்கும் ஆர்வம்.

‘இருங்க, இருங்க, சொல்லத்தானே போறேன் ‘, எல்லோருடைய ஆர்வத்தையும் கையமர்த்திக் கட்டுப் படுத்தினார், அப்பா.

‘உங்க எல்லாருக்கும் தெரியும். என் அப்பாவும், இவ அப்பாவும், பால்ய வயது நண்பர்கள். சுதந்திரப் போராட்டத்துலயும் ஒண்ணாவே கலந்துகிட்டாங்க. பிறகு குடும்பஸ்தர்களான பிறகும் அவங்க நட்பு தொடர்ந்தது. இரண்டு பேருக்கும் சொல்லி வச்சாப் போல ஒரு பொண்ணும், ஒரு புள்ளயுமா பொறந்ததும், ரெண்டு பேரும் சம்பந்தம் பண்ணிக்கத் தீர்மானிச்சாங்க. ஆனாலும் இவள நான் சின்ன வயசில பாத்துப் பேசினதோட சரி. அதுக்கப்புறம், படிக்கிறதுக்குன்னு ரெண்டு பேரும் வெவ்வேறு திசையில திரும்பிட்டோம். சில வருஷங்கள் கழிஞ்சப்புறம் கல்யாண நாளன்னிக்குத்தான் இவளப் பார்த்தேன் ‘, அப்பா மூச்சு விடச் சற்றே நிறுத்தினார்.

‘அப்புறம் எப்படி மாமா உடனே சண்டை வந்தது ? ‘ – விவேக்.

இந்த விவேக்குப் பொறுமையே இல்லை என்று மனசுக்குள் திட்டிக் கொண்டாள், வித்யா.

‘அங்கதான் வர்றேன் மாப்பிள்ளே. முகூர்த்த நேரம் வந்தது. இவள ரொம்ப நாளக்கப்புறம் பார்க்கிறதால பழைய ஞாபகமெல்லாம் கூடவே வந்தது. பொம்மை மாதிரி பட்டுச் சேலையில அழகா இருந்தா. (அம்மா இந்த சமயத்தில் செல்லமாக உதட்டை வலித்தாள்). அதனால இவள வம்பிழுக்கணும்னு ஆசையா இருந்தது. தாலி கட்டி மணையில உட்கார்ந்திருந்த போது அவ பின்னலப் பிடிச்சு இழுத்து விட்டேன்… அது கையோஊ c வந்திட்டது ‘

அப்பா ‘எ•பெக்டுக்காக ‘ ஒரு நொடி நிறுத்தினார். அவர் நினைத்தது போலவே கசமுசாவென்று பேச்சும் சிரிப்பும்!

‘அம்மா எப்படி உங்கள உதைக்காம விட்டாங்க ? ‘ வந்ததிலிருந்து ‘உம் ‘மென்று இருந்த வித்யாவின் முகத்தில் இப்போதுதான் முதன் முறையாகச் சிரிப்பு வந்திருந்தது.

‘உதை வாங்காத குறையேதான் இல்லாம செய்திட்டாளே ? கண்ணும் மூக்கும் சிவக்க அவ முகத்தை அந்த மாதிரி கோபத்தோட நீங்கள்ளாம் பார்த்திருக்கவே மாட்டாங்க. அதுக்கப்புறம் முழுசா பத்து நாளக்கு அவ என்கிட்டப் பேசவே இல்ல. தினமும் அவகிட்ட தவமா தவமிருந்து மன்னிப்புக் கேட்டப்புறம்தான் மனசு இரங்கி வந்தா ‘

‘என்னம்மா, நீங்க ஒண்ணுமே சொல்லல ? ‘, மெளனமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்த அம்மாவைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தான், அருண்.

‘நான் என்ன சொல்றது, அருண் ? சண்டைங்கிறது எல்லாத் தம்பதிகளுக்கும் வர்றதுதான். அப்ப எனக்கும் சின்ன வயசு, முதிர்ச்சி பத்தாது. உடனே ரோஷம் பொத்துகிட்டு வந்திடுச்சு. ஆனா இத்தன வருஷம் கழிச்சும் சொல்லிச் சிரிக்கிறாப்ல அனுபவம் கிடைச்சிருக்கே ? ‘ சிரித்தாள், அம்மா.

‘நீ சொல்றதுலயும் அர்த்தம் இருக்கும்மா. பல சமயங்கள்ல, சில துன்பங்கள் அனுபவிக்கும்போது கஷ்டமாத்தான் இருக்கும்; ஆனா அதைக் கடந்தப்புறம் சில காலம் கழிச்சு அதே சூழ்நிலைய நினச்சுப் பார்க்கும்போது, சிரிக்கத்தான் தோணும் ‘, தாத்தா சொல்வது ஏதோ கொஞ்சம் புரிந்தது போல இருந்தது, வித்யாவுக்கு.

‘தாத்தாக்கள் ரெண்டு பேரும் சுதந்திரப் போராட்டத்தப் பத்திப் பேசுறத நம்ம எல்லாரும் நிறைய தரம் கேட்டிருக்கோம். அவங்க பேசும் போது அவங்க குரல்ல இருக்க பெருமையையும் கேட்டிருக்கோம். குண்டாந்தடியால அடி வாங்கினத, குண்டு மல்லிகை மாலை கிடைச்சா மாதிரிதான் பேசுவாங்க. அதனால குண்டாந்தடி அடி சுகமா இருந்ததுன்னு அர்த்தம் இல்ல. அந்த மாதிரி துன்பங்களை நாட்டுக்காக அனுபவிச்சுட்டு,

‘feப்ப அத எல்லாம் தாண்டி வாழ்க்கையில இவ்வளவு தூரம் வந்ததுனால உண்டான பெருமைதான் அது… ‘ அப்பா தொடர்ந்தார்.

‘அதனாலதான், துன்பம் வந்தா துவண்டு போகக் கூடாது. அதையே நாம ஒரு நாள் நினைச்சு சிரிக்கிற நாளும் வரும்கிற நம்பிக்கையோட வாழணும் ‘, சிரிப்புடன் ஆரம்பித்த கதையை ரொம்ப சீரியஸாக முடித்தார், அப்பா.

விவேக்கின் கை வித்யாவின் தோளில் ஊர்ந்து அவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்ட போது, இம்முறை அவள் அவன் கையை விலக்கவில்லை.

–கவிநயா

meenavr@hotmail.com

Series Navigation

author

கவிநயா

கவிநயா

Similar Posts